விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் கண்கள், சிறுநீரகம் தானம்

*கோவை, சேலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டது

தர்மபுரி : விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே காரப்பட்டு வளர்த்தனூர் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி மனைவி முனியம்மாள் (40). இவர்களுக்கு மகன் உள்ளார். துரைசாமி கடந்த சில ஆண்டுக்கு முன் இறந்து விட்ட நிலையில், முனியம்மாள் மகனுடன் வசித்து வந்தார்.

கடந்த 10ம் தேதி மாலை, அங்குள்ள கடையில் மளிகை பொருட்கள் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு டூவீலரில் முனியம்மாள் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், படுகாயம் அடைந்த முனியம்மாள், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தலையில் அடிபட்டதில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த முனியம்மாள் நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார்.

இதையடுத்து அவரது மகன் மற்றும் உறவினர்கள், முனியம்மாளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அதன்படி கல்லீரல், 2 கண்கள், 2 சிறுநீரகம் ஆகியவை தானமாக பெறப்பட்டு கோவை, சேலம் அரசு மருத்துவமனைக்கு தலா ஒரு சிறுநீரகம், கோவை தனியார் மருத்துவமனைக்கு கல்லீரல் அனுப்பி வைக்கப்பட்டது. தர்மபுரி அரசு மருத்துவமனையில், 2 கண்களும் மாற்று நபர்களுக்கு பொருத்தப்பட்டது.

உடல் உறுப்பு தானம் செய்ததால், முனியம்மாள் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. டீன் அமுதவல்லி, உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் நாகேந்திரன், மயக்கவியல் டாக்டர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் மரியாதை செலுத்தினர். தர்மபுரி அரசு மருத்துவமனையில், கடந்த 2 ஆண்டுகளில் விபத்துகளில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 16 பேரின் உடல் உறுப்புகள், தானம் பெறப்பட்டுள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு