மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 348 மனுக்கள் ஏற்பு: நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் த.பிரபுசங்கர் பொதுமக்களிடமிருந்து 348 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்னைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் கலெக்டரிடம் மனு வழங்கினர்.

இதில் நிலம் சம்பந்தமாக 104 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 44 மனுக்களும், வேலை வாய்ப்பு வேண்டி 49 மனுக்களும், பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 93 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சார்பாக 58 மனுக்களும் என மொத்தம் 348 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பிறகு பார்வையற்றோருக்கான செயலியுடன் கூடிய செல்போன் வேண்டி மனு வழங்கிய பார்வையற்ற சட்டக்கல்லூரி மாற்றுத்திறனாளி மாணவியின் கோரிக்கை மனு, மடக்கு குச்சி மற்றும் ஊன்றுகோல் வேண்டி மனு வழங்கிய மாற்றுத்திறனாளிகளின் மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து அந்த மாற்றுத்திறனாளிகள் வைத்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றும் வகையில், ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு ரூ.13 ஆயிரம் மதிப்பில் உரிய செயலிகளுடன் கூடிய ஸ்மார்ட் போனையும் மற்றொரு பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.380 மதிப்பிலான மடக்கு குச்சியையும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.600 மதிப்பிலான எல்போ ஊன்றுகோல் என 3 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.14,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் த.பிரபு சங்கர் வழங்கினார்.

தொடர்ந்து, மாவட்ட முன்னாள் படை வீரர்கள் நலத்துறையின் தொகுப்பு நிதியிலிருந்து 5 முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகளுக்கு ரூ.1.71 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகையை வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) ஆயுஷ் வெங்கட் வத்ஸ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், முன்னாள் படை வீரர்கள் நலத்துறை உதவி இயக்குநர் ராஜலட்சுமி மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

உதயம் தியேட்டர் அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்து !!

நடப்பாண்டில் இயற்கை பேரிடர்களால் 1,492 பேர் பலி

இஸ்ரேலுக்கு பக்க பலமாக நிற்போம் என அமெரிக்கா சூளுரை … இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க தூதரகம் எச்சரிக்கை!!