வெளிநாடுகளில் படித்து வருவோரில் 5 ஆண்டில் 633 இந்திய மாணவர்கள் பலி: அமெரிக்காவில் இருந்து 48 பேர் நாடு கடத்தல்

புதுடெல்லி: வெளிநாடுகளில் படித்து வருவோரில் கடந்த 5 ஆண்டில் 633 இந்திய மாணவர்கள் பலியானதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், எழுத்துப்பூர்வமாக அளித்த பதிவில், ‘வெளிநாடுகளில் கல்வி கற்று வரும் மாணவர்களில், கடந்த 5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் இயற்கை சீற்றங்கள், விபத்துக்கள், சுகாதார சீர்கேடுகள் போன்ற பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கனடாவில் 172 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

பல்வேறு தாக்குதல்களில் 19 இந்திய மாணவர்கள் கொல்லப்பட்டனர். கனடாவில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்காவிலும் ஆறு பேர் கொல்லப்பட்டனர். பலியான 633 பேரில் அமெரிக்காவில் 108 பேரும், இங்கிலாந்தில் 58 பேரும், ஆஸ்திரேலியா மற்றும் ரஷ்யாவில் தலா 37 பேரும் உயிரிழந்துள்ளனர். உக்ரைனில் 18 பேரும், ஜெர்மனியில் 24 பேரும், ஜார்ஜியா, கிர்கிஸ்தான் மற்றும் சைப்ரஸில் தலா 12 பேரும், சீனாவில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். வெளிநாடுகளில் உள்ள இந்திய மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவது குறித்து முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

வெளிநாடுகளில் உள்ள இந்தியப் பிரதிநிதிகள், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேரும் இந்திய மாணவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் 48 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். இதற்கான காரணங்களை அமெரிக்க அதிகாரிகள் பகிர்ந்து கொள்ளவில்லை. அங்கீகரிக்கப்படாத வேலை, வகுப்புகளில் இருந்து இடைநீக்கம், விருப்ப நடைமுறை பயிற்சிப் பணியைப் புகாரளிக்கத் தவறியது போன்ற வகைகளில் அவர்கள் நாடு கடத்தப்பட்டிருக்கலாம்’ என்றார்.

Related posts

சிக்கிமில் ராணுவ வாகனம் விபத்து: ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு

வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு