குக்கரும் தேனியும் தவியாய் தவிப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘போலி டாக்டர்களின் கிளினிக்குகள் அதிகளவுல முளைச்சிருக்குதாமே..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்தில் கொஞ்ச மாதமாக போலி டாக்டர்ஸ் கண்ட்ரோல்ல இருந்தாங்க. இப்ப பள்ளி கொண்ட ஏரியாவுல போலி டாக்டர்ஸ், கிளினிக்குகள் அதிகளவுல முளைத்திருக்குதாம். அந்த ஏரியாவுல ஒரு லேடி எந்தவொரு மருத்துவ படிப்பையும் முறையா படிக்காம, வர்ற நோயாளிகளுக்கு, அதிக டோசேஜ் கொண்ட மருந்துகள் கொடுத்ததாக சொல்றாங்க.

இதனால பக்க விளைவுகள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்திருக்குது. அந்த போலி டாக்டர்ஸ் கிட்ட சிகிச்சைக்கு போன ஒரு பெண்ணுக்கு கை, கால் செயலிழந்து போச்சாம். பாதிக்கப்பட்டவங்ககிட்ட இருந்து புகார் குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்குது. இந்த நிலைமை தொடர்வதை தடுக்க, சம்மந்தப்பட்ட அதிகாரிங்க மாவட்டம் முழுவதுமாக ஒரு ரெய்டு நடத்தி நடவடிக்கை எடுக்கணும்னு கோரிக்கை எழுந்திருக்குது. இப்படியே விட்டா, பலபேர் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு இருக்குறதாக ஜனங்க புகார் சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தூங்காநகரில் களமிறங்க இலைக்கட்சி அச்சத்தில் இருக்குதாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகர் தொகுதியை திமுக தனது கூட்டணிக்கு ஒதுக்கி, சிட்டிங் எம்பியானவர் பிரசாரத்தையும் துவக்கி விட்டார். திமுகவிற்கான சகல வலிமையுடன், கூட்டணி பலமும் கொண்டிருக்கிற தூங்கா நகர் தொகுதியில் இலைக்கட்சியில் களமிறங்கிட அத்தனை பேரும் அச்சத்தால் ஆர்வமின்றி பின் வாங்குகிறார்களாம்.

தங்கள் வாரிசுகள், ஆதரவாளர்களுக்கென ஆரம்பத்தில் செல்லப்பா, செல்லூரார், உதயமானவர் என அத்தனை பேரும் வரிந்து கட்டி வந்த நிலையில், இப்போது மெல்ல பின்வாங்கி, ஊருக்குள் இளைத்தவராக சர்வ கட்சியிலும் இருந்து வந்த மருத்துவரானவரையே களமிறக்கலாம் எனக் கருத்து தெரிவித்திருக்கிறார்களாம். துவக்கத்தில் தனக்கென தொகுதியை தரக் கேட்டு வந்த மருத்துவரானவருக்கும், இப்போது கட்சியில் இன்னுமே கூட்டணிகள் ஒட்டாது வலிமை குன்றி இருப்பதும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம்.

தூங்கா நகருக்கென ஏகப்பட்ட திட்டங்களை தந்த ஆளும் கட்சிக்கான ஆதரவு பெருகியுள்ளது ஒருபுறமிருக்க, தேனிக்காரரது கட்சியின் மாஜி எம்பியானவர் தேர்தலில் நின்றால், தேனிக்காரருக்கான, மாஜி எம்பி தரப்புக்கான இரு சமூகங்களின் ஓட்டும் பிரிந்து மிச்ச சொச்சமும் பறிபோய், வாக்கு சதவீதத்திலும் அசிங்கப்பட்டு விடுவோமோ என்று மருத்துவர் தரப்பும் கவலை கொண்டிருக்கிறதாம்..’’ என்றார்  ‘‘குக்கரும் தேனியும் தாமரைக்கு அல்வா கொடுக்க போறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘நாடாளுமன்ற தேர்தலில், தாமரை கூட்டணியில் தமிழ்நாட்டை பொறுத்தவரை பெரிய கட்சிகள் எதுவும் சேர முன்வரல. இதனால் தனி நபர் கட்சிகளான நாலு பேரிடம், பேச்சுவார்த்தை நடத்திக்கிட்டு இருக்காங்க. இவர்களுடன் தேனிக்காரரும், குக்கர்காரரும் இணைந்துள்ளனர். தலா ஐந்து தொகுதிகளையாவது தங்களுக்கு கொடுக்க வேண்டும் என தேனிக்காரரரும், குக்கர்காரரும் கேட்டிருக்காங்க. இதற்காக ஐந்துமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த முன்னேற்றமும் ஏற்படலயாம்.

கடைசியில ரெண்டு பேருக்கும் தலா ரெண்டு தொகுதி தருவதாக தாமரை தரப்பில் சொல்லிட்டாங்களாம். அதுவும், நாங்க கொடுக்கும் தொகுதி தான் கொடுப்போம். ஒன்று தனி, இன்னொன்னு பொது தொகுதின்னு கறாரா சொல்லியிருக்காங்களாம். முதன்முதலா ஓடிச்சென்று ஆதரவு கொடுத்ததே நாம தான். ஆனா, நமக்கு இந்த நிலை ஏற்பட்டு போச்சேன்னு ரெண்டு பேரும் ஷாக்குல இருக்காங்களாம். இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணம் ஒன்னு இருக்காம்.

நாட்டாமை போல ரெண்டு பேரும் கட்சியில இணைஞ்சிடுங்கன்னு, சிக்னல் கொடுத்திருக்காங்க. அதற்கு ரெண்டு பேரும் மசியல. இதனால தாமரை சின்னத்துல போட்டியிடுங்கன்னு நெருக்கடி கொடுக்கத்தான் இந்த ரெண்டு தொகுதி ஒதுக்கீடுன்னு வெளிப்படையாகவே தெரிஞ்சிப்போச்சாம். இதனால சரியான நேரத்துல ஆப்பு வச்சிட்டாங்களேன்னு இருவரும் தவிக்கிறாங்களாம். இதே நிலை நீடித்தால், அரசியலில் கரை சேர முடியாதுன்னு முடிவு செஞ்ச தேனியும், குக்கரும் சீட்டே வேண்டாம், வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுறோமுன்னு சொல்லிட வேண்டியது தான் என முடிவு செஞ்சி வச்சிருக்காங்களாம்.

சரியான நேரத்துல இந்த தகவலை தெரிவிச்சு, தாமரை அல்வா கொடுப்பதற்கு முன்பு, அவங்களுக்கு நாம கொடுத்திடணும் என்று தயாரா இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘காக்கி துறை சேதி ஏதுமிருக்கா..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மன்னர் மாவட்டத்தில் கோட்டை பகுதியில் பணியாற்றி வரும் குணமான காக்கி அதிகாரியின் செயல்பாடு காக்கி வட்டாரத்திலேயே முகம் சுழிக்கவைத்துள்ளது. தனக்கு கீழ் பணியாற்றி வரும், 2 காக்கிகளை தனக்கு ஆதரவாக பயன்படுத்திக்கொண்டு ஸ்டேசனில் வரக்கூடிய சிறிய புகாருக்கு கூட பணம் பெற்று வருகிறாராம்.

திருமயம்- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு காவல் குடியிருப்பில் தங்கியுள்ள இந்த காக்கி அதிகாரி, பணியில் கூட போதையிலேயே சுற்றி வருகிறார். இதுகுறித்து உயர் அதிகாரிகள் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. உயர்அதிகாரிகளும் நேரில் கண்டித்தும் அவர் திருந்தியபாடு இல்லையாம்… சமீபத்தில் தங்கியிருந்த குடியிருப்பு இடம் அருகே நடந்த விபத்தில் பலர் இறந்தனர்.

அந்த சம்பவ இடத்திற்கு உயர் அதிகாரிகள் வந்தும் காக்கி அதிகாரி அந்த இடத்திற்கு வரவில்லை. அந்த அளவிற்கு அலட்சியத்துடன் சுற்றி வருகிறார். இரண்டுமுறை பணிமாறுதல் செய்தும் தனது செல்வாக்கை பயன்படுத்தி மீண்டும் கோட்டை பகுதி காவல் நிலையத்திற்கே வந்து உயர் அதிகாரிகளுக்கு கெத்து காட்டி வருவதாக காக்கி வட்டாரங்களில் முணுமுணுக்கின்றார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

குப்பை, உணவு கழிவுடன் சேர்த்து நாப்கின், ஊசியை போடக்கூடாது: வார்டுசபை கூட்டத்தில் அறிவுறுத்தல்

சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து பாடகர் மனோவின் மகன்கள் மீது தாக்குதல்: வைரலாகும் புதிய சிசிடிவி காட்சி

இடிந்து விழும் நிலையில் மின்வாரிய அலுவலகம்: புதிதாக கட்ட வலியுறுத்தல்