முந்தைய சட்ட பாதுகாப்பு ரத்து எம்பி, எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க லஞ்சம் வாங்கினால் குற்றம்: உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வாக்களிக்க லஞ்சம் வாங்கினால் அது குற்றமே என்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் முன்னதாக வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் வாக்களிக்க பணம் பெற்றால் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு பதிவு செய்ய முடியாத அளவுக்கு அரசியல் சாசன பிரிவு 105(2) மற்றும் 194(2) ஆகியவை சட்டப்பாதுகாப்பு வழங்கி வந்தது. இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் சிபு சோரனின் மருமகளுமான சீதா சோரன் கடந்த 2012ம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலில் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்க லஞ்சம் வாங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சீதா சோரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் சீதா சோரன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ‘‘எம்பி, எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தவோ அல்லது வாக்களிக்கவோ லஞ்சம் வாங்கியதற்காக வழக்கு தொடுப்பதில் இருந்து விலக்களிக்கப்படுவதாகவும், ஏற்கனவே உள்ள சட்டப்பிரிவுகள் இதனை உறுதி செய்வதாகவும் தெரிவித்தது. அதேப்போன்று கடந்த 1998ம் ஆண்டு அப்போதைய உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு பி.வி.நரசிம்மராவ் வழக்கில், லஞ்சம் வாங்கிய புகாராக இருந்தாலும் மேற்சொன்ன அந்த இரண்டு சட்டப்பிரிவுகள் வழக்கு தொடுப்பதில் இருந்தும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை உறுதிப்படுத்துவதாகவும் மூன்று நீதிபதிகள் ஒரு தீர்ப்பையும், இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பையும் வழங்கி இருந்தனர்.

இதைத்தொடர்ந்து மேற்கண்ட இரண்டு மாறுபட்ட தீர்ப்புகளையும் மறுஆய்வு செய்ய முடிவு செய்த உச்ச நீதிமன்றம் வழக்கை ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி அமைத்தது. இதைத்தொடர்ந்து வழக்கை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு இரண்டு நாட்கள் தொடர்ந்து விசாரணை நடத்தியது. அதில்,\\”நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டமன்றத்திலோ வாக்களிக்க லஞ்சம் வாங்கியதற்காக வழக்கு தொடுப்பதில் இருந்து அரசியலமைப்பின் 194(2) பிரிவின் கீழ் ஒரு சட்டமன்ற உறுப்பினர் விடுதலை பெறுகிறாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் மனுதாரர், எதிர்மனுதாரர், மற்றும் ஒன்றிய அரசு ஆகியோரின் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு அக்டோபர் 5ம் தேதி ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ், சஞ்சய் குமார், பி.எஸ்.நரசிம்ஹா, ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகிய ஏழு நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு நேற்று ஒருமித்து வழங்கிய தீர்ப்பு விவரம் :
இந்த விவகாரத்தில் பி.வி.நரசிம்ம ராவ் வழக்கின் தீர்ப்பில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இதில் வாக்கு அல்லது பேச்சுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் சட்டமன்ற உறுப்பினருக்கு விலக்கு அளிக்கும் பி.வி.நரசிம்ம ராவ் வழக்கின் தீர்ப்பு பரந்த மாற்றங்களைக் கொண்டுள்ளது மட்டுமில்லாமல் அதில் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது. அதாவது சட்டப்பிரிவு 105 அல்லது 194 இன் கீழ் லஞ்சம் தடை செய்யப்படவில்லை. இது வாக்களிப்பதற்கோ அல்லது சட்டமன்றத்தில் உரை நிகழ்த்துவதற்கோ வாங்கப்படுவதை அனுமதிக்க முடியாது. லஞ்சம் என்பது குற்றச் செயல் மட்டுமில்லாமல் சட்டவிரோதமான திருப்தியைப் பெறுவதில் படிக்கட்டாக அமைந்து விடுகிறது.

மேலும் பி.வி.நரசிம்ம ராவ் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் சாராம்சங்கள் விதிகள் 105, 194க்கு முரணாக உள்ளது. குறிப்பாக நாடாளுமன்ற சிறப்புரிமைகளால் லஞ்சம் பாதுகாக்கப்படவில்லை. அதாவது நரசிம்மராவ் வழக்கின் தீர்ப்பு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் பெற்றார்கள் என்றால் அவர்கள் வழக்கின் விசாரணையில் இருந்து ஆஜராவதில் இருந்து விலக்கு அளிப்பது என்பது கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும். சட்டம் இயற்றும் உரிமைகளுக்கான நோக்கம் மற்றும் பொருள் மனதில் கொள்ளப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. மேலும் எம்.பி., எம்எல்ஏக்களின் ஊழல் மற்றும் லஞ்சம் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் செயல்பாட்டுக்கு எதிரானதாகும். அதேப்போன்று லஞ்சம் பொது வாழ்வில் நன்னடத்தையை அழிக்கிறது. எம்பி மற்றும் எம்.எல்.ஏக்கள் ஆகியோர் வாக்களிப்பது உடபட எதற்காக லஞ்சம் வாங்கினாலும் அது குற்றமே ஆகும்.

மேலும் ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்க லஞ்சம் வாங்கும் எம்.எல்.ஏ.வும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பொறுப்பேற்க வேண்டும். வாக்களிக்க சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் லஞ்சம் பெறுகிறார் என்றால், அந்த இடத்திலேயே அவர்களுக்கான சட்ட பாதுகாப்பு நீங்கி விடுகிறது. லஞ்சம் வாங்குவது என்பது நாடாளுமன்ற சிறப்பு உரிமைகளால் பாதுகாப்பு பெற்றது கிடையாது. குறிப்பாக லஞ்சம் வாங்குவது என்பது ஒரு தனிப்பட்ட நபரின் தனிப்பட்ட குற்றம் ஆகும். அதற்கும் நாடாளுமன்றத்தில் அவர் பேசுவதற்கும் நடந்து நடந்து கொள்வதற்கும் தொடர்பு இல்லை. இருப்பினும் நாடாளுமன்றத்தின் சுதந்திரம், அதிகாரம் மற்றும் சலுகைகள் ஆகியவற்றை பயன்படுத்தி ஒரு உறுப்பினர் லஞ்சம் வாங்கி அதன் மூலம் பாதுகாப்பை பெறுவதை கண்டிப்பாக அனுமதிக்க முடியாது. அது சட்டப்படி குற்றமாகும். அது எதற்காக வாங்கப்பட்டது, பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து எல்லாம் நியாயப்படுத்த முடியாது. அதனால் இந்த விவகாரத்தில் ஏற்கனவே கடந்த 1998ல் நரசிம்மராவ் வழக்கின் தீர்ப்பில் கொடுக்கப்பட்ட சட்ட பாதுகாப்பை ரத்து செய்கிறோம். மேலும் வரும் காலத்தில் எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் லஞ்சம் வாங்கும் குற்றச்சாட்டுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்ப்பளித்தனர். மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

சீமானிடம் மரியாதையில்லை; நாதக நிர்வாகி விலகல்

தேமுதிக காசு வாங்கும் கட்சியா? விஜயபிரபாகரன் பரபரப்பு பேச்சு

தேசத்திற்கு தந்தைகள் கிடையாது; மகன்கள் உள்ளனர்: பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் மீண்டும் சர்ச்சை பதிவு!!