வணிக உரிமம் புதுப்பித்தலுக்கு சொத்துவரி ரசீது கட்டாயம் என்பதை நீக்க வேண்டும்: தலைமை செயலாளரிடம் விக்கிரமராஜா மனு

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சென்னை தலைமை செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனாவை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அப்போது பேரமைப்பு மாநில செயலாளர் ஆர்.ராஜ்குமார், கூடுதல் செயலாளர் வி.பி.மணி, மாநில செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

ஏ.எம்.விக்கிரமராஜா அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: உரிமம் புதுப்பித்தலில் மாநகராட்சி சொத்துவரி ரசீது அவசியம் என்பதை நீக்க வேண்டும். வணிக உரிமங்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்லுக்கான முதல்வரின் அறிக்கையை அரசாணையாக உடனடியாக வெளியிட வேண்டும். ஒற்றைச்சாளர முறையில் வணிக உரிமங்கள் வழங்க வேண்டும். சிறப்பு வணிகர் பாதுகாப்பு சட்டம் இயற்றிட வேண்டும். வாட் சமாதான திட்டம் கால நீட்டிப்பு வேண்டும்.

இரவுநேர கடைகள் சம்பந்தமாக உரிய வழிகாட்டுதல்களை காவல்துறைக்கு வழங்க வேண்டும். மாதாந்திர மின் கட்டண நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். சமூக விரோதிகளின் அத்துமீறல்களை முடிவுக்கு கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை புதுப்பேட்டை வாகன கழிவு இரும்பு வியாபாரிகளுக்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஆப்பூரில், ஆட்டோ நகர் ஒன்று அமைக்கப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட இட ஒதுக்கீட்டாளர்களுக்கு, அரசு ஏற்கனவே அறிவித்திருந்த தவணை முறை அடிப்படையில் ஒதுக்கீடுகளை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Related posts

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் துருக்கி

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்

டி20 ஆல்ரவுண்டர் தரவரிசை; ஹர்திக் பாண்டியா நம்பர் 1: முதல் இந்திய வீரராக சாதனை