Thursday, September 19, 2024
Home » அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்

அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்

by Nithya

நின்பாதம் சரண் புகுந்து

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

அடுத்த பாடலாக;
“விரவும்‌ புதுமலர்‌ இட்டு, நின்‌ பாத விரைக்கமலம்‌
இரவும்‌ பகலும்‌ இறைஞ்சவல்லார்‌ இமையோர்‌ எவரும்‌
பரவும்‌, பதமும்‌, அயிராவதமும்‌, பகீரதியும்‌
உரவும்‌ குலிசமும்‌ கற்பகக்‌ காவும்‌ உடையவரே’’.
– எண்பத்தி மூன்றாவது அந்தாதி

“ஆதியாக”

உடல் ஆரோக்யம், இளமை, அழகு, செல்வம், அனைத்தையும் ஒருங்கே அடைவதற்கு உமையம்மையின் பரிவார தேவதையான கிழக்குத் திக்கிலிருக்கும் இந்திரன், ஐராவதம், குலிசம், சலலி என்ற பண்டைய வழிபாட்டு முறை குறிப்பைச் சொல்கிறார். அதனை அறிந்து அருள் அடைய இப்பாடலுள் செல்வோம்.

“அந்தாதி பொருட்சொல் வரிசை”

* விரவும் புதுமலர் இட்டு
* நின்பாத விரைக்கமலம்
* இரவும் பகலும் இறைஞ்ச வல்லார்
* இமையோர் எவரும் பரவும் பதமும்
* அயிராவதமும்
* பகீரதீயும்
* உரவும்
* குலிசமும்
* கற்பகக் காவும்
* உடையவரே
இவ்வரிசையின் வழிபாடலின் விளக்கதை இனி காண்போம்.

“விரவும் புதுமலர் இட்டு”

“விரவும்” என்ற சொல்லை அணுகல், கலத்தல், அடைதல் பொருந்துதல், நட்பு கொள்ளுதல் என்ற ஐந்து பொருள்களிலும் பயன்படுகிறார். ஒவ்வொன்றாய் இனி
காண்போம்.அணுகல் என்ற பொருளில் “விரவு” எனும் சொல், உலகிலுள்ளோர் தேவையை தீர்த்துக்கொள்ள அதை தீர்ப்பவரை அணுகுவர். அதுபோலவே மனிதர்களும், தேவர்களும், உமையம்மையை அணுகி தனது தேவையைத் தீர்த்துக்கொள்ள முயல்வர் என்பதையே `சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார்’ (51) என்பதனால் அறியலாம்.

“விரவும்” என்ற சொல்லிற்கு கலத்தல் என்பதுவும் ஒரு பொருள். சிவபெருமானுடன் உமையம்மை இரண்டறக்கலந்து அர்த்தநாரீஸ்வரராக காட்சியளிக்கின்றாள். இந்த வடிவமானது அதை வணங்குவோர்க்கு விரும்பிய பலனை அளிக்கவல்லது. அதையே ‘இடப்பாகம் கலந்த பொன்னே’ (46) என்பதனால் அறியலாம்.“விரவும்” என்பதற்கு அடைதல் என்பதுவும் பொருள். உலகிலுள்ளோர், உபாசகர்கள், முனிவர்கள், பக்தர்கள், அனைவரும் உமையம்மையை அடைந்தே தனது குறைகளை கூறி நிறைவு செய்துகொள்ள முயல்வார். அதுபோல், அபிராமிபட்டர் தானும் உமையம்மையை அடைந்து அருள் பெற விரும்புகிறார். இதையே `பரம் என்றுனை அடைந்தேன்’ (88) என்பதனால் அறியலாம்.

மேலும் “விரவும்” என்பதற்கு உமையம்மைக்கு செய்யப்படுகின்ற பூச்சொரிதல் (புஷ்பாஞ்சலி) என்ற ஒரு வழிபாட்டை செய்வதனால் விரும்பிய பலனை பெறலாம் என்கிறது ஆகமம். இதையே “விரவும்” புது மலர் இட்டு என்கிறார். “விரவும்” புதுமலர் என்பதனால் விடியற்காலையில் மலர் மொட்டாக இருக்கும் போது பறித்து அது கோயிலில் உள்ள உமையம்மையின் திரு உருவத்திற்கு சாற்றிய பின்னர் மலரும் பக்குவத்தில் இருக்க வேண்டும். “விரவும்” என்பதனால் மொட்டையும், ‘`புது’’ என்பதால் அன்று பூத்த மலரையும், ‘`இட்டு’’ என்பதால் மந்திரம் சொல்லி சாற்றப்பட்டதையுமே “விரவும் புதுமலர் இட்டு’’ என்கின்றார்.

விழாக் காலங்களில் சிவன்கோயிலைச் சுற்றி ஒன்பது திசைகளிலும், பத்தாவதாக பலிபீடத்தையும், பொரி, பழ வகைகள், பூசணிக்காய், எலுமிச்சை, நெய் கலந்த சாத உருண்டை இவைகளை பலிபீடத்தின் மேல் இட்டு வழிபாடு செய்வதையே “விரவும் புதுமலர் இட்டு’’ என்று குறிப்பிடுகிறார். பலியிடுதல், புஷ்பாஞ்சலி செய்தல், அகத்தில் தியானம் செய்தல், தலை உச்சியில் வழிபாடு செய்தல், கோயில் கோபுரத்தில் வழிபாடு செய்தல், ஸ்ரீசக்கரத்தில் வழிபாடு செய்தல் என்ற பூஜைகளின் பெயர்களையே பொதுவாக அவ்வத்தேவதைகளை நாம் புரிந்து கொள்ளும் வகையில் குறிப்பிடுகிறார். “இட்டு” என்ற வார்த்தையால் பலியையும், “புதுமலர் இட்டு’’ என்ற வார்த்தையால் பூவையும், “விரவும் புதுமலர் இட்டு’’ என்பதால் மந்திர உச்சரிப்பையும் சூட்டவே “விரவும் புதுமலர் இட்டு’’ என்கிறார்.

“நின்பாத விரைக்கமலம்’’

“நின்” என்பதனால் அபிராமியையும், “பாத” என்பதனால் உமையம்மையின் பாதமாக நினைத்து வழிபாடு செய்ய வேண்டிய ஸ்ரீசக்ர யந்திரத்தையும், “விரைக்கமலம்” என்பதனால் ஸ்ரீசக்ர யந்திரத்திலுள்ள எட்டு இதழ், பதினாறு இதழ், கொண்ட தாமரையையும் சிறப்பாக குறிப்பிடுகின்றார். உமையம்மையை மனத்தாமரையில் தியானிப்பதையும், மூலாதாரம், ஸ்வாதிஸ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா என்ற ஆறையும், நான்கு ஆறு, பத்து, பன்னிரண்டு, பதினாறு, இரண்டு இதழ் கொண்ட தாமரைகளாக ஒவ்வொன்றிலும், எழுத்துக்களையே உமையம்மையாக கருதி வழிபடுவதை “நின்பாத விரைக்கமலம்’’ என்கிறார்.

ஆலய அமைப்பில் கோபுர கலசத்தின் கீழ் எட்டு இதழ் தாமரை அமைத்திருப்பர், இது இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என திசைகளை பாதுகாக்கும் தேவதைகளை குறிக்கும். இந்த தேவதைகளை வழிபாடு செய்வதனால், பாதுகாப்பு பொருள் என்ற இரண்டு பயனையும் அடையலாம்.

மேலும் `எட்டுத் திக்கே அணியும்’ (37) என்பதனால் சிவபெருமானை ஆகாயத்தின் வடிவிலும், தலை உச்சியில் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை வடிவிலும், யோகாப்யாச முறையில் உமையம்மையை வழிபாடு செய்வதை சஹஸ்ராரம் என்ற வழிபாட்டையும் கலைச் சொல்லாகவே சூட்டு கிறார். அதையே “நின்பாத விரைக்கமலம்’’ என்கிறார்.

“இரவும் பகலும் இறைஞ்ச வல்லார்’’

“இரவு” இரவு பொழுதிலும், “பகலும்” பகல் பொழுதிலும், “இறைஞ்ச” என்பதனால் காலை பொழுதிலும், இரவுப் பொழுதிலும், திருவிழாக் காலங்களில் வழிபடப்படும், திசை தேவதைகளையும் உமையம்மையின் பரிவார தேவதைகளையும், இரவிலும், பகலிலும், பலியிட்டு வழிபாடு செய்வதை உபாசனையை சித்தி செய்துகொள்வதற்கு பெற விரும்பும் சித்தியை சார்ந்து இந்த தேவதைகளை வழிபாடு செய்பவர்.

அந்த வழிபாடு செய்வதற்கு என்று சில நியதிகளும் உள்ளன. அந்த நியதிகளையே “இறைஞ்ச” என்ற வார்த்தையால் பயன்படுத்துகின்றார். ஒவ்வொரு திக்கிற்கும், ராகம், தாளம், வாத்யம், நைவேத்தியம், வணங்க வேண்டிய தேவதை, என்று தனித்தனியாக உள்ளது.திருவிழாக் காலங்களில் காலையிலும், இரவிலும், இந்த தேவதைகளுக்கு பலியிடுவர். மந்திர சித்தியை பெற விரும்புகிறவர்கள் அந்த தேவதையை முதன்மையாக வணங்க வேண்டும் என்கிறார். ஒவ்வொரு திக்கிற்கு ஒவ்வொரு ஐஸ்வர்யங்கள் உண்டு. அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தரவல்லது. எட்டுவித உபசாரங்களால் செய்யவேண்டியதை குறித்து.

இரவு நேரங்களில் காம்யபலனையும், பகல் நேரங்களில் பாபநாசத்தையும், தரவல்லவை இத்தேவதைகள். இதை பரிசாரகரே முன்நின்று செய்வர். பட்டர் பரிசாரகர் என்பதால் அந்த குறிப்பையே இங்கே பதிவு செய்திருக்கிறார். பொதுவாக நோய்நீக்கம், செல்வப் பெருக்கம், குடும்ப ஒற்றுமை, வாரிசு என்ற ஒவ்வொன்றிற்கும் தனித்தனி முறைகளையும் விரும்பும் வகையில் செய்துகொள்ள கூடவோ குறைத்து செய்யவோ பூசனையில் வழிமுறைகள் உள்ளன. அதையே “இரவும் பகலும் இறைஞ்ச வல்லார்’’ என்கிறார்.

“இமையோர் எவரும் பரவும் பதமும்’’

இமையவர்கள் என்பவர்கள் தேவர்கள். உமையம்மைக்கு இவர்கள் சேவகர்கள். உமையம்மையை வணங்குவதனால் இவர்கள் தானே முன்வந்து அருள்வர். ஒருசில நேரங்களில் வழிபாட்டிலும், பூசனை முறையிலும், தவறு ஏற்பட்டால் அதைக் கனவிலே வந்து சொல்வார்கள். சிலவேளைகளில் தடங்கலைச் செய்வார்கள். மேலும், உமையம்மையின் உண்மைத் தன்மையை உபாசகனுக்கு புறத்து இருந்து விரித்துச் சொல்வார்கள். இந்த தேவதைகள் பலி தேவதைகள் எனப்படுகின்றன. இவர்களை வணங்கினால் உபாசகன் எதை விரும்புகிறானோ அதை அவனுக்கு சாதித்து தருவார்கள்.

சில நேரங்களில் உபாசகனுக்கு தொந்தரவுகளையும் அளிப்பார்கள். இதையே அபிராமி பட்டர், `பலி கவர் தெய்வங்கள் பாற்சென்று மிக்க அன்பு பூணேன்’ (64) என்கிறார். `உயிர் அவி உண்ணும் உயர்சண்டி’ (77) என்கிறார். இந்த தேவதைகள் சைவ வழியிலும், அசைவ வழியிலும் வழிப்படத்தக்கவர்கள். முதல் தேவதையைச்சார்ந்து வெவ்வேறாய் அமைத்திருப்பார்கள்.

உதாரணமாய் பைரவருக்கு அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோத பைரவர், உன்மத்த பைரவர், சம்ஹார பைரவர், கால பைரவர் என்பதை போல் உமையம்மைக்கு பிராம்மி, மாஹேஸ்வரி, வைஷ்ணவி, சாமுண்டி, சண்டி, வாராகி, காளி என்று வெவ்வேறு தேவதைகளாக இருப்பர். இதுபோல், ஒவ்வொரு தேவதைகளுக்கும் பலி தேவதைகள் இருக்கும்.
கிராம தேவதைகளைப் பொறுத்தவரை எல்லைக் கட்டுதல் என்று குறிப்பிடுவர். இந்த தேவதை ஊர் எல்லை தாண்டாது. முதன்மைத் தேவதை சொல்வதையே கேட்கும்.

சம்பந்தப்பட்டவரை தவிர வேறு யாருக்கும் அருளாது. இந்த தேவதைகளை பழங்காலங்களில் ஓர் ஊரில் வாழும் வெவ்வேறு இனத்தவர் தனித்தனியாக வழிபாடு செய்யும் வகையில் அமைத்திருப்பர். இதையே திருவையாறில் உள்ள பரிசார விநாயகர், சில்பி விநாயகர், சிவாசார்ய விநாயகர், தேசிகவிநாயகர் என்று தனித்தனியாய் உள்ளதை கொண்டு, இந்த தேவதை அனைத்தும் உமையம்மையை வணங்குவோரை வணங்கி நிற்கும். உமையம்மையை வணங்குவோர்க்கு சேவை செய்யும். இந்த பண்பையே “இமையோர் எவரும் பரவும் பதமும்’’ என்கிறார்.

“அயிராவதமும்’’

பார்கடலில் உதித்த ஐராவதம் என்னும் யானையானது இந்திரன் மட்டுமே ஏறிச்செல்லும் சிறப்புடையது. “அயிராவதம்” மற்ற யானையை போல் அல்ல, இதுவே வரம் அருள வல்லது. இந்திரனை பொருத்தவரை ஐராவதம் வாகனம், வஜ்ரம் ஆயுதம் அதில் இருக்கும் தேவதை சலலி, ப்ரதான தேவதை என்று பிரித்து ஒவ்வொன்றையும் தனித்தனியே வழிபடுவர்.
இது சரீர சவுக்யத்தை தரக்கூடியது. இந்த காரணத்தால்தான் “அயிராவதம்” என்கிறார். அப்படிப்பட்ட சிறப்புடைய யானையானது உமையம்மையின் பக்தர்களுக்கும் வாகனமாய் அமையும் அதையே இங்கு “அயிராவதமும்’’ என்கிறார்.

“பகீரதீயும்’’

பித்ரு தோஷத்தை நீக்கக்கூடிய கங்கையை குறிப்பிடுகிறது. திருக்கடையூரை பொருத்தவரை அமிர்தகடேஸ்வரருக்கு காசியிலிருந்து மார்கண்டேயரால் அழைத்துவரப்பட்ட கங்கையே அஸ்வினி தீர்த்தம். அஸ்வினி நட்சத்திரத்தன்று அதில் கங்கை அருள் செய்ததால் அஸ்வினி தீர்த்தம் என்று இந்த கிணறு அழைக்கப்படுகிறது.

திருக்கடையூரில் இருந்து ஒரு கிரோஷ தூரத்தில் திருமயானம் என்ற கோயிலின் அருகே உள்ள இந்த கிணற்றிலுள்ள கங்கை நீரில்தான் இன்றுவரை திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. வேறு தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்பட மாட்டாது. இதனால், இது அனைத்து பாபமும் போக்கும் என்பதனால் “பகீரதீயும்’’ என்கிறார்.

“உரவும்”

என்ற சொல்லிற்கு அறிவு மற்றும் ஆற்றல் என்பது பொருள். ஐந்து புலன்களையும் வெல்லும் ஆற்றல் ஜபத்திற்கு உண்டு. அதுபோல மனதை ஒரு மிக்கும் ஆற்றல் தியானத்திற்கு உண்டு. தேவதைகளின் அருள் என்பது உபாசகனுக்கு பாதுகாப்பை தரும் ஆற்றலாக திகழ்கிறது.

இந்த பாடலை பொருத்தவரை “உரவும்’’ என்ற சொல்லானது தேவதை பற்றிய மெய் அறிவை பெறுதலை குறிக்கிறது. ஒரு தேவதையை பற்றி அறிந்துகொள்வது. அந்த தேவதையின் அருளை பெறுவதற்கு பெரிதும் உதவும் தேவதையின் உண்மைப்பண்பைச் சரியாக அறிந்தவனுக்கு மிகவும் எளிமையாக வந்து அருளும் அது பேசுவது புரியும்.

ஆனால் உபாசகனின் அன்பினாலும் உண்மைப் பண்பினாலும் தேவதையை அறிய முடியுமே அன்றி பிறவகையில் சாத்தியமில்லை. ஆகையால் தேவதையை பற்றிய அனுபவ ஞானத்தையும், உபாசகன் அடையும் பலத்தையும் “உரவும்” என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார்.

“குலிசமும்’’

என்பது இந்திரனின் ஆயுதம். இதுவும் ததிசி முனிவரின் முதுகெலும்பே ஆகும். இதனால், தாக்கப்பட்டவர் அழிந்துவிடுவார்கள். பொதுவாக, ஆயுதம் என்பது கொலைக் கருவியே என்றாலும் அது பயன்படுத்துபவரை பொறுத்து வெற்றி தோல்வி உறுதி செய்யப்படும். முருகன் கையில் இருக்கும் வேல், இந்திரன் கையில் இருக்கும் வஜ்ரம், விஷ்ணுவின் கையில் இருக்கும் சக்கரம், சிவன் கையில் இருக்கும் சூலம் இவை யார் கையில் இருக்குமோ அவரே வெற்றி பெறுவர்.

இந்த ஆயுதங்களுக்கெல்லாம் வெற்றி ஆயுதம் என்று பெயர். இந்த ஆயுதங்களை தாக்குவதற்கு பயன்படுத்தினால் எதிரியைக் கொன்று புண்ணிய லோகத்திற்கு சென்று பாபத்தை போக்கி கங்கையில் தூய்மை பெற்று, ஏவியவர் கையை தானாகவே வந்து அடையும் வல்லமை வாய்ந்தது. அறத்தின் பாற்பட்டோர் மட்டுமே இவ்வாயுதங்களை பயன்படுத்த இயலும் அதனாலேயே அபிராமிபட்டர். இந்த ஆயுதத்தை தனியாக குறிப்பிடுகிறார். இதையெல்லாம் மனதில் கொண்டே “குலிசமும்’’ என்கிறார்.

“கற்பகக் காவும்’’

“கற்பகம்” என்பது நினைத்ததையெல்லாம் தரவல்ல ஒரு கொடி என்றும், மரம் என்றும் இருவகையாக குறிப்பிடுகின்றார். இது இந்திரனுடைய நந்தவனத்தில் மிகுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த விருட்ஷத்தின் சிறப்பு இதை தனித்து வணங்குவோர்க்கு உலகியல் வாழ்வில் உள்ள அனைத்துச் செல்வங்களையும் படைத்து அவர்கள் விரும்புவதை தரவல்லது.
இது மற்ற மரங்கள் போல் அல்லாமல் இதைப் பறிக்கவோ இம்மரத்தை சேதம் செய்யவோ முயற்சி செய்வோரை தானே போர்ப் படையை உருவாக்கி அழித்துவிடும். இந்திரலோகத்தில் உள்ள கங்கைக் கரையில் மட்டுமே இருக்கும் இயல்புடையது. இந்திரனை விட்டு எப்பொழுதும் நீங்காத இயல்புடையது.

பாற்கடலை கடைந்தபோது அதில் இருந்து தோன்றியது இலக்குமி, சந்திரன் இவர்களுக்கு சகோதரியாக கருதப்படுவது. அத்தகைய மரங்கள் அடர்ந்த காடு என்று செல்வத்தின் மிகுதியையும், ஆனந்தத்தின் மிகுதியையும், பாதுகாப்பின் மிகுதியையும் குறிப்பிடவே “கற்பகக் காவும்’’ என்கிறார்.

“உடையவரே’’

என்பதனால் முன்சொன்ன இந்திர லோகத்தில் உயர்ந்த பதவியையும், அயிராவதத்தையும், கங்கையையும், மிகுந்த வலிமையையும், வெற்றி ஆயுதத்தையும், நினைத்ததை யெல்லாம் தரும் கற்பகக் காவையும், தனக்கு சொந்தமாக்கிக் கொண்டவர் என்பதையே “உடையவரே’’ என்ற வார்த்தையால் சொல்கிறார். நாம் முன்னர் சொன்னது போலவே இந்திரன், அயிராவதம் அவனது ஆயுதமாகிய வஜ்ரம் அதற்கு அதிதேவதையாக சலலி இவைகளை அருளும் உமையம்மை என்ற ஐந்தினையும் ஒருங்கே வழிபடும் பண்டைய பூசனை முறையையே இந்தப் பாடலானது பெரிதும் விரிவாக விளக்காமல் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வாழும் காலத்தில் வெள்ளானைக் கோட்டம், வேல் கோட்டம், வேந்தன் கோட்டம் என்றெல்லாம் சிற்சிறு கோயில்கள் அமைந்திருந்து பின்னாளில் அது வழிபடுவார் அற்று மறைந்து போனது என்பதாக செவிவழிச் செய்தியால் அறியமுடிகிறது. இவையெல்லாவற்றையும் சேர்த்தே பஞ்சோபசரம், பஞ்ச சாரிகா என்ற வழிபாட்டு முறையின் வழி அறிந்து பூசனை செய்து மேற்கண்டவற்றை பூசனையால் அனுபவத்தில் பெற்றவரையே “உடையவரே’’ என்கிறார். இவ்வனைத்தையும் நாமும் பெற முயல்வோம்.

“அந்தமாக”

“விரவும் புதுமலர் இட்டு நின்பாத விரைக்கமலம்’’ என்பதனால் மலர்களால் களம் அமைத்து அதிலே உமையம்மையை வழிபாடு செய்வதைக் குறிப்பிடுகிறார். “இரவும் பகலும் இறைஞ்ச வல்லார்’’ என்பதனால் பகல் நேரத்தில் அதிதேவதையான உமையம்மையையும், இரவு நேரத்தில் பரிவார தேவதையான இந்திரன் முதலான எட்டு திக்கு தேவதைகளையும் தாந்ரீக முறைப்படி வழிபாடு செய்தலையும் குறிப்பிட்டார். “இமையோர் எவரும் பரவும்’’ என்பதனால் இந்திர லோகத்தில் உள்ள அனைத்து நன்மைகளையும் பூவுலகத்தில் இருந்தபடியே அடையலாம்.

“பதமும், அயிராவதமும், பகீரதியும், உரவும் குலிசமும், கற்பகக்காவும் உடையவரே’’ என்பதனால் மெய், வாய், கண், மூக்கு, செவி, மனம், புத்தி இவற்றை ஒருங்கே சேர்த்து அனுபவிக்கும் உலகியல் இன்பங்களை பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதை, அதற்குரிய சாதனமான பரிவார தேவதையின் பூசனையையே குறிப்பிட்டார். வணங்கியருளைப் பெறுவோம்.

You may also like

Leave a Comment

14 + twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi