அபிஜித் முகூர்த்தம் என்றால் என்ன?

?ஒருவருடைய ஜாதகத்தில் சனி தசை 18 வருடம் என்றால் பதினெட்டு வருடமும் சனியால் அவதி ஏற்படுமா?
– சு.ஆறுமுகம், கழுகுமலை.

சனிதசை என்பது 18 வருடம் அல்ல, 19 வருடம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். முதலில் சனி என்றாலே அவதியைத் தருபவர் என்ற தவறான எண்ணத்தை கைவிடுங்கள். சனி கொடுக்க, எவர் தடுப்பர் என்று சொல்வார்கள். சனிதசை காலத்தில் தங்களுடைய உழைப்பால் உயர்ந்தவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். நமக்கு ஏதாவது ஒரு துன்பம் வந்தாலே, உடனே அதற்குக் காரணம் சனி என்று தவறாக எண்ணுகிறோம். ஒரு விபத்து நடந்துவிட்டால், அவனுக்கு கண்டச்சனி, அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, பொங்குசனி என்று நாமாக ஒரு பேர் வைத்து, அதனால்தான் விபத்து நடந்தது என்று சனியின் மேல் பழியினைப் போடுகிறோம். நாம் சொல்லும் பழிகளை எல்லாம் சுமந்துக் கொண்டு தன் கடமையைச் செய்து கொண்டிருக்கும் சனி, உண்மையிலேயே தியாகத்தின் உருவம். ஆக, சனி என்றாலே அவதியைத் தருவார் என்ற எண்ணத்தை கைவிடுங்கள். நெற்றி வேர்வை நிலத்தில் சிந்தி உழைப்பவர்களின் ஜாதகத்தில், சனியின் தாக்கத்தினைக் காண முடியும். சனியின் பலத்தோடு உழைக்கும் இவர்கள், நிச்சயமாக வாழ்வினில் தங்கள் லட்சியத்தை அடைவார்கள். ஆக, சனி தசையின் காலத்தில் என்ன பலன்கள் உண்டாகும் என்பது அவரவர் ஜாதகத்தில் சனி அமர்ந்திருக்கும் இடம் மற்றும் சனி வாங்கியிருக்கும் நட்சத்திர சாரம் ஆகியவையே தீர்மானிக்கும். நம் கண் முன்னால் உழைப்பால் உயர்ந்தவர்கள் பலரும் சனியின் பலத்தினைப் பெற்றவர்களே என்பதை உணர்ந்துக் கொண்டால் சனியால் எந்த அவதியும் இல்லை, மாறாக வெற்றியே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

?அபிஜித் முகூர்த்தம் என்றால் என்ன? இதன் மகத்துவத்தை சற்று விளக்கமாகத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
– எம்.கணபதி, சென்னை.

ஒவ்வொரு நாளிலும் மூன்று வகையான நேரங்கள் தோஷமற்ற காலங்கள் என்பது ஜோதிடவிதி. பிரம்ம முகூர்த்தம், அபிஜித் முகூர்த்தம் மற்றும் கோதூளி லக்னம் என்று இவற்றை அழைப்பார்கள். சூரிய உதயத்திற்கு முன்னதாக வரக்கூடியது, சூரியன் நடு உச்சிக்கு வரும் நேரம், சூரிய அஸ்தமனத்திற்கு முன்னதாக வரக்கூடிய அதாவது பசுமாடு மேய்ச்சலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பக்கூடிய காலம் என்று இவற்றை நம்மால் புரிந்து கொள்ள முடியும். இதில், அபிஜித் முகூர்த்தம் என்பது, சூரியன் நடு உச்சிக்கு வருகின்ற காலம் ஆகும். இந்த நேரத்தில் திதி, வார, நட்சத்திர, யோக, கரண தோஷங்களையோ அல்லது ராகுகாலம், எமகண்டம் போன்றவற்றையோ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. திடீரென்று அவசரமாக அதிமுக்கியமாக ஒரு செயலைச் செய்ய வேண்டும், ஆனால் அன்றைய நாள் அத்தனை விசேஷமாக இல்லை எனும்போது, அந்த நாளில் அபிஜித் முகூர்த்த நேரத்தில் செய்யலாம் என்றும், அவ்வாறு அபிஜித் முகூர்த்தத்தில் செய்கின்ற செயல் வெற்றி பெறும் என்றும், ஜோதிட விதிகள் உரைக்கின்றன. இந்த அபிஜித் முகூர்த்தம் என்பது அகஸ் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்தின் நடுவே வரக்கூடியது. இது நாளுக்கு நாள் மாறுபடும் என்பதால், இதனைத் துல்லியமாகக் கணக்கிட வேண்டியது அவசியம். நல்ல சுபமுகூர்த்த நாளில்கூட அபிஜித் முகூர்த்தம் என்பது எந்தவிதமான குறையும் இல்லாத முழுமையாக வெற்றியைத் தரக்கூடிய நேரமாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்தில், அயோத்தி ராமர் கோயிலில், மூலவர் சிலை பிரதிஷ்டாபனம் செய்யப்பட்டதும், இந்த அபிஜித் முகூர்த்த நேரத்தில்தான் என்பதைக் கொண்டே இந்த நேரத்தின் சிறப்பினை உணர்ந்துக் கொள்ள முடியும்.

?வியாபார நிறுவனங்களில் குண்டாக ஒரு பொம்மையை வரவேற்பறையில் வைத்திருக்கிறார்களே, இது எதற்காக?
– என்.இளங்கோவன், மயிலாடுதுறை.

அதனை குபேர பொம்மை என்று அழைப்பார்கள். ஹேப்பிமேன் என்று அந்நிய தேசத்தாரால் அழைக்கப்படுகிறது. நம்மவர்கள், அதனை செல்வங்களுக்கு அதிபதி ஆகிய குபேரனின் உருவமாகப் பார்ப்பதாலும், அந்த இடத்தில் குபேரனின் திருவருளால் செல்வம் பெருக வேண்டும் என்ற நம்பிக்கையிலும், வியாபார நிறுவனங்களில் வைத்திருக்கிறார்கள். வருகின்ற வாடிக்கையாளர்களுக்கு அந்த பொம்மையைக் காணும்போது மனதிற்குள் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி என்பது உண்டாகிறது. நேர்மறையான அதிர்வலைகள் அதிமாகப் பரவும்போது, அந்த இடத்தில் செல்வவளம் என்பதும் கூடுகிறது.

?ஒரே ராசிக்கு ஒவ்வொரு விதமான பலன்களை சொல்கிறார்கள் ஜோதிடர்கள். எது சரியான பலன் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?
– ஞான.தமிழன்,பொன்னேரி.

நீங்கள் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வரும் ராசிபலன்களைப் பற்றிச் சொல்கிறீர்கள் என எண்ணுகிறேன். இவற்றில் சொல்லப்படும் ராசி பலன்கள் தனிப்பட்ட மனிதனின் ஜாதகத்தைக் கொண்டு சொல்லப்படுபவை அல்ல. அந்தந்த நாளில் இருக்கும் கிரஹ அமைப்பினைக் கொண்டு ஜோதிடர்கள், ராசிபலன்களைச் சொல்கிறார்கள். ஒரே ராசியில் இந்த உலகில் 50 கோடி பேர் வாழ்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால், அவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் நடக்குமா என்பதை யோசித்துப் பாருங்கள். உதாரணத்திற்கு, துலாம் ராசியைச் சேர்ந்தவர்களுக்கு திருமண யோகம் கூடி வரும் என்று பலன் சொன்னால், துலாம் ராசியைச் சேர்ந்த எல்லோருக்கும் திருமணம் நடக்குமா என்ன? யாருடைய ஜாதகத்தில் திருமணயோகம் என்பது இருக்கிறதோ, அவர்களுக்கு திருமணம் தடையின்றி நடந்தேறும் என்று புரிந்து கொள்ள வேண்டும். மீடியாக்களில் சொல்லப்படுகின்ற ராசிபலன் என்பது பொதுவாக சொல்லப்படுவதுதானே அன்றி தனிப்பட்ட முறையில், உங்களுக்கான பலனை அறிந்துக் கொள்ள வேண்டும் என்றால், உங்கள் ஜாதகத்தில் நடக்கும் தசாபுக்தி மற்றும் கிரஹங்களின் அமர்வுநிலை மட்டும்தான் அதனைத் தீர்மானிக்கும். இந்த பலனை ஒவ்வொரு ஜோதிடரும் தங்களுக்குரிய பாணியில் சொல்கிறார்கள்.

ஒருசில ஜோதிடர்கள், தோஷமாக உள்ள விஷயத்தை மிகுந்த எச்சரிக்கையைத் தந்து எடுத்துச் சொல்வார்கள். ஒரு சிலர், இதெல்லாம் ஒண்ணுமில்லை, எல்லாம் சரியாயிடும் கவலைப்படாதே என்று நம்பிக்கையூட்டும் விதமாகச் சொல்வார்கள். நடக்கப் போகும் பலன் என்னவோ ஒன்றுதான். அதனை ஜோதிடர்கள் வெளிப்படுத்தும்விதம், அவரவர் கையாளும் முறையைப் பொறுத்தது. மூளையில் கட்டி, அறுவைசிகிச்சை செய்துதான் அதனை அகற்ற வேண்டும் என்று ஒரு மருத்துவர், நோயாளியை பயமுறுத்துவார். மற்றொரு மருத்துவர், இதெல்லாம் இந்த காலத்தில் சகஜமாக குணப்படுத்தக் கூடிய ஒன்றுதான், ஒண்ணுமேயில்ல, ஒரே நாளில் இதனை அகற்றி, சரிபடுத்திவிட முடியும், கவலையேபடாதீங்க, என்று நம்பிக்கை ஊட்டுவார். அதேபோல்தான் ஜோதிடர்களும். அவரவருக்கு உரிய பாணியில் பலனைச் சொல்கிறார்கள். இதனை நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

Related posts

திருச்செந்தூரின் கடலோரத்தில்…

வெற்றி தரும் வெற்றி விநாயகர்

இந்த வார விசேஷங்கள்