ஆவின் இடத்தில் விதிமீறி கட்டப்பட்ட அம்மன் கோயில் அகற்றம்: பொதுமக்கள் மறியல்

திருவொற்றியூர்: மணலி மண்டலம், 26வது வார்டுக்குட்பட்ட அ.சி.சி நகர் பகுதியில் ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைத்து வழிபட்டு வந்தனர். ஆவின் நிலத்தில் அத்துமீறி கட்டப்பட்ட இந்த கோயிலை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் ஆவின் நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டர், மாதவரம் தாசில்தார், காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தனர்.

அதை தொடர்ந்து, ஆவின் நிறுவன துணை பால் ஆணையர், லட்சுமணன் தலைமையில் மாதவரம் வட்டாட்சியர் விக்னேஷ், செங்குன்றம் காவல் துணை ஆணையாளர் பாலகிருஷ்ணன், உதவி ஆணையர்கள் ராஜாராபர்ட், மகிமைவீரன், மாதவரம் பால் பண்ணை காவல் ஆய்வாளர் வேலுமணி மற்றும் 300க்கும் மேற்பட்ட போலீசார் அ.சி.சி நகர் பகுதிக்கு நேற்று வந்து, பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த கோயிலை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அம்மன் சிலையை அகற்றக்கூடாது என்று அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்து, பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் ஆவின் நிறுவன நிலத்திலிருந்த கோயிலை இடித்து அகற்றி, அங்கிருந்த அம்மன் சிலையை பாதுகாப்பாக எடுத்து, முன்னாள் கவுன்சிலர் நாஞ்சில் ஞானசேகர் முன்னிலையில் கோயில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். அப்போது, வேறு இடத்தில் கோயில் அமைக்க, ஆவின் நிர்வாகம் இடம் ஒதுக்கித் தரவேண்டும் என அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related posts

பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்

மது அருந்த பணம் தராததால் தற்கொலை

கல்லூரி விடுதியில் மாணவி மாயம்