ஆவாரை… வணிக ரீதியாக பயிர்செய்து வளம்பெறலாம்!

ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ’ என்பது ஓர் அற்புதமான பழமொழி. ஆவாரம்பூ என்பதன் சங்க காலப் பெயர்தான் ஆவாரை. இந்த ஆவாரை செழித்திருக்கும் நிலத்தில் மனிதர்களை மரணம் நெருங்காதாம். அவ்வளவு மகத்துவம் மிக்கது ஆவாரை. நாம் சாலையில் நடந்து செல்லும்போது பல இடங்களில் இந்த ஆவாரஞ்செடியினைப் பார்த்திருப்போம். மிகவும் சாதாரணமாக வளர்ந்து கிடக்கும். ஆனால் இந்தத் தாவரத்தில் கோடி அதிசயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் ஆவாரைக்கு சிறப்பிடம் வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போது பல வெளிநாடுகளுக்கு ஆவாரம்பூ ஏற்று மதி செய்யப்பட்டு வருகிறது. மானாவாரியாக விளைந்து கிடக்கும் ஆவாரம் பூவை விவசாயிகள் சிலர் சாகுபடியும் செய்து வருகிறார்கள். இத்தகைய ஆவாரையின் சிறப்புகள் குறித்து விவரிக்கிறார்கள் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர்களான மா.விசாலாட்சி, தி.சரஸ்வதி, சு.தா. பினி சுந்தர் ஆகியோர்.“ஆவாரம்பூ சங்க காலத்தில் இருந்தே மகத்துவம் மிக்க மலராக பார்க்கப்படுகிறது. குறிஞ்சிப்பாட்டில் தொகுக்கப்பட்டுள்ள 99 வகையான மலர்களில் ஒன்றாக இது விளங்குகிறது. இந்தியாவில் உள்ள பல பல்வேறு பழங்குடி இனத்தவர்களால் இம்மலர் பல்வேறு நோய்களுக்கான மூலிகையாக பயன்படுத்தப்படுகிறது. உச்சந்தலையில் சூட்டை உணராமல் இருக்க ஆவார இலையே அக்காலத்தில் தலையில் வைத்துக் கொள்வார்கள் என்று இலக்கியங்களில் கூறப்பட்டு இருக்கிறது. ‘ஆவாரம்பூவிற்கு தேகத்த குளிராக்க’ என்ற பழங்கால சொற்றொடர் ஆவாரம்பூ தேகத்தை குளிர்ச்சியூட்ட வல்லது என்று குறிக்கிறது. ஆவாரம் துவர்ப்புச் சுவையைக் கொண்டிருப்பதால், அதை எடுத்துக் கொள்வதால் உடலில் நோய்கள் நெருங்காது.

ஆவாரம்பூ இன்று வரை வரப்புகளில் கறிவேப்பிலை போன்று குத்துச்செடியாக வளர்க்கப்படுகிறது. விதைக்குச்சி மூலம் பயிர்ப் பெருக்கம் செய்யப்பட்டு நடவு செய்யப்படுகிறது. இதன் ஆண்டு நீர்த்தேவை 300 மில்லி லிட்டர் ஆகும். இது சுமார் 15-20 டிகிரி சென்டிகிரேட் தட்பவெப்ப நிலையில் முழு சூரிய ஒளி இருக்கும் இடத்தில் நன்கு வளரக்கூடியது. அதிக குளிர்ப் பிரதேசங்களில் சாகுபடி செய்ய இயலாது. வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய இந்த செடி அனைத்து வடிகால் வசதி உள்ள மண்ணிலும், உவர் மண்ணிலும் வளரும். அழகிய மலர்களுடன் கூடிய புதர்ச்செடி என்பதால் நிழல் நன்றாக இருக்கும். ஆவாரம்பூவை அனைத்து வகையான மண்ணிலும் சாகுபடி செய்யலாம். கத்தரி, புடலை, வெண்டைத் தோட்டங் களின் வரப்புகளில் வேலிக்காக இதன் குச்சிகளை ஊன்றினாலே போதும். நன்கு செழித்து வளரும். இதற்கு அடியுரமோ, மருந்துகளோ எதுவும் தேவைப்படாது. எந்வொரு பராமரிப்பும் தேவைப்படாது. காட்டுச்செடி போல் வளரும். ஒன்று, இரண்டு ஆண்டுகளில் வளர்ந்து அதிகப்படியான பூக்கள் கொடுக்கத் தொடங்கும். இதனை விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்யலாம். ஆண்டு முழுவதும் வருவாய் கொடுத்துக்கொண்டே இருக்கக்கூடிய மூலிகைப் பயிராக ஆவாரம்பூ திகழ்கிறது.

ஆவாரம் பூச்செடியின் அனைத்து பாகங்களும் பலவிதமான மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளன. இதன் இலை, பட்டை, பூ, வேர், பிசின், இளம் காய்கள், கொட்டைகள் ஆகியவை பலவிதமான நோய்களுக்குத் தீர்வாக விளங்குகின்றன. பூக்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. இளம் காய்கள் வாந்திக்கு மருந்தாகவும், தாகத்தை கட்டுப்படுத்த வல்லதாகவும், பசியைத் தூண்ட வல்லதாகவும் திகழ்கிறது. இதன் கொட்டைகள் விஷக்கடி, பேதி, ஆஸ்துமா மற்றும் ரத்த உறைவுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இலைகள் உடல் சோர்வு, வயிற்றுப்புண், கண் நோய், உடல் வலி தீர்க்கவல்லது. வேர்கள் வயிற்றுக் கோளாறு, வாந்தி, சிறுநீர்த் தொற்று, பேதி போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துகிறது. பட்டைகள் பல்வலி வாத நோய் மற்றும் பூஞ்சாண நோய்களுக்கு சிறந்த மருந்தாகத் திகழ்கிறது.

ஆவாரம் பூவானது இந்தியா மற்றும் இலங்கையைத் தாயகமாகக்கொண்ட தாவரமாகும். இந்தியாவில் தென்னிந்தியா, இந்தியாவின் மையப்பகுதி மற்றும் மேற்கு இந்திய பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இந்தியா ஆவாரம்பூ ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது. இவ்வளவு மருத்துவக் குணங்களைக் கொண்ட ஆவாரம்பூ அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. காய்ந்த இலைகள் மற்றும் பூக்கள் மாத்திரைகளாகவும், மூலிகைகளாகவும், மூலிகைப் பொடியாகவும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் வருமானம் தரக்கூடிய பயிராக மாறியுள்ள ஆவாரம்பூவை விவசாயிகள் பயிர் செய்து நல்ல வருமானம் பெறலாம்’’ என்கிறார்கள்.

 

Related posts

சென்னையில் பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைப்பு..!!

சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,600க்கு விற்பனை!!