ஆவடி, திருவேற்காடு பகுதியில் உள்ள ஜாபர் சாதிக்குடன் தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை: கோடிக்கணக்கில் பரிவர்த்தனை நடந்ததாக தகவல்

ஆவடி: ஆவடி, திருவேற்காடு பகுதியில் உள்ள ஜாபர் சாதிக்குடன் தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. இதில் இவர்களது வங்கி கணக்குகளில் கோடிக்கணக்கில் பணப் பரிவர்த்தனை நடந்ததாக தெரிய வந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை இந்தியாவுக்கு கடத்தி வந்ததாக மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த மார்ச் மாதம் திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை கைது செய்து டெல்லி திஹார் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் போதை பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகக் கூறி ஜாபர் சாதிக் மீது வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், கடந்த ஜூன் 26ம் தேதி அவரை கைது செய்தனர். அமலாக்கத்துறை வழக்கில் ஜாபர் சாதிக்கை ஆஜர்படுத்த புழல் சிறைக்கு மாற்ற வாரண்ட் பிறப்பித்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, டெல்லி திஹார் சிறையிலிருந்து கொண்டு வரப்பட்ட ஜாபர் சாதிக் நேற்று முன்தினம் சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.

விசாரணைக்குப் பிறகு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் அவருடைய பினாமியான ஆவடி காமராஜ் நகர், நேரு 2வது தெருவைச் சேர்ந்த ஜோசப் (45), ஆயிஷா (38) தம்பதி வீடு மற்றும் திருவேற்காடு சிவன் கோயில் அருகே உள்ள இவர்களது மற்ற 2 வீடுகளிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஜாபர் சாதிக்கிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் ஜோசப், ஆயிஷா ஆகியோரின் வங்கி கணக்கிற்கு வந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. நேற்று காலை 6 மணி முதல் தொடர்ந்து 6 மணி நேரத்துக்கும் மேலாக துப்பாக்கி ஏந்திய 2 மத்திய ரிசர்வ் போலீசார், 4 அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

Related posts

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகிறார்!

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3096 கனஅடியாக உயர்வு!

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இலங்கை கடற்படையால் கைது!