Tuesday, September 10, 2024
Home » ஆடிப்பூர விழா அற்புதங்களும் வளமான வாழ்வளிக்கும் வரலட்சுமி விரதமும்

ஆடிப்பூர விழா அற்புதங்களும் வளமான வாழ்வளிக்கும் வரலட்சுமி விரதமும்

by Lavanya
Published: Last Updated on

முத்துக்கள் முப்பது

ஆடிப்பூரம்: 7-8-2024, வரலட்சுமி விரதம்: 16-8-2024

1. முன்னுரை

ஒவ்வொரு மாதங்களுக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதிலும் ஆடி மாதம் மிகச் சிறப்பான மாதம் ஒவ்வொரு அம்மன் கோயிலிலும் விழாக்கள் களை கட்டி நிற்கும் மாதம். இந்த மாதம் முழுவதும் விழாக்கள் தான். ஆடிப்பூரம், ஆடித் தபசு, ஆடிக் கிருத்திகை, ஆடி வெள்ளி, ஆடி 18 என்று வரிசையாக விழாக்கள் வந்து கொண்டே இருக்கும். வரலட்சுமி விரதமும் இந்த மாதத்தில் தான் வரும். சைவம் வைணவம் என்ற இரண்டு சமயங்களும் ஒரு சேர விழாக்களைக் கொண்டாடும் அற்புதமான மாதம் ஆடி மாதம்.

இந்த ஆண்டு ஆடி மாதத்தில் ஆடிப்பூரம் ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி புதன்கிழமையும், வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் வருகின்றது. ஆடிப்பூர விழாவின் சிறப்புகளையும் வரலட்சுமி விரதத்தின் சிறப்புகளையும் இந்த இதழ் முப்பது முத்துக்கள் தொகுப்பில் காண்போம்.

2. ஒரு ராசிக்குள் மூன்று முக்கியமான நட்சத்திரங்கள்

காலச்சக்கரத்தின் ஐந்தாவது ராசி சிம்ம ராசி இது திரிகோண ராசி ஒருவருடைய பூர்வ புண்ணியத்தைக் குறிக்கக்கூடிய ராசி. தெய்வ நிகழ்வுகளுக்கும் குலதெய்வ நிகழ்வுகளுக்கும் உரிய ராசி என்று ஜோதிடத்தில் சொல்லுவார்கள். அப்படிப்பட்ட சிம்ம ராசி சூரியனுக்கு உரியது. சூரியன் இல்லாவிட்டால் உயிர்கள் இல்லை. சூரியனை நட்சத்திர மண்டலத்தின் பிரதான நட்சத்திரமாகவும் கிரகங்களில் பிரதான கிரகமாகவும் நாம் கொள்கிறோம் சூரியன் ஆட்சி பெறும் சிம்ம ராசியில் மூன்று நட்சத்திரங்கள் இருக்கின்றன.

ஒன்று மகம் இன்னொன்று பூரம். மூன்றாவது உத்தரம். இந்த மூன்று நட்சத்திரங்களுமே தெய்வ விழாக்களுக்கு என்று பிரத்தியேகமான நட்சத்திரங்கள். மக நட்சத்திரத்தில் மாசி மகம் நடக்கிறது. பூர நட்சத்திரத்தில் ஆடிப்பூர உற்சவங்கள் நடக்கின்றன. உத்தர நட்சத்திரத்தில் பங்குனி உத்திர வைபவம் நடைபெற்று தெய்வத் திருமணங்கள் நடைபெறுகின்றன. இப்படி ஒரு ராசிக்குள் உள்ள மூன்று நட்சத்திரங்களும் சிறப்பு பெற்றிருப்பது அற்புதமான ஒரு விஷயம்.

3. ஏன் வெள்ளிக்கிழமை விசேஷம்?

சுப கிரகங்களிலேயே இரண்டு சுப கிரகங்கள் பூரண சுபர்கள் என்பார்கள் அதில் ஒன்று குரு இன்னொன்று சுக்கிரன். சுக்கிரனை வெள்ளி என்று குறிப்பிடுவது வழக்கம் வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு உரிய நாள் சுக்கிரனுக்குரிய மூன்று நட்சத்திரங்கள் பரணி, பூரம் பூராடம் இந்த மூன்று நட்சத்திரங்களின் மூன்று திரிகோண ராசியில் இருக்கும் முதல் நட்சத்திரமான பரணி ஒன்றாவது ராசியிலும் இரண்டாவது நட்சத்திரமான பூரம் ஐந்தாவது ராசியிலும் மூன்றாவது நட்சத்திரமான உத்திராடம் ஒன்பதாவது ராசியிலும் இருக்கும். இந்த சுக்கிரனுக்கு அதிதேவதை மகாலட்சுமி. எனவேதான் வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உரிய நாளாகவும் அம்பாளுக்கு உரிய நாளாகவும் நாம் கொள்ளுகின்றோம்.

4. ஆண்டாளும் ஆடிப்பூரமும்

மகம் பூரம் உத்திரம் என்ற மூன்று நட்சத்திரங்களில் நடுவில் உள்ள பூரம் விசேஷமானது. அதுவும் ஆடிப்பூரம் மிக விசேஷமானது எல்லா கோயில்களிலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. சித்தர்களும், முனிவர்களும் இந்நாளில்தான் தங்களுடைய தவத்தை தொடங்குவதாகவும் புராணங்கள் எடுத்துரைக்கின்றன. சைவ ஆலயங்களிலும் வைணவ ஆலயங்களிலும் ஆடிப்பூர வைபவம் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது.

வைணவத்தில் ஆடிப்பூரம் ஆண்டாளுடைய அவதார நட்சத்திரம் என்று கொண்டாடப்படுகிறது ஆண்டாள் அவதரித்த ஸ்ரீ வில்லிபுத்தூரில் இதை ஒட்டி பத்து நாட்கள் பிரம்மோற்சவம் கொண்டாடப்படுகிறது ஸ்ரீ வில்லிபுத்தூரில் கொண்டாடப்படும் உற்சவங்களிலேயே மிகச் சிறப்பான உற்சவம் ஆடிப்பூரம் தான் ஸ்ரீ வில்லிபுத்தூரில் மட்டுமல்ல எல்லா கோயில் களிலும் ஆடிப்பூரம் மிகச் சிறப்பாகவே கொண்டாடப்படும் காரணம் எல்லா வைணவ ஆலயங்களிலும் பெருமாளுக்கு வலப்புறத்தில் தாயார் சந்நதியும் இடப்புறத்தில் ஆண்டாள் சந்நதியும் இருக்கும் எனவே எல்லா பெருமாள் ஆலயங்களிலும் ஆடிப்பூர உற்சவம் கொண்டாடப்படும்.

5. அம்பிகையின் அம்சம்

சைவத்தில் ஆடி மாதம் முழுவதுமே அம்மனுக்கு உரிய உற்சவ நாட்கள்தான் ஆடிப்பூரம் அன்று பார்வதி தேவி (உமா தேவி) தோன்றியதாக வரலாறு உண்டு பெரிய கோயில்கள் துவங்கி, கிராமங்களில் உள்ள சிறிய அம்மன் கோயில்கள் வரை ஆடிப்பூர உற்சவம் விமர்சையாக நடைபெறும். மானிடத்தை இன்னல்களில் இருந்து மீட்பதற்கு உலகன்னை இவ்வுலகிலே தோன்றிய நாள் ஆடிப்பூரம் எனக் கருதுவர். இந்நாளில் தேவி உலகிற்கு விஜயம் செய்து மக்களுக்கு அருள் புரிவாள் என்று நம்பப்படுகிறது. வெள்ளிக்கிழமை அன்று வரும் ஆடிப்பூரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஒவ்வொரு பெண்ணின் வடிவிலும் அம்பிகையின் அம்சம் நிறைந்துள்ளது. எனவே ஆடிப்பூரம் தினத்தன்று அம்பிகையின் அருள் முழுமையாக நிறைந்திருக்கும் என்பதால் எந்த பேதமுமின்றி ஆடிப்பூர விழாவை அனுசரிக்க வேண்டும்.

6. அம்மனுக்கு வளைகாப்பு விழா

ஆடிப்பூர விழாவன்று பல இடங்களில் அம்மனுக்கு வளைகாப்பு விழா நடத்துவார்கள். காரணம் என்ன என்று சொன்னால் இந்த உலகத்தை தன்னுடைய கருவில் தாங்கி படைக்கின்றவள் அன்னை. உலக உயிர்களை கருவில் சுமக்கின்ற அன்னைக்கு வளைகாப்பு விழா நடத்துவது சிறப்பு தானே இந்த விழாவில் நல்ல குழந்தைகள் பிறப்பதற்காகவும், பிறந்த குழந்தைகள் நல்ல முறையில் இருப்பதற்காகவும், பெண்கள் நேர்ந்து கொண்டு கலந்துகொள்வார்கள். வளைகாப்பு விழாவில் அம்மனுக்கு அணிவித்த வளையல்களை அங்கு வரும் பெண்களுக்கு பிரசாதமாக விநியோகிப்பார்கள். அம்பிகையின் வளைகாப்பு பிரசாத வளையல்களை பக்தியோடு அணிகின்ற பெண்களுக்கு நல்ல முறையில் திருமணம் நடைபெறும் திருமணமான பெண்களுக்கு காலதாமதம் இன்றி குழந்தைகள் பிறக்கும்.

7. திருவண்ணாமலையில் ஆடிப்பூரம்

புகழ் பெற்ற திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறும். விழாவை முன்னிட்டு விநாயகர், பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். தொடர்ந்து அம்மன் சந்நதியில் உள்ள தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெறும் 10 நாட்களுக்கு தினமும் காலையும் மாலையும் விநாயகர் அம்பாள் ஆகியோர் கோயிலின் மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்கள். 10ஆம் நாளன்று அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம், நடைபெறும் சில கோயில்களில் அம்மனுக்கு தீமிதி விழாவும் நடைபெறும்.

8. நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா 10 நாள் திருவிழாவாக கொடியேற்றத்துடன் தொடங்கும். தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, பூஜைகள் நடைபெறும். 4-ம் திருவிழாவன்று காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடக்கும். இதையொட்டி அதிகாலையில் சுவாமி, அம்மனுக்கு பூஜைகள் நடைபெறும். பகல் 11.30 மணிக்கு காந்திமதி அம்மன், கர்ப்பிணிப் பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு மேளதாளம் முழங்க அம்மனுக்கு, வளையல்கள் அணிவிக்கப்படும்.

பின்னர் அம்மன் சப்பரத்தில் சுவாமி சந்நதிக்கு எழுந்தருளி, சுவாமியிடம் தனக்கு வளையல் அணிவிக்கப்பட்ட விவரத்தை தெரிவிக்கும் நிகழ்ச்சி நடக்கும். பின்னர் ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனையும், இரவு 8.30 மணிக்கு அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதிஉலா வருதல் நிகழ்ச்சியும் நடைபெறும். 10-ம் நாள் விழாவையொட்டி இரவு 7 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு முளைக்கட்டு திருவிழா நடக்கும்.

9. விருத்தகிரீஸ்வரருக்கு திருக்கல்யாணம்

விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடிமாதம் அம்மனுக்கு ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் தொடங்கும். இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெறும். 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வீதி உலா நடைபெறும். விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டமும், அடுத்த நாள் அதிகாலை 4.30 மணிக்கு மேல் காலை 6 மணிக்குள் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரருக்கு திருக்கல்யாணமும் நடைபெறும்.

10. திருப்பாதிரிப்புலியூரில் ஆடிப்பூர விழா

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பாடலீஸ்வரர்கோயில் உள்ளது. இந்த கோயிலுக்குள் பெரியநாயகி அம்மன் சந்நதி அமைந்துள்ளது. இங்கு ஆடிப்பூர விழா 10 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு நாளும் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கும். அதைத் தொடர்ந்து பெரியநாயகி அம்மன் சந்நதியில் உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கும். மாட வீதிகளில் சாமி வீதி உலாவும் நடக்கும்.

ஆடிப் பூரம் அன்று சிறப்பு நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மற்றும் வளைகாப்பு உற்சவம் நடக்கும். மூலவர் பெரியநாயகி அம்மனுக்கு வளையல் அலங்காரம், வளையல் பாவாடை அலங்காரம் செய்து, திருக்கல்யாணம் நடைபெறும். திருமணமான பெண்கள் தங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றும், இளம்பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொள்வர். சுவாமியின் உள்பிராகாரத்தில் வலம் வந்து, சிவகர தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடக்கும்.

11. ஆடிப்பூர யானை அணிவகுப்பு

கேரளாவில் உள்ள அருமையான சிவாலயம் திருச்சூரில் அமைந்துள்ள வடக்குநாதர் திருக்கோயில். தென்கயிலாயம் என புகழப் படும் இத்திருக்கோயில் திருப்பூரம் திருவிழாவிற்கு உலகப்புகழ் பெற்றது. வடக்கு நாதர் கோயிலின் வடக்கே ஒரு கி.மீ. தொலைவில் பழம்பெரும் திருவம்பாடி கிருஷ்ணன் கோயில் உள்ளது. இக்கோயிலில் இறைவன் சங்கும், சாட்டையும் ஏந்தி பார்த்தசாரதியாக காட்சி தருகின்றார். திருச்சூர் ஆடிப்பூர விழாவில் இரண்டு கோயில்களின் சார்பில் வரும் யானைகளின் அணிவகுப்பே இங்கு பிரதானமாக விளங்குகின்றது. இந்த இடம் தேக்கின்காடு மைதானம் என்றும் பூரப்பரம்பு என்றும் வழங்கப்படுகின்றது. ஆடிப்பூர யானை அணிவகுப்பு இங்கு முக்கியம்.

12. திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை ஆடிப்பூரம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா ‘முளைக்கொட்டு விழா’ என்ற பெயரில் மிகச் சிறப்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. குழந்தை பேற்றுகான பரிகார தலமாக கருதப்படும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்மனுக்கும் ருது சாந்தி விழா நடைபெறும். விழாவின்போது பெண்கள் கண்ணாடி வளையல்களை அம்மனுக்கு சமர்ப்பித்து, அதனை அர்ச்சித்து பிரசாதமாக பெற்றுக் கொள்வார்கள். பூரத்திற்கு சில நாட்கள் முன்னதாக பச்சைப் பயிறை தண்ணீரில் நனைய வைத்து, ஆடிப்பூரத்தன்று நன்கு முளைக்கட்டியுள்ள பயிறை குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் அம்பிகைக்கு நைவேத்தியம் செய்துவிட்டு நம்பிக்கையோடு சாப்பிட்டால் வாரிசு உருவாகும் என்பது செட்டிநாட்டு நகரத்தார் மக்களின் நம்பிக்கை.

13. திருவாரூர் கமலாம்பாள் ஆடிப்பூரம்

திருவாரூரில் அமையப்பெற்றது தியாகராஜர் கோயில் திருமூலட்டானம், பூங்கோவில் என பல சிறப்பு திருப்பெயர்களைக் கொண்டது. இந்தத் திருத்தலத்தில் மூலவராக வன்மீகநாதர் எனும் புற்றிடங்கொண்டாரும், உற்சவராக தியாகராஜ பெருமாளும் அருள்பாலித்து வருகிறார்கள். இந்த கோயிலின் வடக்குப் பகுதியில் கமலாம்பாள் சந்நதி அமையப்பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கமலாம்பாள் அம்மனுக்கு ஆடிப்பூர விழா கொண்டாடப்படுவது வழக்கம். சிவனைப் போல, சிரசில் கங்கையையும், பிறையையும் சூடிக்கொண்டு யோக வடிவில் காட்சி தருகிறாள் கமலாம்பிகை. ஆடிப்பூர விழா கொடியேற்றம் தொடங்கி அடுத்த இரண்டு நாள் அம்பாளுக்கு கேடக உற்சவம் நடைபெறும். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வாகனத்தில் பக்தர்களுக்கு
கமலாம்பிகை அம்பாள் அருள்பாலிப்பாள்.

14. அசைந்து வரும் ஆடித் தேரோட்டம்

மூன்றாம் நாள் இந்திர விமானத்திலும், நான்காம் நாள் பூத வாகனத்திலும், வெள்ளி யானை வாகனத்தில் ஐந்தாம் நாளும், வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் அம்பிகை நிறைவாக கைலாச வாகனத்தில் வலம் வருவாள். ஆடிப்பூர விழாவின் முக்கிய நிகழ்வான ஆடித் தேரோட்டம் கோலாகலமாக நடைபெறும். தேரோட்ட நிகழ்விற்காக காலை ஒன்பது மணியளவில் அம்பாள் பல்லக்கில் எழுந்தருளும் அன்னை கமலாம்பிகை தேரில் ஏறி அருள்வாள். மாலை ஐந்து மணியளவில் வேத மந்திரங்கள் முழங்க தேரின் வடம் பிடிக்கப்பட்டு ஆடிப்பூரத் தேரோட்டம் தொடங்கும். சிறிய தேர் தான்.

இரண்டரை மணி நேரத்தில் நான்கு வீதிகளிலும் வலம் வந்து தேரானது நிலையடிக்கு வந்து சேரும். அதன் பிறகு கமலாம்பாளுக்குச் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களின் படை சூழ பல்லக்கில் வைத்து ஆஸ்தானத்திற்கு (சந்நதிக்கு) எழுந்தருள்வாள். அடுத்த நாள் அம்பாளுக்கு மகா அபிஷேக ஆடிப்பூர தீர்த்தம் நடைபெறும். இரவு அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வருவதோடு ஆடிப்பூர திருவிழா நிறைவுபெறும்.

15. நாகப்பட்டினத்தில் கன்னி தெய்வமாக நீலாயதாட்சி

நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் கோயில் 64 சக்திப் பீடங்களுள் ஒன்றாகும். நேத்திர (அம்பிகையின் கண் விழுந்த) பீடம் ஆகும். இங்கு கோயில் கொண்டுள்ள நீலாயதாட்சி அம்மன் கன்னி தெய்வமாக அருள் பாலிக்கிறாள். நாகை நீலாயதாட்சி, நீலோற்பல மலரின் குளிர்ச்சியைப் போல தன் பார்வையை பக்தர்களுக்கு வழங்குவதால், ‘நீலாயதாட்சி’ என்ற திருநாமத்தோடு விளங்குகிறாள். அம்பிகைக்கு கருந்தடங்கண்ணி என்ற பெயரும் உண்டு. அம்பிகையை, பெண்ணின் ஐந்து பருவ நிலைகளில் சித்தரித்து வணங்கப்படும் ஐந்து தலங்களுள், இத்தலமும் ஒன்றாகும். இத்தலத்தில், நீலாயதாட்சி பூப்படைந்த கன்னியாக இருந்து அருள்பாலிக்கிறார். இங்கு ஆடிப்பூர வைபவம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

16. அன்னையின் தோற்றம் காண ஆயிரம் கண் வேண்டும்

அன்னை நீலாயதாட்சி பாயும் குதிரைகளும், யாளிகளும் அமைந்த, தோரணங்கள் அலங்கரிக்கப்பட்ட, இருபுறமும் சக்கரங்கள் கொண்ட ரதம் போன்ற மகா மண்டபத்தில், பூப்பெய்த பருவத்தினளாய் 12 வயதுடையவளாய், தன் இரு திருக்கரங்களில் ஜபமாலையும் கமலமும் ஏந்தி, மற்ற இரு திருக்கரங்களில் அபய வரத முத்திரையுடன், கரிய அகன்ற கண்களை உடையவளாய், நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கிறார். அன்று 9 கன்னிப் பெண்களை அழைத்து வந்து அமர்த்தி, தாம்பூலத்துடன் சீப்பு, குங்குமச் சிமிழ், கண்ணாடி, வளையல், ரவிக்கைத் துணி போன்றவற்றைக் கொடுத்து, மஞ்சள் கயிறும் கொடுப்பார்கள். அம்பிகை இத்தலத்தில் பருவமடைந்ததால், மற்ற கோயில்களைப் போல இக்கோயிலில் திருக்கல்யாணம் ஆடிப்பூரம் வளைகாப்பு போன்ற வைபவங்கள் நடைபெறுவதில்லை.

17. ஆடிப்பூரம் கழித்தல்

ஆடிப்பூரத்தன்று காலையில் முளை கட்டின பச்சைப் பயிறுக்கு, சூர்ணோற்சவம் செய்து, அதை மூலவர் அம்பிகையின் புடவைத் தலைப்பில் முடிச்சிட்டு அம்பிகையின் இடுப்பில் கட்டிவிடுவார்கள். பின்னர் அம்மனுக்கு வெள்ளை புடவை சார்த்தி வீதி புறப்பாடு நடைபெறும். இந்த முளைக்கட்டிய பச்சைப்பயிறு பிரசாதம், குழந்தைப் பேறின்மை, கர்ப்பப்பை பிரச்னை, வயதாகியும் பூப்படையாமல் இருத்தல் போன்ற பிரச்னைகளுக்கு அருமருந்தாகும் என்பது ஐதீகம். மாலையில் ஆடிப்பூரம் கழித்தல் என்னும் சடங்கு அம்மனுக்கு நடத்தப்படும். இச்சடங்கு பெண்கள் பருவம் அடைந்த போது செய்யப்படும் சடங்கு முறைகளை ஒத்ததாக இருக்கும். ஆடிப்பூரத்தன்று இரவு நீலாயதாட்சி அம்மன் சிறப்பான ஆடை அலங்காரத்துடன், பின்னால் அழகிய ஜடை தரித்து ஜெகஜோதியாய் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பீங்கான் ரதத்தில் ஊர்வலம் வரும் காட்சி காண்போரை பரவசப்படுத்தும்.

18. ஸ்ரீ வில்லிபுத்தூரில் மஞ்சள்கயிறு பிரசாதம்

ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஆண்டாள் அவதரித்த துளசி தோட்டத்தில் அவதரித்தாள். பூர நட்சத்திரத்தில் அவதரித்தாள். அங்கு ஆண்டாளுக்கு ஒரு சந்நதி இருக்கிறது. சந்நதியின் முன்னால் துளசிமாடம் உள்ளது. இதில் இருக்கும் மண்ணைப் பக்தர்கள் சிறிதளவு எடுத்துக் கொள்கிறார்கள். இந்த மண்ணை வீட்டில் வைத்தால் தோஷங்கள் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும் என நம்புகின்றனர். சிலர் இந்த மண்ணை நெற்றியிலும் பூசிக் கொள்கிறார்கள்.

ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு அணிவிக்கப்படும் மாலையை வாங்கி பெண்கள் தங்கள் கழுத்தில் அணிந்து கொண்டு அருகில் இருக்கும் கண்ணாடி கிணற்றைச் சுற்றி வருகிறார்கள். தொடர்ந்து கிணற்றை எட்டிப் பார்த்து விட்டு பின் மீண்டும் அன்னை ஆண்டாளை வழிபடுகிறார்கள். இவ்வாறு வழிபடுகிறவர்களுக்கு கோயில் சார்பில் வளையல், மஞ்சள் கயிறு பிரசாதமாக கொடுக்கின்றனர். இதனால் தடைப்பட்ட திருமணங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை.

19. ஆடிப்பூர சந்தனக்காப்பு

திருமயிலை கற்பகவல்லி ஆகிய தலங்களில் உள்ள அம்மனுக்கு ஆடிப்பூரத்தன்று மதியம் சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும். இரவு விரைமலர் குழல் வல்லி, மறைமலர் பதவல்லி, கற்பக வல்லிக்கு வளைகாப்பு உற்சவம் நடத்தப்படும். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனுக்கு, ஆடிப்பூரம் அன்றைய தினம் கூழ் வார்க்கும் விழா நடைபெறும்.

காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்த அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் அபிராமி அம்மனுக்கு ஆடிப்பூர மகோற்சவம் விழா 10 நாள் உற்சவமாக நடைபெறும். முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெறும். அபிராமி அம்மன் வெள்ளி அலங்காரத்தில் விநாயகர் சண்டிகேஸ்வரருடன் தேரில் எழுந்தருளி அருள் பாலிப்பாள். இனி, இதே ஆடிமாதத்தில் 16.8.2024 அன்று நடைவுபெற உள்ள வரலட்சுமி விரதம் பற்றியும் காண்போம்.

20. சகல ஐஸ்வர்யங்களும் தரும் விரதம்

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் பெளர்ணமி தினத்திற்கு முன் வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம், இந்த ஆண்டு ஆடி மாதம் கடைசி நாளில் (ஆடி 31) வருகிறது. ஆடி கடைவெள்ளியில் வரும் சிறப்பும் உண்டு. பொதுவாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மகாலட்சுமிக்கு உரியது. ஆயினும் சுக்கிரவாரத்தில் சுக்கிரனுக்குரிய பூராடம் நட்சத்திரம் இந்த ஆண்டின் விசேஷம். காரணம் பூராடம் அமைந்த ராசி தனுசு. அது குருவுக்குரியது. திரிகோண வீடு. பாக்கியஸ்தானத்தில் அமைந்தது. இந்த சிறப்பும் இந்த ஆண்டு நோன்புக்கு உண்டு. கணவரின் ஆயுள்பலம் வேண்டி சுமங்கலிப்பெண்கள் இந்த விரதத்தை கடை பிடிக்கின்றனர். இந்த விரதம் கடைபிடிப்பதால் ஆயுள், ஆரோக்கியம் மட்டுமல்லாது செல்வ வளம் பெருகும்.

21. வரலட்சுமி விரதத்தின் பயன்கள்

வரம் தரும் விரதம் தான் வரலட்சுமி விரதம். செல்வத்தின் தேவதையான மஹாலட்சுமியை வரவழைக்கும் விரதம் இது. வரலட்சுமி விரதம் என்பது தொன்று தொட்டு, நம்முடைய பெரியவர்கள் நமக்கு காட்டி கொடுத்திருக்கும் நோன்பு. அதனுடைய பலன்கள் எண்ணில் அடங்காதது. இருந்தாலும் சிறப்பான சில பலன்களைச் சொல்லலாம் வரலட்சுமி விரதம் இருப்பதால்

1.குடும்பத்தில் வறுமை அகலும். செல்வம் சேரும். செல்வம் சேர்ந்த குடும்பங்கள் சிறப்பாக வாழும்.

2.குடும்பத்தில் சண்டை சச்சரவு இல்லாத நல்லிணக்கமும் நல்லுறவும் செழிக்கும்.

3.பெண்களுக்கு கணவனின் குணமும் நலனும் வருமானமும் தீர்க்காயுளும் வளர்ந்து கொண்டே இருக்கும். மாங்கல்ய பலம் விருத்தியாகும். தீர்க்க சுமங்கலித்துவம் கிடைக்கும். எந்தக் குடும்பத்தில் சண்டை, சச்சரவு, கோபம், பகை போன்ற உணர்ச்சிகள் இருக்கிறதோ, அங்கே திருமகளின் அருள் குறைந்திருப்பதாகப் பொருள். எங்கு அன்பும் சந்தோஷமும் மரியாதையும் பரோபகாரமும் நிறைந்திருக்கிறதோ, அந்த இடத்தில் நாம் அழைக்காமலேயே மகாலட்சுமி வந்து குடிஅமர்வாள்.

22. மகாலட்சுமியை எங்கு காணலாம்?

பரிவோடு யார் உள்ளம் மற்றவர்களுக்கு உதவுகிறதோ, மற்றவர்கள் கஷ்டத்தில் பங்கு பெறுகிறதோ, அவர்களைத் தேடி மகாலட்சுமி வருகிறாள். அவள் வசிக்கும் இடம் என்று சில உண்டு. பூரணகும்பம், மஞ்சள், குங்குமம், திருமண் சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய மங்களப் பொருட்களில் மகாலட்சுமி நித்தியவாசம் புரிகிறாள்.

வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் செடிகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். துளசிச் செடியிலும் மகாலட்சுமி எழுந்தருளி வாசம் செய்கிறாள். இதேபோல் மஞ்சளிலும் இருக்கிறாள். அதனால் துளசிச் செடியுடன் மஞ்சள்செடியையும் சேர்த்து நம் வீட்டில் வளர்ப்பது நல்லது. தினசரி காலையிலும் மாலையிலும் தீபம் ஏற்றினாலே மகாலட்சுமியின் திவ்ய திருவருள் கிடைத்து விடும்.

23. எத்தனை பெயர்கள் தெரியுமா?

லட்சுமி மாதுளம் கனியிலிருந்து உதித்ததால் மாதுளங்கி என்றும், பத்மாசனனால் வளர்க்கப்பட்டதால் பத்மா என்றும், அக்னி குண்டத்தில் வாசம் செய்ததால் அக்னிகர்ப்பை என்றும், ரத்தின வடிவம் எடுத்ததால் ரத்தினாவதி என்றும், ஜனக மகாராஜனுக்கு மகளானதால் ஜானகி என்றும், பூமிக்குள்ளே கலப்பையின் நுனியிலிருந்து வெளியேற்றப்பட்டமையால் சீதை என்றும் பாற்கடலிலிருந்து தோன்றியதால் ஸ்ரீ என்றும் போற்றப்படுகிறாள்.

பத்மப்ரியே, பத்மினி, பத்மஹஸ்தே, பத்மாலயே, பத்ம-தளளாயதாக்ஷீ, விஸ்வப்ரியே, விஷ்ணு மனோனுகூலே, என்று அவளுடைய திருநாமத்தை வரிசையாக பட்டியலிடுகிறது ஸ்ரீ சூக்தம் எனும் வேத மந்திரம். மஹாலஷ்மியின் ஸ்ரீ சூக்தத்தை தினம் யார் பூஜையில் சொல்கிறார்களோ அவர்களுக்கு வறுமையோ, ஆயுள் பங்கமோ, நிம்மதியின்மையோ ஏற்படுவதில்லை. கர்மதோஷங்கள் எல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல விலகும்.

24. வில்வமும் மகாலட்சுமியும்

வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் செடிகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். லட்சுமியை வில்வத்தால் அர்ச்சனை செய்து பூஜிக்கலாம். மகாலட்சுமியை சாமந்திப்பூ, தாழம்பூ, இலைகளாலும் அர்ச்சிக்கலாம். வில்வமரத்தை வலம் வருவது மகாலட்சுமியை வலம் வருவதற்கு சமமாகும். வாமன புராணத்தில் மகாலட்சுமியின் திருக்கரங்களில் இருந்து வில்வ விருட்சம் தோன்றியது என்று கூறப்பட்டுள்ளது. வில்வ மரமுட்கள் சக்தி வடிவம், கிளைகள் வேதம், வேர்கள் 14 கோடி ருத்ரர்கள் என்று கருதப்படுகிறது. இவ்வளவு சிறப்பு கொண்ட வில்வ மரமே மகாலட்சுமி சொரூபமாக விளங்குகிறது.

25. நெல்லியும் மகாலட்சுமியும்

நெல்லி ஆயுளை வளர்க்கும்: அருங்கனி என்று பெயர். (அதியமான் அவ்வைக்கு கொடுத்ததல்லவா) நெல்லிக்கனி ஆரோக்கியம் தரும். அதனடியில் மகாலட்சுமி உறைகிறாள். நெல்லி திருமாலின் அருள் பெற்றது. ஹரிபலம் என்று இதற்கு ஒரு பெயர். நெல்லிக்கனி இருக்கும் வீட்டில் லட்சுமி இருப்பாள். துவாதசியன்று நெல்லிக்காய் சேர்த்தால்தான் ஏகாதசிப் பலனே உண்டு. ஒரு நெல்லிக்கனிக்கு ஆதிசங்கரர் கனக தாரா ஸ்தோத்ரம் பாடி பொற்குவியலை ஒரு ஏழைப்பெண்ணுக்கு கிடைக்கும் படி செய்தார் என்று செய்தி உண்டு அல்லவா. அந்த சக்தி நெல்லிக்கு உண்டு. இதற்கென்றே ஆம்லா ஏகாதசி என்று ஒரு ஏகாதசி விரதம் உண்டு.

26. மகாலட்சுமிக்கு பிரியமான விஷயங்கள்

மகாலட்சுமிக்கு பிரியமான பொருள்களும் விஷயங்களும் சில உண்டு. தாமரை மலர், உப்பு குவியல், சர்க்கரைக் குவியல், சாளக்கிராம பூஜை செய்யும் இடம்லட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், ஏகாதசி விரதம், திருவோண விரதம், சத்ய நாராயண பூஜை தர்ம சிந்தனை உடையாரின் உள்ளம் வெண்ணிற மாடப் புறாக்கள் வாழும் இடம், வரலட்சுமி விரதம். இதில் வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது. மகாலட்சுமி நித்திய சுமங்கலி என்று அழைக்கப்படுகிறாள். எனவே தான் அவளை நினைத்து பெண்கள் வரலட்சுமி விரதம் மேற் கொள்கிறார்கள். வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களிடம் அஷ்ட லட்சுமிகளும் மகிழ்ந்து அன்புடன் இருப்பார்கள் என்பது ஐதீகம். இனி வரலட்சுமி விரதம் எப்படி இருப்பது என்பது குறித்த எளிய குறிப்புக்களைக் காண்போம்.

27. இவ்வளவு எளிமையான விரதமா?

சிலர் வரலட்சுமி விரதம் அதிக செலவு பிடிக்கும் விரதம் என்றும் கடைபிடிப்பது கஷ்டம் என்றும் நினைக்கிறார்கள். நாம் படுகின்ற கஷ்டங்களைப் பார்க்கும் போது அதில் இருந்து மீண்டு வர ஒரே ஒருநாள் இந்த எளிய விரதம் கடைபிடிக்கலாம். வரலட்சுமி விரதம் மிக எளிய விரதம். முதல் நாள் அதாவது வியாழக்கிழமை (வெள்ளி அன்று வீட்டைத் துடைப்பதோ, விளக்கு முதலிய பூஜை பொருட்களைத் துலக்குவதோ கிடையாது) வீட்டை நன்றாகக் கழுவித் துடைத்து, தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும். தரையிலும் சரி, கூரையிலும் சரி, இந்தத் தூய்மையைப் பராமரிக்க வேண்டும். ஒட்டடைகள் படிந்திருந்தால் அடிக்க வேண்டும். ஒட்டடை சேரச் சேர காசு தங்காது என்பார்கள். நல்ல பெரிய மாக்கோலம் வாசலில் போட வேண்டும். வண்ணக் கோலமாகப் போட்டால் இன்னும் சிறப்பு. அழகும் திருமகளும் இணை பிரியாதவர்கள். எதெல்லாம் அழகின் அம்சமோ அதெல்லாம் திருமகளின் அம்சம். எங்கே அழகு இருப்பினும் அது திருமகளின் இடமாகிவிடும்.

28. மஞ்சளும் குங்குமமும் மகாலட்சுமி தத்துவம்

நிலை வாசல் தொடங்கி, எல்லா வாசல் கதவு நிலைகளிலும், மஞ்சளும் குங்குமமும் வைக்க வேண்டும். மஞ்சள் குங்குமம் என்பதே மகாலட்சுமியின் தத்துவம் தான். மஞ்சளில் வளர்ந்த தேவி என்று சொல்வார்கள். ஆழ்வார் “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்கிறார். எனவே மஞ்சள் நிறம் தேவிக்கு பிடித்தமான நிறம். ஹிரண்ய வர்ணாம் என்றுதான் ஸ்ரீ சூக்தம் தொடங்குகிறது. குங்குமத்தில் குடியிருக்கும் தாய் என்றும் மகாலட்சுமியைச் சொல்வார்கள். மிக முக்கியமாக மூன்று பொருள்களில் மகாலட்சுமி சாந்நித்யம் உண்டு. ஒன்று மஞ்சள். இரண்டு குங்குமம். மூன்றாவது மலர்கள். வரலட்சுமி பூஜையில் மஞ்சள் ஆடையும் தாமரை மலர்களும் பயன்படுத்தலாம்.

29. எளிமையாக எப்படிப் பூஜை செய்வது?

கலசம் வைப்பதற்காக ஒரு பலகையைத் தயார் செய்யுங்கள். குத்து விளக்கு வைப்பதற்கும் ஒரு சிறு பலகையையோ பீடத்தையோ சுத்தப்படுத்தி தயார் நிலையில் வைத்திருங்கள். குத்து விளக்குக்கு, மஞ்சள் குங்குமம் வைத்து, பூச்சரம் சுற்றி அழகுபடுத்தவும். நல்லெண்ணெயை நன்கு ஊற்றி பஞ்சு திரியைப் போடவும். ஒரு தனி அகல்விளக்கில் பசுநெய் விட்டு ஏற்றி வைப்பது மிகச் சிறந்தது. வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுவது நல்லது. இயன்றால் வாழைக்கன்றுகளையும் தோரணங்களையும் கட்டலாம். கலசத்தில் மஞ்சள் குங்குமம் வைத்து, பூச்சரத்தைச் சுற்றி அல்லது நூலைச் சுற்றி, அலங்கரித்து, மாவிலை வைத்து அதில், தேங்காயை வைக்க வேண்டும். நல்ல நறுமணங்களோடு தீர்த்தத்தை நிரப்பவேண்டும்.

கலசத்தின் கழுத்தில் இருந்து புதுப்பட்டுப் பாவாடை (மஞ்சள் பட்டு நல்லது) அல்லது புடவையை, கொசுவம் வைத்து அணிவித்து, நகைகளை போட்டு அலங்காரம் செய்து வைக்க வேண்டும். அதில் மஹாலட்சுமியை ஆவாஹனம் செய்யவும். பிறகு முறையான பூஜை செய்யவும். நிவேதனங்களைப் படைக்கவும். மகாலட்சுமி ஸ்தோத்ரங்களையும் பாடல்களையும் மனம் விட்டுப் பாடவும். மலர்களால் அர்ச்சனை செய்யவும்.

பின்னர், கலசத்தில் வைத்த மஞ்சள் சரட்டை, விரதமிருந்தவர் கையில் கட்டிக்கொள்ள வேண்டும் படைக்கப்பட்ட பிரசாதத்தோடு, தாம்பூலம், மஞ்சள், புடவை போன்றவற்றை, சுமங்கலிகளுக்குத் தானமாகக் கொடுத்து ஆசிபெற்று, விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும் அஷ்டலட்சுமி தோத்திரம், லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். மாலை வேளைகளில் உற்றார், சுற்றார் வீடுகளுக்குச் சென்று, ஒருவருக்கொருவர் தாம்பூலம் பரிமாறிக் கொள்ளலாம்.

30. நிவேதனங்கள்

வரலட்சுமி தினத்தன்று அன்னம், பருப்பு, வடை, பாயசம், கொழுக்கட்டை, அப்பம், இட்லி முதலியவற்றுடன் பழவகைகளை நைவேத்தியம் செய்ய வேண்டும். வரலட்சுமி பூஜைக்கு பயன்படுத்தும் கும்பத்தை பிறகு பத்திரப்படுத்தி, சுத்தமான இடத்தில் வைத்துக் கொள்ளலாம். வேறு பூஜைகள் நடத்தும் போது அதை பயன்படுத்தலாம். வரலட்சுமி பூஜையின் போது சந்தனத்தில் லட்சுமி உருவம் செய்து செய்து வழிபடலாம்.

ஆனால் மறுநாள் அதை நீர்நிலை களில் கரைத்து விட வேண்டும். இதைப் போன்ற ஒப்பற்ற விரதம் வேறு இல்லை. சித்ரநேமி என்ற கணதேவதை வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்து தன்னுடைய குஷ்ட ரோகம் நீங்கப் பெற்றாள். விக்ரமாதித்தன் இந்த விரதத்தை அனுஷ்டித்து இழந்த ராஜ்ஜியத்தை திரும்பப்பெற்றான். நந்தன் இந்த விரதத்தை கடைப்பிடித்து அழகிய மனைவியை அடைந்தான். இப்படி மகாலட்சுமியினுடைய பெருமையைச் சொல்லும் வரலட்சுமி விரதச் சிறப்பை விவரித்துக் கொண்டே போகலாம். இந்த விரதம் முறையாக அனுஷ்டிக்கும் வாய்ப்பு கிடைக்காவிட்டால், மகாலட்சுமியின் பேரருளை தினம் தினம் சிந்தித்து கீழே உள்ள மகாட்சுமி காயத்ரி மந்திரத்தை பல தடவை காலையும் மாலையும் சொல்லி பலன் பெறுங்கள்,

ஓம் மஹாலக்ஷ்மை ச வித்மஹே!!
விஷ்ணுபத்ன்யை ச தீமஹி!!
தன்னோ லக்ஷ்மீஹ்: ப்ரசோதயாத்!

அஷ்டலட்சுமிக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வந்தால் வாழ்வில் வளம் அனைத்தையும் பெறலாம்!

எஸ். கோகுலாச்சாரி

You may also like

Leave a Comment

sixteen + 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi