ஆடி மாத அம்மன் கோயில் திருவிழாவுக்காக மண்பானை பொருட்கள் தயாரிப்பு பணி தீவிரம்

நெல்லை: தென் மாவட்டங்களில் ஆடிமாதம் அம்மன் கோயில்களில் நடைபெறும் திருவிழாவுக்காக பயன்படுத்தப்படும் மண்பானை பொருட்கள் தயாரிப்பு பணி நெல்ைல, தென்காசி மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு உகந்த மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆடி மாதத்தில் தான் அம்மன் கோயில்களில் திருவிழா, கொடை விழாக்கள் நடத்தப்படும். மேலும் ஆடி மாதத்தில் தான் அம்மன் கோயில்களில் கூழ் காய்ச்சி சிறப்பு வழிபாட்டை பக்தர்கள் நடத்துவார்கள்.

அம்மன் திருவிழாவின்போது மண்பானைகளில் பொங்கலிடுதல், தீ சட்டி எடுத்தல், அம்மனுக்கு படைக்கப்படும் படையல் பிரசாதங்களை மண்பானைகளில் எடுத்து சென்று படையல் வைக்கவும், ஆயிரங்கண் தீ சட்டி பானை, பானகாரம் வழங்க கலயங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மண்பானை தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது வெயில் சதம் அடித்து வருவதால் இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் கோயில் கொடை விழாவுக்கு தேவையான மண்பாண்ட பொருட்களை தயார் செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக பொங்கல் மண்பானைகள், தீ சட்டிகள், ஆயிரங்கண் பானைகள், கலயங்கள் உள்ளிட்டவைகளை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆடி மாதம் பிறக்க இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில் மண்பானைகள் தயாரித்து அவைகளுக்கு தேவையான வர்ணங்களை தீட்டவும் முனைப்பு காட்டிவருகின்றனர். தயாரிக்கப்பட்ட மண்பானை பொருட்களை சூளைகளில் வைத்து வேக வைத்து குடோன்களில் பாதுகாப்பாக வைத்து வருகின்றனர். தீ சட்டி ரூ140 முதல் 150க்கும், பெரிய பானை ரூ.180க்கும், கலயம் ரூ.75க்கும், ஆயிரங்கண் பானை ரூ.100க்கும் விற்பனை செய்யப்படுவதாக மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு