ஆடி அமாவாசையையொட்டி பூக்கள் விலை கடும் உயர்வு மல்லிகை ரூ.1800க்கு விற்பனை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி தேர்நிலை பூ மார்க்கெட்டுக்கு சுற்றுவட்டார கிராம பகுதிகளிலிருந்து மட்டுமின்றி மடத்துக்குளம்,உடுமலை, கணியூர், நிலக்கோட்டை, கரூர்,பழனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், நாமக்கல், மதுரை, தேனி மற்றும் பல பகுதிகளிலிருந்து இருந்து பூக்கள் அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இங்கு வரும் பூக்களை உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் மொத்தமாக வாங்கி செல்கின்றனர்.

கடந்த ஜூன் மாத துவக்கம் வரையிலும் வெயிலின் தாக்கம் ஓரளவு இருந்ததால் அந்நேரத்தில் மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து அதிகமாக இருந்தது. பின், தென்மேற்கு பருவ மழையால் கடந்த வாரம் வரை பூக்கள் வரத்து குறைவானது.  கடந்த சில வாரமாக மழை குறைவால், மீண்டும் பூக்கள் வரத்து அதிகரிக்க துவங்கியது. இருப்பினும், விசேஷ நாட்கள் குறைவால், குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு வரை மல்லிகை, முல்லை உள்ளிட்ட பூக்களின் விலை ஒரு கிலோ ரூ.400 முதல் அதிகபட்சமாக ரூ.500க்கே விற்பனையானது.

ஆனால், நேற்று முன்தினம் ஆடி வெள்ளி முதல் பூக்களின் விலை மேலும் அதிகரிக்க ஆரம்பித்தது. நேற்று ஆடிப்பெருக்கு மற்றும் இன்று ஆடி அமாவாசை என்பதால், பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களும் வழக்கத்தை விட கூடுதல் விலைக்கு விற்பனையானது. இதில் மல்லிகை ஒரு கிலோ ரூ.1800 வரையிலும், முல்லை ரூ.1000க்கும், ஜாதி முல்லை ரூ.800க்கும், சம்மங்கி ரூ.300க்கும், சில்லி ரோஸ் ரூ.250க்கும், அரளி ரூ.200 என அனைத்து வகை பூக்களும் கூடுதல் விலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related posts

தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் காதலனுடன் சேர்ந்து கணவரை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி: தேனி அருகே பரபரப்பு

2025 டிசம்பருக்குள் அதிமுகவில் நிச்சயம் ஒற்றுமை வரும்: வைத்திலிங்கம் பேட்டி

மிஸ் & மிஸஸ் அழகிகள்… கலக்கும் அம்மா – மகள்!