Thursday, September 12, 2024
Home » ஆடிப் பட்டத்திற்கேற்ற குறுகிய கால துவரை!

ஆடிப் பட்டத்திற்கேற்ற குறுகிய கால துவரை!

by Porselvi

தென்னிந்தியாவில் துவரைக்கு எப்போதும் கிராக்கி உண்டு. என்னதான் வகை வகையான குழம்பு வைத்து சாப்பிட்டாலும், துவரம்பருப்பு போட்டு வைக்கப்படும் சாம்பார் மேலும் இரு கவளம் சோற்றை கூடுதலாக சாப்பிட வைக்கும். சாம்பாரின் மணமணக்கும் வாசம் வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு ஒரு மகிழ்ச்சிகரமான உணர்வைத் தரும். ஆனால் இவ்வளவு சாம்பாரை மணக்க வைக்கும் துவரையைத் தங்களின் வயலில் பயிர் செய்ய சில விவசாயிகள் தயக்கம் காட்டியே வருகின்றனர். காரணம் துவரையை அதிக நாட்கள் பராமரித்து மகசூல் எடுக்க வேண்டும் என்பதுதான். இனி இந்தக் கவலை வேண்டாம். நெல் பயிர் போல 120-125 நாளில் விளைந்து பலன் தரும் வம்பன் 3 துவரை ரகத்தைப் பயிரிட்டு விவசாயிகள் பலன் பெறலாம் என்கிறார் முனைவர் ப.ராமகிருஷ்ணன். இந்த ரகம் குறித்து மேலும் அவர் விளக்குகிறார்.

மற்ற பயிர்களைப் போல் துவரையைச் சாகுபடி செய்ய விவசாயிகள் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. சுமார் 6 மாதம் வரை காத்திருந்து மகசூல் எடுக்க வேண்டும் என்பதால்தான் துவரை சாகுபடி வெகுவாக குறைந்து வருகிறது. விவசாயிகளின் இந்தக் கவலையைப் போக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது வம்பன் 3 துவரை ரகம். இந்த ரகம் ஆடிப்பட்டம், கார்த்திகைப் பட்டம் மற்றும் சித்திரைப் பட்டத்திற்கு பயிரிட உகந்தது. இந்த ரகம் தனிப்பயிராகவும், கலப்புப் பயிராகவும் பயிரிடப்படுகிறது. மலட்டுத் தேமல் நோய்க்கு எதிர்ப்புத் தன்மை உடையது. இத்தகைய ரகத்தை ஒரு ஏக்கரில் பயிரிட 6 கிலோ விதை போதுமானது. விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஒரு கிலோ விதைக்கு கார்பென்டாசிம் அல்லது திராம் 2 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். அல்லது ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் ஃபுளுரோசன்ஸ்
4 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்யவும். விதை நேர்த்தி செய்யாவிட்டால் நான்கு பொட்டலம் ரைசோபியம் (950 கிராம்/ஏக்கர்) மற்றும் 10 பொட்டலம் (800 கிராம்/ஏக்கர்) பாஸ்போபாக்டீரியா உடன் 10 கிலோ தொழுவுரம் மற்றும் 10 கிலோ மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன் இட வேண்டும்.

களை நிர்வாகம்

விதைத்த மூன்றாம் நாள் பெண்டிமெத்திலின் களைக்கொல்லி மருந்தை ஏக்கருக்கு 1.3 லிட்டர் அளவில் 200 லிட்டர் நீரில் கலந்து கைத் தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். பிறகு உடனே நீர்ப் பாய்ச்ச வேண்டும். பின்பு விதைத்த 30-35 நாட்களில் ஒரு கைக் களையும் எடுத்து நீர்ப் பாய்ச்ச வேண்டும். அல்லது விதைத்த 15ம் நாள் இமாஸ்திபயர்களைக்கொல்லியை ஏக்கருக்கு 400 மில்லி என்ற அளவில் தெளிக்க வேண்டும். களைக்கொல்லி தெளிக்காவிடில் 20 மற்றும் 40ம் நாட்களில் கைக்களை எடுக்க வேண்டும். களை முளைக்கும் முன் களைக்கொல்லியை தெளிக்கும் பொழுது சிறிது ஈரப்பதம் இருப்பது அவசியம்.

உர நிர்வாகம்

நிலத்தை நன்கு உழுது பண்படுத்தி, அடியுரமாக மானாவாரி பயிருக்கு ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழுவுரம் இட வேண்டும். இதனோடு 5 கிலோ தழைச்சத்து (2.5 கிலோ யூரியா), 10 கிலோ மணிச்சத்து (22 கிலோ டி.ஏ.பி-டை-அம்மோனியம் பாஸ்பேட்), 5 கிலோ சாம்பல் சத்து (8.5 கிலோ மியூரியேட் ஆப் பொட்டாஷ்) மற்றும் 10 கிலோ துத்தநாக சல்பேட் ஆகியவற்றை ஒரே சீராக அடி உரமாக இட வேண்டும். மணிச்சத்தினை டி.ஏ.பி மூலம் இடுவதால் பயிருக்குத் தேவையான 4 கிலோ கந்தகச்சத்தை ஜிப்ஸம் (23 கிலோ) உரம் மூலம் அளிக்க வேண்டும். மணிச்சத்திற்கு டி.ஏ.பி உரத்திற்கு பதில் சூப்பர் பாஸ்பேட் பயன்படுத்தினால் கந்தகச்சத்து தனியாக இட வேண்டிய அவசியம் இல்லை. இறவைப் பயிராக இருந்தால் ஏக்கருக்கு 10 கிலோ தழைச்சத்து (5 கிலோ யூரியா), 20 கிலோ மணிச்சத்து (44 கிலோ டி.ஏ.பி-டை-அம்மோனியம் பாஸ்பேட்), 10 கிலோ சாம்பல் சத்து (17 கிலோ மியூரியேட் ஆப் பொட்டாஷ்) மற்றும் 10 கிலோ துத்தநாக சல்பேட் ஆகியவற்றை ஒரே சீராக அடி உரமாக இட வேண்டும். கந்தகச்சத்தை ஜிப்ஸம் (45 கிலோ) உரம் மூலம் அளிக்க வேண்டும்.

இலைவழி நுண்ணூட்டம்

2 சதம் டி.ஏ.பி கரைசலை இலை வழி உரமாக மாலை வேளையில் பூக்கும் தருணத்திலும், 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும். தெளித்தவுடன் உடனடியாக நீர்ப் பாய்ச்ச வேண்டும். இதனால் காய் பிடிக்கும் திறன் அதிகரிக்கும். அல்லது ஒரு ஏக்கருக்கு 2 கிலோ பயறு ஒண்டர் மருந்தை ஒட்டும் திரவத்துடன் 200 லிட்டர் நீரில் கலந்து பூக்கும் தருணத்தில் தெளிக்க வேண்டும். இதன் மூலம் செடிகள் வறட்சியைத் தாங்கி அதிக அளவில் காய்த்து கூடுதல் விளைச்சலைக் கொடுக்கும்.

நீர் நிர்வாகம்

பயிருக்குத் தேவையான நீரை விதைத்தவுடன் ஒரு உயிர்த் தண்ணீரும், பின்பு மூன்றாவது நாள் உயிர்த் தண்ணீரும் அவசியம் பாய்ச்ச வேண்டும். பின்னர் பூ பிடிக்கும் பருவத்திலும், 50 சதம் பூ பூக்கும் பருவத்திலும், காய் பிடிக்கும் பருவத்திலும் நீர் பாய்ச்ச வேண்டும். துவரையில் சொட்டு நீர்ப் பாசன முறையைப் பயன்படுத்துவதன் மூலம் சாகுபடிப் பரப்பளவு அதிகரிப்பதுடன் உயர் விளைச்சலுக்கும் வழிவகுக்கிறது. இறவைப் பயிரில் நீர்ப் பற்றாக்குறையினைசமாளிக்க 2 சதம் பொட்டாசியம் குளோரைடு கரைசல் மற்றும் 100 பி.பி.எம் போரான் கரைசலுடன் இலைவழி தெளிக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

காய்த் துளைப்பானின் தாக்குதலைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 50 சதம் பூக்கும் பருவத்தில் புளுபெண்டிஅமைட் 480 எஸ்சி 50 மி.லி. மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். பின்பு 15 நாட்கள் கழித்து குளோர் அன்ட்ரோனிலிப்ரோல் 18.5 சதம் எஸ்சி 60 மி.லி. மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து மாலையில் தெளிப்பதன் மூலம் காய்த் துளைப்பான்களால் ஏற்படும் மகசூல் இழப்பைத் தவிர்க்கலாம். சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு டைமெத்தோயேட் 30 இசி 400 மில்லியை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். வரப்பு மற்றும் ஊடுபயிராக மக்காச்சோளம் பயிரிடுவதன் மூலம் வெள்ளை ஈ தாக்குதலைக் குறைக்கலாம். தேமல் நோயைக் கட்டுப்படுத்த நோய்த் தாக்கிய செடிகளை பிடுங்கி அழிக்க வேண்டும். வாடல் மற்றும் வேரழுகல் நோய்களைக் கட்டுப்படுத்த கார்பன்டாசிம் ஒரு கிராம் மருந்தை நீரில் கலந்து ஊற்ற வேண்டும்.

அறுவடை

காய்கள் 80 சதம் முதிர்ச்சி அடைந்த வுடன் செடிகளை அறுத்து கட்டி வைத்து, பின்பு வெயிலில் காய வைத்து, கையினால் தட்டி, மணிகளைப் பிரிக்க வேண்டும். இதில் ஏக்கருக்கு 400 கிலோ முதல் 450 கிலோ வரை மகசூல் கிடைக்கும். இத்தகைய ரகத்தை தற்போது வரவிருக்கும் ஆடிப்பட்டத்தில் விதைத்து விவசாயிகள் பயன்பெறலாம்.

தொடர்புக்கு:
முனைவர் ப. இராமகிருஷ்ணன்,
தேசிய பயறுவகை
ஆராய்ச்சி மையம்,
தமிழ்நாடு வேளாண்மைப்
பல்கலைக்கழகம்,
வம்பன், புதுக்கோட்டை
மாவட்டம்.
செல்: 63804 88348.

 

You may also like

Leave a Comment

five × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi