அருமையான பலன் தரும் ஆடிப்பட்டம்!

வறண்ட வானிலையைத் தொடர்ந்து எதிர்கொண்ட மண்ணுக்குக் குளிர்ச்சியான சூழலைத்தருவது ஆடிமாதம்தான். இந்த மாதத்தில்தான் மண்ணில் விழும் விதைகள் முழுமையாக முளைக்கத் தேவையான அருமையான தட்பவெப்ப சூழ்நிலை கிடைக்கும். தக்காளி, கத்தரிக்காய், வெண்டை உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை இந்த மாதத்தில் நடவு செய்வதன் மூலம் அதிக மகசூல் பெறலாம். அதேபோல் கம்பு, சோளம், பருத்தி, பாசிப்பயறு, உளுந்து, வேர்க்கடலை போன்ற மானாவாரிப் பயிர்களையும் நடவு செய்து அதிக மகசூல் பெறலாம். தண்ணீர்ப் பாய்ச்சி பயிர் செய்வதென்றால் குறுவை சாகுபடியில் நெல் விதைக்கத் தொடங்குவார்கள். ஆனால், மானாவாரிப் பயிர்களுக்கு ஆடிப்பட்டம் மிகவும் சிறந்த பட்டமாக விளங்குகிறது. ஆடி மாதத்தில் ஓரிரு முறை வயலுக்கு தண்ணீர் பாய்ச்சினால் போதும். புரட்டாசியில் இருந்து தொடர்ச்சியாக கிடைக்கும் மழையின் உதவியால் பயிர் வளர்ந்துவிடும். இந்த மாதத்தில் வயலில் வேகமாக விதைக்கும் பணியைத் தொடங்கி விடலாம்.

காய்கறிகளில் கத்தரி இந்தப் பட்டத்திற்கு சிறப்பான பலன் தரும். நாட்டுக்கத்தரி, எம்ஹெச் 9, எம்ஹெச் 11, அப்சரா, என்.எஸ். 1720, ரவையா, பச்சைநீலம் போன்ற வீரிய ரகங்களை நடவு செய்யலாம். பொதுவாக ரகத்தின் தன்மைக்கு தகுந்தபடி இடைவெளி மற்றும் செடியின் எண்ணிக்கை மாறுபடும். 8 முதல் 12 மணி நேரம் உயர் பாத்திகளை சொட்டுநீர்ப் பாசனத்தைப் பயன்படுத்தி ஊற வைத்து நடவு செய்ய வேண்டும். கத்தரியைப் பொருத்தவரையில் 50 முதல் 120 நாட்கள் வரை நல்ல மகசூல் கிடைக்கும். விவசாயிகள் இதன்மூலம் நல்ல லாபம் பார்க்க முடியும். மானாவாரிப் பயிரான கம்பு, சோளம் இரண்டுமே 120 நாள் பயிர்தான். இதில் விதைகளை ஊன்றிய நாளில் இருந்து பாதிநாள் கணக்கு வைத்து களை எடுத்தால் போதுமானது. கத்தரி, வெண்டை, தக்காளி, கம்பு, சோளம், மிளகாய் உள்ளிட்ட பல செடிகளின் விதைகளை நிலத்தில் ஊன்றுவதற்கு முன்பு கிட்டத்தட்ட 24 மணி நேரம் விதைகளை நன்கு ஊற வைக்க வேண்டும்.

15ம் நாளில் ஒரு ஏக்கருக்கு கடலைப் புண்ணாக்கு 100 கிலோ, வேப்பம்புண்ணாக்கு 50 கிலோ, கடற்பாசி உரம் (இயற்கை உரம்) 10 கிலோ கலந்து தெளிக்க வேண்டும். இப்படி செய்யும்போது செடிகள் நல்ல செழிப்பாக வளரும். மேலும் ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில் மஞ்சள் நிற அட்டை நட்டு வைக்கலாம். இதனால் பூச்சிகள் கவர்ந்து இழுக்கப்பட்டு அழிக்கப்படும். செடிகள் நட்ட 25ல் இருந்து 30ம் நாளில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி என்ற அளவில் வேப்ப எண்ணெய்க் கரைசலை கலந்து தெளிக்க வேண்டும். இப்படி செய்யும்போது பயிர்களை பூச்சிகள் தாக்காது. 40ல் இருந்து 50ம் நாளில் மண்புழு உரம் 50 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 10 கிலோ, அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா தலா 5 கிலோ தெளிக்க வேண்டும். இப்படி செய்வதால் நெல் நுண்ணூட்டம் பெறும். பயிர்கள் கதிராக மாற 30 நாட்கள் ஆகும். இந்தக் கதிர் பருவத்தில் மீன் அமிலம், பஞ்சகவ்யா இதில் ஏதாவது ஒன்றை
2 கிலோ அளவில் தெளிக்க வேண்டும். இப்படி செய்வது பயிர் விளைச்சலை அதிகரிக்கும். 

கைகொடுக்கும் பன்னீர் ரோஜா!

சில பயிர் வகைகளில் விவசாயிகள் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காமல் இழப்பைச் சந்திக்க நேரிடும். இதற்கு மாற்றாக என்ன செய்யலாம் என யோசிக்கும் விவசாயிகள் மலர் சாகுபடியை நாடலாம். குறைந்த காலங்களில் நல்ல மகசூல் தரும். தொடர் வருமானமும் கிடைக்கும். மலர் வகைகளில் எதைப் பயிரிடலாம் என கேட்கும் விவசாயிகளுக்கு பன்னீர் ரோஜா நல்ல சாய்ஸ். ஆம். பன்னீர் ரோஜா பூக்களை நடவு செய்தால் நமக்கு காலம் முழுவதும் தினசரி வருமானம் கிடைக்கும். பன்னீர் ரோஜாவை ஒரு ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்வதன் மூலம் 6 மாதத்தில் இருந்து தினசரி 10 கிலோ முதல் அதிகபட்சம் 60 கிலோ வரை பூக்கள் மகசூல் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இந்தப் பூக்களுக்கு கிலோ ஒன்றுக்கு குறைந்தது ரூ.100 முதல் நல்ல சீசன் உள்ள காலங்களில் ரூ.200 வரை விலை கிடைக்கும். பூக்கள் விலை எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. பொதுவாக கோயில் திருவிழாக்கள், திருமண நாட்கள் போன்ற குறிப்பிட்ட சீசன் நேரங்களில் பூக்களுக்கு நல்ல விலை கிடைக்கும். பன்னீர் ரோஜா பூக்களுக்கு திருமணம் மற்றும் திருவிழா காலங்களில் நல்ல விலை கிடைக்கும். சீசன் இல்லாத நேரங்களில் பன்னீர் ரோஜா உள்ளிட்ட அனைத்துப் பூக்களுக்கும் குறைவான விலையே கிடைக்கும். அதிக காற்று, மழை போன்ற காலங்களில் பூக்கள் நன்கு வளர்வதற்குள் உதிர்ந்து விடுவதால் அப்போது மகசூல் குறைவாகவே கிடைக்கும். மற்ற நேரங்களில் கிடைக்கும் நல்ல மகசூல் அதை ஈடுகட்டி விடும்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர் என்பதற்காக கால்நடை மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பித்ததை நிராகரிக்க கூடாது: ஐகோர்ட்

குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளை, புல்டோசர் மூலம் இடிக்க உச்சநீதிமன்றம் தடை

‘2026ல் ஆட்சியில் பங்கு என்பது சாத்தியமில்லை’; ஒன்றிய அமைச்சராக இருப்பவருக்கு அடக்கம், பண்பு வேண்டும்: ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி