நிலவில் இருந்து பார்த்தாலும் ‘தமிழ்’ என்ற வார்த்தை தெரியும் வகையில் 100 ஏக்கரில் உலக தரத்தில் மாதிரி காடு உருவாக்கப்படும்: சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு

சென்னை: தமிழ் மொழியை சிறப்பிக்கின்ற வகையில், நிலவில் இருந்து பார்த்தாலும் தமிழ் என்ற வார்த்தை தெரிகின்ற வகையில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உலக தரத்தில் ஒரு மாதிரி காடு உருவாக்கின்ற திட்டம் மேற்கொள்ளப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறினார். சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பதில் அளித்து சுற்றுச்சுழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசியதாவது: கடந்த 2 ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள எந்த பகுதியிலேயும், எந்த இடத்திலும் மண்ணை சேதப்படுத்தும் அபாயகரமான திட்டங்கள் அத்தனையும் தடுத்து நிறுத்தி தமிழகத்தை பாதுகாக்கிறார் முதல்வர்.

அதன் அடிப்படையில்தான், டெல்டா மாவட்டத்தில் உள்ள 3 இடங்களில் நிலக்கரி எடுக்கிறோம் என்கின்ற ஒன்றிய அரசினுடைய அறிவிப்புகள் வந்தவுடன் தமிழ்நாட்டில் இருக்கின்ற எல்லா இயற்கை ஆர்வலர்கள், குறிப்பாக டெல்டா மாவட்டத்தின் விவசாயிகள் மிகப்பெரிய அச்சுறுத்தல்களுக்கு உள்ளானர்கள். இதே சட்டமன்றத்தில், நானும் டெல்டா மாவட்டக்காரர்தான். எனவே நிலக்கரி சுரங்கம் அமைக்க விட மாட்டேன் என்று முதல்வர் உறுதி அளித்தார். இதையடுத்து அந்த திட்டத்தையும் தடுத்து நிறுத்தி இருக்கிறார். தமிழ்நாட்டினுடைய மொத்த பரப்பு 1,30,000 சதுர கிலோ மீட்டர். தற்போதைய வனப் பரப்பு 31,000 சதுர கிலோ மீட்டர்.

இதனை 33 சதவிகிதமாக உயர்த்த வேண்டுமென்றால் வனப் பரப்பு 42,919 சதுர கிலோ மீட்டராக இருக்க வேண்டும். கடந்த ஒரு ஆண்டு காலத்தில் 2 கோடியே 82 லட்சம் மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. நமக்கெல்லாம் மூத்த மொழியான தமிழ் ெமாழியை சிறப்பிக்கின்ற வகையில், இதற்கு முத்தாய்ப்பாக நிலவில் இருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம் தமிழ் என்ற வார்த்தை தெரிகின்ற வகையில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் ஒரு மாதிரி காடு உருவாக்கின்றபோது நிலத்தை சாட்டிலைட்டில் இருந்து பார்த்தால், தமிழ்நாட்டில் இந்த இடத்தில் தமிழ் என்கின்ற வார்த்தை தெரிகின்ற வகையில் உலக தரத்தில் ஒரு திட்டம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்