கணவர் வீட்டுக்கு அழைத்துச்சென்ற மகளை ஒப்படைக்ககோரி சங்கரன்கோவிலில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் காந்திநகர் கீழ 1ம் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் எல்லை பாதுகாப்பு படையில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் சத்தியமாதேவி. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் வேலை பார்த்து வந்த கருப்பசாமி இடமாறுதல் காரணமாக கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு வந்துள்ளார்.  இந்நிலையில் சங்கரன்கோவிலில் கருப்பசாமி வீட்டிற்கு அருகில் சத்தியமாதேவி தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். விடுமுறையில் வீட்டிற்கு வந்த கருப்பசாமி, சத்தியமாதேவியிடம் இருந்த மகளை அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். 10 நாட்கள் ஆகியும் மகளை சத்தியமாதேவியிடம் ஒப்படைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து சத்தியமாதேவி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தும் செய்தபோது ஆலங்குளம் போலீசில் புகார் செய்ய கூறியதாக தெரிகிறது. இதனால் ஆலங்குளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற சத்தியமாதேவியை சங்கரன்கோவில் போலீசில் தான் புகார் செய்ய வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நேற்று காலையில் இருந்து மாலை வரை சத்தியமாதேவி சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்துவிட்டு காத்திருந்தார். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த சத்தியமாதேவி பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் தனக்கு நீதி கிடைக்கவில்லை என்று கூறி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போக்குவரத்து பணியில் இருந்த போலீசார், சத்தியமாதேவியை மீட்டு டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த டவுன் இன்ஸ்பெக்டர் சண்முக வடிவு சத்தியமாதேவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்தார். ஆனால் தனது மகளை ஒப்படைக்காமல் போலீஸ் ஸ்டேஷன் வரமாட்டேன் என்று சத்தியமாதேவி தெரிவித்தார் இதனை தொடர்ந்து அவரது மகள் வரவழைக்கப்பட்ட பின்னர் சத்தியமாதேவி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார்.

Related posts

தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மூலமாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

யானை நடமாட்டம்: கம்பம் அருகே சுருளி அருவியில் குளிக்க 2வது நாளாக தடை

சாதி வாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும்: மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் வலியுறுத்தல்