சத்தியமங்கலம் அருகே பஸ்சை வழிமறித்து காட்டு யானை அட்டகாசம்: டயரை காலால் உதைத்ததால் பயணிகள் பீதி

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே வனப்பகுதி சாலையில் தனியார் பஸ்சை வழிமறித்த காட்டு யானை முன்பக்க டயரை காலால் எட்டி உதைத்ததால், பயணிகள் பீதியடைந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக- கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. பகல் மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் சாலையில் நடமாடுகின்றன. இன்று காலை சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் செல்வதற்காக தனியார் பஸ் 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு பண்ணாரி அம்மன் கோயில் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதி வழியாக சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது திம்பம் மலை அடிவாரம் விநாயகர் கோயில் அருகே ஒரு காட்டு யானை சாலையில் ஜாலியாக நடமாடிக் கொண்டிருந்தது. யானை நடமாட்டத்தை கண்ட டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பஸ் நிற்பதை கண்ட காட்டு யானை அருகே வந்தது. யானையை கண்டு பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்தனர். அப்போது காட்டு யானை பஸ்சின் அருகே வந்து முன்பக்க சக்கரத்தின் டயரை தனது முன் காலால் எட்டி உதைத்தது. சிறிது நேரம் சாலையில் நடமாடிய காட்டு யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பின் பஸ் புறப்பட்டு சென்றது. இந்த காட்சியை பஸ்சில் இருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related posts

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் 11 பேருக்கு 3 நாள் சிபிசிஐடி காவல்: நீதிமன்றம் அனுமதி

குமரியில் நீர்நிலை கரையோரம் கொட்டப்படும் குப்பைகள்; சுகாதார சீர்கேட்டால் மக்கள் பாதிப்பு

ரூ.2000 நோட்டுகளில், 97.87% நோட்டுகள் வங்கி மூலம் திரும்பப் பெறப்பட்டுள்ளது: இந்திய ரிசர்வ் வங்கி