சிவகாசி அருகே பயங்கர விபத்து பட்டாசு ஆலை வெடித்து 10 பேர் பலி: 4 பேர் படுகாயம் கட்டிடம் தரைமட்டமானது

 

சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில் 4 பெண்கள் உட்பட 10 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயத்துடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி காரனேசன் காலனியை சேர்ந்தவர் விக்னேஷ் (45). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சிவகாசி அருகே ராமத்தேவன்பட்டியில் இயங்கி வருகிறது. நாக்பூர் உரிமம் கொண்ட இந்த பட்டாசு ஆலையில் 50க்கும் மேற்பட்ட பட்டாசு தயாரிப்பு அறைகள் உள்ளன. இதில் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். நேற்று காலை 8.30 மணி அளவில் வழக்கம்போல் வேலைக்கு வந்த தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டனர். பகல் 12.45 மணி அளவில் பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் அறையில் வெடிக்கு மருந்து செலுத்தியபோது ஏற்பட்ட உராய்வு காரணமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை தரைமட்டமானது. மேலும் அதிலிருந்து வெடித்து சிதறிய பட்டாசுகள் அருகில் உள்ள அறைகளுக்கும் பரவி தீப்பற்றி பயங்கரமாக வெடித்துச் சிதறின. இதில் மேலும் 4 பட்டாசு அறைகளும் இடிந்து தரைமட்டமாயின.

இந்த கோர விபத்தில், சிவகாசி அருகே அச்சம் தவிர்த்தான் திருவேங்கடபுரம் காலனியை சேர்ந்த ஔவைராஜ்(62), கீழான்மறைநாடு சமத்துவபுரத்தைச் சேர்ந்த முத்து(50), குருசாமி (50), முனியசாமி (44), கிளியம்பட்டியை சேர்ந்த ரமேஷ்பாண்டி(26), அரிச்சந்திரன் மகன் கருப்பசாமி (29), ராமுத்தேவன்பட்டியைச் சேர்ந்த தங்கமணி மனைவி முருகஜோதி (50), வெம்பக்கோட்டை நேரு காலனியை சேர்ந்த வெள்ளைச்சாமி மனைவி சாந்தா(42), டி.மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி அம்பிகா (29), ஆலங்குளம் டிஎன்சி முக்குரோடு ராஜசேகர் மனைவி ஜெயா(58) ஆகிய 10 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தகவல் அறிந்த சிவகாசி, வெம்பக்கோட்டை மற்றும் விருதுநகர் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரவழைக்கப்பட்ட தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த வெம்பக்கோட்டை அருகே தொம்பக்குளம் சண்முகசுந்தரபுரத்தை சேர்ந்த ரங்கம்மாள்(55), 80 சதவீத தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். நாச்சியார்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார்(29), ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார்(22) ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவமனையிலும், நாச்சியார்பட்டி அன்னலட்சுமி(30) கள்ளமநாயக்கன்பட்டி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட உராய்வே விபத்திற்கான காரணம் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கலெக்டர், டிஐஜி ஆய்வு : வெடிவிபத்து நடைபெற்ற பட்டாசு ஆலையில் விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன், மதுரை சரக டிஐஜி ரம்யாபாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன். மதுரை மாவட்ட எஸ்பி(பொறுப்பு) பிரவீன் உமேஷ், சாத்தூர் எம்எல்ஏ டாக்டர் ரகுராமன், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தனி தாசில்தார் திருப்பதி ஆகியோர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

* விரிவான விசாரணைக்கு கலெக்டர் உத்தரவு
விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் ‘‘பட்டாசு ஆலை வெடி விபத்தில் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பட்டாசு தயாரிக்க மருந்து செலுத்தும் அறையில் விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த அறையில் அதிக தொழிலாளர்கள் இருந்தார்களா? என்பது விசாரணையில் தெரியவரும். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு முழு விசாரணை செய்யப்படும். 4 துறை அதிகாரிகள் இந்த குழுவில் இடம் பெறுவர். அதிகாரிகளின் முதல்கட்ட விசாரணையில் மனித தவறே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது’’ என்றார்.

* பனை மரம் உயரத்துக்கு எழும்பிய தீப்பிழம்பு

விபத்து நடந்த பட்டாசு ஆலையில் பணியாற்றிய தொழிலாளி கனகராஜ் கூறுகையில், வெடி விபத்து நடைபெற்ற பக்கத்தில் நான் பினிஷிங் ரூமில் வேலை பார்த்து கொண்டிருந்தேன். பகல் 12.45 மணியளவில் திடீரென பக்கத்து அறையில் வெடிச்சத்தம் கேட்டது. உடனடியாக நாங்கள் அறையை விட்டு வெளியேறி ஓடினோம். அப்போது வெடிவிபத்தில் ஏற்பட்ட அறையில் ஒரு பனைமரம் உயரத்துக்கு தீப்பிழம்பு ஏற்பட்டது. அதிலிருந்து வெடித்து சிதறிய பட்டாசு அருகில் உள்ள அறைகளிலும் விழுந்தது. இதைத்தொடர்ந்து மற்ற அறைகளிலும் வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. அந்த இடமே சிறிது நேரத்தில் ஒரு மயானமாக மாறிப்போனது. நாங்கள் உயிர் தப்பினால் போதும் என விழுந்து எழுந்து ஓடித் தப்பினோம். 15 நிமிடம் தாமதித்திருந்தால் அனைவரும் சாப்பாட்டிற்கு சென்றிருப்போம். 2 பேருக்கு மட்டுமே பாதிப்பிருக்கும். விதி விளையாடிவிட்டது. காலையில் என்னுடன் வேலைக்கு வந்த 10 தொழிலாளர்களை மதியத்திற்குள் இழந்து தவிக்கிறேன். விபத்தின் தீவிரம் ரொம்பவே கொடூரமான காட்சியாக இருந்தது. இவ்வாறு கண்ணீர் மல்க தெரிவித்தார்.

* 2012ல் நடந்த பயங்கர விபத்தில் 40 பேர் பலி

விருதுநகர் மாவட்டத்தில் 1,087 பட்டாசு ஆலைகள், 2,963 சில்லரை விற்பனை நிலையங்கள் உள்ளன. மாவட்டத்தில் 1,244 போர்மென்கள், 10,304 தொழிலாளர்களுக்கு விபத்து தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

* சிவகாசி அருகே முதலிப்பட்டி கிராமத்தில் ஓம் சக்தி பட்டாசு ஆலையில் 2012, செப்.5ல் நடைபெற்ற விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர். 53 பேர் காயமடைந்தனர்.

* சிவகாசி அருகே ரெங்கபாளையம் எம்.புதுப்பட்டி கிராமத்தில் 2023, அக்.16ல் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

* தலா ரூ.3 லட்சம் நிவாரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சம்பவம் நடந்த இடத்திற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆகிய இருவரையும் அனுப்பி மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை ெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்தவருக்கு தலா ரூ.1 லட்சமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Related posts

பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி.. லண்டனில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!