ஓடும் ரயிலில் வெள்ளி வியாபாரியிடம் ரூ. 13 லட்சம், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த வாலிபர் கைது: 2 மாதங்களுக்கு பிறகு சுற்றிவளைப்பு

தண்டையார்பேட்டை, அக்.21: ஓடும் ரயிலில் வெள்ளி வியாபாரியிடம், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தவரை, தனிப்படை போலீசார் 2 மாதங்களுக்கு பிறகு கைது செய்தனர். சென்னை புரசைவாக்கம் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (44), வெள்ளி வியாபாரி. இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி இரவு, பெங்களூருவில் இருந்து வெள்ளி பொருட்களை வாங்கிக் கொண்டு, சென்னைக்கு அரக்கோணம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்த படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்தார்.

அப்போது, ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 5 கிலோ 300 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ. 13 லட்சம் வைத்திருந்த தனது பையை, தலைக்கு அருகில் வைத்துவிட்டு தூங்கினார். மறுநாள் அதிகாலை பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே வந்தபோது, சதீஷ்குமார் தூக்கத்திலிருந்து விழிந்து பார்த்தார். அப்போது, அவரது பை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சென்ட்ரல் ரயில் நிலைய போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து, கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்க ரயில்வே காவல்துறை கூடுதல் இயக்குனர் வனிதா உத்தரவிட்டார். அதன்பேரில் எஸ்.பி செந்தில்குமார் மேற்பார்வையில், டி.எஸ்.பி ரமேஷ் தலைமையில் ஆய்வாளர் கோவிந்தராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

தொடர்ந்து, கடந்த 2 மாதங்களாக ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில், பதிவான உருவங்களை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், அரக்கோணத்தில் ரயிலில் ஏறி ஒவ்வொரு பெட்டியையும் நோட்டமிட்ட வாலிபர், சதீஷ்குமாரின் பையை எடுத்து சென்றது பதிவாகி இருந்தது. விசாரயைில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த ஜெகன்குமார் (32) கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனடியாக, தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் ஜெகன்குமாரை சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில், ஜெகன் வெள்ளிப் பொருட்களையும் ரூ. 13 லட்சத்தையும் அரக்கோணம் ஏ.பி.எம் சர்ச் பகுதியில் உள்ள தனது வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் அரக்கோணத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை மீட்டனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 2 மாதமாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, கொள்ளையனை கைது செய்து, பணம், வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Related posts

மாநில ஜூனியர் தடகள போட்டி நாளை தொடக்கம்

மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்!

கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம்