பெருமையான தருணம்

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பணிகள் பாராட்டுக்குரியவை. மழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்கள் விரைவில் மீண்டு வர தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து இருக்கிறது. அதுவும் 2015 வெள்ளத்தை விட இப்போது மீட்பு பணிகள் சூப்பர் என்று ஒன்றிய குழுவினர் பாராட்டு சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். இது தான் தமிழ்நாடு அரசு பேரிடர் நேரத்தில் மேற்கொண்ட பணிக்கு கிடைத்த நற்சான்றிதழ். இது நிச்சயம் பெருமை மிகு தருணம். அதிமுக, பா.ஜ உள்ளிட்ட தமிழ்நாட்டு எதிர்க்கட்சிகள் இந்த பேரிடர் நேரத்தில் தமிழ்நாடு அரசோடு ஒத்துழைத்து மக்கள் பணியாற்றி இருக்க வேண்டும். களத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், தமிழ்நாடு அரசு அதிகாரிகள் தொடர்ந்து வெள்ளம் வடியும் வரை, மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை, அவர்களது வாழ்வாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை மக்கள் பணியாற்றிக்கொண்டு இருந்தார்கள், மீட்பு பணியை மேற்கொண்டு வந்தார்கள், நிவாரண உதவிகளை வாரி வழங்கினார்கள். அதுவும் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு எரிச்சலடைந்த மக்களைக்கூட உரிய நிதானத்துடன் கையாண்டு அவர்களுக்கான நலத்திட்டங்களையும் வழங்கினார்கள் என்றால் மிகையல்ல. அதனால் தான் மிக்ஜாம் புயல் மற்றும் பெரு மழைக்கு பிறகு சென்னை அதிவேகமாக மீண்டெழுந்து இருக்கிறது. இயல்பு நிலைக்கு இவ்வளவு விரைவில் திரும்பியிருக்கிறது. இதை யாராவது மறுக்க முடியுமா?

அதே வேகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அத்தனை குடும்பங்களுக்கும் தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இத்தனை சிறப்பாக தமிழ்நாடு அரசு மிக்ஜாம் புயல் தீவிரத்தை கையாண்டது போல் அதிமுக, பா.ஜ கையாண்ட ேபரிடர்கள் என்ன?. திமுக அரசைப்பார்த்து அவர்கள் எழுப்பும் அதே கேள்விகள் அவர்களை நோக்கியும் எழுப்பப்படும் அல்லவா?. 2015 பெரு வெள்ளத்தின் போது அன்றைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு செய்தது என்ன?. அதனால் ஏற்பட்ட பாதிப்புகள், வடுக்கள் அவ்வளவு எளிதில் மறையுமா?. அதைவிட முக்கியமாக இன்றைய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேற்கொண்ட நிவாரண பணிகள் என்னென்ன?. ெகாரோனா காலத்தில் ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தான் என்ன?

திமுக அரசின் பணிகளால் சென்னை இயல்பு நிலைக்கு வெகுவிரைவில் திரும்பியது கண்டு, வெள்ளத்தில் அரசியல் செய்யமுடியாதது எதிர்க்கட்சிகளுக்கு வருத்தம். அதனால் தான் புயல் நிவாரணமாக ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும், ரூ.12 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று பேசுகிறார்கள். 2014-15 முதல் 2021-22 வரையில் ஒன்றிய அரசின் நேரடி வரி பகிர்வாக தமிழ்நாடு கொடுத்திருப்பது ரூ.5.16 லட்சம் கோடி. இதே காலக்கட்டத்தில் வரி பகிர்வாக ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு பெற்றிருப்பது ரூ.2.08 லட்சம் கோடிதான். அப்படி இருக்கும் போது தமிழ்நாடு அரசு கேட்டுள்ள மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.5 ஆயிரம் கோடியை ஒதுக்குவதில் ஒன்றிய அரசுக்கு என்ன தயக்கம்?

Related posts

“3ஆம் பாலினத்தவர் என விண்ணப்பத்தை நிராகரிக்காதீர்” : ஐகோர்ட்

“தமிழர்களுக்கு எதிரான விதிகளை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்!

தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் தூய்மையை நோக்கி மேலும் ஒரு படி பேரணி