‘‘ரூட் போட்டு கொடுத்த மோப்ப நாய்’’ ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது: மற்றொரு சிறுத்தையை பிடிக்க தீவிரம்


வி.கே.புரம்: வி.கே.புரம் அருகே ஆடுகளை வேட்டையாடியதுடன் பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை கூண்டில் சிக்கியது. மற்றொரு சிறுத்தையை பிடிக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நெல்லை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள அனவன்குடியிருப்பு பகுதியில் சிறுத்தை ஒன்று ஊருக்குள் புகுந்து நாய் மற்றும் கன்று குட்டியை அடித்துக் கொன்றது. இதைத்தொடர்ந்து அனவன்குடியிருப்பு, டாணா பகுதியில் கரடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் சிறுத்தை, கரடி ஆகியவற்றை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு வலியுறுத்தினர். இதையடுத்து வனத்துறை சார்பில், கூண்டு வைக்கப்பட்டது.

இருப்பினும் கரடி, சிறுத்தை சிக்கவில்லை. நேற்றுமுன்தினம் அதிகாலை விகே.புரம் அருகே வேம்பையாபுரத்தை சேர்ந்த சிவசங்கர் (43) என்பவரது வீட்டு முன்பு கட்டிப் போடப்பட்டிருந்த ஆட்டையும் அனவன் குடியிருப்பை சேர்ந்த பேச்சிமுத்து என்பவரது ஆட்டு கொட்டகையில் கட்டப்பட்டிருந்த ஆட்டையும் சிறுத்தைகள் தாக்கி, வனப்பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளது. இதைத்தொடர்ந்து வனச்சரகர் சத்தியவேல் ஏற்பாட்டில் மோப்பநாய் ரெக்ஸ் உதவியுடன் வனத்துறையினர் ஆய்வு செய்ததில் 2 பகுதிகளிலும் ஆடுகளை இழுத்துச் சென்றது, வெவ்வேறு சிறுத்தைகள் என்பது தெரியவந்தது. வேம்பையாபுரத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 7 முறை கூண்டுகள் வைத்து வனத்துறையினர் சிறுத்தையை பிடித்துள்ளதால் அங்கும் அனவன்குடியிருப்பிலும் கூண்டுகள் வைக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

இதன்படி 2 இடங்களிலும் சிறுத்தையை பிடிக்க தலா ஒரு ஆட்டைக் கட்டிப் போட்டு 2 கூண்டுகள் நேற்று மாலை வைக்கப்பட்டன. இந்த 2 இடங்களையும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்ட துணை இயக்குநர் இளையராஜா ஆய்வு செய்தார். இந்த நிலையில் வேம்பையாபுரத்தில் வைத்த கூண்டில் நேற்று நள்ளிரவில் சிறுத்தை சிக்கியது. இந்த பகுதியில் ஏற்கனவே 7 முறை கூண்டில் சிக்கிய நிலையில் தற்போது 8வது முறையாக சிக்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். மாஞ்சோலையில் அடர்ந்த வனப்பகுதியில் கூண்டோடு லாரியில் ஏற்றி வனத்துறையினர் கொண்டு போய்விட்டனர். ஆனால் அனவன்குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தை கூண்டில் சிக்கவில்லை. அதன் நடமாட்டத்தை மோப்பநாய் உதவியுடன் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் அதை பிடிப்பதிலும் வனத்துறை அதிகாரிகள் இரவு பகலாக தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது