அனல்பறந்த விவாதம்

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது மக்களவையில் ராகுல்காந்தி பேசிய பேச்சு அப்படி ஒரு அனலை ஏற்படுத்தி விட்டது. எதிர்க்கட்சி தலைவராக பதவி ஏற்ற பிறகு முதல்முறையாக அவர் பேசிய பேச்சால் பிரதமர் ேமாடி உள்பட மூத்த ஒன்றிய அமைச்சர்கள் பதற்றம் ஆகிவிட்டனர். அதனால் தான் 50க்கும் மேற்பட்ட முறை அவர்கள் ராகுல் பேச்சில் குறுக்கிட்டனர். ராகுல் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி உரை மீது நடந்த விவாதத்தின் இறுதியாக மோடி பதிலளித்தார். அந்த பேச்சும் கடும் அமளியை ஏற்படுத்தி விட்டது.

மக்களவையில் ராகுல்காந்தி பேச எழுந்து நின்ற உடனேயே பா.ஜ எம்பிக்கள் கோஷம் எழுப்ப ஆரம்பித்து விட்டனர். பதிலுக்கு எதிர்க்கட்சி எம்பிக்களும் கோஷம் எழுப்ப அவையில் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு சிவன் படத்தை காட்டி பேச்சைத் தொடங்கிய ராகுல்காந்தி, நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை சுட்டிக்காட்டினார். குறிப்பாக பற்றி எரியும் மணிப்பூர் மாநில பிரச்னை, ஜிஎஸ்டியால் அழிந்த சிறுகுறு தொழில்கள், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, அக்னிவீரர் திட்டம், விவசாயிகள் போராட்டம், அயோத்தி அமைந்துள்ள தொகுதியில் பா.ஜ தோல்வி நீட் பிரச்னை, வேலையின்மை உள்ளிட்ட அத்தனை பிரச்னைகள் பற்றியும் பேசினார்.

ஆனால் ராகுல் பேச்சின் போது மோடி, அமித்ஷா குறுக்கிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. அதிலும் குறிப்பாக இந்துக்கள் பற்றி ராகுல் பேசிய பேச்சும், அதற்கு மோடி பதிலளித்ததும், அவரது பதிலுக்கு ராகுல் மீண்டும் விமர்சனம் செய்ததும் உச்சகட்ட பதற்றத்தை அவையில் உருவாக்கின. ராகுல் பேச்சில் சில பகுதிகளை அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் ஓம்பிர்லா நீக்கிவிட்டார். அவரையும் ராகுல் விட்டுவைக்கவில்லை.

என்னிடம் கை கொடுக்கும் போது நிமிர்ந்தும், மோடியிடம் கைகொடுக்கும் போது குனிந்தும் நிற்பதாக ராகுல்காந்தி வைத்த விமர்சனம் ஓம்பிர்லாவையே பதற்றப்படுத்தி விட்டது. அவர் உடனடியாக நான் பாரம்பரியத்தை மதிப்பவன், வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை அளிப்பேன். தேவை என்றால் அவரது காலில் கூட விழுந்து வணங்குவேன் என்று ராகுலுக்கு பதிலளித்தார். மக்களவையில் மோடி நேற்று அளித்த பதில் எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல் போய்விட்டது.

ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித விளக்கமும் அவர் அளிக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் வழக்கம் போல் சரமாரியாக விமர்சனம் செய்தார். காங்கிரஸ் 100க்கு 99 இடங்களை பிடிக்கவில்லை. 543க்கு 99 இடங்களுடன் நின்றுவிட்டது. 13 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வைக்க முடியாத ராகுல்காந்தி ஹீரோவா, நாடாளுமன்றத்தின் அனைத்து மரபுகளையும் ராகுல்காந்தி மீறிவிட்டார். அவர் மக்களிடம் அனுதாபம் தேட புதிய வழிமுறைகளை மேற்கொண்டுள்ளார். இதற்காக புதிய நாடகத்தை அவர் அரங்கேற்றி விட்டார்.

ராகுல் குழந்தைத்தனமாக நடந்து கொண்டார். 2029ம் ஆண்டு நடக்கும் மக்களவை தேர்தலிலும் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகத்தான் இருக்கும் என்றெல்லாம் மோடி பேசினார். ஆனால் ராகுல் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் எழுப்பிய நீட் பிரச்னை பற்றியோ அல்லது மணிப்பூர் பிரச்னை பற்றியோ அவர் வாய் திறக்கவில்லை. வழக்கம் போல எதிர்க்கட்சிகளை, குறிப்பாக ராகுல்காந்தியையும், காங்கிரஸ் கட்சியையும் விமர்சனம் செய்வதில் தனது பதிலுரையை முடித்து விட்டார். நீட், மணிப்பூர் பிரச்னை பற்றி பேசும்படி, மோடி பேசும்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷம் எழுப்பியும் அவர் அதை கண்டுகொள்ளவில்லை. வழக்கம் போல் கடந்து சென்று விட்டார்.

Related posts

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவை தொகை ₹94.49 கோடி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

அமாவாசை முன்னிட்டு இன்றும், நாளையும் 1,065 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் கார்டியோவாஸ்குலர் டெக்னீஷியன்கள் பணி: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல்