சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பஸ்: 50 பயணிகள் தப்பினர்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே இன்று காலை சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சில் திடீரென தீ பிடித்தது. உடனடியாக பயணிகள் அனைவரும் பஸ்சிலிருந்து இறங்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றிங்கல் பகுதியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இன்று காலை 8 மணியளவில் கேரள அரசு பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். செம்பகமங்கலம் சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தபோது போது திடீரென பஸ் பழுதாகி நின்றது. இதைத் தொடர்ந்து டிரைவர் கீழே இறங்கி பஸ்சை பரிசோதித்துக் கொண்டிருந்தார்.

அப்போது பஸ்சின் அடியிலிருந்து புகை வந்தது. சிறிது நேரத்திலேயே பஸ்சில் தீப்பிடிக்க தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் உடனடியாக பயணிகள் அனைவரையும் கீழே இறங்குமாறு கூறினார். இதனால் பயணிகள் அலறியடித்தவாறு அனைவரும் பஸ்சிலிருந்து இறங்கி ஓடினர். இதுகுறித்து ஆற்றிங்கல் தீயணைப்புப் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் பஸ் முழுவதுமாக எரிந்து எலும்புக் கூடானது. பயணிகள் உடனடியாக பஸ்சிலிருந்து இறங்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Related posts

திருவொற்றியூர் பகுதியில் மழைநீர் கால்வாய் சீரமைப்பு

ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகள்: மாவட்ட செயலாளர் வழங்கினார்

ஊட்டச்சத்தை உறுதி செய் 2ம் கட்ட திட்டம் துவக்கம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்