உயர்படிப்பு படித்து வந்த டாக்டர் திடீர் தற்கொலை: குமரியில் பரபரப்பு


நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சாஸ்தான்கரையை சேர்ந்தவர் கிருஷ்ணதாஸ் (53). குளச்சலில் நகை கடை நடத்தி வருகிறார். மணவாளக்குறிச்சி பிள்ளையார்கோவில் பகுதியில் புதிதாக வீடு கட்டி கிருஷ்ணதாஸ் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் ராம்குமார் (27). எம்.பி.பி.எஸ். முடித்து விட்டு மேற்கு வங்கம் கோரக்பூரில் ஐ.ஐ.டி.யில் எம்.எம்.எஸ்.டி. (மாஸ்டர் – இன் மெடிக்கல் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி) 2 ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், ஊருக்கு வந்த ராம்குமார் அதன் பின்னர் கல்லூரிக்கு செல்லவில்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் அவரது அறைக்கு தூங்க சென்றார். நேற்று காலை வெகு நேரமாகியும் ராம்குமார் வெளியே வர வில்லை. அவரது தாயார் சாப்பிட அழைத்த போது அறைக்குள் இருந்தவாறே பிறகு சாப்பிடுகிறேன் என கூறி உள்ளார்.

இதனால் வீட்டில் இருந்தவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. ஆனால் நேற்று மாலை வரை அறையில் இருந்து ராம்குமார் வெளியே வர வில்லை. மீண்டும் அவரது தாயார் அறை கதவை தட்டிய போது எந்தவித சத்தமும் இல்லை. இதனால் பதற்றம் அடைந்த அவர், கிருஷ்ணதாசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வீட்டுக்கு வந்த கிருஷ்ணதாஸ் மற்றும் அக்கம் பக்கத்தினர் சேர்ந்து கதவை உடைத்து திறந்தனர். அங்கு அறைக்குள் ராம்குமார் வாயில் நுரை தள்ளி, மூக்கில் ரத்தம் வழிந்து கிடந்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்சு பணியாளர்கள் பரிசோதித்த போது ராம்குமார் இறந்தது தெரிய வந்தது. இதை கேட்டதும் ராம்குமாரின் குடும்பத்தினர் கதறி அழுதனர். தகவலறிந்த மண்டைக்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராம்குமார் அறையை சோதனை செய்த போது ஏராளமான மருந்து, மாத்திரைகள் கிடந்தன. எனவே அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் தின்று அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் எந்த வகையிலான மருந்துகள், மாத்திரைகள் என்பது பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரிய வரும் என போலீசார் கூறி உள்ளனர். தற்போது இது தொடர்பாக மண்டைக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்
ராம்குமார் அறையில் கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில், நான் போகிறேன். எனது உடலை பிரேத பரிசோதனை செய்து விடாதீர்கள். உடல் உறுப்புகளை தானம் செய்து விடுங்கள் என எழுதி இருப்பதாக கூறப்படுகிறது.

கல்லூரியில் பிரச்னையா?
கோரக்பூரில் உள்ள இந்திய தொழில் நுட்ப கழகம் (ஐஐடி) இந்தியாவில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். இங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் படித்து வருகிறார்கள். கல்லூரியில் ராம்குமாருக்கு ஏதாவது பிரச்னை இருக்குமா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படும் என போலீசார் கூறினர்.

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்