பஞ்சாப்பில் நடந்த போட்டித் தேர்வில் காதலியை போல் வேடம் அணிந்து தேர்வெழுத முயன்ற காதலன்: விரல் ரேகையை பதியும் போது சிக்கினார்


அமிர்தசரஸ்: பஞ்சாபில் காதலி போல் வேடம் அணிந்து போலி ஆவணங்களை உருவாக்கி போட்டித்தேர்வு எழுத சென்ற காதலனை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து விசாரித்து வருகின்றனர். பஞ்சாப் மாநிலம் பகுதியில் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கான போட்டித் தேர்வு கடந்த 7ம் தேதி நடைபெற்றது. பாபா பரித் பல்கலைகழகம் சார்பில் டிஏவி பப்ளிக் பள்ளியில் இந்த தேர்வுகள் நடைபெற்றது. இதில் பரம்ஜித் கவுர் என்ற பெண் ஒருவர் தேர்வு எழுதுவதற்காக வருகை தந்திருந்தார். சிவப்பு நிற வளையல்கள், உதட்டுச் சாயம் மற்றும் பெண்களின் உடையில் இருந்ததால் அவரை உள்ளே அனுமதித்துள்ளனர்.

மேலும் அவரிடம் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டு ஆகியவையும் இருந்ததால் யாருக்கும் எந்த சந்தேகமும் எழவில்லை. இருப்பினும் இந்த தேர்வுகள் முழுவதும் மின்னணு முறைக்கு மாற்றப்பட்டிருந்ததால், தேர்வர்கள் அனைவரும் தங்களது விரல் ரேகைகளை வைக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அப்போது பரம்ஜித்தின் கைரேகை விழாததால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் பெண் அல்ல, ஒரு ஆண் என்பது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், உடனடியாக அவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசாரின் விசாரணையில் அவரது பெயர் அங்ரேஷ் சிங் என்பதும், அவர் பரம்ஜித் கவுரின் காதலன் என்பதும் தெரியவந்தது. பரம்ஜித்தின் விண்ணப்பங்களை பல்கலைக்கழக நிர்வாகம் நிராகரித்து இருந்த நிலையில், அவருக்கு பதிலாக இந்த தேர்வை எழுத அங்ரேஷ் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலி ஆவணங்களை தயாரித்து மோசடியாக தேர்வு எழுத முயன்றதாக அங்ரேஷ் சிங் கைது செய்யப்பட்டார். அவரது காதலியிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

திருவிடைமருதூர் அருகே பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் பரபரப்பு..!!

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றுக்கு 2,068 கனஅடி நீர் திறப்பு ..!!

மதுரை, கோவை மெட்ரோ ரயில் வழித்தடங்களில் ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் நாளை நேரில் ஆய்வு : ரூ.22,108 கோடி முதலீடு செய்ய திட்டம்