கலி முற்றி எங்கெங்கும் துன்பங்களும் துயரங்களும் சூழ்ந்துள்ள இன்றைய உலகின் முக்கியத் தேவை என்ன?

கலி முற்றி எங்கெங்கும் துன்பங்களும் துயரங்களும் சூழ்ந்துள்ள இன்றைய உலகின் முக்கியத் தேவை என்ன?
– சிவசுப்ரமணியன், திருவெறும்பூர்.

இன்றைய முக்கிய தேவை அறவாளர்கள். இன்றைக்கு சாமர்த்திய சாலிகள் இருக்கிறார்கள். ஆனால் அறம் சார்ந்தும், மனிதாபிமானம் சார்ந்தும் பிறரைப் பற்றி சிந்திக்கக் கூடியவர்கள் இல்லை. இன்றைய இளைஞர்கள் உணர்வு மிக்கவர்கள். ஊற்றமுடையவர்கள். நுண்ணறிவு உடையவர்கள். உழைப்பாளிகள். இவர்களுக்கு சரியான வழிகாட்டிகள் இருந்துவிட்டால், மிகப் பெரிய நன்மையை, அவர்களும், அவர்களைச் சார்ந்த தேசமும், உலகமும் அடையும். விவேகானந்தர் இதைத்தான் சொன்னார், தேசபக்தியும், தெய்வ பக்தியும் தன்னம்பிக்கையும் உள்ள ஒரு சில இளைஞர்கள் இருந்தால் போதும் என்றார். விவேகானந்தரைப் போன்றவர்கள் இன்றைக்கு மிகவும் தேவைப்படுகிறார்கள்.

தினசரி வாழ்க்கை என்பது போராட்டமாகவும் சவால்கள் நிறைந்ததாகவும்தானே இருக்கிறது?
– அம்சவர்த்தினி, விருதுநகர்.

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். சவால்களும் சிக்கல்களும் நிறைந்ததுதான் வாழ்க்கை. எந்தக் கப்பலும் துறைமுகத்தில் பாதுகாப்பாகவே இருக்கும். ஆனால், அதற்காக கப்பல் கட்டப்படுவதில்லை. கடலில் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு பயணம் செய்வதற்காகத்தான் கப்பல் தயாரிக்கப்படுகிறது. நாம் வாழ்வதும் ஒரு பயணம்தான். இதை எதிர்கொண்டு சமாளிப்பதற்காகத்தான் நமக்கு அறிவும் ஆற்றலும் வழங்கப்பட்டு இருக்கிறது. தெய்வபலமும் துணை நிற்கிறது.

சுமுகமான வாழ்க்கைக்கு எது முக்கியம்?
– பாலாஜி, தஞ்சை.

நம்பிக்கைதான் முக்கியம். இந்த நம்பிக்கையை எக்காரணத்தை முன்னிட்டும் இழந்து விடக்கூடாது. இன்றைக்கு நிறைய தற்கொலைகள் நடக்கின்றன. மனதில் இனம் புரியா அச்சமும், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையின்மையும்தான் இதற்குக் காரணங்கள். நாம் இரண்டு விஷயங்களில் உறுதியாக இருக்க வேண்டும். ஒன்று நாமே நம்பிக்கையுடன் (self-confidence) இருக்க வேண்டும். இரண்டாவதாக மற்றவர்களுக்கும் நாம் நம்பிக்கையைத் தர வேண்டும். பூரண நம்பிக்கை இல்லாமல் ஒரு அடிகூட நம்மால் எடுத்து வைக்க முடியாது. நீங்கள் இங்கிருந்து வீடு திரும்புகிறீர்கள் என்றால், வீடு அதே இடத்தில் இருக்கும் என்ற நம்பிக்கையுடன்தான் செல்கிறீர்கள். உங்களுக்கு தெரிகிறதோ இல்லையோ, உள்ளத்தில் வீடு நாம் விட்டு வந்த இடத்திலேயே இருக்கும் என்கின்ற நம்பிக்கை பூரணமாக இருக்கிறது. இந்த நிஷ்டைதான் நம் உள்ளே நேர்மறையாக (positive effect) வேலை செய்கின்றது.

நடராஜர், குழலூதும் கண்ணன் படம், சிலைகளை வீட்டில் வழி படக்கூடாது என்கிறார்களே, செல்வம் போய்விடுமாம்?
– அரசியம்மாள், காங்கேயம்.

சில விஷயங்கள் யாரோ ஒருவர் சொல்லி அதை மற்றவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ காலம் காலமாக பின்பற்றி வருவதாகவே இருக்கின்றன. குழலூதும் கண்ணன் படம் இருந்தால் எல்லாச் செல்வங்களும் வெளியே போய்விடும் என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்றால், இல்லை… எனக்குத் தெரிந்து பல செல்வந்தர்கள் வீடுகளில் நடராஜர் மூர்த்தியின் படத்தையும், குழலூதும் கண்ணன் படத்தையும் பார்த்திருக்கின்றேன். இது நம்முடைய மனதைப் பொறுத்தது. பகவான் எந்த ரூபத்தில் இருந்தாலும் அவர் அருள் செய்யவே செய்வார். நம்முடைய இஷ்ட மூர்த்தி எப்படி இருந்தால் நமக்கு மன மகிழ்ச்சியைத் தருமோ அப்படி வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

தொகுப்பு: அருள்ஜோதி

Related posts

சிலர் வீடுகளில் ஸ்டிக்கர் கோலம் ஒட்டி இருப்பது சரிதானா?

துலாம் ராசி குழந்தை

ஜாதகத்தில் விவாகரத்தை கண்டுபிடிக்க முடியுமா?