பெண்களுக்காக பெண்களால் இயக்கப்படும் பயணக் குழு!

நன்றி குங்குமம் தோழி

பெண்களை வீட்டுக்கு அருகில் இருக்கும் பக்கத்து தெருவில் உள்ள கடைக்குப் போகணும்னா கூட துணைக்கு அண்ணனையோ தம்பியையோ கூட்டிட்டுப் போகச் சொல்லுவாங்க.தம்பிக்கு அந்தப் பெண்ணை விட வயது ஐந்து வருடம் குறைவாகக்கூட இருக்கும். சின்னப் பையனா இருந்தாலும் ஜான் பிள்ளையா இருந்தாலும் ஆண் பிள்ளை என்று சொல்லி அக்காவுடன் துணைக்கு உடன் அனுப்பி வைப்பது இன்றும் பெண் பிள்ளைகள் இருக்கும் வீட்டில் சகஜம். பெண்களிடம் எல்லா விஷயத்துக்கும் ஒரு ஆணின் துணை அவசியம் என்று சொல்லியே வளர்க்கிறார்கள். அது அவர்கள் மனதிலும் பதிந்துவிடுகிறது. அதனாலேயே பல பெண்கள் ஆண்களை சார்ந்ேத தங்களின் வாழ்க்கை என்று நினைக்கிறார்கள்.

இதுதான் பெண்களையும் அவர்கள் சிறு வயதில் இருந்தே அப்பா, அண்ணன், தம்பி, கணவன், மகன்னு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஆண்களை சார்ந்தே வாழ வேண்டும் என்ற எண்ணம் அவர்களுள் ஏற்படுகிறது. என்னதான் பெண்ணியம், பெண் விடுதலை, பெண் கல்வினு நிறைய விஷயங்கள் பேசினாலும் இன்றும் ஒரு பெண் தனியா பீச்சுக்கு போகவோ டூர், ட்ரெக்கிங், பயணம் செல்வது என்பது அவ்வளவு சுலபமில்லை.

அதற்கான சூழ்நிலையை இன்றும் ஒரு சில இந்திய குடும்பங்களில் நாம் அவர்களுக்கு அமைத்து தருவதில்லை. அதற்கு பாதுகாப்பு, பொருளாதாரம், தனியாக பயணம் செய்ய பழக்கம் இல்லை என பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இவை அனைத்துமே ஒரு பெண் தனியாக பயணம் செய்ய தடையாகத்தான் உள்ளது. ஏன் எத்தனைப் பெண்கள் ஓட்டலுக்கு தனியா சென்று சாப்பிடுறாங்க?

இந்த தடைகளை எல்லாம் உடைத்து, பெண்கள் தைரியமாகவும் அதே சமயம் அவர்கள் பாதுகாப்பாகவும், பெண்கள் மட்டுமே பயணம் செய்ய பெண்களுக்கான பிரத்யேக பயண நிறுவனத்தினை நடத்தி வருகிறார் சென்னையை சேர்ந்த மோகனப்பிரியா. மேலும் ஃபிட்னஸ் மையத்தில் மேனஜராக பணிபுரிகிறார். கடந்த நான்கு வருடமாக ADHD பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கிறார்.

‘‘கல்லூரிப் படிப்பை முடிச்சிட்டு 16 வருடங்கள் துபாயில் வேலை பார்த்து வந்தேன். அங்கு பல்வேறு ஊர்கள் மற்றும் நாடுகளுக்கு நான் குடும்பமாக பயணம் செய்து இருந்தாலும் சென்னை திரும்பிய பிறகு என்னால் தனியாக எங்கும் பயணம் செய்ய முடியாத சூழல் இருந்தது. ஒரு பீச்சுக்கு போகணும்னா கூட நமக்கு துணை யாரும் இல்லையேனு நினைப்பேன். இப்படி எல்லாத்துக்கும் ஒருவரின் துணையை தேட வேண்டி இருக்கிறதே என்று தோன்றியது.

அதே சமயம் எனக்கு வெளியூர்களுக்கு பயணம் செய்ய வேண்டும் என்று ஆசையாக இருந்தது. எங்க தோழிகளின் வாட்ஸப் குழுவில் சேர்ந்து பயணம் மேற்கொள்வது பற்றி பேசினோம். அப்ப ெகாரோனா லாக்டவுன் என்பதால், அது முடிந்து தடைகள் தளர்த்தப்பட்ட பிறகு 2021 செப்டம்பர் மாதம் கோத்தகிரிக்கு முதல் டூர் பிளான் செய்தோம். இதில் என் தோழிகள் மட்டுமில்லாமல் அவர்களுக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள் என முதல் பயணத்திலேயே 27 பெண்கள் வந்தாங்க.

முதல் பயணமே பெரிய வெற்றியா அமைந்ததால், அதையே தொடர்ந்து செய்யலாம்னு எனக்குள் ஒரு ஊக்கத்தை கொடுத்தது. அடுத்து 20 பெண்களுடன் சேர்ந்து மேகாலயா ட்ரிப் பிளான் செய்தோம். என்னுடைய பயணத்திற்காக துவங்கப்பட்ட அந்த வாட்ஸப் குழு அதன் பிறகு பெண்களுக்கான பிரத்யேக பயணக் குழுவாக மாறியது. காரணம், பெண்கள் பெரும்பாலும் தங்களுக்கு மிகவும் பழக்கமான வாட்ஸப் குழு மூலமாக தான் இந்தப் பயணங்களை மேற்கொள்ள முன் வருகிறார்கள். இது குறித்து நான் தனிப்பட்ட எந்த விளம்பரமோ அல்லது சோசியல் மீடியாவில் பதிவு செய்தது இல்லை.

காரணம், இதில் அனைவரும் பெண்கள் என்பதால், அவர்களை நான் பயணத்திற்கு அழைத்து செல்லும் போது அவர்களின் பாதுகாப்பு ரொம்ப முக்கியம். பப்ளிக்காக போடும் போது அதில் பல பிரச்னைகள் ஏற்படும். அதனாலயே எனக்கு தெரிந்தவர்கள், தோழிகள், அவர்களுக்கு தெரிந்தவர்கள் என ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்தான் நான் இதை செயல்படுத்தி வருகிறேன். இதன் காரணமாக என்னால் இந்தப் பயணத்தை பாதுகாப்பாக இயக்க முடிகிறது.

ஆரம்பத்தில் 40 பெண்கள் இருந்த வாட்ஸப் குழுவில் இன்று 800 பெண்கள் இருக்காங்க. இந்த குழுவின் உறுப்பினர்கள் அதிகரிக்க காரணம் ஒரு பெண் பயணிக்கும் போது அது நல்ல அனுபவமாக அமைந்தால், கண்டிப்பாக அவர்கள் மேலும் சிலருக்கு இது குறித்து சொல்வார்கள். அதை தானும் அனுபவிக்க வேண்டும் என்று ஒரு ஐந்தாறு பெண்கள் குழுவில் இணைய முன் வருவார்கள். அப்படி உருவானதுதான் ‘சென்னை டூர் க்ரூப்’ என்றார் மோகனப்பிரியா.

‘‘இந்தக் குழுவில் பெரும்பாலும் சிங்கிள் அம்மாக்கள்தான் இணைந்திருக்கிறாங்க. காரணம், தங்களின் குழந்தைகளை பாதுகாப்பாகவும் அதே சமயம் தனியா அழைத்துப் போக கஷ்டப்படுறாங்க. அவங்களுக்கு இந்த குழுப் பயணம் ரொம்பவே உதவியா இருக்கு. இவங்களுக்காகவே 15 வயதுக்கு உட்பட்ட ஆண் பிள்ளைகளை நாங்க இந்தப் பயணத்திற்கு அனுமதிக்குறோம். பெண்கள் தனியா பயணம் செய்யும் போது அவங்களுக்கு ஒரு ரிலாக்சேஷன் மட்டுமில்ல ஒரு தன்னம்பிக்கை, தைரியம் என பல விஷயங்கள் அவர்களின் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது. என்னாலும் 20 கிலோ எடையுடைய பேக் பாக்கினை (back bag) தூக்க முடியும் என்பது எனக்கே இப்படி பயணம் செய்ய ஆரம்பிச்ச பிறகுதான் தெரிந்தது. பொதுவாக ட்ரெக்கிங் போன்ற பயணம் செய்யும் போது ட்ராலி சூட்கேஸ் சரியா வராது. பேக் பாக்கில் லக்கேஜ் எடுத்து செல்வதுதான் சிறந்தது. இந்த சின்ன பேக் விஷயமே அவர்கள் மனதில் பெரிய தன்னம்பிக்கையை கொடுக்கும்.

நான் இந்தப் பயணக் குழுவினை லாப நோக்கத்திற்காக நடத்தவில்லை. என்னைப் போல் மற்ற பெண்களுக்கும் ஒரு ஊக்கம் மற்றும் தன்னம்பிக்கையை கொடுக்கதான் கடந்த நான்கு வருடங்களா இந்தக் குழுவை இயக்கி வருகிறேன். சொல்லப்போனால், நானே அந்த டூரில் பயணம் செய்ய வேண்டும் என்றால், எனக்காக ஏற்படும் செலவுக்கான பணத்தினை செலுத்திதான் டிராவல் செய்வேன். அப்படி இந்த நான்கு வருடத்தில் சமீபத்தில் நாங்க மேற்கொண்ட இமாச்சல் பயணம் எங்களால் மறக்கவே முடியாது.

இமயமலை பயணம் கடுமையான குளிர் என்று இளைஞர்களே யோசிக்கும் போது, இந்தப் பயணத்தில் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அசாத்தியமா பயணம் செய்தாங்க. இந்தப் பயணக்குழு மூலம் பெண்களுக்கு என்னால் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறேன் என்று நினைக்கும் போது பெருமையாக உள்ளது. மனம் இருந்தால் வானம் கூட நமக்கு எல்லை இல்லை. அதையும் தாண்டி பயணிக்கலாம்’’ என்கிறார் மோகனப்பிரியா.

தொகுப்பு: எஸ்.விஜய ஷாலினி

Related posts

சுபிட்சம் கொடுக்கும் கதிர்குல்லா தோரணங்கள்!

உலகத்தை என் ஓவியங்கள் மூலமாக பார்க்கிறேன்!

பெண்களுக்கு ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பான வாழ்க்கையை கொடுக்க வேண்டும்!