வீட்டுச்சுவையில் அசத்தும் செட்டிநாட்டு உணவகம்!

அன்லிமிட் சாப்பாடு… ஃப்ரெஷ்ஷான சைட் டிஷ்…

“வீட்டுச் சாப்பாட்டு ருசி பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. சொந்த ஊரைப் பிரிந்து, வெளியூர்களில் தங்கிப் படிக்கும் மாணவர்கள், வேலை செய்யும் தொழிலாளர்கள் என அனைவருமே வீட்டுச் சாப்பாட்டிற்காக ஏங்கிக் கிடக்கிறார்கள். சென்னை போன்ற பெரு நகரங்களில் திரும்பும் இடமெல்லாம் பாஸ்ட் ஃபுட் கடைகள் ஆக்கிரமித்து இருக்கின்றன. உடனடியாக தயார் செய்து தரப்படும் இந்த பாஸ்ட் ஃபுட்களை வேறு வழியின்றி பலர் வாங்கிச் சாப்பிட்டு பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகிறார்கள். இதனால் வீட்டுச்சுவையில் கிடைக்கும் தரமான உணவுகளைத் தேடி பலர் தினந்தோறும் அலைந்து வருகிறார்கள். அத்தகைய தரமான வீட்டுச்சுவை உணவுகள், செட்டிநாட்டு ப்ளேவரில் கிடைத்தால் கூடுதல் ஸ்பெஷல்தான். இதை உணர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல பெண்கள் தங்கள் வீட்டிலேயே உணவுகளைத் தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் எங்களது வீட்டையும் உணவகமாக மாற்றி இருக்கிறோம்’’ என்கிறார் உதித்ரா.

சென்னை சிஐடி நகரில் உள்ள தனது வீட்டையே உணவகமாக்கி, பெருமாள் செட்டிநாடு மெஸ் என்ற பெயரில் சுவை மிகுந்த அசைவ உணவுகளை வீட்டுச்சுவையில் கொடுத்து அசத்திவரும் இவரைச் சந்தித்தபோது, மேலும் தங்களது உணவகத்தைப் பற்றி பகிர்ந்துகொண்டார். “பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு வந்து 18 வருடங்கள் ஆகிறது. பிழைப்பு தேடித்தான் இங்கு குடும்பத்தோடு வந்தோம். எனக்கு சிறுவயதில் இருந்தே உணவு சார்ந்த துறையில் சாதிக்க வேண்டும் என்று ஆசை. அதனால் பெசன்ட் நகரில் ஒரு பேக்கரியை துவங்கினேன். கட்லெட், பஃப், இனிப்பு, காரம் என்று அனைத்தையும் நானே தயார் செய்து விற்பனை செய்தேன். அதில் நல்ல வருமானம் கிடைத்தது. இதற்கிடையில், எனது வீட்டின் அருகே இயங்கி வந்த ஒரு பாஸ்ட் ஃபுட் கடையை, அதன் உரிமையாளர் காலி செய்தார். அப்போது அவர்கள் பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்ய நினைத்தார்கள். சரி நமக்கு பயன்படுமே என நினைத்து, அவர்களிடம் ஒரு தொகையை கொடுத்து நானே அனைத்துப் பொருட்களையும் விலைக்கு வாங்கினேன்.

இதை வைத்து ஒரு உணவகம் தொடங்கலாம் என நினைத்தோம். ஒரு கடை எடுத்து உணவகம் நடத்துவதை விட வீட்டையே உணவகமாக மாற்றினால் என்ன? என்று யோசித்தோம். அந்த யோசனையில் உருவானதுதான், இந்த பெருமாள் செட்டிநாடு மெஸ். ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை ஒவ்வொரு உணவையும் வீட்டு முறையிலேயே கொடுத்துவருகிறோம். வீட்டுச் சாப்பாட்டை விரும்பும் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த மெஸ்சுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. எங்கள் கடையின் ஸ்பெஷலே அன்றன்றைக்கு கிடைக்கும் நண்டு, மீன், இறால் கொண்டு சமைப்பதுதான். இங்கு வந்தால் சீ புட்ஸ் ஐயிட்டங்களை ப்ரெஷ்ஷாக சுவைக்கலாம். இதோடு செட்டிநாட்டு ஸ்டைல் பெப்பர் சிக்கன், சிக்கன் குழம்பு கொடுக்கிறோம். சமைப்பதற்கான மசாலாவை நாங்கள் எந்த கடையிலும் வாங்குவது கிடையாது. வர மிளகாயோடு மிளகு, மல்லி உள்ளிட்ட மொத்தம் 10 வகையான மசாலா பொருட்களை சேர்த்து வீட்டிலேயே பிரத்யேகமாக தயார் செய்து குழம்பில் சேர்க்கிறோம்.

ஒவ்வொரு குழம்புக்கும் தனித்தனி மசாலா பயன்படுத்துகிறோம். நண்டுக்குழம்புக்கு தனி மசாலா. மீன் குழம்புக்கு தனி மசாலா. இறால் குழம்புக்கு தனி மசாலா என எங்கள் கடையில் கிடைக்கும் ஒவ்வொரு குழம்பும் தனித்தனி டேஸ்ட்டில் இருக்கும்.மதியம் 12 மணிக்கு தொடங்கும் உணவகம் மாலை 4 மணி வரை மட்டுமே செயல்படும். மீல்ஸைப் பொருத்தவரையில் வொயிட் ரைஸ், மீன் குழம்பு, இறால் குழம்பு, நண்டு கிரேவி, ரசம், பொரியல், முட்டை, தயிர் என தனித்தனிச்சுவையில் தருகிறோம். ஒரே ஸ்டைலில் மீன் குழம்பு, சாம்பார் தருவது கிடையாது. மீன்குழம்பு மற்றும் சாம்பாரில் மாங்காய் போட்டு கொடுக்கிறோம். எங்கள் கடைக்கு சாப்பிட வருபவர்கள் இந்த இரண்டு குழம்பின் ருசிக்காக உணவினை பார்சல் வாங்கிக்கொண்டும் செல்கின்றனர். அசைவக் குழம்பில் கிரேவி மாதிரியான சுவையைக் கொடுக்கிறோம். சுவையும் தரமும் மாறாமல் இருப்பதால்தான் தினசரி வாடிக்கையாளர்கள் கிடைத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு உணவின் சுவையிலும், வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்திலும் முழுக்கவனம் செலுத்துகிறோம்.

நாம் எந்தவொரு தொழில் தொடங்கினாலும் அதில் அனுபவம் வேண்டும். அதில் கிடைக்கும் அனுபவத்தை வைத்துதான் நாம் எந்தத் துறையாக இருந்தாலும் நிலைத்து நிற்கமுடியும். அதிலும் உணவகத்தைப் பொருத்தவரையில் பொருட்கள் வாங்குவது, சமைப்பது, பரிமாறும் விதம், வாடிக்கையாளர்களிடம் பேசுவது, கறி சரியான பதத்தில் இருக்கிறதா? என்று பார்த்து வாங்குவது என்று அனைத்தையும் கவனிக்க வேண்டும். இங்கு சாப்பிட வருபவர்களை விட பார்சல் சாப்பாடுதான் அதிகம். சீசனைப் பொருத்து உணவில் சேர்க்கும் மசாலாவை மாற்றுகிறோம். குளிர் மற்றும் மழைக்காலங்களில் அனைத்து அசைவ உணவிலும் பெப்பரை அதிகம் சேர்ப்போம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற கணக்கில் கடம்பா கொடுக்கிறோம். ஒரு கப் கடம்பாவை ரூ.90க்கு வழங்கி வருகிறோம். இதுபோக ரூ.90க்கு பிஷ் ப்ரை, ரூ.100க்கு அன்லிமிட்டெட் சாப்பாடு கொடுத்துவருகிறோம்.பல நாள் பட்ட கஷ்டத்திற்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது. எங்களுக்கான அடையாளத்தை நாங்களே உருவாக்கி இருக்கிறோம். எங்களின் வீட்டுச்சுவைக்காக பலர் குடும்பத்துடன் வந்து சாப்பிடுகிறார்கள். வெளியூர்களில் இருந்து இங்கு வந்து அரசு வேலைக்காக படித்துவரும் இளைஞர்கள் தினசரி வாடிக்கையாளர்களாக வந்து செல்கிறார்கள். அவ்வாறு வந்து சாப்பிட்டு செல்பவர்கள், தங்களின் வீட்டில் சாப்பிடும் உணர்வைப் பெறுவதாக கூறிச் செல்கிறார்கள். இது எங்களுக்கு மிகுந்த மன நிறைவைத் தருகிறது’’ என நெகிழ்ச்சியுடன் பேசுகிறார் உதித்ரா.

– சுரேந்திரன் ராமமூர்த்தி
படங்கள்: வின்சென்ட் பால்

Related posts

மீனவர்கள் கைதை கண்டித்து கடலில் இறங்கி போராட்டம்

சிவகங்கை அருகே இரட்டை கொலை

புதிதாக நிறைவேற்றப்பட்ட குற்றவியல் சட்டங்கள் இன்று நாடு முழுவதும் அமலுக்கு வந்தது: சாலையோர வியாபாரி மீது பாய்ந்த முதல் வழக்கு