பாஸ்தா சாப்பிட ஒரு நல்ல ஸ்பாட்!

உள்ளங்கையில் உலகம் என சிலர் முன்பு அடிக்கடி கூறுவது உண்டு. அது இப்போது சாத்தியமாகி இருக்கிறது. இணையம் உலகத்தை ஒருங்கிணைத்திருக்கிறது. உலகின் வணிகம் இப்போது ஆல்போல் வளர்ந்திருக்கிறது. அதேபோல ஒரு நாட்டின் உணவு முறைகளும் மற்றொரு நாட்டில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கி இருக்கிறது. இந்திய உணவுகள் எப்படி உலகம் முழுவதும் ஆதிக்கம் செய்கிறதோ, அதேபோல மற்ற நாட்டு உணவுகளும் நம் நாட்டில் தனக்கான இடத்தினைப் பிடித்திருக்கின்றன. குறிப்பாக சென்னையில் 90களின் காலகட்டத்தில் சீன மற்றும் அரேபிய உணவுகள் தங்களின் முத்திரையைப் பதித்தன. தற்போது இத்தாலியன், ஐரோப்பா உள்ளிட்ட மற்ற நாட்டு உணவுகளும் மெல்ல மெல்ல தங்களுக்கான இடத்தை தக்க வைத்திருக்கின்றன. புதிதாக ஒரு டிஷ்ஷை ட்ரை செய்து பார்க்கலாமே என பல உணவுப்பிரியர்களின் விருப்பமே இதற்கு முக்கிய காரணம். ஃபுட்டிகள் தாங்கள் எதிர்ப்பார்த்ததைப் போல உணவு ருசியாக இருந்தால் தொடர்ந்து சாப்பிடத் தொடங்கிவிடுவார்கள்’’ என்று நம்மிடம் பேசத்துவங்கினர் ஆன்டோவும், ஹெலனும். சென்னை ஆவடியில் கோவர்த்தனகிரி அப்பல்லோ பார்மஸி அருகில் தி பாஸ்தா பாட் என்ற பெயரில் உணவகம் நடத்திவரும் இவர்களைச் சந்தித்தோம்.

“நாகர்கோவில்தான் நமக்கு சொந்த ஊர். சென்னையில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் சார்ந்த படிப்பை முடித்தேன். கல்லூரி படிக்கும்போதே, வெளிநாட்டில் ஒரு நல்ல செஃப்பாக பணியாற்ற வேண்டும் என்ற ஆசை. அதனால் சிங்கப்பூரில் பைவ் ஸ்டார் ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்தேன். கிட்டதட்ட 17 வருடங்களுக்கு மேல் சிங்கப்பூரில் செஃப். நான் கல்லூரி படிக்கும்போதே இத்தாலியன் ஸ்டைல் ஃபுட்களை தயார் செய்வதில் அவ்வளவு விருப்பம். ஹெலனுடன் பத்து ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதன் பிறகுதான் சிங்கப்பூரில் இருந்து வருடத்திற்கு இரண்டு முறை சென்னைக்கு வர ஆரம்பித்தேன். இடையில் ஹெலன் சென்னையிலேயே ஒரு உணவகத்தைத் தொடங்கலாம் எனக் கூறினார். ஒரு வருட தீவிர ஆலோசனைக்குப் பிறகு தி பாஸ்தா பாட் உணவகத்தைத் துவங்கினோம். என்னுடைய அனுபவமும், ஹெலனின் ஈடுபாடும் இன்றைக்கு எங்களை ஒரு உணவகத்தின் முதலாளிகளாக மாற்றி இருக்கிறது. இந்த ரெஸ்டாரண்ட் இருப்பது ரெசிடன்சியல் ஏரியா என்பதால், ஆரம்பித்த ஒரு வாரம் மிகவும் சிரமப்பட்டோம். ஒரு நாளைக்கு 10 லிருந்து 15 வாடிக்கையாளர்கள் மட்டுமே வந்தார்கள். அப்படி வந்தவர்கள் உணவின் ருசிபிடித்துப் போனதால் தங்களுடைய நண்பர்கள், அலுவலகத்தில் தங்களுடன் வேலை செய்பவர்கள் என அனைவரையும் கூட்டி வர ஆரம்பித்தார்கள்.

வருபவர்களில் பெரும்பாலானோர் ஆர்டர் செய்து சாப்பிடுவது ஒயிட் சாஸ் பாஸ்தாவைத்தான். இது எங்களின் சிக்னேச்சர் டிஷ் என்பதை விட, இதை நாங்கள் தயார் செய்து பரிமாறும் விதம்தான் இதற்கு முக்கிய காரணம். ஒரு உணவு என்றால் அதனை வேக வைப்பதற்கு தண்ணீரை பயன்படுத்துவார்கள். நாங்கள் பாஸ்தாவை வேக வைப்பதற்கு பாலைப் பயன்படுத்துவோம். அப்போதுதான் பாஸ்தாவில் இருக்கும் பச்சை வாசம் போகும். பாலை நேரடியாக கலந்து வேகவைக்காமல் ஏற்கனவே கொதிக்க வைத்த பாலை நன்கு ஆற விட்டு அதனை பாஸ்தாவோடு சேர்த்து வேக வைப்போம். 100 கிராம் பாஸ்தாவிற்கு ஒரு லிட்டர் வரை காய்ச்சி ஆற வைத்த பால் தேவைப்படும். ஆலிவ் ஆயிலை ஊற்றி தேவையான மசாலாக்களைப் போட்டு வறுத்துவிட்டு அதன் பிறகு பாஸ்தாவை அதில் போட்டு கிளறி விடுவோம். பாஸ்தாவை வேக வைப்பதற்காக பாலினை ஊற்றுவோம். பால் நன்கு பாஸ்தாவில் இறங்கி வெந்து ஒரு புதிய அரோமாவைக் கொடுக்கும். அந்த நேரத்தில் பாஸ்தா கெட்டியாக வெந்து வரும். இந்தத் தருணத்தில் அடுப்பினை நிறுத்தி விட்டு அதன் மீது சீஸைத் தூவுவோம். சீஸ் அந்த பாஸ்தாவின் சூட்டிலேயே உருகிவிடும். இதனை வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுவோம்.

அப்போது கஷ்டமர்ஸ் ஸ்போக்கைக் கொண்டு பாஸ்தாவை எடுக்கும்போது நூல் போல் வரும். அதைப் பார்க்கும்போதே வாடிக்கையாளர்களை பாஸ்தா சாப்பிடத் தூண்டும். பாஸ்தா, பால், சீஸ் என அனைத்துமே வெள்ளை நிறத்தில் இருப்பதால் இந்த டிஷ்சுக்கு ஒயிட் சீஸ் பாஸ்தா என்று பெயர் வைத்தேன்.உணவகத்தில் பாஸ்தா மட்டும் இல்லாமல் சாலட், பீட்சாவும் கொடுத்து வருகிறோம். சாலட் என்றால் நாம் எடுத்துக்கொள்ளும் பழங்கள் சார்ந்தது கிடையாது. காய்கறிகள், ப்ரோக்கிலின், எதேனும் ஒரு இறைச்சி சேர்த்து தயார் செய்து கொடுக்கப்படும் இன்ஸ்டண்ட் டிஷ் இது. காய்கறிகளின் சத்துகள், இறைச்சியில் இருக்கும் நல்ல கொழுப்பு ஆகியவை இருப்பதால் இது உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளையும் தரக்கூடும். முட்டையை ஆவியில் வேக வைத்து ஸ்லைசாக கட் செய்து சாலட்டோடு சேர்த்து கொடுக்கும் கார்டினி கேசர் சாலட், எண்ணெய் இல்லாமல் தந்தூரி செய்யப்பட்ட சிக்கனோடு முட்டையைச் சேர்த்து கொடுக்கும் தந்தூரி சிக்கன் எக் சாலட் ஆகியவற்றையும் கொடுத்து வருகிறோம். டேக்கோஸிலும் க்ரன்ச்சி டேக்கோ சாலட், க்ரன்ச்சி டேக்கோ சாலட் சிக்கன் கொடுக்கிறோம்’’ என தங்களின் தனித்துவமான டிஷ்கள் குறித்து பேசிய ஆன்டாவைத் தொடர்ந்து ஹெலன் பேசத்துவங்கினார்.“இத்தாலிய உணவுகளின் ருசியும் அதைப் பரிமாறும் விதமும் ஆச்சரியமாக இருக்கும். இத்தாலியின் பிரத்யேக உணவுகளில் ஒன்றுதான் பாஸ்தா.

முழுக்க முழுக்க இத்தாலியன் ஸ்டைலில் தயார் செய்த பாஸ்தாவை மட்டுமே எங்கள் உணவகத்தில் தயார் செய்து வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கிறோம். அந்த வகையில் பூண்டு கொண்டு தயார் செய்யப்படும் ஸ்பைசி கார்லிக் ஸ்பாஹெட்டி டாப்டு வித் டோமேட்டோ சாஸ் அண்ட் சீஸி பேக்டு சிக்கன், அல்டிமேட் பட்டர் சிக்கன் மேக்ன் சீஸ், ஸ்பைசி பேக் மேக்ரோனி, கோதுமை ப்ளேவர் பாஸ்தாவில் தயார் செய்த வோல் வீட் பென் பாஸ்தா அல்பேரேடோ இன் க்ரீமி ஒயிட் சாஸ் கொடுத்துவருகிறோம். எங்கள் உணவகத்திற்குத் தேவையான பாஸ்தா, ஆலிவ் ஆயில், நாசோஸ் என்று அனைத்தையும் நாங்கள் சென்னையில் உள்ள டிஸ்டிப்யூட்டர்களிடம் இருந்து வாங்குகிறோம். இவர்கள் அனைத்துப் பொருட்கள் மற்றும் பாஸ்தாவை இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்கிறார்கள். பீட்சாவிற்கு தேவையான மாவினை நாங்களே தயார் செய்கிறோம். அதேபோல் பீட்சாவிலும் மேர்கரிட்டா பீட்சா, வெஜ்ஜி பேரடைஸ் பீட்சா, கோல்டன் கார்ன் அண்ட் சீஸ் பீட்சா, பெப்பி பனீர் பீட்சா, ப்ளாக் பெப்பர் சிக்கன் பீட்சா, அவ்வாயின் சிக்கன் பீட்சாவும் கொடுத்து வருகிறோம். இதோடு கூடுதலாக சீஸ் ஸ்லைஸ், ஃப்ரைடு எக்கும் கொடுத்து வருகிறோம். உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைத்து டிஷ்சையும் சுவைத்துப் பார்க்க வேண்டும் என்பதற்காக காம்போவும் கொடுத்து வருகிறோம். காலை 8 மணிக்கு தொடங்கும் உணவகம் இரவு 10 மணி வரை செயல்படும். நாள் முழுவதும் ஆன்லைன் மூலமாகவும் டெலிவரி செய்கிறோம்’’ என்கிறார்.

குணா

Related posts

சிறுமியின் ஆபாச படத்தை காட்டி பணம் கேட்டு மிரட்டல்; கூலிப்படையை அனுப்பி பைனான்ஸ் அதிபர் கொலை: 8 பேர் கும்பலுக்கு வலை; தந்தையிடம் விசாரணை

கஞ்சா வழக்கில் யூடியூபர் சங்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

தமிழகத்தில் ஜிகா வைரஸ் தீவிர கண்காணிப்பு; மக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை: பொது சுகாதாரத்துறை தகவல்