குறைகளற்ற நிறைவான வாழ்வருளும் தேவி

அநவத்யாங்கீ என்கிற நாமத்தின் தொடர்ச்சி…

பகவத்கீதையில் பகவான் க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம் என்று சொல்கிறார். இது ஏன் முக்கியமான இடமெனில், இந்த க்ஷேத்ரம் என்று தேகத்தை குறிப்பிடுகிறார். க்ஷேத்ரக்ஞன் என்று எதைச் சொல்கிறார் எனில், இந்த தேகத்தை அதிஷ்டானமாகக் கொண்டுள்ள ஆத்மாவை குறிப்பிடுகிறார். இந்த ஆத்மாவானது க்ஷேத்ரக்ஞன். அந்த ஆத்மாவானது எங்கு இருக்கிறதெனில் க்ஷேத்ரம் என்கிற தேகத்தில் இருக்கிறது. இதைத்தான் சாஸ்திரத்தில் தேகம் தேகி என்று சொல்லுவோம். நம்முடைய சொத்சொரூபம் தேகம் என்கிற உடம்பு கிடையாது. தேகி என்கிற ஆத்மா. அதனால்தான் வேதாந்தத்தில் தேஹம் நாஹம், கோஹம் ஸோஹம் என்று வைத்திருக்கிறது. முதலில் தேஹம் நாஹம் தேகம் நான் இல்லை. அதற்கு அடுத்து கோஹம் who am I (நான் யார்) என்று கேட்கிறோம். அதற்கும் அடுத்து ஸோஹம் – நானே அந்த வஸ்து என்கிற உயர்ந்த நிலையை தத்வ மஸி, அஹம் பிரம்மாஸ்மி என்கிற உயர்ந்த நிலையை தெரிந்து கொள்கிறோம். அப்போது தேஹம் நாஹம் கோஹம் ஸோஹம் என்று சொல்கிறபடி, இந்த நம்முடைய சொரூபம் தேகம் கிடையாது. நம்முடைய சொரூபம் என்னவெனில் தேகத்தில் உள்ள ஆத்மாதான் நம்முடைய ஆத்மாதான் சொரூபம். அந்த தேகி என்கிற ஆத்மா யார் எனில், எந்த அம்பிகையை நாம் சொல்லிக் கொண்டு வருகிறோமோ அந்த லலிதா திரிபுரசுந்தரிதான் அந்த ஆத்ம வஸ்து. இந்த லலிதாதான் அந்த தேகி என்கிற ஆத்ம வஸ்து. இப்போது இந்த நாமத்திற்கு நாம் கொண்டு வரும்போது, தேகத்தை யார் இடமாகக் கொண்டிருக்கிறானோ அவனுக்கு ஆத்மா என்று பெயர், அதேபோல யார் அங்கங்களை உடையவனோ அவனுக்கு அங்கீ என்று பெயர். இப்போது இந்த நாமத்தில் அநவத்ய அங்கீ என்று அம்பிகையை குறிப்பிடுவதால், அம்பிகை அங்கீயாக இருக்கிறாள்.

அப்போது அவளுக்குரிய அங்கங்கள் எது என்று பார்த்தால் இந்த மொத்த பிரபஞ்சமும், அவளுடைய அங்கங்கள். இந்த மொத்த பிரபஞ்சமும் நம்முடைய சரீரம் உட்பட, நம்முடைய மனம் உட்பட சகல சேதனம் அசேதன வஸ்துக்கள் எல்லாமே அம்பாளுக்கு அங்கங்களாக இருக்கிறது. இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய விஷயமானது வைஷ்ணவ வேதாந்தமான விசிஷ்டாத்வைத தத்துவத்தோடு நெருங்கியிருக்கும். இந்த மொத்த பிரபஞ்சமும் பகவானுக்கு சரீரமாக இருக்கிறது. பகவான் சரீரியாக இருக்கிறான். இப்போது இந்த இடத்திலேயும் அம்பிகை அங்கீயாக இருப்பதால் அவளுக்கு அங்கங்கள் எதுவென்று பார்த்தால், இந்த மொத்த பிரபஞ்சமும் அவளுக்கு அங்கமாக இருக்கிறது. இந்த மொத்த பிரபஞ்சம் என்று நாம் சொல்லும்போது அதில் சேதன, அசேதன, அறிவுள்ள, அறிவற்ற பொருட்கள் எல்லாமே அதில் அடங்கி விடுகின்றது. அதற்கடுத்து நம்முடைய சரீரத்தையும் மனதையும் கூட அவள் அங்கங்களாகத்தான் கொண்டிருக்கிறாள். இப்போது நாம் சொல்லக்கூடியது விஸ்வரூபம். பிரபஞ்சத்தை அங்கங்களாக கொண்டிருக்கும்போது அது விஸ்வரூபம். நம்முடைய தேகத்தையும், மனதையும் அங்கங்களாக கொண்டிருக்கும்போது அது சர்வஅந்தர்யாமித்துவம். பிரபஞ்சத்தையே அங்கமாக கொண்டிருக்கும்போது அம்பிகை சர்வ வியாபகமாக இருக்கிறாள். இந்த தேகத்திற்குள் இருக்கும்போது சர்வ அந்தர்யாமியாக இருக்கிறாள். அப்போது சர்வ வியாபகமாகவும், சர்வ அந்தர்யாமியாகவும் எல்லாவற்றையும் நிறைத்துக் கொண்டிருப்பவள் அம்பிகை. இந்த பிரபஞ்சத்தில் ஆரம்பித்து சரீரம் மனம் வரைக்கும் தன்னுடைய அங்கங்களாக கொண்டிருப்பதால் அவள் அங்கீ. சரி, இதை அவள் பிரபஞ்சத்தை தன்னுடைய சரீரமாக கொண்டிருக்கிறாள்.

அதற்குப்பிறகு நம்முடைய இந்த உடம்பையும் மனதையும் இருப்பிடமாகக் கொண்டு ஆத்ம சொரூபமாக இருக்கிறாள். உள்ளூம் முழுமையாக நிறைந்திருக்கிறாள். வெளியேயும் முழுமையாக நிறைந்திருக்கிறாள். வெளியேயும் முழுமையாக நிறைந்திருக்கும்போது சர்வ வியாபகமாக இருக்கிறாள். உள்ளே இருக்கும்போது சர்வ அந்தர்யாமித்துவமாக இருக்கிறாள். இதைத்தான் வேதத்தில் நாராயண சூக்தத்தில் ‘‘அந்தர் பஹித்ஸ தத் சர்வம் வியாப்ய நாராயண ஸ்திதஹ’’ என்றொரு வாக்கியம் வருகிறது. வெளியேயும் உள்ளேயும் நிறைந்திருக்கக் கூடிய நாராயணன் என்று பார்க்கிறோம். இப்படி உள்ளேயும் வெளியேயும் நிறைந்திருக்கக் கூடிய தன்மையை யார் அனுபவித்தது என்று பார்த்தோமானால், மத் பாகவதத்தில் துருவன் இந்த விஷயத்தை அனுபவித்தான். துருவன் அங்கு தவம் செய்யும்போது, அதாவது நாரதர் உபதேசம் செய்த ரூபத்தை தனக்குள் தியானம் செய்கிறார். வெளியே பகவான் காட்சி கொடுக்கும்போது பார்த்தால் அதே ரூபம் வெளியேயும் தெரிகிறது. அப்போது மேலே சொன்ன வேத வாக்கியமே நமக்கு பிரமாணமாக இருக்கிறது. இப்போதுதான் நாம் கொஞ்சம் இந்த அந்வத்யம் என்கிற வார்த்தையை கூர்ந்து கவனிக்க வேண்டும். எப்போது இதை எல்லாவற்றையும் அங்கங்களாகக் கொண்டு, அம்பிகை அங்கீயாக இருக்கிறாளோ அப்போது நாம் பார்க்கக் கூடிய இது எல்லாமே என்ன ஆகிவிடுகிறதெனில் எதிலேயுமே நம்மால் ஒரு குறை கூட கண்டுபிடிக்க முடியாது. எல்லாமே குறைகளற்ற ஒரு நிலைக்குப் போய் விடுகிறது. ஆக, சாதகன் ருதஹம் சத்யம் என்கிற அனுபவம் தாண்டியதில் அவனால் எதையுமே ஒரு குறையாக பார்க்க முடியவில்லை. ஏனெனில், எல்லாமே அவளுக்கு அங்கமாக இருப்பதால் எதில் போய் நாம் என்ன குறை சொல்ல முடியும்.

இந்த குறைவற்ற நிலையை அவன் தரிசிக்கிறான். எந்த சரீரமும் மனதும் பந்தப்படுத்துகிறது என்று நினைத்தோமோ அந்த சரீரமும் மனதும் கூட நமக்கு குறையில்லாத ஒரு விஷயமாகப் போய்விட்டது. எந்த சரீரமும் மனதும் நம்மை பந்தப்படுத்துகிறது என்று நினைத்தோமோ அதுவே நம்மை விடுவிக்கக் கூடிய சாதனமாக மாறிவிட்டிருக்கிறது. எந்தப் பிரபஞ்சமானது நம்மை சம்சாரத்திற்குள் இழுக்கிறது என்று நினைத்தோமோ, அந்தப் பிரபஞ்சமே இந்த சம்சாரத்திலிருந்து விடுவிக்கக்கூடிய சாதனமாக மாறுகிறது. ஏனெனில், எல்லாமே அவளுக்கு அங்கமாகி விட்டது. இவை எல்லாவற்றையும் அங்கமாகக் கொண்டு அவள் இருப்பதால் எந்தக் குறையும் பார்க்க முடியவில்லை. இந்த இடத்தில் பெரிய transformation நடக்கிறது. இதுவரைக்கும் குறைகளாக பார்த்த விஷயங்களெல்லாம் மாறி எல்லாமே நிறைகளாக தெரிகின்றது. அனைத்தும் பூர்ணம். எல்லாமே அநவத்யாங்கீ ஆக இருக்கிறது. இந்த நிலை வரும்போது என்ன ஆகிறதெனில், மீண்டும் பாகவதத்திலிருந்தே ஒரு உதாரணம் பார்க்கலாம். நரசிம்ம அவதாரம் நிகழ்ந்து முடிந்ததற்கு பிறகு, பிரஹலாதன் என்ன நிலையில் இருந்தார் எனில் சர்வத்ர சம திருஷ்டி என்கிற நிலைக்கு வந்து விட்டார். சர்வத்ர சம சித்தம். சர்வத்ர சம பாவம். நரசிம்மராக அவதாரம் எடுக்கும்போது சர்வத்ர அவந்தான் இருக்கிறான் என்கிற தரிசனம் கிட்டிவிடுகின்றது. குறையொன்றுமில்லை கோவிந்தா என்கிற நிலைதான் இது. அப்படியொரு மாற்றம் சாதகனுக்குள் நிகழ்ந்து விடுகிறது. எந்த குறைகளுமற்ற நிலை சித்திக்கின்றது. அதுவே, இங்கு இந்த நாமத்தினுடைய அத்யாத்மமான விஷயமாகவும் இருக்கிறது.இந்த துருவ சரித்திரத்தை சொல்லும்போது வேறொரு விஷயமும் நினைவுக்கு வருகிறது.

அது என்னவெனில், புட்டபர்த்தி பாபா தரிசனம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு மாணவர் படிப்பதற்கு வந்திருக்கிறார். ஒருநாள் அந்த மாணவர் துருவ சரித்திரம் படிக்கிறார். துருவ சரித்திரத்தை பாராயணமாகச் செய்கிறார். அடுத்தநாள், காலையில் சுவாமியை தரிசனம் செய்யப் போகிறார். இந்த மாணவருக்கு அந்த துருவ சரித்திரத்தை பாராயணம் செய்து தாக்கம் இருக்கிறதல்லவா… அது அப்படியே மனதிற்குள் இருக்கிறது. துருவனுக்கு ஒரு அனுபவம் கிடைத்ததல்லவா… அந்தர் பகித்ஸ தத் சர்வம்… என்று அல்லவா கிடைத்தது, அதை நாம் நேற்று படித்தோமோ. இப்போ சுவாமி நம் கண்ணெதிரே நிற்கிறாரே அந்த அனுபவத்தில் கொஞ்சமாவது நமக்கு கிடைக்குமா என்று நினைத்துக் கொண்டே அந்த தரிசனத்தில் உட்கார்ந்திருக்கிறார். இப்போது வெளியே பார்க்கிற சுவாமியை நாம் பார்க்கப்போவது இல்லை. சகுண ரூபத்தில் ஸ்தூலமாக வரக்கூடிய சுவாமியை பார்க்க மாட்டேன். எனவே, இந்த மாணவரும் பாபா எப்படி பின்னால் கைகளை கட்டிக்கொண்டு நின்றாரே அப்படியே தியானிக்க உள்ளுக்குள் அந்த தியானம் சித்தித்து விட்டது. உள்ளே மனம் அப்படியே அடங்கி விட்டது. சுத்தமாக அந்த ரூபத்தில் மனம் லயமாகி நின்று விட்டது. இது எவ்வளவு நேரம் நடந்தது என்று தெரியவில்லை. பத்து நிமிடங்களா… இருபது நிமிடங்களா என்று தெரியவில்லை.

கொஞ்ச நேரம் கழித்து இவருக்கு தேகப் பிரக்ஞை வருகின்றது. அவருக்கு கொஞ்சம் சப்தம் கேட்கிறது. இன்னொரு மாணவர் இந்த மாணவரின் தொடையை தட்டுகிறார், யாரோ கூப்பிடுகிறார்களே என்று விழித்துப் பார்த்தால், இவர் எந்த ரூபத்தில் தியானம் பண்ணினாரோ அதேமாதிரி சுவாமி வெளியே நின்று கொண்டிருக்கிறார். எப்படி துருவ சரித்திரத்தில் அவனுக்கு அனுபவமாயிற்றோ அதுபோலவே எனக்கு ஏற்பட்டிருக்கிறதே என்று நினைத்துக் கொண்டிருந்தான். அதோடு அதுமட்டுமல்ல…. இதற்குப் பிறகுதான், பாபா மெதுவாக அந்த மாணவரின் காதருகே வந்து, ‘‘அந்தர் பஹித்ஸ தத் சர்வம் வியாப்ய நாராயண ஸ்திதஹ’’ என்று சொல்லிவிட்டு சட்டென்று அறைக்குள் போய் விட்டார்.அநவத்யாங்கீ என்றால் குறைகளே இல்லாத அங்கங்களை உடையவள். எனவே, இந்த நாமத்திற்கான கோயிலாக கருவேலி என்கிற தலத்தில் சர்வாங்க சுந்தரி என்கிற திருநாமத்தோடு அம்பாள் அழகுற அருள்பாலிக்கும் ஆலயத்தைச் சொல்லலாம். இந்த நாமமே அம்பிகையின் சர்வ அங்கமும் எந்த குறைகளுமில்லாமல் சுந்தரியாக அழகுற திகழ்வதையே குறிக்கின்றது. கிழக்கு நோக்கி நின்றவாறு நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். ஈசனின் திருப்பெயர் சர்குணேஸ்வரர் ஆவார். லிங்க வடிவில் அருள்கிறார். கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் வழியில் உள்ள கூந்தலூர் எனும் சிற்றூரை அடைந்தால் அங்கிருந்து வெகு அருகேயே கருவேலி அமைந்துள்ளது.
(சுழலும்)

ரம்யா வாசுதேவன்
கிருஷ்ணா

 

Related posts

ரிஷப ராசிக்காரர்களுக்கு வீடு யோகம் தரும் அன்னை

ஜாதகப்படி கடன் இல்லாத வாழ்க்கை வாழ முடியுமா?

கிறிஸ்தவம் காட்டும் பாதை