Wednesday, August 7, 2024
Home » A Different Language

A Different Language

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் தோழிஎல்லாருக்கும் ஒரு தனி உலகம் உண்டு. எழுத்தாளர்கள், நடிகர்கள், கவிஞர்கள், புகைப்பட நிருபர்கள், ஆசிரியர்கள்…. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இவர்களும் அப்படித்தான். இவர்கள் எழுத மாட்டார்கள், கவிதை சொல்ல மாட்டார்கள். ஆனால் இவர்கள் கைகளால் மற்றும் செய்கையாலேயே தங்களின் உணர்வுகளை அவ்வளவு அழகாக வெளிப்படுத்துவார்கள். உணர்வுகளை வெளிப்படுத்த மொழி அவசியம் இல்லை. ஆனால் இவர்களின் மொழியை படம் பிடித்த சென்னையை சேர்ந்த லதா கிருஷ்ணாவுக்கு கேன்ஸ் கார்ப்பரேட் மீடியா மற்றும் தொலைக்காட்சி விருது கிடைத்துள்ளது.லதா கிருஷ்ணா, கிருஷ்ணசாமி அசோசி யேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். பரத நாட்டிய கலைஞர் மற்றும் ஆவணப்படம் இயக்குநர். சென்னையில் உள்ள காதுகேளாதோர் மற்றும் வாய்பேசமுடியாதோர் பள்ளியை பற்றி இவர் இயக்கிய குறும்படத்திற்குத்தான் தற்போது கேன்ஸ் விருது கிடைத்துள்ளது.   கேன்ஸ் கார்ப்பரேட் மீடியா மற்றும் தொலைக்காட்சி வருடா வருடம் உலகின் சிறந்த ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்களுக்கு விருது வழங்கி வருகிறது. இது அவர்களின் 10வது வருடம். இதில் பல வகை விருதுகள் உள்ளது. அதில் என்னுடைய ‘A Different Language’ குறும்படத்திற்கு சில்வர் டால்பின் விருது கிடைத்துள்ளது’’ என்று பேசத் துவங்கினார் லதா கிருஷ்ணா.‘‘பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை தான். ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உயிரியல் குறித்து பட்டப்படிப்பு படிச்சேன். அதன் பிறகு நேரடியாக எங்களின் நிறுவனத்தில் உதவி இயக்குனரா வேலைக்கு சேர்ந்தேன். கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் 1963ம் ஆண்டு அப்பாவால் துவங்கப்பட்ட தயாரிப்பு நிறுவனம். எங்க நிறுவனம் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை தயாரித்துள்ளது. அப்பாவின் திறமையை பாராட்டிய அமெரிக்க சர்வதேச திரைப்படம் மற்றும் வீடியோ நிகழ்ச்சியில் லைஃப்டைம் அசீவ்மென்ட் விருது கொடுத்து கவுரவித்துள்ளது. 2009ம் ஆண்டு அப்பாக்கு பத்மஸ்ரீ விருதும் கிடைச்சது. இப்படி பல வெற்றிகளை பார்த்த நிறுவனம் என்பதால் விஸ்காம் படிச்ச மாணவர்கள் பலர் இங்கு பயிற்சி எடுக்க வருவாங்க. மத்தவங்களுக்கு பயிற்சிக்கூடமா இருக்கும் எங்க நிறுவனம் எனக்குமே பயிற்சிக் கூடமா மாறியது. அதனால கல்லூரி படிப்பை முடிச்ச கையோடு எங்க நிறுவனத்தில் வேலைக்காக சேர்ந்தேன். ேவலை ஒரு பக்கம், பயிற்சி மறுபக்கம்ன்னு என காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறந்தேன்’’ என்றவர் அவரின் தந்தையிடமே துணை இயக்குநராக பணியாற்ற துவங்கியுள்ளார். ‘‘அப்பா பெரிய கடல். தூர்தர்ஷனில் உள்ள ஸ்டுடியோவை அப்பா தான் அமைத்துக் கொடுத்தார். அதனால் அவருடன் இருந்து கொண்டே நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். நான் படிச்சது உயிரியல் என்றாலும் கலை மேல் எனக்கு எப்போதுமே தனி ஆர்வம் உண்டு. பரதநாட்டியம் ஏழு வயசில் இருந்து பயின்று வருகிறேன். பல மேடைகளில் நடன நிகழ்ச்சி செய்து இருக்கேன். 15 வருஷமா என் நடன நிகழ்ச்சிக்கு நான் தான் கொரியோகிராபி செய்து வருகிறேன். சின்ன வயசில் இருந்தே ஷூட்டிங் பார்க்க அப்பாவுடன் போயிடுவேன். அப்பவே யார் கேட்டாலும் நான் இயக்குநராகதான் ஆகப்போறேன்னு சொல்வேன். அப்பா வீட்டிலும் இது பற்றி அதிகம் பேசுவார். அதனாலேயே எனக்கும் இதன் மேல் ஈடுபாடு ஏற்பட ஆரம்பிச்சது’’ என்றவர் மாஸ்கம்யூனிகேஷன் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.‘‘வேலைக்கு சேர்ந்தவுடன் அப்பா என்னை முதலில் துணை இயக்குநரா தான் பயிற்சி எடுக்க சொன்னார். மூன்று மாசம் நான் முழுமையாக இந்த துறையை பற்றி தெரிந்து கொண்டேன். அதன் பிறகு எனக்கு தனியாக பிராஜக்ட் கொடுத்து செய்ய சொன்னார். என்னுடைய முதல் பிராஜக்ட் சுரங்க தொழிற்சாலை பற்றியது. நேஷனல் மினரல் டெவலெப்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்காக ஒரு ஆவணப்படம். என்னுடன் வந்த கேமராமேன் ரொம்ப சீனியர். செம்மீன் திரைப்படத்தில் அவருக்கு விருதும் கிடைச்சிருக்கு. நான் சின்ன பொண்ணு. அவரோ சீனியர். நான் தான் அவருக்கு எப்படி படம் பிடிக்கணும்ன்னு சொல்லணும். முதலில் ரொம்பவே தர்மசங்கடமா இருந்தது. நான் சொன்னா கேட்பாரான்னு தயக்கம் ஒரு பக்கம். அவர் என் தயக்கத்தை எல்லாம் ஒரே நொடியில் நீக்கினார். வயசு வித்தியாசம் பார்க்காமல், எந்தவித ஈகோ இல்லாமல், நான் சொல்வதை போல் படம் பிடித்தார். சில சமயம் நான் சொல்வது சரியாக இல்லை என்றால், அதை எனக்கு எடுத்து சொல்லி புரிய வைத்தார். அவருடன் வேலைப் பார்த்தது மட்டும் இல்லாமல் அவரின் அனுபவத்தையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைச்சது. அதன் பிறகு தெலுங்கு தொலைக்காட்சிக்காக 35 எபிசோட் நடன நிகழ்ச்சியை இயக்கினேன். அது எனக்கு ஒரு நல்ல ரெகக்னிஷனை கொடுத்தது’’ என்றவர் ஆவணப்படம் குறித்து விவரித்தார். ‘‘ஆவணப்படத்தை பொறுத்தவரை இதற்கு நாம் எந்த கதையுமே எழுத முடியாது. சினிமா படம் பிடிப்பது போல இப்படித்தான் படம் பிடிக்கணும்ன்னு வரைமுறை படுத்த முடியாது. அங்கு உள்ள நிலையை பொருத்து தான் படம் பிடிக்கணும். முதலில் அவங்கள நாம் புரிஞ்சுக்கணும். அதற்கு அந்த இடத்தை முன்பே சென்று ஸ்டடி செய்யணும். நிறைய கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பெண்களின் அமைப்பு என பல ஆவணப்படங்களை இயக்கி இருக்கேன். ஆனா இந்த குழந்தைகளை படம் பிடிக்கும் போது எனக்குள் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. இவர்கள் மாற்றுத்திறனாளிகள் தான். பேச முடியாது. எந்த ஒரு சத்தத்தையும் கேட்க முடியாது. பள்ளிக்கு செல்லும் போது, அவர்கள் பாவமாக சோகமா தான் இருப்பாங்கன்னு நினைச்சேன். ஆனா நான் அங்கு பார்த்த காட்சியே வேறு. ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் அவ்வளவு சிரிப்பு மற்றும் சந்தோஷத்தை பார்க்க முடிந்தது. அவர்களின் உணர்வுகளை சைகையாக வெளிப்படுத்திய போது நான் அவர்களாகவே மாறிப்போனேன்.  நாம கரும்பலகையில் எழுதப்படும் எழுத்துக்களை படித்து அப்படியே மனதில் பதிய வைக்கிறோம். அவங்க உணர்வுகளை நம்முடைய மனதில் பதிய வைக்கிறாங்க. சின்ன விஷயம் தான் காலையில் என்ன சாப்பிட்டன்னு ஆசிரியர் கேட்கும் கேள்விக்கு முக பாவனை மற்றும் சைகையில் அவ்வளவு அழகா எக்ஸ்பிரஸ் செய்றாங்க. பேச தெரிந்த நம்மால் கூட அவர்களை போல் விளக்கம் சொல்ல முடியாது. ஒவ்வொரு குழந்தையின் தன்னம்பிக்கையை பார்த்து நான் பிரமித்து தான் போனேன்.படம் இயக்கும் எனக்கே ஒரு நிமிடம் கேமரா முன் வர தயக்கமா தான் இருக்கும். ஆனா இந்த குழந்தைகள் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் அவ்வளவு தைரியமா கேமரா முன் வலம் வந்தாங்க’’ என்றவர் அந்த பள்ளியில் படித்து தற்போது தொழில்முனைவோராக இருக்கும் ஒரு பெண்ணை பற்றிதான் தன் குறும்படத்தில் படம் பிடித்துள்ளார்.‘‘முதலில் அந்த பள்ளியை பற்றித்தான் படம் பிடிக்க நினைச்சேன். ஒரு நாள் முழுக்க அந்த குழந்தைகளுடன் கழித்தேன். பள்ளியின் முதல்வர் லதா ராஜேந்திரன் அவர்கள் தான் அந்த பள்ளியில் படித்த மாணவியை பற்றி கூறினார். அந்த பெண்ணுடைய வாழ்க்கை என்னை ரொம்பவே பாதிச்சது.  அவளின் வாழ்க்கையை படம் பிடிக்க முடிவு செய்தேன். வாய் பேச முடியாது மற்றும் காதும் கேட்காது என்பதால், அவளின் குடும்பம் அவளை நிராகரித்துவிட்டது. ஒன்றரை வயதே நிரம்பிய அவளை ரயில் நிலையத்தில் தனியே விட்டு சென்று விட்டனர். தனியாக சுற்றித்திரிந்த அந்த குழந்தையை போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் எங்க பள்ளியில் கொண்டு வந்து விட்டார். பேச தெரியாது. தான் யார் என்றும் சொல்ல ெதரியல. எங்கள் அரவணைப்பில் தான் வளர்ந்தா. தன்னுடைய ஊனத்தை உதாசினப்படுத்தி வாழ்க்கை வாழ்வதற்கான பல திறமைகளை வளர்த்துக் கொண்டாள். இப்போது சிறிய அளவில் தொழில் துவங்கி தனக்கான வாழ்க்கை ஒன்றை அமைத்து வாழ்ந்து வருகிறாள். அவளின் வாழ்க்கை தான், ‘A Different Language’ குறும்படம்’’’ என்றவர் ஆவணப்படம் என்றாலும் மக்களுக்கு புரியும் மொழியில் கொடுக்க வேண்டும் என்றார்.‘‘சினிமா படங்களை தான் மக்கள் விரும்பி பார்ப்பாங்கன்னு சொல்லிட முடியாது. அவர்களுக்கு புரியும் ெமாழியில் மனசை தொடக்கூடிய முறையில் குறும்படமோ அல்லது ஆவணப்படமோ இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வாங்க. என்னுடைய குறும்படம் வெற்றிப்பெற இது தான் காரணம். வருடாவருடம் நடைபெறும் கேன்ஸ் விருதுக்கான விண்ணப்பம் இணையத்தில் வெளியாகும். யார் வேண்டும் என்றாலும் விண்ணப்பிக்கலாம். விதிமுறைகளும் கிடையாது. சில படங்கள் ஒரு மணி நேரம் இருக்கும். சிலது 20 முதல் 15 நிமிடம் தான் இருக்கும். அந்த 15 நிமிடங்களில் நாம் சொல்லவருவதை புரியும் படி சொல்லணும்.இந்தாண்டு சர்வதேச அளவில் 2000த்துக்கும் மேற்பட்டவர்கள் அவங்க திரைப்படங்களை வெளியிட்டு இருந்தாங்க. அதில் எனக்கு விருது கிடைச்சு இருக்குன்னு நினைக்கும் போது ரொம்பவே பெருமையா இருக்கு. இப்போது இணைப்புப்பெட்ட தொழிற்சாலை (I.C.F) குறித்து ஆவணப்படம் ஒன்றை தயாரித்து இருக்கேன். குறும்படம் இயக்குவது, ஒரு வித்தியாசமான வாழ்க்கை. ஒரே நேரத்தில் பலதரப்பட்ட மக்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைமுறைகளை பார்க்கும் போது, ரொம்பவே உற்சாகமா இருக்கும். இந்த உணர்வு தான் எனக்குள் இருக்கும் கல்லூரி மாணவியை இன்னும் உயிரோட்டத்துடன் வைத்துள்ளது’’ என்றார் புன்னகைத்தபடி லதா கிருஷ்ணா.ப்ரியா

You may also like

Leave a Comment

three × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi