Sunday, September 8, 2024
Home » கண்ணை மூடித் தொடங்கிய தொழில் என்னுடையது!

கண்ணை மூடித் தொடங்கிய தொழில் என்னுடையது!

by Nithya

நன்றி குங்குமம் தோழி

கண்ணை மூடித் தொடங்கிய தொழில் என்னுடையது!– ஆஷா

வீடியோ, எடிட்டிங், அப்லோட், கமென்ஸுக்கு ரிப்ளை என சமூகவலைத்தளத்தில் பிஸியாகவே இருக்கிறார் ஆஷா. ‘‘எனக்கு யு-டியூப்பில் 5.50 லட்சம் பாலோவர்ஸ், இன்ஸ்டாவில் 1.50 லட்சம் பாலோவர்ஸ் இருக்கிறார்கள். சோஷியல் மீடியாவை மேனேஜ் செய்வதே எனக்கு மிகப்பெரிய வேலையாக இருக்கும்’’ என்றவரிடம், குக்கீஸ் தயாரிப்பிலும் இறங்கி தொழிலதிபராய் ஜெயித்த கதையை கேட்டபோது…?

‘‘என்னோட குக்கீஸ் தயாரிப்பு ஒரு தனி டிராக். இதில் நான் இறங்க என் மகனே முதல் காரணம். எனது மகன் சின்னவனுக்கு பிஸ்கெட் என்றால் உயிர். தினமும் பிஸ்கெட் சாப்பிட்டதில் மலச்சிக்கல் பிரச்னை ஏற்பட, மருத்துவர் குழந்தைக்கு பிஸ்கெட் கொடுக்க வேண்டாம் என எச்சரித்தார். இந்த நிலையில் விரைவில் ஜீரணம் ஆகும், ஹெல்த்தியான பிஸ்கெட் தயாரிப்பை வீட்டில் செய்வது குறித்து யோசிக்க ஆரம்பித்தேன்.

தொடக்கத்தில் கோதுமை மாவு, நாட்டுச் சர்க்கரை, வெண்ணெய் இணைத்து வீட்டில் நானே தயாரித்த பிஸ்கெட்டை விரும்பி உண்ணத் தொடங்கினான். இதற்கான ஐடியா யு டியூப் தளத்தில் இருந்தே எனக்குக் கிடைத்தது என்றாலும், பேக்கிங் வகுப்பு ஒன்றிலும் பங்கேற்றதில் அங்கு மைதா, ஒயிட் ஷுகர், டால்டா போன்றவற்றை பயன்படுத்துவதை நேரில் பார்க்க நேர்ந்தது. மைதாவும், வெள்ளைச் சர்க்க ரையும் தவிர்த்து, இயற்கை பொருட்களை இணைத்து, சரியான பதத்தைக் கண்டுபிடிக்க ஒரு மாத காலம் எனக்கு எடுத்தது. கரெக்டான பதம்(Consistency) கொண்டு வருவதுதான் இதில் முக்கியம். அதேபோல், பதப்படுத்திய பாக்கெட் பொருட்களில் (Preservative) கெமிக்கல்ஸ், கலரிங் பவுடர் எதையும் நான் சேர்ப்பதில்லை. தேவையான மாவை வீட்டிலேயே அரைத்து, முட்டை சேர்க்காமல், நாட்டுச் சர்க்கரை, வெண்ணெய், ஏலக்காய், நட்ஸ் இணைத்து முழுக்க முழுக்க கை பக்குவத்தில் குக்கீஸ் தயாரிக்கிறேன்.

‘என் மகனுக்காக நானே தயாரித்த குக்கீஸ்’ என யு டியூப் தளத்தில் தொடர்ந்து பதிவேற்றியதில், என்னுடைய பாலோவர்ஸ் பலரும், ‘என் குழந்தைக்கும் தயாரித்துக் கொடுங்கள்’ என கேட்கத் தொடங்கினர். இது சாத்தியமில்லாத விஷயம் என ஆரம்பத்தில் தவிர்த்த போதும் தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு மெயில் வந்தது. ‘நான் 7 மாத கர்ப்பிணிப் பெண். உணவு ஒவ்வாமை இருப்பதால், ஸ்டோர் செய்த பிஸ்கெட்களை சாப்பிட பிடிக்கவில்லை. எனக்காக ‘ஹோம் மேட் குக்கீஸ்’ ஃப்ரெஷ்ஷாக செய்து அனுப்ப முடியுமா?’ எனக் கேட்டிருந்தார்.

அவருக்காக இரண்டு விதமான குக்கீஸ்களை தயாரித்து உடனே அன்பளிப்பு செய்தேன். அதைப் பெற்றுக்கொண்டவர், என்ன நினைத்தாரோ தெரியவில்லை, ‘இந்த குக்கீஸ் தயாரிப்பு தொழிலில் நீங்க மிகப்பெரிய ஆளாக வருவீர்கள்’ என வாழ்த்தினார். அப்படி அவர் வாழ்த்தும் போது, எனக்கு அந்த மாதிரியான சிந்தனையே இல்லை. இது மிகப்பெரிய வேலை. ஒவ்வொரு குக்கீஸையும் நான் எனது கைகளில் உருட்டியே செய்கிறேன். அப்படியெனில் எத்தனை குக்கீஸ்களை தொழில் நோக்கில் என்னால் செய்துவிட முடியும் என்கிற கேள்வி எனக்கு இருந்தது. கூடவே குழந்தைகளை வைத்துக்கொண்டு தொழிலில் இறங்குவது சாத்தியமில்லாத விஷயம் எனவும் தோன்றியது.

அதேநேரம் எனக்கான நிலையான வருமானத்தை உருவாக்க வேண்டும் என்கிற சிந்தனையும் உள்ளுக்குள் இருந்தது. ஏனெனில் சோஷியல் மீடியா வருமானம் நிலையானது இல்லை. என் குடும்பத்திலும் பெரிதாக தொழிலதிபர்கள் யாரும் கிடையாது. இந்த நிலையில், டயபட்டிக் பிரச்னை இருக்கிற என் அம்மாவுக்காக ஷுகர் ஃப்ரீ குக்கீஸ் செய்து தர முடியுமா என்றெல்லாம் பாலோவர்ஸ் தொடர்ந்து என்னை கேட்கத் தொடங்கினர்.

ஹோம் மேட் குக்கீஸுக்காக தொடரும் என்கொயரிகளைப் பார்த்து, சரி செய்துதான் பார்க்கலாமே என கண்ணை மூடித் தொடங்கிய தொழில் என்னுடையது. முதல் நாளிலேயே விற்பனை 35 ஆயிரத்தைத் தொட்டு செம ஹிட் அடிக்க… தொடங்கிய கொஞ்ச நாட்களிலே, குக்கீஸ் தொழில் நான்காவது கியரில் வேகம் எடுத்தது. ரிபிட்டெட் கஷ்டமர்கள் அதிகமாயினர். பலரும் ரெகுலர் கஷ்டமர்களாக மாறினர். வருகிற ஆர்டர்கள் பெரும்பாலும் பல்க் ஆர்டர்களாகவே வந்தது.

இன்றைக்கு என்ன குக்கீஸ் தயார் செய்யப் போகிறேன் என் பதை காலை பத்து மணிக்கு வாட்ஸ்ஆப் குரூப்பில் போட்டால் அடுத்த நிமிடமே, ஆர்டர்கள் வர ஆரம்பிக்கும். அவற்றை சேகரித்து மறுநாளே ஃப்ரஷ்ஷாகத் தயாரித்து, பக்காவாக பேக் செய்து, கொரியர் செய்துவிடுவேன். குக்கீஸ் மேக்கிங், பேக்கிங், கொரியர் டிராக் லிங்கை அனுப்புவது என தனி ஆளாக எல்லாவற்றையும் நானே சமாளிப்பதுடன், குக்கீஸ் மேக்கிங்காகவே ஒரு தளத்தை தனியாக வாடகைக்கும் எடுத்திருக்கிறேன். நான் தயாரிக்கும் குக்கீஸ் மேக்கிங் வீடியோவை தொடர்ந்து என் வாடிக்கையாளர்களுக்காக, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிக் கொண்டே இருந்தேன்.

என்னுடைய வீட் குக்கீஸ், ராகி குக்கீஸ், தினை குக்கீஸ், கவுனி அரிசி மாவு குக்கீஸ், காஜு ஏலச்சி குக்கீஸ், ஓட்ஸ் குக்கீஸ், ஓமம் மிக்ஸட் குக்கீஸ், மல்டி மில்லட் குக்கீஸ், பிநட்ஸ் குக்கீஸ், கோக்கநட் குக்கீஸ், 5 விதமான நட்ஸ் இணைந்த, அதாவது, பாதாம், முந்திரி, பிஸ்தா, சூரிய காந்தி விதை, பூசணி விதை இணைந்த ராயல் நட்ஸ் குக்கீஸ், ஷுகர் ஃப்ரீ குக்கீஸ், குழந்தைகளைக் கவரும் கார்ட்டூன் குக்கீஸ் என 12 விதமான வெரைட்டியான குக்கீஸ்களை தயாரித்து தருகிறேன். இதில் ராகி மற்றும் ராயல் நட்ஸ் குக்கீஸ் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

தனித்தனி பவுச்சுகளில் பேக் செய்து தருவதால் டிராவல் பிரண்ட்லியாக இருப்பதுடன், ஓமம் சேர்த்து தயாராகும் குக்கீஸ் குழந்தைகளுக்கு செரிமானத்தை தூண்டுகிறது. சூரியகாந்தி விதை, பூசணி விதைகளில் ஒமேகா த்ரீ சத்துகள் நிறைந்திருப்பதால், குழந்தைகளுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துகள் எனது குக்கீஸில் முழுமையாய் கிடைக்கிறது. கருப்பு கவுனி அரிசியை பெரும்பாலும் நாம் உணவாக எடுப்பதில்லை. கஞ்சியாகவும் குழந்தைகள் சாப்பிடுவதில்லை. அதையே சர்க்கரை இணைத்து குக்கீஸாக தயாரித்துக் கொடுக்கும்போது விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

என் குழந்தை உடலுக்கு நல்லது என நினைத்து நான் தயாரிக்கிற குக்கீஸை, மற்ற குழந்தைகளுக்கும் அதே தரத்தில் செய்து கொடுப்பதால், தரமான தயாரிப்பு
மட்டுமே என்னிடம் கிடைக்கிறது என்பதை வாடிக்கையாளர்கள் மனதில் பதிய வைத்திருக்கிறேன். அவ்வளவே!! நமது கனவு மற்றும் ஆர்வத்துடன், நமக்கென ஒரு யுனிக்னெஸ் செட் செய்து, மக்களிடத்தில் நேர்மையாகச் சேர்த்தால் வெற்றி நிச்சயம்’’ என்கிற ஆஷா, என்னுடைய ‘ஆஷா’ஷ் குக்கீஸ்’ என்னிடம் மட்டுமே கிடைக்கும். மற்றபடி வெளியிடங்களுக்கு அனுப்பி பெரிய அளவில் விற்பனையை விரிவு செய்யும் எண்ணமெல்லாம் கிடையாது’’ என்கிறார் உறுதியாக.

‘‘என் வெற்றிக் கதையும் புத்தகங்களில் வராதா என யோசித்த நாட்களும் இருந்தது. அந்தக் கனவும் நினைவாகி இருக்கிறது’’ என்றவர், “பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கொடுக்கும் தன்னிறைவை, வேறு யாராலும் கொடுத்துவிட முடியாது. ஒரு சின்ன கை பை என்றாலும், தன் உழைப்பில் வாங்கும்போது, அவள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதேபோல் ஆண்கள், குடும்பத்தில் உள்ள வேலைகளை செய்யத் தெரிந்தவர்களாய் வளர வேண்டும். நாளையே அம்மாவோ, மனைவியோ இல்லையெனில் நானில்லை என்கிற நிலையை ஆண்கள் எதிர்கொள்ளக் கூடாது’’ என்கிறார் அழுத்தமாக.

என் You Tube ஜெர்னி…

‘‘எனக்குத் தாய்மொழி தெலுங்கு. ஆனால் பிறந்து வளர்ந்து படித்தது எல்லாம் சென்னையில். 2007ல் திருமணம். அப்போது பி.சி.ஏ முடித்து தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். குழந்தைகள் பிறந்த நிலையில், வேலைக்கு செல்வதை குழந்தைகளுக்காக நிறுத்தினேன். இந்த நிலையில் நாங்கள் வீடு ஒன்று வாங்கி னோம். அந்த வீட்டின் கிச்சன் கொஞ்சம் சிறியதாக இருந்தது. கார்பென்டர், கிச்சனை பயன்படுத்துவதற்கு வசதியாய், ரசனையுடன் இன்டீரியர் செய்து கொடுக்க, கிச்சன் பார்க்க அழகாய், நேர்த்தியாய் இருந்தது. அவரிடம் பேசிக்கொண்டே கிச்சனை வீடியோவாக்கி யு டியூப்பில் பதிவேற்றினேன். பதிவேற்றிய சிறிது நேரத்திலேயே 1 லட்சம் பார்வையாளர்களைத் தொட்டது.

ஒரே வீடியோவில் மூவாயிரம் சப்ஸ்க்ரைபர்ஸ் கிடைத்தார்கள். யு டியூப் தளத்தில் இருந்து மெயில் வந்ததுடன், புரொபஷனலாய் யு டியூப்பில் சம்பாதிக்கும் அளவுகோலையும் எட்டியிருந்தேன். எனக்கே இது ஆச்சரியமாய் இருந்தது.ஒரு வீடியோ என் வாழ்வில் பெரிய மாற்றத்தைத் தர, தொடர்ந்து என்னைச் சுற்றி நடப்பவற்றை ‘திருமதி இல்லம்’ என்கிற பெயரில் வீடியோவாக்கி பல செக்மென்டுகளாக பதிவேற்றிக்கொண்டே இருந்தேன். எனது சேனல் வளர வளர, சப்ஸ்க்ரைபர்ஸ், வியூவர்ஸ், விளம்பரம், புராடெக்ட் ரெவ்யூ என வருமானமும் வளர்ந்தது. பாலோவர்ஸ் அதிகரித்த நிலையில் எனக்கென ஒரு தொழிலையும் உருவாக்கிக் கொண்டேன். இன்று நானும் தொழிலதிபர்.’’

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

You may also like

Leave a Comment

11 − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi