Sunday, October 6, 2024
Home » மதங்களைக் கடந்து காதலித்தோம்! – சலீம்-பவித்ரா

மதங்களைக் கடந்து காதலித்தோம்! – சலீம்-பவித்ரா

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் தோழிஇன்ஷா அல்லாஹ்…இன்று நிச்சயமாக ஒரு கணவனாக வாழ்வது எவ்வளவு கஷ்டம்னு தெரிஞ்சுக்க போறீங்க என நகைச்சுவை  ததும்ப சிரித்துக்கொண்டே நம்மிடம் பேசத் தொடங்கினார் சலீம். ஆதரவற்ற சடலங்களை நல்லடக்கம் செய்யும் கோவை ஜீவசாந்தி  அமைப்பின் நிறுவனர். அவரின் காதல் மனைவி பவித்ரா தற்போது தனது பெயரை சுமையா என மாற்றிக் கொண்டு கோவையில்  வழக்கறிஞராக இருக்கிறார். இருவரும் தங்களது காதல் அனுபவத்தை நம்மிடம் மனம் திறந்து பேசத் தொடங்கினர். ‘‘நான் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவன். என் மனைவி பவித்ரா இந்து பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என ஆரம்பித்தார் சலீம்.  மதம் என்பது மனிதனைப் பக்குவப்படுத்தவே தவிர, வாழ்வதற்கு மனசுதானே வேண்டும். ஒன்றை இழக்காமல் மற்றொன்று  கிடைக்காது. பிடித்தவர்களோடு வாழ வேண்டும் என நினைத்தால் எதையாவது இழந்துதானே அதை அடைய முடியும். பெற்றோரை  மகிழ்ச்சிப்படுத்த நினைத்தால் காதலை இழக்க வேண்டும். காதலில் வெற்றிபெற நினைத்தால் பெற்றோரை இழக்க வேண்டும். நாங்கள்  இரண்டாவது முடிவுக்குச் சென்றோம். நாங்கள்  இருவருமே  கடந்து   வந்த  பாதைகள் முழுக்க முழுக்க வெவ்வேறு. எதிரெதிர் சிந்தனைகளைக் கொண்ட  மதங்களைக்  கொண்டவை. உடுத்தும் உடையில் துவங்கி, உண்ணும் உணவு, வணங்கும் வழிபாட்டு முறைகள் என எல்லாமே இருவருக்கும்  வேறுவேறு. என்னைவிட இந்தத் திருமணத்தில் சவால்களை அதிகம் சந்தித்தது என் மனைவி பவித்ராதான். அவரின்  வாழ்க்கையில்தான் இழப்புகள் ரொம்பவே அதிகம். எனக்காக தன் அம்மா, அப்பா, உடன் பிறந்தவர்கள், படிப்பு, பொருளாதாரம் என  எல்லாவற்றையும் இழந்து, தனது வாழ்க்கையை ஜீரோவில் இருந்து தொடங்கினார். எங்களின் இணையேற்பு நிகழ்ந்த துவக்க  காலத்தில், இருவருக்குமே வாழ்க்கை அவ்வளவு எளிதாக அமையவில்லை. ஒவ்வொரு நாளும் எங்களுக்கு சவாலாகவே இருந்தது. வீட்டை எதிர்த்து வந்துவிட்டோம். வாழ்ந்து காட்ட வேண்டும் என்பது மட்டுமே மனதில் இருந்தது. பொருளாதார நெருக்கடியையும்  சேர்த்து எல்லா சோதனைகளையும் ஒவ்வொரு நாளும் கடந்தோம்’’ என்றார். அவரைத் தொடர்ந்த பவித்ரா… ‘‘ஒன்பதாம் வகுப்புவரை  கோயம்புத்தூர் கேந்திர வித்யாலயா பள்ளியில் நான்  படித்தேன். என் அம்மா, அப்பா இருவரும் வேலைக்குச் செல்பவர்கள். நான்  10வது படிக்கும்போது அம்மாவிற்கு மதுரைக்கு மாற்றலாகிவிட்டது. என் படிப்பை மதுரையில் தொடர்ந்தேன். ஒரு நாள் எனது  கைபேசிக்கு ஒரு ராங் கால் வந்தது. அப்போது நான் +1 படித்துக் கொண்டிருந்தேன். அது கோயம்புத்தூரில் வசித்த சலீம். ராங் காலைத்  தொடர்ந்து இருவரும் கைபேசி வழியாகவே பேசி நட்பாகிக் கொண்டிருந்தோம். துவக்கத்தில் எங்கள் இருவருக்குள்ளும் நல்ல நட்பே  இருந்தது. +2 முடித்ததும் மீண்டும் கல்லூரிப் படிப்பிற்காக கோயம்புத்தூர் சென்றேன். இருவரும் ஒரே கல்லூரியில் படித்தோம். நான் பி.எஸ்.ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தேன். அவர்  பி.எஸ்.ஸி மேத்ஸ் படித்தார்.  கல்லூரிக்கு வந்த பிறகே நான் அவரை முதல் முறையாக நேரில் பார்க்கிறேன். அதுவரையில் எங்கள் நட்பு கைபேசி வழியாகவே  இருந்தது. அவரின் நண்பர்கள் அனைவருமே எனக்கும் நண்பர்களாக இருந்தனர். எங்களுக்குள் மகிழ்ச்சியும், அரட்டையுமாக கல்லூரி  காலங்கள் நகர்ந்தது. இந்நிலையில் முதலில் அவர்தான் தன் காதலை என்னிடம் வெளிப்படுத்தினார். நான் கல்லூரியில் இரண்டாம்  ஆண்டு படிக்கும்போதே எங்கள் காதல் என் வீட்டில் தெரிய ஆரம்பித்தது. எங்கள் காதல் வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாகப் புகையத்  துவங்கியது. இனி நான் வீட்டில் இருந்தால் கட்டாயம் என்னை நாடு கடத்திவிடுவார்கள் என முடிவு செய்து அவரிடம் அதைத்  தெரிவித்தேன். நண்பர்கள் மூலமாக பதிவுத் திருமணம் செய்துகொண்டோம். வீட்டில் இருந்து பெற்றோர் உடன்பாடு இல்லாமல் என்  கணவர் சலீமோடு சென்றேன்.திருமணம் முடிந்து பல வருடங்கள் என் குடும்பத்தினரோடு தொடர்பில் இல்லாமல்தான் இருந்தேன். திருமணம் முடித்த நிலையில்  தொடர்ந்து கல்லூரிக்குச் சென்று படிப்பை முடித்தேன். முதலில் என் மகன் பிறந்தான்.  சிறிது இடைவெளிவிட்டு  பி.எல். படிக்க முடிவு செய்தோம். தொடர்ந்து வேலை செய்து கொண்டே பி.எல். படித்தேன். படிப்பை முடித்து வழக்கறிஞராக   பயிற்சி எடுத்தேன். இப்போது கோவை நீதிமன்றத்தில் எனது பெயரைச் சொன்னால் தெரியும் அளவிற்கு ஒரு நல்ல பெயரை  உருவாக்கி வைத்துள்ளேன். அதிகமாக கிரிமினல் வழக்குகள், வுமன் ஹராஸ்மென்ட் வழக்குகளை கையில் எடுக்கிறேன். என் மகன்  வளர்ந்த பிறகு நானும் எனது மகனும் என் அம்மாவையும் அப்பாவையும் சென்று அடிக்கடி பார்த்து வருகிறோம். தற்போது  இரண்டாவதாக மகள் பிறந்திருக்கிறாள். வாழ்க்கை ரொம்பவே மகிழ்ச்சியாக நகர்கிறது.சலீமை என் வாழ்க்கைத் துணையாக ஏற்ற பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாம் மார்க்கத்தின் வழிமுறைகள், கோட்பாடுகள் எனக்கு  ரொம்பவே பிடித்துப்போனது. அவர் என்னை எப்போதும் மதம் மாறச் சொல்லி கூறியதில்லை. நானே கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாம்  மதத்திற்குள் என்னை ஐக்கியப்படுத்திக்கொண்டேன். எனது அடையாளங்களை மாற்றிக்கொண்டேன். இன்று என்னைப் பேசச்  சொன்னால், ஒரு மணி நேரம் கூட இஸ்லாமிய மதத்தைப் பற்றி அதன் கோட்பாடுகளைப் பற்றி பேச முடியும். புலால் உண்ண அவரது  வீட்டில் யாரும் என்னைக் கட்டாயப் படுத்தவில்லை. மேலும் இஸ்லாத்தில் உணவை கட்டாயப்படுத்துவது கிடையாது. அது ஒரு  குறிப்பிட்ட சமூகத்தின் உணவு அவ்வளவே. விரும்பினால் புலால் உணவை உண்ணலாம். விருப்பம் இல்லையென்றால் தவிர்க்கலாம்.  வீட்டில் அனைவருக்கும் அசைவ உணவைச் சமைத்துத் தருகிறேன். என் குழந்தைகளுக்கும் ஊட்டிவிடுகி றேன். மற்றபடி நான் அதை  விரும்பி உண்ணவில்லை. அது என் தனிப்பட்ட விருப்பம்’’ என முடித்தார்.தொடர்ந்த சலீம், ‘‘காதல் திருமணம் என்பது மிகவும் நல்ல விசயம்தான். ரொம்பவே அது எளிமையான விசயம். காவல் நிலையத்தில்  சண்டை போடுவது, பெற்றோரோடு சண்டை போடுவதோடு நம் காதல் வெற்றி அடைவதில்லை. கடைசிவரை அதே அன்போடு…  மகிழ்ச்சியோடு… புரிதலோடு வாழ்க்கையை தொடர வேண்டும். அதுதான் காதலின் முழு வெற்றி. எங்களுடையது ஐந்து ஆண்டு காதல்.  எங்களுக்குள் எடுத்தவுடன் காதல் எல்லாம் வரவில்லை. நீண்டநாட்கள் நண்பர்களாக இருந்தே இந்த முடிவுக்கு வந்தோம்.  திருமணமாகி பனிரெண்டு ஆண்டுகள் கடந்தாச்சு. எங்கள் ஜீவசாந்தி அமைப்பின் மூலம் யாரெனத் தெரியாத ஆதரவற்ற பிணங்களை  எல்லாம் எடுத்து நல்லடக்கம் செய்தாலும், முன்பின் தெரியாத முதியவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்து  அமைப்பின் மூலமாக நாங்கள் கொடுத்தாலும், என் மனைவி பவித்ராவை அவரின் குடும்பத்தில் இருந்து பிரித்த குற்ற உணர்வு என்  மனதில் இப்போதும் உண்டு.  திருமணத்திற்கு முன்புவரை என் பவித்ராவுக்கு அவரின் குடும்பத்தோடு மிகப்பெரிய நெருக்கம் இருந்தது. யார் திருமணத்தைப்  பார்த்தாலும் பெற்றோர்களின் நினைவு வரும் என்பதால், நாங்கள் இருவருமே துவக்கத்தில்  எந்த ஒரு திருமண நிகழ்ச்சியிலும்  கலந்துகொள்வதில்லை. பெற்றோர்களின் நினைவு வந்தால், வயதானவர்களுக்கு உணவு வாங்கித் தருவது, முதியவர்களை கனிவோடு  பார்த்துக்கொள்வது என்கிற மனநிலைக்குச் சென்றோம்.எங்கள் திருமணம் முடிந்து பத்து ஆண்டுகளாகவே பவித்ராவின் குடும்பத் தோடு  எந்தத் தொடர்பும் இல்லை. எனக்கு குழந்தைகள் பிறந்த பிறகுதான் பெற்றோராக அவர்கள் மனநிலை எனக்குப் புரிந்தது. சில  நேரங்களில் யோசிப்பேன். யாரென முன்பின் தெரியாத ஒருவனோடு தன் மகள் போனதை அந்தப் பெற்றோர் எத்தனை வருத்தத்தோடு  எதிர்கொண்டிருப்பார்கள் என்று. ஒரே நாளில் ஒரு ஹீரோ மாதிரியாக அவர்களது பெண்ணை அழைத்துவந்த அன்றைய இரவு, அந்தப்  பெற்றோருக்கு எப்படி கழிந்திருக்கும் என்கிற வருத்தம் எனக்குள்ளும் நிறையவே இருந்தது. பவித்ராவின் மனதிலும் பெற்றோரைப்  பிரிந்த அந்த ஏக்கம் தொடர்ந்தது. அவர்கள் எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் இரண்டு வார்த்தை தன் மகள், பேரன், பேத்திகளோடு பேசினால், பவித்ரா  மகிழ்ச்சியாவார் என அடிக்கடி நினைப்பேன். இப்போதுதான் பவித்ரா தன் குடும்பத்தினரோடு பேசுவது, குழந்தைகளோடு தன் பெற்றோர்  வீட்டிற்கு சென்று வருவது என இருக்கிறார்.எங்களால் பணம், பொருள் எனச் சம்பாதிக்க முடியவில்லை என்றாலும் கல்வியில்  பவித்ரா சிறந்து விளங்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அவரும் பி.எல். முடித்து வழக்கறிஞராக மாறினார். நான்  எனக்குப் பிடித்தமாதிரியான வேலை செய்து வருகிறேன். அவரவர் தொழிலில் பிஸியாக இருக்கிறோம்.  ஆனால் இன்று இந்த  நிலையை அடைய நாங்கள் நிறையவே கஷ்டப்பட்டிருக்கிறோம். எங்களுக்குள் லட்சியம் மட்டுமே இருந்தது. மற்ற சவால்களைப் பற்றி  எல்லாம் பெரிதாக நினைக்கவில்லை. மேலும் அதைச் செய், இதைச் செய்யாதே என நான் அவரை எந்த நிலையிலும், எதற்காகவும்  கட்டாயப்படுத்தவில்லை. எங்களுக்குள் எது பிடிக்கிறதோ அதை செய்யலாம். பிடிக்கவில்லை என்றால் தவிர்க்கலாம். என் மனைவி பவித்ராவிற்கும் எங்களது ஜீவசாந்தி அமைப்பில் மிகப் பெரிய பங்கு உள்ளது. அந்த அமைப்பை சிறப்பாக எடுத்துச்செல்ல  உணர்வுப்பூர்வமாக மிகப் பெரிய தியாகங்களை அவர் செய்துள்ளார்.  அமைப்பின் மூலம் ஆதரவற்றோரை நல்லடக்கம் செய்யும் இந்த  வேலையை முழு நேரமும் நான் செய்கிறேன் என்றால், பவித்ராவின் ஒத்துழைப்பு இல்லாமல் சாத்தியமில்லை. நான் எந்த நேரத்தில்  என் வீட்டிற்குச் செல்வேன், எப்போது வீட்டிலிருந்து கிளம்புகிறேன் என எதுவுமே நிச்சயமில்லை. இறப்பு குறித்த செய்திகள் இரவு,  பகல் இல்லாமல் எந்த நேரமும் வரும். என் நிலையை அவர் புரிந்துகொள்வார். வாழ்க்கைத் துணையாக வந்தவரின் வழித்துணையும்  ஒத்துழைப்பும் புரிதலும்தான் என் ஜீவசாந்தி அமைப்பு. இந்த அமைப்பு இத்தனை வெற்றிகரமாக செயலாற்றுவதில் நமது  குடும்பத்தினர்தான் உண்மையான தியாகிகள். உடல்களை நல்லடக்கம் செய்துவிட்டு அப்படியே வீட்டிற்குச் செல்வேன். என்  குழந்தைகளை கையில் எடுத்து கொஞ்சக்கூட என்னால் முடியாது. வார இறுதிநாட்களில் மற்ற குடும்பத்தினரைப்போல், குடும்பமாக  வெளியில் செல்ல முடியாது. பண்டிகைகளை சேர்ந்து கொண்டாட முடியாது. அனைத்தையும் என் பவித்ரா புரிந்து நடந்து கொள்வார். என்னை எந்த நிலையிலும் தொந்தரவு செய்யக் கூடாது என்கிற மனநிலை  அவருக்கு எப்போதும் உள்ளது. நான் மதம் சார்ந்த சிந்தனைக்கு எதிரானவன். உயர் சாதி, அதிகார வர்க்கம், உயர்ந்தவர்கள்,  பொருளாதாரத்தில் உயர்வானவர்கள் என்பதில் பெரிதாக எனக்கு ஈடுபாடு இல்லை. பவித்ராவும் அதே சிந்தனைகள் உடையவர்.  எல்லோருடனும் பேசிப் பழகுகிற, அனைவரோடும் அமர்ந்து உணவை உண்ணுகிற பழக்கம் கொண்டவர். உடன் பழகும் யாரையும்  நீங்கள் எந்த சாதி, எந்த மதம் என்றெல்லாம் நான் கேட்பதில்லை. பவித்ராவும் அப்படித்தான்,  எனக்கும் யாரும் அடிமை இல்லை.  நானும் யாருக்கும் அடிமை இல்லை. எங்களின் புரிதலும் நேசமும்தான் இந்தப் பணியை என்னால் இத்தனை இயல்பாக செய்ய  வைக்கிறது. அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அது ரொம்பவே உணர்வுப்பூர்வமான விசயம்’’ என முடித்தார்.‘உயிரே…  உயிரே… வந்து உன்னோடு கலந்துவிட்டேன்…’ என்கிற பாடல் வரிகள்  தூரத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது.-மகேஸ்வரி

You may also like

Leave a Comment

ten − 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi