Saturday, September 21, 2024
Home » புவனை தந்த கருணை வள்ளல்

புவனை தந்த கருணை வள்ளல்

by kannappan

ஸ்ரீராகவேந்திரர் ஜெயந்தி : 9 – 3 – 2022புலனடக்கம், பழுத்த பக்தி, வைராக்கியம், மெய்யறிவு, ஞானம் எனச் சொல்லப்படும் உயர் குணங்களோடு அவதரித்த மகான்கள் பிறந்த புண்ணிய பூமி நம் பாரத பூமி. `எந்தரோ மஹானுபாவுலு அந்தரிகி வந்தனமு’ என்று பாடிய ஸ்ரீதியாகையரின் வாக்கு, எத்தனை காலம் ஆனாலும் இம்மண்ணில் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.புவனகிரிஅவ்வகையில், புவனகிரி எல்லையில்லா பெருமை கொண்ட ஊர். புவனேந்திரன் என்கின்ற மன்னன் ஆண்டதாலேயே புவனகிரி என்ற பெயர் வந்ததாக ஒரு செய்தி உண்டு. இவ்வூரில், கோட்டை ஒன்று இருந்ததாக தகவல் உண்டு. கோட்டையுள்ள தெரு கோட்டை மேட்டு தெரு என்று வழங்கப்படுகிறது. இதனருகில் ராஜா ராணி குளம் உள்ளது. புவனகிரி என்ற பெயரில் தமிழகத்தில் வேறு எந்த ஊரும் கிடையாது. ஆந்திராவில், புவனகிரி என்கிற ஒரு ஊர் உண்டு. தில்லை, இத்திருத்தலத்திற்கு அருகில் உள்ள புண்ணிய பூமி. ஸ்ரீகோவிந்தராஜன் பெருமானின் 12 புண்ணிய தீர்த்தங்களில் ஒன்றான வெள்ளாற்றின் (ஸ்வேத நதி) கரையில் அமைந்த சுந்தரத் திருத்தலம். ஏகாங்கி சுவாமிகள், வெள்ளியம்பலம் சுவாமிகள் போன்ற பல மகான்களும், வள்ளலார் போன்ற அருளாளர்களும் நடமாடிய பூமி. இத்தனைக்கும் மேல், மூன்று சமயங்களில், துவைத மதத்தை நிலைநிறுத்திய தூண்களில் ஒருவரான மந்த்ராலய மகான் ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் அவதரித்த ஊர்.கண்ணன் கீதையில் சொல்கிறார்.“உலகில் எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலை எடுக்கிறதோ அப்பொழுது எல்லாம் இந்த பூவுலகில் நான் தோன்றுவேன்”.  அது சத்திய வாக்கு. அட்டூழியம் அதிகரிக்கும் பொழுது தர்மம் தழைக்க ஆண்டவனின் அம்சமாக அருளாளர்கள் தோன்றுவது நடந்துகொண்டுதான் வருகிறது. அப்படி தோன்றியவர்தான் மகான் ஸ்ரீராகவேந்திரர்.ஸ்ரீராகவேந்திரர் அவதார கிரமம்இவருடைய அவதார வரிசையைப் பற்றி ஒரு அற்புதமான பாடல் உண்டு. 1. பிரகலாதன்சங்கு கர்ணன் என்ற தேவன், நாள்தோறும் பிரம்மதேவருக்கு மலர்கள் பறித்துச் செல்ல பூலோகம் வருவது வழக்கம். அப்போது, ஒருநாள், அந்த மலர்களின் அழகில் லயித்து, இந்த பூவுலகில் பிறக்க வேண்டும் என்று தன் மனத்தில் நினைத்ததை அறிந்த பிரம்மதேவர், அவரை பூவுலகில் பிரகலாதனாய் பிறக்கும் வரமளித்தார். பிரகலாதனுடைய தந்தையான அரக்கன் இரண்ய கசிபுவை வதம் செய்ய மஹாவிஷ்ணு, நரசிம்ம அவதாரம் எடுத்தார். 2. பாஹ்லிகன் தனது அடுத்த பிறவியில் பாஹ்லிகனாக பிறந்தார், பாஹ்லிகர். மகாபாரதப் போரில் பாண்டவர்களுக்கு எதிராக போரிட்டாலும் ஒரு நல்ல ஹரி பக்தராக விளங்கினார். இவர் போரில் பீமனின் கையில் உயிர் துறந்தார்.3. வியாசராயர்தன் அடுத்த பிறவியில் வியாசராயராய் பிறந்து மத்வரின் தத்துவத்தை பரப்பினார். அப்பிறவியில் தாம் செய்த தொண்டினால் திருப்தி அடையாமல் மீண்டும் குரு ராகவேந்திரராக அவதரித்தார். அவர் பிறந்த புண்ணிய இடத்தில், இன்று ஓர் அற்புதமான ஆலயம் விளங்கிக் கொண்டிருக்கிறது.ஸ்ரீராகவேந்திரரின் ஆலயம்அந்த மடத்தின் விஸ்தாரமான குடமுழுக்கு பணிகள் முழுவீச்சில் நடந்து, 21.11.2021 குடமுழுக்கு நடைபெற்றது. சிதம்பரத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் வடக்கே இருக்கிறது புவனகிரி. புவனகிரி கடலூர் அல்லது விருத்தாச்சலம் மார்க்கமாக செல்லும் எந்தப் பேருந்திலும் ஏறி இவ்வூரை அடையலாம். புவனகிரியில் அவர் பிறந்து படித்த இல்லம் தான் இன்று கம்பீரமாக ஆலயமாக மலர்ந்திருக்கிறது. ஸ்ரீராகவேந்திரரின் நூதன திருவுருவம் நம்மை கவர்ந்திழுக்கும். சலவைக் கற்களால் ஆன நல்ல உயரமான பீடத்தில் கனிவு தரும் கண்களோடு காட்சி தந்து கொண்டிருக்கிறார். அவருடைய பின்புலத்தில், கேட்டதெல்லாம் தரும் காமதேனு ஒரு பக்கம். ராமஜெபம் செய்து கொண்டிருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயர் மறுபக்கம்.இன்றே இப்பொழுதே என்று வரம் தரும் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் ஒரு பக்கம். குரு ஸ்ரீராகவேந்திரர் அவதரித்த வியாழக்கிழமைகளில், மகா குருவைத் தேடி மகத்தான கூட்டம் வருகின்றது. ஏகாதசி கொண்டாட்டம், மார்கழி மாதம் முழுவதும் அபிஷேகங்கள், நவராத்திரியில் நலம்தரும் பூஜைகள் என்று ஒவ்வொரு விசேஷமும் ஆண்டு முழுவதும் பார்த்துப் பார்த்துக் கொண்டாடப் படுகின்றன. தினம்தோறும் காலையில் நிர்மால்யம், காலசந்தி, அபிஷேகம், சாயங்கால பூஜை, வேதபாராயணம், ஸ்வஸ்தி நிறைவு பூஜை என்று அனைத்தும் விசேஷமாக நடக்கிறது. மந்த்ராலய மகானின் வரலாறுபுவனகிரி மண்ணில்  பிறந்த அந்த மந்த்ராலய மகானின் வரலாற்றை சற்றுத்  தெரிந்து கொள்வோம். திருப்பதி ஏழுமலையானிடம் அபார பக்தி கொண்டவர் திம்மண்ண பட்டர்.‘‘வாயு ஜீவோத்தமன்; ஹரியே சர்வோத்தமன்” எனும் மத்வாச்சாரியார் துவைத சித்தாந்தத்தைக் கடைப்பிடிப்பவர். அவரின் மனைவி கோகிலாம்பாள். பெரும் பண்டிதப் பரம்பரையைச் சேர்ந்தவர். இவர்களுக்கு வேங்கடம்மாள் என்ற  மகளும் குருராஜன் என்ற மகனும் பிறந்த பின், பிறந்தவர் ஸ்ரீராகவேந்திரர்.வேங்கடநாதன்திருப்பதி ஏழுமலையான் அனுக்கிரகத்தால் பிறந்த ராகவேந்திரருக்கு, வேங்கடநாதன் என்ற பெயரை வைத்தனர் பெற்றோர்கள். விஜயநகர சாம்ராஜ்யம் வீழ்ச்சி அடைந்தபின் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால், ராகவேந்திரரின் பெற்றோர்கள் புவனகிரிக்கு குடிபெயர்ந்து விட்டார்கள். புவனகிரி வந்த பின்னால் பிறந்தவர் ஸ்ரீராகவேந்திரர்.சுவாமிகளுக்கு எல்லா கலைகளும் இளமையிலே அத்துப்படி ஆயின. அவரது தந்தையின் மறைவிற்கு பிறகு அவர், தன் அண்ணன் திரு. குருராய பட்டரிடம் வளர்ந்தார். அவரது அடிப் படைக் கல்வியை அவர் மைத்துனர் திரு. லட்சுமி நரசிம்மாசாரியாரிடம் மதுரையில் பயின்றார். இசையில் நல்ல தேர்ச்சி பெற்றவராகவும், வீணை வாசிப்பதில் சிறந்தவராகவும் திகழ்ந்தார்.ஆஞ்சநேயரைப் பற்றி கம்பன் சொல்லுவார்.இல்லாத உலகத்தெங்கும், இங்கிவன் இசைகள் கூறக் கல்லாத கலையும், வேதக் கடலுமே; என்னும் காட்சி சொல்லாலே தோன்றிற்று அன்றே; யார் கொல் இச்சொல்லின் செல்வன்? வில்லார் தோள் இளையவீர விரிஞ்சனோ! விடை வல்லானோ?”அந்த ஆஞ்சநேயரைப் போலவே இவர் கல்லாத கலை இல்லை. காரணம், இவரும் ஆஞ்சநேயருக்கு பரமபக்தர். புவனகிரியில், இவர் வழிபட்ட ஆஞ்சநேயர் கோயில் உண்டு. ஆகையினால் ஆஞ்சநேயரை போலவே இவர் மிகச் சிறந்த வேத பண்டிதர்.வறுமையில் வாடிய குடும்பம்.கலைச்செல்வம் கொண்ட இவரது வாழ்வில் பொருள் செல்வம் இல்லை. வறுமையில் வாடியது குடும்பம். இல்லறத்தை நல்லறமாக சரஸ்வதி என்ற மங்கையை மணந்து கொண்டார். பொருள்தேடி கும்பகோணம் சென்றனர். அங்கு, ஸ்ரீமடத்தின் ஸ்ரீ சுதீந்தர சுவாமிகள் இவரை வரவேற்றார். துவைத வேதாந்தத்தையும் இலக்கியங்களையும் பயின்றார். ஏகக்கிரகியாய் (ஒருமுறை படித்தாலோ அல்லது கேட்டாலோ மனதில் பதியவைத்துக் கொள்ளும் திறன்) பாடங்களை உள் வாங்கினார். ஒருமுறை பாடம் சொன்னால் அதனை, சுடு மண்ணில் தண்ணீர் விட்டால் அது எப்படி உறிஞ்சி எடுத்துக்கொள்ளுமோ, அதைப்போல இவருடைய மனம் கிரகித்துக் கொள்வதைக் கண்டு இவருக்கு `பரிமளாச்சாரியார்’ என்ற பட்டத்தைக் கொடுத்தார். ஒரு சமயம் தனது குருநாதருடன் மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபாலசுவாமி ஆலயத்திற்கு சென்ற பொழுது, அங்கு வித்வத் சதஸ் நடைபெற்றது. அத்வைத பண்டிதரிடம் தர்க்க வாதத்தில் தன்னுடைய சீடரின் திறமையைக் கண்ட ஸ்ரீசுதீந்தர சுவாமிகள், இவருக்கு `மகாபாக்கிய பரிமளாச்சாரியார்’ என்ற விருதை தந்தார். காலம் உருண்டது. புவனகிரி திரும்பிய ராகவேந்திர சுவாமிகள், தன் இல்லற வாழ்க்கையை அண்ணன் வீட்டிலேயே தங்கி நடத்தினர். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. லட்சுமி நாராயணன் என்று பெயர் வைத்தனர்.அக்னி சூக்தமும் வருண சூக்தமும்வருமானம் போதாத நிலை. கலைச்செல்வமும், இசைச் செல்வமும் விலைபோகாத காலமது. இவர்கள் யாரிடமும் பொருள் கேட்பதில்லை. கொடுப்பது கொடுத்தால் அதைக் கொண்டு குடும்பம் நடத்துவார்கள். வறுமையின் கோரப்பிடி கொஞ்சம் கொஞ்சமாக இறுகியது. அப்போது ஒரு சம்பவம்.ஒருமுறை, கும்பகோணத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக குடும்பத்தோடு அழைக்கப்பட்டார். சுவாமிகளும் அங்கே சென்றிருந்தார். அழைத்தவர், வேங்கடநாதரை சரியாக நடத்தவில்லை. பல பண்டிதர்கள் கூடியிருந்தனர். இவரது எளிய ஏழ்மை தோற்றத்தைக் கண்டு எடை போட்ட  அந்த பணக்காரர், இவரைப் பார்த்து, ‘‘போய் சந்தனம் அரைத்துக் கொண்டு வா” என்று சொன்னார். சுவாமிகள் சந்தனம் அரைத்துக் கொண்டிருந்தபொழுது அவர் அறியாமலேயே அவருடைய உதடுகள் அக்னி சூக்தத்தை உச்சரிக்கத் தொடங்கியது.பரிமளவாடையுடன் பக்குவமாக இருந்தது சந்தனம். அனைவரும் பூசிக்கொண்டனர். ஆனால், அடுத்த நொடி அவர்கள் உடம்பு தகிக்கத் தொடங்கியது. அக்னி சூக்தத்தின் மந்திர சக்தி அது.இதை அறிந்த சுவாமிகள் உடனே வருண சூக்தத்தைச் சொல்ல, அந்த சந்தனம் குளிர்ந்து தண்புனல் ஆனது. அப்பொழுதுதான் சுவாமிகளுடைய மந்திர சித்தியையும் மந்திரப் பலத்தையும் உணர்ந்தனர். வேதமந்திரத்தின் சிறப்பே இதுதான். மிகச் சரியான உச்சரிப்புடன், கூர்மையான எண்ணத்துடன், மந்திரங்களை லயித்து ஸ்வரம் மாறாது துல்லியமாக உச்சரித்தால், அது எந்த பலனுக்காகச் சொல்லப்பட்டதோ, அந்த பலம் செயல்படத் தொடங்கிவிடும். இது வடமொழி மந்திரங்களுக்கு மட்டுமல்ல. தமிழ் மந்திரங்களுக்கும் உண்டு என்பதற்கு பல சான்றுகள் இருக்கின்றன. திருமழிசையாழ்வார் ஒரு பாடலைப் பாடி, ‘‘நீயும் உந்தன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்” என்று சொன்னவுடன், பகவான் பாயைச் சுருட்டிக் கொண்டு எழுந்தான் என்கின்ற சம்பவங்கள் உண்டு. அதற்கு சான்றான தலங்களும் நம்முடைய நாட்டில் உண்டு. ஒருவரின் உருவத்தை பார்த்து எடை போட்டு, அவர்களுடைய தகுதிக்கு தகாத வேலை கொடுத்தால் அதனுடைய விளைவு எப்படி இருக்கும் என்பதை அனைவரும் உணரும்படியான ஒரு சம்பவம் இந்தச் சம்பவம். ஆனால் இதை பெரிதாக ஸ்ரீராகவேந்திரர் எடுத்துக்கொள்ளவில்லை.குடந்தை மடத்தின் பீடாதிபதிமறுபடியும் குடந்தை சென்றார். ஸ்ரீசுதீந்திரர் விருப்பப்படி வேதபாடசாலையை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். காலம் நகர்ந்தது. தமக்குப் பின் யார் என்ற கேள்வி எழ, ஸ்ரீ சுதீந்திரர் ராகவேந்திரரை ஒருவாறு வற்புறுத்தி மடத்தின் பீடாதிபதியாக அமர்த்தினர். மடத்தில் சுவாமிகள் பீடாதிபதி ஆவதற்கு முன் நடந்த சம்பவங்கள் தனி. அற்புதமான அந்த சம்பவங்கள், சுவாமிகளின் அவதார ரகசியத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன. அதுவரை வேங்கடநாதன் என்ற பூர்வாசிரமப் பெயருடன் இருந்த சுவாமிகள், சன்னியாசம் பெற்று, ஸ்ரீ மூலராமர் பூஜை செய்யும் மடாதி பதியாக பின்னால்தான், ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர் என்று  அழைக்கப்பட்டார்.வேங்கடநாதர், தஞ்சாவூரில் 1621 ஆம் ஆண்டு பால்குண மாசம் (பங்குனி), சுக்கில பட்சம், துவிதியை அன்று துறவறம் ஏற்று சுதீந்திர மடத்தின் பீடாதிபதியாக ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தராக பொறுப்பேற்றார்.மத்வ, த்வைதத்தின் பொற்காலம்காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை யாத்திரை செய்தார் சுவாமிகள். அவர் பாதம் படாத இடம் பாரதத்தில் இல்லை என்று சொல்கின்ற அளவிற்கு துவைத சித்தாந்தத்தை முழுமூச்சுடன் பரப்பினார். இவருக்கு முன்பு வியாசராஜ யதி (வியாச யதி ராஜர்), ஸுரேந்திரர், விஜயீந்த்ர தீர்த்தர், சுதீந்திரர் போன்றவர்கள் மத்வத்தை முன்னெடுத்தவர்கள். மத்வருக்குப் பிறகு ராகவேந்திரரின் காலமே மத்வ, துவைதத்தின் பொற்காலம் என்று அறியப்படுகிறது. ஸ்ரீமன் நாராயணனே சர்வமும் என்ற சாசுவதமான தத்துவத்தை எடுத்துரைத்தார்.செய்த அற்புதங்களும் மகத்தான காரியங்களும் அவருடைய வாழ்க்கையில் நடைபெற்ற பல அற்புதமான சம்பவங்கள், மகான்களுக்கு உரியவை. மாடு மேய்க்கும் சிறுவன் திவான் ஆக மாறியது. நவாபின் இறந்த குழந்தையை உயிர்த்தெழச்செய்தது. மாம்பழச் சாற்றில் தவறி விழுந்த குழந்தையைக் காப்பாற்றியது. எலும்பும் சதையுமான மாமிசத்தை இன்சுவைக் கனிகளாக மாற்றியது. இப்படிப் பலப்பல அற்புத விஷயங்கள் நடந்தன. ராகவேந்திரா என்று பாதம் பணியும் பக்தர்களின் பல்வேறு குறைகளை தீர்த்துவைக்கும் பரம தயாளனாகத் திகழ்கிறார். எல்லாவித இடர்பாடுகளும் நீங்கி ஒருவருக்கு ஏற்றமான வாழ்வு கிடைத்து விடும் என்கின்ற நம்பிக்கை ராகவேந்திர பக்தர்களின் மனதில் உண்டு. 71 ஆண்டுகள் மானிட உருவம் தாங்கி  மகத்தான காரியங்களைச் செய்த ஸ்ரீ ஸ்வாமிகள், பற்பல நூல்களை எழுதி அருளியிருக்கிறார்.ராகவேந்திரர் எழுதிய சிறு குறிப்புகளின் பட்டியல்:1.வேத பிரஸ்தனம்; என்னும் பொருள் பற்றி வேதத்ரய விங்குதி (ரிக், யஜூர், சாம வேதங்கள்), மந்த்ரார்த்த மஞ்சரி, பஞ்ச சூக்த உரைகள், பத்து உபநிஷத்துக்களில் உள்ள ஒவ்வொரு வாக்கியத்துக்கும் உரை.2.பகவத் கீதாப்ரஸ்தானம்; கீதா விங்ருதி, கீதாப்ரமேய தீபிகையின் உரை, கீதாதாத்பர்யத்திற்கு உரை.3.ஸூத்ரப்ரஸ்தானம்; தந்த்ர தீபிகா, ந்யாய முக்தாவளி, ப்ரஹ்ம ஸூத்ரபாஷ்ய தத்வப்ரகாசிகர்பாவதீபம், அனுபாஷ்ய டீகா, தசப்ரகரண டீகாவின் உரை.4.தர்க்க தாண்ட வ்யாக்யானம்5. வாதாவளீ வியாக்யானம்6. ப்ரமாண பக்ததி வியாக்யா7. ஸ்ரீராம சரித்ர மஞ்சரி8. ஸ்ரீ க்ருஷ்ண சரித்ர மஞ்சரி9. ஸ்ரீ மன்மஹாபாரத தாத்பர்ய நிர்ணய பாவ ஸாங்க்ரஹம்10. அணுமத்வ விஜய வ்யாக்யானம்11. ப்ராதஸ் ஸாங்கல்ப கத்யம்12. பாட்ட சங்க்ரஹம்13. ப்ரமேய ஸங்க்ரஹம்(இவை எல்லாம் மடம் வெளியிட்டிருக்கும் நூலில் உள்ள விவரங்கள்)பிருந்தாவன பிரவேசம்நிறைவாக அவர் மாஞ்சாலா (மாஞ்சாலி) என்ற ஊருக்கு சென்றார். அது பிரகலாதன் தவம் செய்த புண்ணிய பூமி. அங்கே சென்றார் சுவாமிகள். தமது சீடரான திவான் வெங்கண்ணாவை, தமக்கு ஒரு பிருந்தாவனம் அமைக்கும்படி கட்டளையிட்டார். 1671 ஆம் ஆண்டு ராகவேதிர சுவாமிகள் பிருந்தாவனப் பிரவேசத்திற்கு முன் தன் பக்தர்களுக்காக மனம் நெகிழவைக்கும் ஒரு உரையை தந்தார்.1. சரியான நடத்தையின்றி, சரியான சிந்தனை வராது. நடத்தை முக்கியம்.2. மக்களுக்கு செய்யப்படும் தர்மம், கடவுளின் பூஜைக்கு சமமானது.3. சாஸ்த்திரத்தை பின்பற்றாமல் தங்களை கடவுள் என்று கூறிக்கொண்டு அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள்.4. நாம் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம். அவையெல்லாம் யோக சித்தியினாலும், கடவுளின் அருளினாலும் எங்களால் செய்ய முடிந்தது. அவற்றில் எந்த பொய்யோ பித்தலாட்டமோ இல்லை. அவ்வதிசயங்கள், கடவுளின் மகிமையையும் அவர் அருளால் ஒருவர் எப்பேற்பட்ட சக்திகளை அடைய முடியும் என்று பறை சாற்றவுமே செய்யப்பட்டது.5. ஞானத்தை மிஞ்சிய அதிசயமோ, அற்புதங்களோ கிடையாது.6. எந்தச் சூழ்நிலையிலும், கடவுளின் மேல் பக்தி வேண்டும். கடவுளை முழு மனதோடு ஏற்றுக்கொள்ளுதல் பக்தி ஆகும். இப்படி பல விஷயங்களைச் சொன்னார்.பிறகு ராகவேந்திரர் பிரணவ மந்திரத்தை ஜபித்துக்கொண்டு ஆழ்ந்த தியானத்தில் இறங்கினார். ஒரு தருவாயில், அவர் கையில் இருந்த ஜபமாலை நின்றது. அந்த அறிகுறியைப் புரிந்துகொண்ட அவர் சீடர்கள், அவரைச் சுற்றி பிருந்தாவன சுவர் எழுப்பத் தொடங்கினார்கள். அங்கே நித்திய வாசம் செய்ய பிரவேசித்தார் ஸ்ரீஸ்வாமிகள். அதுதான் இன்றைய மந்த்ராலயம்.அதே குரு வாரத்தில்தான் 30.1.1671ல் ஆந்திர மாநிலம் துங்கபத்ராநதிக் கரையில் மந்த்ராலயம் என்கின்ற ஊரில் ராகவேந்திரர் ஜீவ முக்தி அடைந்தார். அவருடைய தியான மந்திரம் இதுதான்.பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்ப விருட்சாய நமதாம் காமதேனவே.முனைவர் புவனை ஸ்ரீராம்…

You may also like

Leave a Comment

one × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi