Sunday, September 29, 2024
Home » பாவங்கள் போக்கும் சித்ரகுப்தர்

பாவங்கள் போக்கும் சித்ரகுப்தர்

by kannappan

மன்னார்குடிசோழ மன்னர் ராஜாதி ராஜனால் 850 ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பட்டக்காரத்தெருவில் நாராயணன் தங்கை கோயிலுக்கு அருகில் கட்டப்பட்டது ஸ்ரீவாலாம்பிகை சமேத ஸ்ரீசோழேஸ்வரர் திருக்கோயில். இங்கு சித்ர குப்தர் தனி சந்நதியில் எழுந்தருளியுள்ளார். சோழ மன்னர் ராஜதிராஜன்  போரில் பெற்ற  வெற்றியின் நினைவாக மன்னார்குடியில் ஜெயங்கொண்டநாதர் கோயிலை கட்டினர். அக்கோயில் அருகிலேயே அப்போரில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் மடிந்து போனதால் அப்பாவங்களை அகற்றுவதற்காக பாவபுண்ணியங்களை எழுதும் தெய்வமான சித்ரகுப்தனுக்கு ஒரு சிவாலயத்தை எழுப்பி தனி சந்நதியில் சித்ரகுப்த பகவானை எழுந்தருளச்செய்து பூஜைகள் நடத்தியதாக ஆலய தலவரலாறு கூறுகிறது.சோழ மன்னன் ராஜாதிராஜனால் எழுப்பப்பட்ட இந்த சீர்மிகு ஆலயத்தில் ஸ்ரீ வீரவிநாயகர், சோழேஸ்வரர், வாலாம்பிகை, நந்திகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, சுப்ரமணியசாமி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், காலபைரவர், சனீஸ்வரர், சூர்யபகவான், சந்திரபகவான் ஆகியோருடன் சித்ரகுப்தர் எழுந்தருளியுள்ளார். ஆலயவிருட்சம் வில்வமரம்.  துளசி வனமாக இவ்வாலயம் விளங்கியதால் இத்தல இறைவன் துளசிவனமுடையார் என்று அழைக்கப்படுகிறார். இக்கோயில் ஈசானிய மூலையில், மனிதனின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் எமதர்மராஜாவின் எழுத்தரும், முதன்மந்திரியுமான சித்ரகுப்தர் எழுத்தருளியிருப்பது தனிசிறப்பு. சித்ரகுப்தருக்கு காஞ்சிபுரம், ஸ்ரீவாஞ்சியத்தை அடுத்து மன்னார்குடியில் மட்டும்தான் ஆலயம் உள்ளது.சித்ரகுப்தர் நான்கு திருக்கரங்களின் மேல் இரு திருக்கரங்களில் தாமரை மலர்கள் ஏந்தியிருப்பது இவர் செல்வ வரம் தருபவர் என்பதைக் குறிக்கிறது. கீழ் இருதிருக்கரங்களிலும் அபயமுத்திரைகாட்டி அருள்கிறார்.  இவரை வணங்குபவர்களுக்கு லட்சுமிகடாட்சம் அருள்வதுடன் அவர்களது  பாவங்களை அழித்து மீண்டும் பாவங்கள் புரியாமல் இருக்க வழிகாட்டுவார் என்பது ஐதீகம். ஆலயத்தின் முக்கியவிழா சித்ரா பவுர்ணமி ஆகும். பிரதோஷ வழிபாடு, சோமவாரவழிபாடு, குருவார வழிபாடு, சங்கடஹரசதுர்த்தி, சஷ்டி வழிபாடு, தேய்பிறை அஷ்டமி வழிபாடு, சனிக்கிழமை சனீஸ்வர பகவான் வழிபாடு, சிவராத்திரி  வழிபாடு, வெள்ளிக்கிழமை துர்க்கை வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பவுர்ணமியன்று சித்ரகுப்தருக்கு நெய்விளக்கு ஏற்றுவதன் மூலம் கேது தோஷம் நிவர்த்தியாகும்.அவரவர் ஜென்ம நட்சத்திரம் வரக்கூடிய நாட்களில் சித்ரகுப்தருக்கு நெய்விளக்கு ஏற்றி அர்ச்சனை செய்வதன் மூலம் பாவகிரகங்களின் போக்கு மறைந்து  சுபகிரகங்களின் அருள்கிட்டும். வியாழக்கிழமைகளில் வழிபட்டால் நல்லறிவும், மேதாவிலாசமும், புகழும் கிட்டும். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் ஏற்றி வழிபட்டால் தடைகள் விலகும். எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், நீதியரசர்கள், புலவர்கள்  ஆகிய எழுத்து தொடர்புடையவர்கள் சித்ரகுப்தரை இந்த ஆலயத்தில் வந்து வழிபட்டால் அமோகப் பலன்கள் ஏற்படும் என்பது நம்பிக்கை. தினமும் காலை 9 மணி முதல் 10.30 வரை மாலை 5.30 மணிமுதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும். மன்னார்குடி பஸ் ஸ்டாண்டிலிருந்து  மன்னை நகர் வழியாக சென்றால் 2 கி.மீ. தொலைவில் பட்டக்காரத்தெரு நாராயணன்தங்கை கோயிலுக்கு அருகில்  இக்கோயில் உள்ளது….

You may also like

Leave a Comment

thirteen − nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi