Monday, October 7, 2024
Home » தனது செயல்கள், நடத்தையால் தமிழக ஆளுநர் பொறுப்பை வகிக்க ஆர்.என்.ரவி தகுதியற்றவர்: திரும்ப அழைக்க ஜனாதிபதிக்கு திமுக, கூட்டணி கட்சிகள் கடிதம்

தனது செயல்கள், நடத்தையால் தமிழக ஆளுநர் பொறுப்பை வகிக்க ஆர்.என்.ரவி தகுதியற்றவர்: திரும்ப அழைக்க ஜனாதிபதிக்கு திமுக, கூட்டணி கட்சிகள் கடிதம்

by kannappan

சென்னை: தனது நடத்தையாலும் செயல்களாலும் தமிழக ஆளுநர் பொறுப்பை வகிக்க ஆர்.என்.ரவி தகுதியற்றவர் என திமுக, கூட்டணி கட்சிகள் சார்பில் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பல்வேறு கருத்துக்களுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் கூட்டாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்டனர். இதைத் தொடர்ந்து தமிழக ஆளுநரை திரும்ப பெற கோரி குடியரசு தலைவரிடம் முறையிட திமுக திட்டமிட்டது. இதன்படி திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்களுக்கு திமுகவின் பொருளாளரும், திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு கடிதம் எழுதினார். ஆளுநரை திரும்ப பெற கோரும் கடிதத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்டு குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தனர். குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்திய அரசியலமைப்புச் சட்டம், மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் ஆளுநரிடம் உள்ளதாகத் தெரிவிக்கிறது. எனினும், தனது அதிகாரத்தை மாநில முதலமைச்சரை தலைவராகக் கொண்ட அமைச்சரவை குழுவின் ஆலோசனை மற்றும் அறிவுரைப்படியே பயன்படுத்த வேண்டும். இந்தியா ஒரு இறையாண்மைமிக்க, சோசலிச, மதச்சார்பற்ற, மக்களாட்சிக் குடியரசு என்பதாகும். அதில் கூறப்பட்டுள்ளவற்றுள் ஏதாவது ஒன்றில் நம்பிக்கையில்லாத ஓர் ஆளுநர் அத்தகைய அரசியலமைப்பின் பெயரிலான பொறுப்பை வகிக்கத் தகுதியற்றவர். மேலும், அரசியல் சார்புத்தன்மை கொண்டவராக ஒரு ஆளுநர் மாறுவாரேயானால் – அந்தப் பதவியில் அவர் தொடரும் தகுதியை இழந்து விடுகிறார்.அரசமைப்புச் சட்டத்தை வகுத்த அறிஞர்கள் ஒரு நாளும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கையுடன் ஓர் ஆளுநர் இப்படி வெளிப்படையாக முரண்படுவதையோ, சட்டப்பேரவை இயற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலவரையின்றித் தாமதப்படுத்துவதையோ, மதச்சார்பின்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதையோ கற்பனையில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். அத்தகைய சூழலை எதேச்சாதிகாரம் என்றே குறிப்பிட முடியும். ஆளுநரின் செயலால் அத்தகைய ஒரு சூழல்தான் தமிழ்நாட்டில் நிலவுகிறது.ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதலாக, திமுக அரசு இரவும் பகலும் மக்களுக்காக உழைத்து, மக்கள் தன் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றிக் கொண்டு வருகிறது. எனினும், தமிழ்நாடு அரசும் சட்டப்பேரவையும் ஆற்றி வரும் பணிகளுக்குத் தடை ஏற்படுத்தும் வகையில் அரசின் கொள்கைகளுக்கு எதிராக வெளிப்படையாகப் பொதுவெளியில் முரண்படுவது, அவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பல முக்கியமான சட்டவரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் தேவையின்றிக் காலந்தாழ்த்துவது என ஆளுநர் அலுவலகம் செயல்பட்டு வருவது பற்றிய எங்கள் அதிருப்தியை அவருக்கான உச்சபட்ச மரியாதையுடன் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். மாநிலச் சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் பல்வேறு சட்டவரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தேவையின்றிக் காலந்தாழ்த்துகிறார். இது மாநில நிர்வாகம் மற்றும் சட்டப்பேரவை அலுவல்களில் தலையிடுவதாக இருக்கிறது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தன் மக்களுக்காகப் பணியாற்றுவதைத் தடுப்பதாக இருக்கிறது. எங்கள் மாநிலத்தில் ஆளுநர் தமது முதன்மையான பணியை ஆற்றுவதில்லை. கூட்டுறவுச் சங்கங்கள் தொடர்பான 97வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 2011 ஆனது உச்ச நீதிமன்றத்தால் 20-07-2021 அன்று செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இத்தீர்ப்பினைத் தொடர்ந்து, நம் நாட்டின் சட்டத்திற்கிணங்க, தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம் 1983-ஐக் கொண்டுவரும் வகையில், 7.1.2022 அன்று சட்டவரைவு எண்:11-ஐ நிறைவேற்றி ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காகச் சட்டப்பேரவை சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 10 மாதங்களாக, இச்சட்டவரைவு ஆளுநர் அலுவலகத்தில் பரிசீலிக்கப்படாமல் சிதைவுற்று வருகிறது. இதேபோல, 2021ம் ஆண்டு சட்ட முன்வரைவு எண் 43-ஆன நீட் விலக்கு சட்டவரைவு தமிழ்நாடு சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக 13.9.2021 அன்று அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக, தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் தங்களுக்கு முன் குடியரசுத் தலைவராக இருந்தவரை 28.12.2021 அன்று சந்தித்து ஒரு கோரிக்கை மனுவையும் வழங்கினோம். இதன் பின்னர், 5.1.2022 அன்று ஒன்றிய உள்துறை அமைச்சரிடமும் இது தொடர்பாக மற்றொரு கோரிக்கை மனுவும் வழங்கப்பட்டது. இதன் பின்னர், ஆர்.என்.ரவி மேற்கூறப்பட்ட சட்ட வரைவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் (ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பதால்), குடியரசுத் தலைவரின் அதிகாரங்களைத் தானே கையில் எடுத்துக் கொண்டு, சட்டப்பேரவையின் முடிவை கேள்விக்குள்ளாக்கி, சட்ட வரைவைத் சட்டப்பேரவைக்கே திருப்பி அனுப்பினார். இது ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகார வரம்பை மீறிய செயலாகும். ஆளுநரின் இத்தகைய நடத்தையால், தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட வேண்டிய சூழல் உருவாகி- நீட் விலக்கு சட்டவரைவு மீண்டும் சட்டப்பேரவையில் இயற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாநிலச் சட்டப்பேரவை வெளிப்படுத்தும் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதையே இது காட்டுகிறது. பல்வேறு மதங்கள், மொழிகள், சாதிகளைச் சார்ந்த மக்கள் அமைதியாக வாழ்ந்து வரும் சொர்க்கமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியோ கெடுவாய்ப்பாக, அடிக்கடி சமுதாயத்தில் பிளவுபடுத்தும் பேச்சுகளில் ஈடுபடுகிறார். அண்மையில் அவர், “உலகின் பிற நாடுகளைப் போலவே இந்தியாவும் ஒரு மதத்தைச் சார்ந்தே உள்ளது” என்று ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். இது இந்திய அரசியலமைப்பையே அவமதிப்பதாகும். இந்தியாவானது தனது அரசியலமைப்பையும் சட்டங்களையும் சார்ந்துள்ளதே தவிர எம்மதத்தையும் சார்ந்து இல்லை. கடந்த காலங்களிலும், ஆளுநர் சனாதன தருமத்தைப் போற்றுவது, தமிழிலக்கியத்தின் அணியான திருக்குறளுக்கு மதச்சாயம் பூசுவது, திராவிட மரபையும் தமிழ்ப் பெருமையையும் விமர்சிப்பது என இதேபோல மதரீதியான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். தமிழர்களின் உணர்வுகளையும், பெருமையையும் ஆளுநரின் இத்தகைய பேச்சுகள் புண்படுத்தியுள்ளன. ஆளுநரின் சிந்தனையானது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் முடிவுகளுக்கு இணங்கிச் செல்ல வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு எது நல்லது என்று முடிவுசெய்ய ரவி தமிழ்நாட்டில் தேர்தல்கள் எதிலும் வெற்றி பெறவில்லை என்பதை மறந்துவிடுகிறார். அண்மைக் காலங்களில், ஒன்றிய அரசில் ஆளுங்கட்சியாக உள்ளவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்கும்/இருந்த ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்குக் கைம்மாறாக ஆளுநர் பதவி தரப்படுகிறது. இவர்களுக்கு ஆளுநர் பொறுப்பை வகிப்பதற்கான அடிப்படை அறிவோ, நேர்மையோ, நடுநிலைத்தன்மையோ இல்லை. இவர்கள் அரசுக்கும் மாநில மக்களுக்கும் சங்கடமாக உருவெடுக்கிறார்கள். மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சி ஆட்சி செய்யாத மாநில அரசுகளைத் தாக்கும் வாய்ப்புக்காகத் துடிக்கும் ஒன்றிய அரசின் முகவர்களாக மட்டுமே மாநிலத் தலைநகர்களில் அமர்ந்துகொண்டிருப்பவர்கள் என்பதான ஆளுநர்களின் பிம்பம் நமது கூட்டுறவுக் கூட்டாட்சியியலைச் உருச்சிதைத்து, மக்களாட்சியை அழித்துவிடும். இத்தகைய சீர்க்கேட்டின் சிறந்த எடுத்துக்காட்டாகத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விளங்குகிறார். ஆர்.என். ரவி , “அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பேன். தமிழ்நாட்டு மக்களின் சேவைக்காகவும் நல்வாழ்க்கைக்காகவும் என்னை அர்ப்பணித்துக்கொள்வேன்” என்று அரசியல் சட்டப்பிரிவு 159-ன் கீழ் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்தை ஐயத்திற்கிடமின்றி மீறிவிட்டார். எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு முற்றிலும் மாறாக, அவர் மதவெறுப்பைத் தூண்டி- மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார். சட்டத்தினால் நிறுவப்பட்ட அரசின்பால் வெறுப்பையும் நம்பிக்கையின்மையையும் தூண்டும் வகையில் அல்லது தூண்ட முயலும் வகையில் அவரது அறிக்கைகள் இருப்பதால் அவை தேசத்துரோகமானவை என்றும் சிலர் கருதக்கூடும். தனது நடத்தையாலும் செயல்களாலும், ஆர்.என்.ரவி அரசியலமைப்பினால் நிறுவப்பட்ட ஆளுநர் பொறுப்பை வகிக்கத் தகுதியற்றவர் என்பதை நிரூபித்துவிட்டார். ஆகவே அப்பொறுப்பிலிருந்து அவர் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அரசியல் சட்டப்பிரிவு 156(1)-ன்படி,“குடியரசுத் தலைவர் விரும்பும் வரையில்” (During pleasure) ஆளுநர் தனது பதவியில் நீடிப்பார். ஆகவே, தமிழ்நாடு ஆளுநர் பதவியிலிருந்து ஆர்.என்.ரவியை உடனடியாக நீக்கி, அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைக் காப்பாற்றுமாறு குடியரசுத் தலைவரை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு முற்றிலும் மாறாக, அவர் மதவெறுப்பைத் தூண்டி- மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார். பல்வேறு மதங்கள், மொழிகள், சாதிகளைச் சார்ந்த மக்கள் அமைதியாக வாழ்ந்து வரும் சொர்க்கமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியோ கெடுவாய்ப்பாக, அடிக்கடி சமுதாயத்தில் பிளவுபடுத்தும் பேச்சுகளில் ஈடுபடுகிறார்….

You may also like

Leave a Comment

one + 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi