Friday, September 20, 2024
Home » சாமந்திப்பூ வாசம்… சந்தையெங்கும் வீசும்….

சாமந்திப்பூ வாசம்… சந்தையெங்கும் வீசும்….

by kannappan

ஏக்கருக்கு 5 டன்… 3 லட்சம் வருமானம்!சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த கல்வராயன் மலைப்பகுதியில் உள்ளது கருமந்துறை கிராமம். நெல், கரும்பு, மஞ்சள், மரவள்ளி போன்ற பயிர்கள் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வந்த ஊரில் சமீப காலமாக காய்கறி, பூக்கள் போன்ற தோட்டக்கலைப் பயிர்களும் செழித்து வளர்கின்றன. குறிப்பாக கருமந்துறை, மணியார்குண்டம்  பகுதிகளில் அனைத்து வகை காய்கறி, பூக்கள் பயிரிடப்பட்டு வருகிறது. இந்தப் பகுதிகளில் உள்ள கல்வராயன் மலைத்தொடர் மஞ்சள் செண்டு சாமந்தி, பன்னீர் ரோஜா போன்ற பூக்களால் மலர்ந்து சிரிக்கின்றன. கருமந்துறை பகுதியைச் சேர்ந்த விவசாயி எல்.ராஜேந்திரன் மஞ்சள் செண்டு சாமந்தி மற்றும் பன்னீர்ரோஜா வெள்ளாமையில் நல்ல வருவாய் ஈட்டிவருகின்றார். ஒரு அதிகாலைப் பொழுதில் அவரின் அனுபவத்தை கேட்டோம்.‘‘இந்தப் பகுதி பழத்தோட்டத்துக்கு பெயர் போன ஊர். ஆயிரம் ஏக்கர் பழப்பண்ணை இங்க தான் இருக்கு. சாமந்தி, ரோஜா, செவ்வந்தினு பலவகை பூ சாகுபடி நடக்குது. தக்காளி, பீன்ஸ், வெண்டைக்காய், கத்திரி, கீரை மாதிரியான தோட்டக்கலைப் பயிர்களை பருவத்துக்குத் தக்கபடி நல்லாவே மகசூல் செய்றோம்.2007ல் முதல் முறையா இந்தப் பகுதியில் காய்கறி பயிர்களை பரிசோதனை முறையில நடவு செய்தேன். இங்க இருக்குற வேளாண் துறை அதிகாரிகள் எங்கள வெளியூர்களுக்கு கூப்பிட்டு போய் நல்லா விவசாயம் நடக்குற பகுதிகளை காட்டுவாங்க. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில நடந்த தோட்டக்கலை பயிற்சி வகுப்புல கலந்துகிட்டு ட்ரே நாற்றங்கால் மூலமாக காய்கறி, பூ விவசாயத்தை பத்தி தெரிஞ்சிகிட்டோம். அப்புறமா அங்கிருந்து ட்ரே நாற்றுகளை கருமந்துறைக்கு கொண்டு வந்து வெற்றிகரமா வெள்ளாமை பார்த்தேன். இதேமாதிரி ஊர்ல இருக்கிற மற்றவிவசாயிகளுக்கும்  பயிர் செய்ய உதவி செஞ்சேன். எங்கப் பகுதியில் எல்லா நாட்களுக்கும் தக்காளி நல்ல விளைச்சலைக் கொடுக்கும். தக்காளி விளைச்சலுக்கான சீசன் இல்லாத பருவத்துலயே 10 செண்டு நிலத்துல தக்காளி நட்டு 150 கிரேடு மகசூல் பார்த்தேன். அப்பறம் ஒவ்வொரு முறையும் அவ்வளவு தூரம் போய் ட்ரே நாற்றங்கால் வாங்கிட்டு வந்து நடவு செய்துட்டு திரும்ப ட்ரேவ கொடுக்க போறதுனு அலைச்சல் அதிகம் இருந்துச்சி. அதனால நானே ட்ரே நாற்றங்கால் செய்ய ஆரம்பித்துவிட்டேன்.சாமந்தி பூவைப் பொறுத்தவரை ஐப்பசி, கார்த்திகை மாசத்துல தேவை அதிகமாயிருக்கும். அப்போ தான் நல்ல விலையும் கிடைக்கும். சித்திரையில செடி நட்டா, ஐப்பசியில அறுவடை செய்யமுடியும். நடவு செய்த 120வது நாளில் பூக்கத் துவங்கும். வாரத்துல 5 நாள் தினசரி பூ எடுக்கலாம். ஆறுமாதம் வரைக்கும் மகசூல் எடுக்கலாம். இதையெல்லாம் மனசுல வெச்சி, வருசா வருசம் சித்திரையில அதிக அளவுல சாமந்தி நடுறது இப்போ இந்தப்பகுதியில வழக்கமாகிடுச்சி. ஐப்பசி பொறந்துட்டா… ஊரெல்லாம் சாமந்தி காடாத்தான் இருக்கும்.சாமந்தி பயிரில் வழக்கமாக ஏக்கருக்கு 10 டன் மகசூல் கிடைக்கும். இந்த முறை அதிக மழை பெய்ததால் மகசூல் குறைந்திருக்கிறது. இருந்தபோதும் ஒரு ஏக்கரில் இருந்து 5 டன் மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். ஒரு கிலோ பூ ரூ.50 முதல் 150 வரை விலைபோகிறது. சராசரியாக ரூ.60 கிடைக்கும். இதன்மூலம் ஒரு டன் பூக்கள் மூலம் ரூ.60 ஆயிரம் வருமானம் கிடைக்கும். 5 டன் பூக்கள் மூலம் ரூ.3 லட்சம் வருமானம் கிடைக்கும். எல்லா வகை மண்ணிலும் சாமந்தி நன்றாக வளரும்.நாற்றுக்காக ஒரே ஒரு பாத்தியை மட்டும் விட்டுவிட்டு, மீதியை அழித்துவிட வேண்டும். நாற்றுக்காக விட்டிருக்கும் பாத்தியில இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி, தழையவிட்டு, அந்தச் செடிகளின் மேல் கட்டையை நீக்கி, வேரை மட்டும் வெட்டி எடுக்கவேண்டும். அவற்றை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து, சிறுசிறு கட்டுகளாக கட்டிக்கொள்ள வேண்டும். ஏக்கருக்கு நானூறு முதல் நானூற்று ஐம்பது கட்டுகள் வரை தேவைப்படும்.சித்திரை மாதம்தான் சாமந்தி நடவுக்கு சரியான பருவம். இரண்டு முறை ஆட்டுக்கிடை போடலாம் அல்லது ஆறு வண்டி அளவுக்கு மாட்டு எரு கொடுக்கலாம். நிலத்தை நான்கு முறை நன்கு உழவு செய்து, பாத்தி அமைத்து,4க்கு 1 அடி வரிசையில் செடியை நட வேண்டும். வேர்களை நடும் போது, அடிவேர், நுனிவேர் பார்த்து கவனமாக நட வேண்டும். அடிவேரைப் பார்த்து நிலத்தில் நடவேண்டும். இரண்டு இரண்டு வேர்களாக நடும்போது, ஒன்று பழுதானாலும் இன்னொன்று முளைத்துக்கொள்ளும். நாற்பது நாள் இடை வெளியில் மொத்தம் மூன்று முறை கட்டாயம் களை எடுக்கவேண்டும். சொட்டு நீர்ப் பாசனத்தில் சரியாக தண்ணீர் விட வேண்டும்.முதல் தடவை களை எடுப்பதற்கு 20 ஆட்களும், அடுத்தடுத்த இரண்டு களைகளுக்கு 15 ஆட்கள் வீதமும் மொத்தம் 50 ஆட்களுக்கு வேலை தேவைப்படும். கடைசி களைக்கு பிறகு  தாவர வகைகளை அவ்வப்போது பிடுங்க வேண்டும். களையெடுத்த பிறகு, இரண்டு மூட்டை டி.ஏ.பி. நூறு கிலோ கடலை புண்ணாக்கு சேர்த்து செடிக்கு கொடுக்கவேண்டும்.பூ நன்றாக மலரும் செடிகளுக்கு மண் அணைப்பதோடு, அருகில் சிறு குச்சிகளை நட்டு, அவற்றில் கயிறு மூலம் கட்டிவிடுவது அவசியம். அசுவினி, வெள்ளை ஈ இரண்டும் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதற்கு மோனோகு ரோட்டோபாஸ், செவின் பவுடர் ஆகியவற்றைச் சேர்த்து அடிக்கவேண்டும். மழை அதிகமாக இருந்தால் செடிகள் கீழே சாய்ந்துவிடும். எல்லாவற்றையும் சமாளித்து முடித்தால் நல்ல அறுவடைதான்.செவ்வந்தி எனப்படும் மஞ்சள் செண்டு சாமந்திக்கு பொதுவாகவே உள்ளுர் வெளிநாடு என நல்ல வரவேற்பு உள்ளது. ஆயுத பூஜை, சரஸ்வதி புஜை, தீபாவளி போன்ற பண்டிகை காலத்தை மனதில் கொண்டு நடவு செய்ய வேண்டும். புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய சமயம் சார்ந்த வழிபாடுகள் தொடர்ச்சியாக நடைபெறுவதால் இதன் தேவை அதிகம்.சாமந்தி தோட்டத்தில் தண்ணீர் தேங்குவது ஆபத்தானது. அப்படி தேங்கி நின்றால் கருகல் நோய் தாக்கும். இலை அழுக ஆரம்பித்து, முழுச்செடியும் அழுகிவிடும். அதனால் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.மற்ற சாமந்திப் பூக்களை விட, மஞ்சள் செண்டு மழைக்கு தாங்காது. மழையைப் பொறுத்து கிடைத்தவரை லாபம் என்று முன்கூட்டியே அறுவடை செய்துவிடவேண்டும். இல்லையென்றால் நஷ்டம் ஏற்படும்.விற்பனையில் சிக்கல் இல்லைகருமந்துறையில் மலரும் பூக்களை சந்தைப்படுத்துவதில் எங்கள் விவசாயிகளுக்கு எந்த சிரமமும் இருப்பதில்லை. கருமந்துறையிலேயே தினசரி மார்க்கெட் இயங்கி வருகிறது. விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் பூக்களை இங்கு தினமும் எடை போட்டு கொடுத்துவிடலாம். இந்த பூக்களை வியாபாரிகள் சேலம் மார்க்கெட்டுக்கு பஸ் மூலம் அனுப்பி வைத்து விடுவார்கள். மாதம் ஒருமுறை விவசாயிகளுக்கு மொத்தமாக பூக்களுக்கு உண்டான தொகையை பைசல் செய்து விடுகிறார்கள். இது தவிர வாழப்பாடியில் இரண்டு தனியார் பூ மார்க்கெட் இயங்கி வருகின்றன. சில விவசாயிகள் இங்கு சென்றும் பூக்களை விற்பனை செய்து விடுகிறார்கள். சேலத்தில் அரசு இடத்தில் மிகப்பெரிய பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. விவசாயிகள் அதிக அளவில் பூக்களை அறுவடை செய்தால் வாடகைக்கு வாகனத்தை பிடித்து சேலம் கொண்டு சென்று விடுகிறார்கள். இரண்டு, மூன்று விவசாயிகள் சேர்ந்து இது போல் செய்கிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு பெரும் தொகை லாபமாக கிடைக்கிறது. என்கிறார் விவசாயி முருகன்.தொடர்புக்கு: எல். ராஜேந்திரன் 97510 29270.தொகுப்பு: திலீபன் புகழ் மற்றும் அ.உ.வீரமணி

You may also like

Leave a Comment

six + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi