Saturday, October 5, 2024
Home » கட்சியை, ஆட்சியை இரு கண்களாக காக்கவேண்டும் தமிழகத்தை இனி திமுகதான் ஆளும்: முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் சூளுரை; லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு

கட்சியை, ஆட்சியை இரு கண்களாக காக்கவேண்டும் தமிழகத்தை இனி திமுகதான் ஆளும்: முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் சூளுரை; லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு

by kannappan

விருதுநகர்: விருதுநகர் – சாத்தூர்  இடையே  பட்டம்புதூர் அண்ணா நகரில் 200 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட கலைஞர் திடலில், அண்ணா பிறந்த தினம், திமுக உதயமான  தினம், தந்தை பெரியார் பிறந்த தினம் என திமுக முப்பெரும் விழா நேற்று மாலை பிரமாண்டமாக நடைபெற்றது. தமிழகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் பங்கேற்றனர். விழாவில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தந்தை பெரியார் பிறந்தநாள், அறிஞர் அண்ணா பிறந்தநாள், கழகம் தோன்றிய நாள் ஆகிய மூன்றும் இணைந்ததுதான் இந்த முப்பெரும் விழாவாகும். செப். 15தான் திருநாள். நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ளும் நாள். ஐந்து பேருக்கு இங்கு விருது தரப்பட்டுள்ளது. ஐவரும் திமுகவின் முகமாக இருப்பவர்கள். கலைஞர் கடிதம் மூலம் உடன்பிறப்புகளை திரட்டக் கூடியவர். வரலாற்று சிறப்புமிக்க இவ்விழாவில் மகுடம் சூட்டுவது போல் உடன்பிறப்புகளுக்கு கலைஞர்கள் எழுதிய கடிதங்கள் வெளியிடப்படுகிறது. 4,041 கடிதங்கள் எழுதி, உலகில் இத்தனை கடிதங்களை எழுதிய தலைவர்  கலைஞர்தான்.  இவர் எழுதிய 21,501 பக்கங்கள் 54 தொகுதிகளாக பதிக்கப்பட்டுள்ளது. கலைஞர் எழுதிய கடிதங்களை, மொத்த பேச்சை, எழுத்தை வெளியிட்டால் 250க்கும் அதிக தொகுதிகளை பிடிக்கும்.கலைஞரின் கடிதங்களை படித்தாலே தமிழகத்தின், இந்தியாவின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். சில கடிதங்கள் மூலம் ஆட்சி அமைப்பார். சர்வாதிகாரத்தை வீழ்த்தி விடுவார். இந்த கடிதத் தொகுதி தொண்டர்கள் அனைவரது இல்லங்களிலும் இருக்க வேண்டும் என கேட்டுக் கெள்கிறேன். இவ்விழாவில், எனது திராவிட மாடல் என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது. திராவிடம் என்றால் எல்லோருக்கும் கொடு என்பதாகும், கல்வியானாலும், வேலை வாய்ப்பானாலும், கோயிலானாலும் அனைவரும் சமம் என்ற கோட்பாடுடையது. எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிடம். உயர்ந்தவர், தாழ்ந்தவர், வேலை வாய்ப்பு தராதது, கோயிலுக்கு நுழைய விடாதது  இதுதான் ஆரிய மாடல். இதற்கு நேர் எதிரானது திராவிட மாடல்.  திராவிட முன்னேற்ற கழகத்தின் தொண்டர்களான உங்கள் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறோம். நான் தனிப்பட்ட ஸ்டாலின் அல்ல. ஒரு  தலைமை தொண்டராக அமர்ந்துள்ளேன். உடன்பிறப்புகளால் உட்கார வைக்கப்பட்டுள்ளேன். கட்சியையும்,  ஆட்சியையும் ஒரு சேர வழி நடத்திவருகிறேன். கட்சி இல்லாமல் ஆட்சி இல்லை. இனியும் தமிழ்நாட்டை திமுகதான் ஆளும் எனச் சொல்லி வருகிறேன். இதனை அகங்காரத்தில் சொல்லவில்லை. கலைஞரின் லட்சோப லட்ச தொண்டர்கள் மீது நம்பிக்கை வைத்துதான் இதைச் சொல்கிறேன். ஆட்சி இருந்தால்தான் இந்த நாட்டை வாழ்விக்க முடியும். கனவுத்திட்டத்தை உருவாக்க முடியும். கட்சியை, ஆட்சியை இரு கண்களாக காக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். மக்களும் மகிழ்ச்சி அடைய வேண்டும், கழக தொண்டர்களும் மகிழ்ச்சி அடைய வேண்டும். அத்தகைய சூழலை நாம் எப்போதும் தக்க வைக்க வேண்டும். கூட்டாட்சி, மாநில சுயாட்சி, சகோதரத்துவம், சமத்துவத்தை இந்தியா முழுமைக்கும் உருவாக்க வேண்டும். நாம் வளமான மாநிலமாக இருப்பதால்தான் நன்மைகள் செய்ய முடிகிறது. அதிகாரத்தை நம்மிடமிருந்து பறிக்க பார்க்கிறார்கள். ஒன்றிய அரசால் சரக்கு சேவை வரி மூலம் நிதியுரிமை பறிக்கப்பட்டுள்ளது. நீட் போன்றவற்றால் நமது கல்விக்கொள்கையும் மறுக்கப்பட்டுள்ளது. இவை மக்கள் விரோத சட்டங்களாக இருக்கிறது. மக்களுக்கு துரோகம் செய்து வருகின்றனர். ஆளுநர்கள்  மூலம் இரட்டை ஆட்சி நடத்த பார்க்கிறார்கள். அதை தடுக்க வேண்டும். நமது எம்பிக்கள் தமிழகம், புதுவையில் 40க்கு 40 உறுப்பினர்கள் இருந்தாக வேண்டும். தற்போதுள்ள எம்பிக்கள் பதவியேற்ற போது, தமிழ், அண்ணா, கலைஞர் வாழ்க என்று பாராளுமன்றத்தையே அதிர வைத்தனர்.நாட்டின் 3வது கட்சியாக திமுக அமைந்திருப்பது பெருமை. இது தொடர பணியாற்ற  வேண்டும்.  40க்கு 40 என்ற வெற்றியை நாம் அடைந்தாக வேண்டும். 2004ல் இதே விருதுநகரில் நாடாளுமன்ற தேர்தலின்போது கலைஞர் முழு வெற்றி பெறுவோம் என சூளுரைத்து முழக்கமிட்டார். அதேபோல், 2019ல் உங்களின் ஒருவனாக நான் சூளுரைத்து முழங்கினேன். அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக நாளும் நமதே நாற்பதும் நமதே என உறுதி ஏற்போம். அதற்கு இந்த  விருதுநகர் விழா தொடக்கமாக அமையட்டும் என்றார். விழாவில் திமுக பொதுச்செயலாளர்  துரைமுருகன்,  சாத்தூர்  ராமச்சந்திரன், முதன்மை  செயலாளர் கே.என்.நேரு, துணை  பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி,  க.பொன்முடி,  சுப்புலட்சுமி ஜெகதீசன்,  ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர். அமைச்சர் தங்கம் தென்னரசு நன்றி கூறினார்.* டி.ஆர்.பாலுவுக்கு கலைஞர் விருதுதிமுக முப்பெரும் விழாவில் சம்பூர்ணம் சாமிநாதனுக்கு பெரியார் விருது, கோவை இரா.மோகனுக்கு அண்ணா விருது, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கலைஞர் விருது, புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது, குன்னூர் சீனிவாசனுக்கு பேராசிரியர் விருது, பொற்கிழி மற்றும் பாராட்டு சான்றிதழ்களை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து கலைஞர், தொண்டர்களுக்கு முரசொலியில் எழுதிய 4,041 கடிதங்கள், 21,510 பக்கங்களை கொண்ட 54 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பு வௌியிடப்பட்டது.* பிரசாரத்தில் சொன்னார்… முதல்வரானதும் செய்தார்… பணி ஆணை பெற்ற பெண் பெருமிதம்2020, பிப்ரவரி மாதம் நடந்த தேர்தல் பிரசாரத்தில், விருதுநகர் அருகே பட்டம்புதூரில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின்’ பிரசார கூட்டத்தில் சிவகாசியைச் சேர்ந்த பாண்டிதேவி, தனது கணவர் கொத்தனார் வேலை செய்தபோது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிந்தார். ஆதரவற்ற தனக்கு 15 வயதில் ஒரு பெண் குழந்தை மற்றும் 13 வயதில் மூளை வளர்ச்சி இல்லாத ஆண் குழந்தையுடன் சிரமத்தில் இருப்பதாகவும், சத்துணவு, அங்கன்வாடியில் பணியாளர் வேலை கோரி 40க்கும் மேற்பட்ட முறை மனு அளித்தும் வேலை கிடைக்கவில்லை. தாங்கள் முதல்வரானதும் வேலை வழங்க வேண்டும் என மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்டு, ஆட்சிக்கு வந்ததும் வேலை வழங்குவதாக உறுதி அளித்தார். ஆட்சி பொறுப்பேற்றதும், ஆதரவற்ற பெண்ணிற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று ரூ.2 லட்சம் நிதியளித்தார். இதை தொடர்ந்து நேற்று விருதுநகர் கலெக்டர் அலுவலக அடிக்கல் நாட்டு விழாவில், பாண்டிதேவிக்கு சிவகாசி சித்துராஜபுரம் மேலூர் மையத்தில், அங்கன்வாடி பணியாளர் நியமனத்திற்கான ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பாண்டிதேவி கூறுகையில், ‘‘கடந்த அதிமுக ஆட்சியில் ஆதரவற்ற நிலையில் மூளை வளர்ச்சி குன்றிய மகனுடன் சிரமத்தில் இருப்பதால் வேலை வழங்கக்கோரி 40 முறைக்கு மேல் மனு அளித்தும், வேலை வழங்கவில்லை. தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதியின்படி, முதல்வர், அங்கன்வாடி பணியாளருக்கான பணி நியமன ஆணையை வழங்கி உள்ளார். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த ஆட்சியின்போது தொடர்ந்து என் குடும்ப நிலையை பற்றி செய்தி வெளியிட்டு, திமுக தலைவர் கவனத்திற்கு கொண்டு சென்ற தினகரன் நாளிதழுக்கு நன்றி. எனது கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு கோடி நன்றி’’ என்றார்….

You may also like

Leave a Comment

2 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi