Tuesday, September 24, 2024
Home » அனைத்து சமூக வளர்ச்சியை உள்ளடக்கியது திராவிட மாடல் மதத்தை வைத்து அரசியல் செய்யும் ஆன்மிக வியாதிகள்: திருவண்ணாமலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கு

அனைத்து சமூக வளர்ச்சியை உள்ளடக்கியது திராவிட மாடல் மதத்தை வைத்து அரசியல் செய்யும் ஆன்மிக வியாதிகள்: திருவண்ணாமலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கு

by kannappan

திருவண்ணாமலை: அனைத்து சமூக வளர்ச்சியை உள்ளடக்கியது திராவிட மாடல். ஆன்மிகத்தைத் தங்களது அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தக்கூடியவர்கள் ஆன்மிக வியாதிகள்  என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். திருவண்ணாமலையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில், ₹1,103 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி, திட்டப்பணிகளை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:1989ல் திருவண்ணாமலையை தனி மாவட்டமாக உருவாக்கியவர் கலைஞர். கோடிக்கணக்கான மக்களைச் சந்திக்கும் எனது பயணத்தை, திமுக ஆட்சி அமைந்தாலே, திருவண்ணாமலை மாவட்டமானது புத்தெழுச்சி பெறும். அதை இங்கே கூடியிருக்கிற மக்களின் முகங்களில் பார்க்கிறேன். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அமைத்துக் கொடுத்தவரும் கலைஞர்தான். மிக முக்கியமானது, 1975ம் ஆண்டு அண்ணாமலையார் கோயில் திருப்பணியை முழுமையாக செய்தது திமுக அரசுதான். இந்தத் திருப்பணிக்கு தனிக்குழுவை அமைத்து, அதற்காக அக்கறை எடுத்துக் கொண்டார் முதல்வர் கலைஞர். அன்றைய நாளில் ஒரு பெரும் தொகையாக, ₹7 லட்சத்து 25 ஆயிரம் நிதி ஒதுக்கினார். மேலும், ஆணையர் பொதுநல நிதியில் இருந்து ₹1 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தார். தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் இருந்து நன்கொடைகள் கொடுக்கவும் ஏற்பாடு செய்தார். அதைவிட முக்கியமாக இன்னொன்று, அண்ணாமலையார் கோயிலை பாதுகாத்ததும் திமுக அரசுதான். அண்ணாமலையார் கோயிலானது பழம்பெருமையும், அழகியலும் பிரம்மாண்டமும் கொண்டது. அதனுடைய தொன்மை, கம்பீரம் காரணமாக, அதைத் தொல்பொருள் துறை 2004ல் கையகப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டது.அப்போது, நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்திற்காக கலைஞர்திருவண்ணாமலைக்கு வந்தார். அவரை, ஊர் பொதுமக்களும், பக்தர்களும் சந்தித்து கோரிக்கை வைத்தார்கள். தொல்பொருள் துறை கட்டுப்பாட்டுக்குள் கோயில் போனால், ஆன்மிகப் பணிகள் தொய்வடையும் என்றனர். அப்போது, அடுத்து அமையும் ஆட்சியின் கவனத்துக்கு இதனைக் கொண்டு செல்வேன் என்று கலைஞர் உறுதி தந்தார்.அந்த தேர்தலில் 40க்கு 40 வெற்றிப் பெற்றோம். ஒன்றியத்தில் அமைந்த காங்கிரஸ் அரசுடன் பேசி, அண்ணாமலையார் கோயிலை பக்தர்களின் எண்ணத்திற்கேற்ப மீட்டுக் கொடுத்தது திமுக என்பதை மறந்து விடக்கூடாது. இன்றைக்கு, மதத்தின் பேரால் அரசியல் நடத்துபவர்களுக்கு இந்த வரலாறு எல்லாம் தெரியாது. அண்ணாமலையார் கோயில் என்பது தமிழ்நாட்டின் சொத்து. அதைக் கட்டிக் காத்தது திமுக அரசு. திமுக அரசுக்கும் திருவண்ணாமலைக்கும் நீண்ட உறவு இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.இந்த மாவட்டத்தில் மட்டும், ஓராண்டில் 13 திருக்கோயில்களின் குடமுழுக்கு விழா நடந்திருக்கிறது. 131 திருக்கோயில்களில் ₹6,094 லட்சம் மதிப்பீட்டிலான திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இவையெல்லாம் மதத்தை வைத்து அரசியல் செய்கின்றவர்களின் கண்களுக்குத் தெரியாது. ஏனென்றால், அவர்கள் உண்மையான ஆன்மிகவாதிகள் அல்ல, அவர்கள் உண்மையான ஆன்மிக வியாதிகள். ஆன்மிகப் போலிகள். ஆன்மிகத்தைத் தங்களது அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தக்கூடிய எண்ணத்தைக் கொண்டவர்கள்.நாங்கள் மதத்தை வைத்து கட்சி நடத்தவில்லை. கட்சியானாலும், ஆட்சியானாலும் மக்கள் முன் நின்று நாங்கள் ஆட்சி நடத்துகிறோம். கட்சி நடத்துகிறோம்.  அதுதான் அனைத்துத் துறை வளர்ச்சி. அனைத்து மாவட்ட வளர்ச்சி. அனைத்துத் தொழில் வளர்ச்சி. அனைத்து சமூக வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசை இன்றைக்கு நாம் நடத்தி வருகிறோம். அந்த அடிப்படையில்தான், இந்து சமய அறநிலையத் துறை மூலமாகவும் சிறப்பான பணிகளை இந்த அரசு இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறது.கோயிலுக்குத் திருப்பணி செய்வது திராவிட மாடலா? என்று சிலர் கேள்வி கேட்கிறார்கள். அனைத்துத் துறையையும் சமமாக வளர்ப்பதுதான் ‘திராவிடமாடல்’ என்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். இன்னும் சொன்னால், திராவிட இயக்கத்தின் தாய்க் கழகமான நீதிக்கட்சி ஆட்சி காலத்தில்தான், இந்துசமய அறநிலையத் துறை சட்டமே போட்டோம். 1925ம் ஆண்டு அந்த சட்டம் உருவாக்கப்பட்டது.கோயில்களை முறைப்படுத்துவதற்காக, ஒரு சட்டம் வேண்டுமென்று ஆன்மிக எண்ணம் கொண்டவர்கள் கோரிக்கை வைத்தபோது, அதனை ஏற்று, சட்டம் போட்ட ஆட்சிதான் நீதிக்கட்சியின் ஆட்சி. எது திராவிட மாடல்? என்று பிற்போக்குத்தனங்களுக்கும், பொய்களுக்கும் பெருமை எனும் முலாம் பூசி பேசுபவர்கள் இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.ஆன்மிகத்தின் பெயரால் இன்றைக்கு அவர்கள் அரசியல் நடத்த முயற்சிக்கிறார்கள். ஆன்மிகத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல. ஆன்மிகத்தின் பெயரால், மனிதர்களை சாதியால், மதத்தால் பிளவுபடுத்துபவர்களுக்குத்தான் நாங்கள் எதிரிகள். மனிதர்களைப் பிளவுபடுத்தும் கருவியாக ஆன்மிகம் இருக்க முடியாது. மனிதர்களைப் பிளவுபடுத்துவதற்கு ஆன்மிகத்தை பயன்படுத்துபவர்களும் உண்மையான ஆன்மிகவாதிகளாக நிச்சயமாக இருக்க முடியாது.ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பதுதான் எங்கள் அறநெறி. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பதுதான் எங்கள் அறநெறி. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதுதான் எங்கள் அறநெறி. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு  என்பதுதான் எங்கள் அறநெறி. அத்தகைய அறநெறியைக் கொண்ட ஆட்சியை நாங்கள் நடத்தி வருகிறோம்.அறம் என்றால் என்னவென்றே தெரியாத, அறிவுக்கு ஒவ்வாத மூடக்கருத்துகளை முதுகில் தூக்கிச் சுமந்துக் கொண்டிருக்கும் சிலருக்கு, போலியான பிம்பங்களைக் கட்டமைக்க வேண்டுமானால் உளறல்களும் பொய்களும் தான் தேவை. மக்களுக்குத் தேவையான கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு வசதிகள், வேளாண்மை, தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புகள், புதிய தொழில்கள், புதிய முயற்சிகள் என்று தமிழ்நாடும் தமிழினமும் முன்னேற சிந்தித்து செயல்படுவதுதான், திமுக. அதுதான் திராவிட அரசியல் மரபு.அறிவார்ந்த யாரும், எவரும் இந்த அரசுக்கு ஆலோசனைகள் சொல்லலாம். அதனை நாங்கள் செயல்படுத்துவோம். அறிவார்ந்தவர்கள் பேசுவதை மட்டுமே நாம் காதில் கேட்க வேண்டும். நமக்கு ஆக்கப்பூர்வமான பணிகள் காத்துக் கிடக்கிறது. இது தேர்தல் காலம் அல்ல. மக்களுக்கு நன்மை செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ள காலம் இது.பொய்யும், புரட்டும், மலிவான விளம்பரம் தேடும் வீணர்களைப் பற்றி ஐ டோன்ட் கேர். நான் மட்டுமல்ல, நீங்கள் ஒவ்வொருவரும் ‘ஐ டோன்ட் கேர்’ என்று சொல்லி நகர வேண்டும். அப்படி பொய்களை அநாதைகளாக விட்டு, உண்மை எனும் வெளிச்சத்தைத் துணையாகக் கொண்டு நடந்தாலே, நாம் முன்னேறலாம். நம்முடைய இலக்குகளை அடையலாம்.நான் இங்கே இருக்கக்கூடிய மக்கள் பிரதிநிதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் சொல்ல விரும்புவது, காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது என்பதை யாரும் மறக்க வேண்டாம். கோப்புகள் சிகப்பு நாடாவிலே கட்டப்பட்டு உறங்கிக் கொண்டிருக்கும்போது, ஊழல் எழுந்து உட்கார்ந்து ஊர் சுற்றப் புறப்பட்டு விடுகிறது என்று கலைஞர் குறிப்பிடுவார். அதை மனதில் கொண்டு மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை எந்த கோப்பும், எந்தப் பணியும் தேங்க விடக்கூடாது என்ற எண்ணத்தோடு பணியாற்றுங்கள்.இதனை அனைத்து மட்டத்திலும் உறுதி செய்வதற்காகத் தான், எத்தனை அலுவல்களுக்கு நடுவிலும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் நான் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள காரணமாகும். மக்கள்தான் நம் எஜமானர்கள். திருவண்ணாமலையில், 1957ம் ஆண்டு நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பேரறிஞர் அண்ணா, எங்களுக்கு இந்த உலகத்தில் இரண்டு எஜமானர்கள்தான் உண்டு. ஒன்று எங்களின் மனச்சாட்சி. மற்றொன்று இந்த நாட்டு மக்கள் என்று சொன்னார்.என்னுடைய மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல் மக்கள் பணியாற்றி வருகிறேன். என்மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கை, நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. உங்கள் நம்பிக்கையைத்தான், நான் எல்லாவற்றையும்விட மேலானதாக நினைக்கிறேன். என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என்பது, தனிப்பட்ட என் மீதான நம்பிக்கை மட்டுமல்ல. ஒடுக்கப்பட்டிருந்த இந்தத் தமிழினம் ஒளிபெற, உதயசூரியன் என உதித்த, திமுக மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற என்றும் உங்களில் ஒருவனாக உழைப்பேன்.பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் காட்டிய கொள்கைகளின் வழி நடப்போம். அனைத்து வளங்களும் கொண்ட மாநிலமாகத் இந்தத் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டுவோம். திராவிட மாடல் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலையை அடைவோம்.இவ்வாறு அவர் ேபசினார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு  தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்பி சி.என்.அண்ணாதுரை,  எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி  ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் பா.முருகேஷ் வரவேற்றார். விழாவில், அமைச்சர்கள் க.பொன்முடி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.நம் மாநிலத்துக்கு பெருமைமிகு அடையாளங்கள் அமையப்போகிறதுநிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியபோது, இன்றைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெறக்கூடிய பல்வேறு மாபெரும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மதுரையில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பெயரால் மாபெரும் நூலகம் தயாராகிக் கொண்டிருக்கிறது. சென்னையில் ₹230 கோடி மதிப்பீட்டில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை அமையப் போகிறது. சென்னையில் வங்கக் கடலோரம்  தலைவர் கலைஞருக்கு நினைவகம் நிறுவப்பட்டு வருகிறது. கடந்தகால ஆட்சியாளர்களால் முடக்கி வைக்கப்பட்ட மாபெரும் திட்டமான மதுரவாயல்- துறைமுகம் உயர்மட்டச் சாலை அமையப் போகின்றது. கிழக்குக் கடற்கரைச் சாலை விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது.இப்படி எண்ணற்ற பெரும் பணிகள். இவை அனைத்தையும் செயல்படுத்துவதில் தன்னை ஒப்படைத்துக் கொண்டிருக்கக்கூடியவர் தான் அமைச்சர் எ.வ.வேலு. கலைஞர் நினைவகம், மதுரை நூலகம், கிண்டி மருத்துவமனை எல்லாம் வருங்காலத்தில் தமிழ்நாட்டின் அடையாளங்களாக மாறப் போகின்றது. சிறந்த செயல்வீரருக்கான அடையாளமாக இருக்கின்ற எ.வ.வேலு, அவற்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். தனிப்பட்ட அவருக்கு மட்டுமல்ல, எனக்கு மட்டுமல்ல, நம் அரசுக்கு மட்டுமல்ல, நம் மாநிலத்துக்கே பெருமைமிகு அடையாளங்களாக இவை அமையப் போகிறது. இவ்வாறு அவர் கூறினார்….

You may also like

Leave a Comment

19 − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi