Monday, September 30, 2024
Home » திருப்பதி அலிபிரி முதல் திருமலை வரை

திருப்பதி அலிபிரி முதல் திருமலை வரை

by Lavanya

ஜலப்பிரசாதம்

நடைபயணத்தின் போது, ஆங்காங்கே `ஜலப்பிரசாதம்’ என்கின்ற பெயரில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. 24 மணி நேரமும் தண்ணீர் ருசியாக வருகின்றன. மிக அருமையான திட்டம். நடைபாதையில் மட்டுமல்லாது, திருமலை முழுவதிலும் இந்த ஜலப்பிரசாத திட்டம் இலவசமாக செயல்பட்டு வருகிறது என்று சொன்னால், திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு இந்த சமயத்தில் நன்றிகள் கூறியே ஆகவேண்டும். கிட்டத்தட்ட காலை 6.00 மணியை நெருங்கிவிட்டோம். கடந்துவந்த பாதையினை திரும்பிப் பார்த்தால், கட்டிடங்கள் அனைத்தும் மிக சிறியதாக காணப்படுகின்றன. இதனைக் கண்டதும், “உலகம் மிக சிறியது’’ என்கின்ற வாக்கியம் நினைவில் தள்ளாடியது. நம் வாழ்வில் நடக்கும் பிரச்னைகள்கூட அப்படித்தான். அருகில் வைத்து பார்க்குபோது பெரியதாகவும், அதனை சற்று தூரத்தில் தள்ளி வைத்து பார்க்கும்போது சிறியதாகவும் தெரியும்.

எங்கும் அமராது செல்லலாமே

“திருமலை படிகளை ஏறும்போது, அடிக்கடி அமர்ந்து ஓய்வெடுத்து நடைப் பயணத்தை மேற்கொண்டால், கால்கள் வலியெடுக்கும். மேலும், பயணநேரம் தாமதமாகும். ஆகையால், கூடியவரையில் எங்கும் அமராது செல்வது நல்லது. அல்லது அமர்ந்துக் கொள்ளாமல்
எத்தனை படிகள் ஏற முடிகிறதோ, அத்தனை படிகளை ஏறியதும், சிறிது நேரம் நின்றுக் கொண்டே ஓய்வெடுக்கலாம். பிறகு, மீண்டும் பயணத்தை தொடங்கலாம். அவ்வளவாக சிரமம் தெரியாது’’ என்று பெரியவர்கள் சொல்லி கேட்டிருக்கின்றோம். அதுபடியே.. முடிந்தவரை எங்கேயும் அமர்ந்து ஓய்வெடுக்காது பயணத்தை தொடர்கிறோம். அதுபோலவே சற்று சிரமம் தெரியவில்லை. நம் முன்னோர்கள் மிக சரியாக நமக்காக இது போன்று பலவற்றை வகுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். நீங்களும், நடைப் பயணத்தின்போது எங்கும் அமராது செல்ல, முயற்சிக்கவும். 1,200 படிகளை கடந்து சென்றுக் கொண்டிருக்கின்றோம். இன்னும், 2,350 படிகளை கடந்தாகவேண்டும். இப்போது, நம்முள் இருந்த மலைப்பு நீங்கிவிட்டது. இதுபோல், தினமும் நம் வீட்டு படிகளை ஏறி இறங்கினாலே போதும், நம் உடல் புத்துணர்ச்சி பெரும்.

காளி கோபுரம்

மிக துள்ளியமாக, 2000 படிகள் ஏறியவுடன், “காளி கோபுரம்’’ என்று சொல்லக் கூடிய ஓர் அழகிய கோபுரம் ஒன்று காணப்படுகிறது. இந்த கோபுரத்தின் மீது மின் விளக்கினால் ஆனமிகப் பெரிய பெருமாளின் திருநாமம் சாற்றப்பட்டுள்ளது. ஏழு மலைகளின் நடுவில் இந்த கோபுரமானது அமைந்திருக்கிறது. திருப்பதி அருகே வந்துவிட்டோம் என்று இந்த காளி கோபுரத்தின் மீது எரிகின்ற திருநாம விளக்கை வைத்துதான் தெரிந்துக் கொள்வார்கள். பல கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து ஜொலிக்கும் காளி கோபுரத்தை கண்டாலே ஏழுமலையானை கண்ட பரவசம் நம் மனதில் தோன்றும். காரணம், மலையப்பஸ்வாமி எப்படி சங்கு – சக்ரத்துடன் திருநாமத்தை தரித்துக் கொண்டு காட்சிக் கொடுப்பாரோ, அது போன்ற வடிவத்தை இந்த காளிகோபுரத்தில் காண்பதால், பரவசம் ஏற்படுகின்றன.`கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பார்கள். ஏழுமலைக்கு அருகிலேயே வசித்து வரும் பக்தர்களை நினைத்து பாருங்கள்… தினம் தினம் காளிகோபுரத்தை தரிசிக்கும் பாக்கியத்தை பெற்றவர்கள்.நாமும் தூரத்தில் இருந்துதான் காளிகோபுரத்தை தரிசித்துள்ளோம். அல்லது ஜீப், பேருந்துகளில் செல்லும்போது சற்று தூரத்தில் காளி கோபுரத்தை பார்த்து ரசித்துள்ளோம். ஆனால், மிகமிக அருகிலேயே காளி கோபுரத்தை கண்டதும் பூரிப்படைய செய்தது. அங்கு சில புகைப் படத்தை எடுத்த பின், காளி கோபுரத்தின் உள்ளே நுழைந்தால், சீதா சமேதராக ராமர், லட்சுமணர் கோயில் உள்ளது. அதற்கு நேர் எதிர்புறத்தில், அனுமார் அருள்கிறார். அனுமாருக்கு செந்தூரம் சாற்றி இருக்கிறார்கள். பார்க்கவே மிக அழகாக காட்சியளிக்கிறார். அதனை கடந்தால், வரிசையாக இளநீர் விற்கிறார்கள்.  இளநீர் அருந்தலாம். ஆனால், உடல் முழுவதும் வேர்த்திருக்குமேயானால், இளநீர் அருந்துவதை தவிர்க்கவும். சிலருக்கு ஜலதோஷம் பிடிக்க வாய்ப்பிருக்கிறது. அதே போல், காளி கோபுரத்தில் டிபன் கடைகளுக்கு பஞ்சமே இல்லை. இட்லி தோசை முதல் ஃபாஸ்ட் ஃபுட் வரை கிடைக்கிறது. விதவிதமான பஜ்ஜி, போண்டா வகைகளும் இருக்கின்றன. ஆனால் தண்ணீர், ஜூஸ் போன்ற இலகுவான ஆகாரத்தை மட்டும் உண்டு, திருமலை ஏறி முடியும் வரை சதா சர்வ காலமும் ஏழுமலையானை தியானித்து பயணத்தை மேற்கொண்டால், பயணத்தின் நோக்கம் முழுமையடைகிறது அல்லவா!

திருமலையும் விலங்குகளும்

காளிகோபுரத்தை கடந்து சென்ற பின், ஒரு வாசகம் அடங்கிய ஒரு பலகையை கண்டோம். சமீபகாலமாக, நடைபாதையில் செல்பவர்களை புலிகள் தாக்குகின்றன என்கின்ற செய்தியை நாம் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி வாயிலாக அறித்திருப்போம். பொதுவாகவே மலைப் பிரதேசங்களில் மிருகங்களுக்கு தேவையான உணவுகளும், தண்ணீரும் கிடைக்கின்றன. ஆகையால், மிருகங்கள் அதிகளவில் சுற்றித்திரிவது வாடிக்கை. திருமலை, ஸ்ரீ நிவாசன் வாசம் செய்யும் இடமல்லவா! திருமலை சுற்றிலும், பல அருவிகள் இருக்கின்றன. மாமரங்களும், கொய்யா, பலா, பப்பாயா போன்ற எண்ணற்ற மரங்கள் செழித்து வளர்வதால், திருமலை முழுவதிலும் மிருகங்களின் ஆதிக்கம் சற்று அதிகம். இருந்த போதிலும், நடைபாதையில் செல்லும் பக்தர்கள் தங்கள் கொண்டு வந்த உணவுகளை மான் போன்ற உயிரினங்களுக்கு கொடுக்க வேண்டாம் என எச்சரிக்கை செய்கிறார்கள் TTD Wild Life அதிகாரிகள். இதற்காக அவர்கள் நடைபாதையில் எச்சரிக்கை பலகை ஒன்றையும் அமைத்திருக்கிறார்கள்.
நாம் அவர்களை தொடர்புக் கொண்டு இது பற்றி விசாரித்தோம். TTD Wild Life உயர் அதிகாரி நம்முடன் பேசத் தொடங்கினார். “திருமலை சுற்றியும் மான்களின் நடமாட்டம் அதிகம். இதனை வேட்டை ஆடுவதற்காக புலிகளும் வருகின்றன. இவை தவிர கரடிகள், குரங்குகள், யானைகள், மயில்கள் போன்ற சில மிருகங்களும் இருக்கின்றன.

நடைபாதசாரிகளினால் துன்பங்கள்

நடைபாதை செல்லும் பக்தர்களினால், வாயில்லா ஜீவராசிகள் இரு பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. ஒன்று, மிருகங்கள் இயற்கையாகவே தங்களின் உணவுகளை அலைந்து திரிந்து மரங்களை ஏறியும் இறங்கியும் பறித்து, உடைக்க அல்லது பிளக்க முடியாத பழங்களை பெரும் முயற்சி செய்து பகிர்ந்து உண்டு மகிழ்கின்றன. இதனால், மிருகங்கள் துறுதுறுவென அலைந்து திரியும். ஒரு நாளும் அதற்கு சோம்பல் இருந்ததேயில்லை. ஆனால், நடைபாதையில் செல்லும் பக்தர்கள், அதற்கு உணவுகளை கொடுப்பதால், இயற்கையாக உணவுகளை தேடி உட்கொள்ளும் பழக்கம் தடைப்படுகிறது. ஓர்வித சோம்பலாகிறது. மற்றொன்று, பக்தர்கள் தரும் சில உணவுகள், அதுங்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தி, உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கின்றன. சில மிருகங்கள் மாண்டுவிடுகின்றன. காலை முதல் இரவு வரை யாரேனும் நமக்கு உணவுதர மாட்டார்களா.. என்று யாசகம் கேட்பதுபோல், நடைபாதை வழிகளையே நோட்டமிடுகின்றன.
மேலும், உணவு கிடைக்கவில்லை என்றால், பக்தர்களை தாக்குகின்றன. ஆகையால், திருமலையில் வாழும் மற்றும் நடைபாதையில் சுற்றித்திரியும் மிருகங்களுக்கு உணவுகளை தரவேண்டாம். இது சம்பந்தமாகவே நாங்கள் எச்சரிக்கை பலகையினை வைத்துள்ளோம்’’ என்று தன் பேச்சை முடித்தார்.  அவர் பேசிய பிறகுதான் தெரிந்தது, இத்தனை விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன என்று… நல்ல உணவுகளை அதற்கு கொடுக்க வேண்டும். கெட்டுப் போன உணவுகளை கொடுத்தால், ஒன்று அதற்கு ஏதாவது உடல் சார்ந்த துன்பம் ஏற்படுகிறது. இன்னொன்று, இத்தகைய செயல்களை செய்வது, பாவமும்கூட என்பதனை மறந்துவிடக் கூடாது. மேலும் தகவல்களுக்கு, TTD Wild Life Help Line No: 1800425111111.

தினந்தோறும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாடல்கள்

அலிபிரி முதல் திருமலை வரை நடைபாதைகள் முழுவதிலும், பிரத்தேகமாக சிறிய வடிவில் பழைய கால கூம்பு வடிவிலான ஸ்பீக்கர்கள் இருக்கும். இந்த வகை ஸ்பீக்கர்களை, திருமலையிலும் காணலாம். அதை தவிர, இவ்வகை ஸ்பீக்கரை வேறு எங்கும் பார்த்திருக்க முடியாது. இது திருப்பதிக்கே உண்டான அழகு. நான் சிறுவயதில் இருக்கும்போதே இந்த ஸ்பீக்கர்களை பார்த்து வியந்ததுண்டு. காலை 3.00 மணிக்கு தொடங்கினால், இடைவிடாது நள்ளிரவு 1.00 மணி வரை பக்தி மழை பொழிந்துக் கொண்டே இருக்கும். மிகவும் குறைந்த சத்தமில்லாது, மிதமான ஒலியில் ஒலிக்கும். குறிப்பாக, மறைந்த இசை மாமேதை பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் சொன்ன “விஷ்ணு சகஸ்ரநாமம்’’ ஒலித்துக் கொண்டே இருக்கும். அதே போல், அவர் பாடிய கீர்த்தனைகள், அன்னமாச்சாரியாரின் பாடல்கள் என திருமலை முழுவதிலும் அவரது குரலானது பரவிக்கிடக்கும்.“குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா’’ பாடலை எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடி கேட்டிருப்போம். ஆனால், இந்த பாடலை திருமலையில் கேட்க வேண்டும். தலை முதல் கால்கள் வரை மெய்
சிலிர்க்கும். அதுவும்;
“ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா’’
என்கின்ற வரிகள் வரும்போது, எம்.எஸ் அவர்கள் மிக மெல்லிய குரலில் பாடுவாரே.. அதனை திருமலையில், அதுவும் இந்த கூம்பு வடிவ ஸ்பீக்கர்களில் கேட்டால், நிச்சயம் ஒவ்வொருவரின் கண்களிலும் பக்தி கடல் பெருக்கெடுத்து ஓடும்.
“டோலாயாம் சல டோலாயாம் ஹரே டோலாயாம்’’
“பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே’’
இப்படி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாடல்கள் திருமலையில் கேட்டால், நம்மை அப்படியே பக்தியில் ஆழ்த்தி, சொக்கவைக்கும். ஒருவரை மட்டும் துயிலையில் இருந்து எழுப்ப வைக்கும். அவர் யார் தெரியுமா? சாக்ஷத் திருமலையில் குடிக் கொண்டுள்ள வேங்கடவந்தான்.
நம் நிவாசன் (பெருமாள்), விடியற்காலையில் 1.00 மணிக்கெல்லாம், எம்.எஸ்.சுப்புலட்சுமி சொன்ன “சுப்ரபாதத்தை’’ தினமும் கேட்ட பிறகுதான் அவருக்கு பொழுது விடிகிறது. அதாவது, பெருமாளுக்கு அன்றைய தினம் தொடங்குகிறது. ஹாஹா.. என்ன அற்புதம் இன்றும், எம்.எஸ். சொன்ன சுப்ரபாதத்தை ஒலித்து, சுப்ரபாதசேவை முடித்த பின்னரே மற்ற சேவைகள் ஒன்றன்பின் ஒன்றாக ஆரம்பமாகும். இத்தகைய மாபெரும் சிறப்பு, திருமலையில் இன்றளவும் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு உண்டு.இதனை பறைசாற்றும் விதமாக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் குடியுரிமைக் கலைஞர், ஆஸ்தான வித்வானாக எம்.எஸ்.சுப்புலட்சுமி கௌரவிக்கப்பட்டார். அதுமட்டுமா! திருப்பதி நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (Tirupati Urban Development Authority – TUDA), கோயில் நகரம் என்று சொல்லக் கூடிய, பூர்ணகும்பம் வட்டபகுதியில், எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு வெண்கல சிலையை நிறுவி, எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு மாபெரும் புகழை சேர்த்திருக்கிறது.
கூடுதல் தகவல்கலாக, இந்த சிலையை, 2006 – ஆம் ஆண்டு, மே – 28 ஆம் தேதி அன்று, அன்றைய ஆந்திர அரசால் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூம்பு வடிவ ஸ்பீக்கரில், எம்.எஸ் பாடல்களை அனுபவித்தவாரே… மோர், பழங்கள், மாங்காய் ஆகியவற்றை சற்று ருசி பார்த்துவிட்டு, இத்தகைய அருமையான காலை பொழுதை வேங்கடவன் நமக்கு தந்தமைக்கு, நன்றிகளை தெரிவித்துக் கொண்டு, அந்த கூம்பு வடிவ ஸ்பீக்கரில் “கோவிந்தா..கோ…விந்தா…கெட்டிகா செப்பண்டி…’’ (கோவிந்தா என்று சத்தமாக சொல்லவும்) என்று தெலுங்கில் ஒலித்தது, நாமும் “கோவிந்தா…கோ…விந்தா…’’ என்று சொன்னபடியே மேலும் நம் பயணத்தை தொடங்கினோம். இந்த அனுபவத்தை எல்லாம் நாம் நடைபயணத்தில் மட்டுமே அனுபவிக்க முடியும்!
(பயணம் தொடரும்)

ரா.ரெங்கராஜன்

You may also like

Leave a Comment

twelve − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi