Monday, September 30, 2024
Home » துணை முதலமைச்சர், புதிய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து

துணை முதலமைச்சர், புதிய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து

by Suresh

சென்னை: துணை முதலமைச்சர், புதிய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘மிகுந்த நம்பிக்கையோடு வாக்களித்துள்ள மக்களின் நம்பிக்கையை காக்கும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும்; தமிழ் மண்ணின் தனித் தன்மையை நிலைநாட்ட நாளும் மக்கள் தொண்டாற்றிடுவோம்’ என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் முதல்வர் தெரிவித்துள்ளதாவது; “பவள விழாவைக் கொண்டாடும் திராவிட முன்னேற்றக்கழகம், தமிழ்நாட்டை ஆறாவது முறையாக ஆட்சி செய்து வருகிறது. கழகத்தின் கரங்களில் தமிழ்நாட்டு மக்கள் ஆட்சி அதிகாரத்தை வழங்கிய போதெல்லாம் நிறைவேற்றிக் காட்டிய தொலைநோக்குத் திட்டங்களின் மூலமாக நாம் அடைந்த வளர்ச்சிதான், இன்று நாம் காணும் நவீன தமிழ்நாடு!

இன்றைய தினம் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளோம். அந்த வளர்ச்சியின் மூலமாக மக்கள் பயனடைந்து வருவதையும் நேரடியாகப் பார்த்து வருகிறோம். மாநில வளர்ச்சியின் குறியீடுகளாக உள்ள அனைத்திலும் தமிழ்நாடு இன்று சிறந்து விளங்குகிறது. இதை இன்னும் சிறப்பானதாக ஆக்கவே திராவிட மாடல் ஆட்சியானது நாள்தோறும் நல்ல பல திட்டங்களைத் தீட்டி வருகிறது.

அனைத்துத் துறை வளர்ச்சி – அனைத்து மாவட்ட வளர்ச்சி – அனைத்துச் சமூக வளர்ச்சி ஆகியவற்றின் மூலமாக ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற இலக்குடன் நமது அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. சமூகநீதி சிந்தனையோடு, தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஜனநாயகப்படுத்தி விளிம்புநிலை மக்கள், ஏழை எளியவர்களின் வாழ்க்கையில் ஏற்றத்தை உருவாக்கி இருக்கிறோம்!

இவை ஏதோ தனிப்பட்ட எனது சாதனை அல்ல என்பதைச் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் சொல்லி இருக்கிறேன். அரசும், பொறுப்பும், தலைமையும், முதலமைச்சரின் செயல்களும் கூட்டுப் பொறுப்பு என்பதை உணர்ந்தவன் நான். அதன்படியே செயல்படுபவன் நான். திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை உணர்வு நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறது.

இம்மூன்றாண்டு கால வளர்ச்சிக்குத் தமிழ்நாடு அமைச்சர் பெருமக்கள் அனைவரும் பங்களித்து இருக்கிறார்கள். இதன் இன்னொரு கட்டமாகவே தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சரான எனக்குத் துணையாக அல்ல: இந்த நாட்டு மக்களுக்குத் துணையாக அவர் இருக்கப் போகிறார். தனக்கு வழங்கப்பட்ட விளையாட்டுத் துறையின் மூலமாக இந்தியாவின் கவனத்தை மட்டுமல்ல உலகின் கவனத்தை ஈர்த்தவர் உதயநிதி. விளையாட்டுத் துறை, மிகக் குறுகிய காலத்தில் வீறுகொண்டு எழுந்துள்ளது. நாள்தோறும் விளையாட்டு வீரர்கள் பெற்றுவரும் பரிசுகள், ஒலிம்பிக்கை நோக்கிய நம் மாநிலத்தின் பயணமாக அமைந்துள்ளது.

அதேபோல், தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டங்களை மிக உன்னிப்பாக ஆய்வு செய்து வருகிறார். அதன் செயல்பாடுகளை ஒவ்வொரு நாளும் கண்காணித்து அதன் உண்மையான நோக்கத்தை நிறைவேற்றிக் காட்டி வருகிறார் அமைச்சர் உதயநிதி.

கழகத்தின் இளைஞரணிச் செயலாளராக இருந்து இளைஞர்களை ஈர்த்தும், அவர்களை திராவிடக் கொள்கை கொண்டோராகக் கூர் தீட்டியும் வருகிறார். அவரது செயல்பாடுகள் கழகத்தின் வளர்ச்சிக்கும், ஆட்சித் திறன் மூலமாகத் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் இன்னும் கூடுதலாக உழைக்க வேண்டும் என்பதை மனதில் வைத்தே, துணை முதலமைச்சர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னிலும் கூடுதலான உழைப்பை அவர் செலுத்திட வேண்டும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோடிக்கணக்கான தொண்டர்களின் உள்ளக் கிடக்கையையும் உணர்வையும் புரிந்துகொண்டு, அனைத்துத் தரப்பு தமிழ்ப் பெருங்குடி மக்களின் எதிர்பார்ப்புகளை அறிந்து அவர்கள் மனநிறைவு அடையும் வகையில் செயலாற்றிட வேண்டுமென்று விழைகிறேன்.

செந்தில் பாலாஜி அவர்களுக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரது தியாகத்தை நான் வாழ்த்தியதைச் சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவரை வைத்து கழகத்துக்கு எதிரான சதிச்செயல்களைச் செய்ய ஒரு கூட்டம் திட்டமிட்டது. அதற்கு விலையாக 15 மாத சிறையை ஏற்றதுதான் தியாகம். தன்னால் இயக்கத்துக்குக் களங்கம் வரக்கூடாது என்று நினைப்பவர்களால்தான் இந்த இயக்கம் இயங்குகிறது.

இளைஞரணிக் காலம்தொட்டு என்னோடு களப்பணியாற்றியவர்களான சேலம் ராஜேந்திரன் அவர்களும் – ஆவடி நாசர் அவர்களும், மாணவப் பருவம் முதலே திராவிடக் கொள்கையில் ஊறி அடிமட்டத் தொண்டராகக் கழகத்துக்கு உழைத்த தம்பி கோவி செழியன் அவர்களும் அமைச்சர் பொறுப்பேற்கிறார்கள். புதிய அமைச்சர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களது கடந்த கால உழைப்பையும், நிகழ்காலத் திறனையும் மனதில் வைத்து இப்பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைத்துள்ளேன். தங்களுக்கு வழங்கப்பட்ட துறையை எந்த விமர்சனங்களுக்கும் ஆளாகாமல் கவனித்து, அத்துறையின் மூலமாக மாநிலத்தை வளப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பிட்ட சில அமைச்சர்களுக்கு அவர்கள் வகிக்கும் துறையில் மாறுதல்கள் செய்து தரப்பட்டுள்ளன. புதிய துறையைக் கவனத்துடன் கவனித்துப் பணியாற்றுமாறு அவர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

முன்பே சொன்னது போல, அரசு என்பது கூட்டுப் பொறுப்பு ஆகும். அமைச்சர்களின் கூட்டுச்சேர்க்கை தான் முதலமைச்சராகிய நான். அமைச்சர்கள் அனைவர் மீதும் நான் எந்தளவு நம்பிக்கை வைத்துள்ளேனோ, அதை விட அதிகமான நம்பிக்கையை நாட்டு மக்கள் வைத்துள்ளார்கள். மிகுந்த நம்பிக்கையோடு நமக்கு வாக்களித்துள்ள மக்களின் நம்பிக்கையைக் காக்கும் வகையில் நாம் அனைவரும் செயல்பட வேண்டும்.

‘திராவிட மாடல்’ ஆட்சியானது இந்தியாவுக்கே முன்மாதிரி ஆட்சியாக அமைய நாம் உழைப்போம்! அறிவிக்கப்படும் ஒவ்வொரு திட்டமும், கடைக்கோடி மனிதரையும் சென்று சேர்கிறதா என்பதைக் கவனிப்போம்! இனி எந்நாளும் தமிழ்நாட்டை திராவிட முன்னேற்றக் கழகம்தான் ஆளும் என்ற நிலையை உருவாக்க உறுதியேற்போம்” என தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

seventeen + five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi