Friday, September 27, 2024
Home » நாகப்பட்டினம் சௌந்தரராஜப் பெருமாள்

நாகப்பட்டினம் சௌந்தரராஜப் பெருமாள்

by Porselvi
Published: Last Updated on

தன் தந்தையின் மடியில் அமர முடியாத ஏக்கம் அந்தச் சிறுவனைப் பெரிதும் வருத்தியது. இத்தனைக்கும் அவன் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவன்தான். அவனுடைய தந்தை மிகப் பெரிய அரசன்தான். ஆனாலும் தனக்கு இந்தச் சிறிய உரிமையும் மறுக்கப்பட்டது அவனை ஆழ்ந்த வேதனைக்குள்ளாக்கியது. மன்னன் உத்தானபாதனுக்கும், சுநீதிக்கும் பிறந்த தனக்கு இப்படி ஒரு அநீதியை இழைப்பது தன் சிற்றன்னையான சுருசிதான் என்பது அந்தப் பிள்ளை, துருவனுக்குத் தெரியும். ஆனால் பாலக ஏக்கம், தந்தையின் மடியில் இடம் கோரியது. அதைவிட, சுருசியின் மகன் மிகுந்த உரிமையோடு தன் தந்தை மடியில் அமர்ந்திருப்பது அந்த ஏக்கத்தை அதிகரித்தது. வயது ஆக ஆகத்தான் சில ஏமாற்றங்களையும், சலுகை மறுப்புகளையும் சகித்துக்கொள்ளும் மனப்பக்குவம் உண்டாகும். பாலகன் துருவன் அந்தப் பக்குவத்தை அடைய இன்னும் எத்தனை வயது காத்திருக்கவேண்டுமோ! ஆனால், உலகியல் இன்பங்கள் எதுவுமே வேண்டாம் என்று இதே சிறுவனால்தான் முடிவெடுக்க முடிந்தது என்பது வியப்புக்குரிய விஷயம். ஆமாம், தந்தையின் மடியாசனம் கிட்டாத விரக்தி அவன் முகத்தையும், மனதையும் வாட்டமுறச் செய்தது.

இதற்கு மாற்றுதான் என்ன? ‘போய் இறைவனிடம் கேள்,’ என்று சிற்றன்னை சுருசி அவனுக்கு இளக்காரமாக அறிவுறுத்தினாள். இறைவனிடம் எப்படிக் கேட்பது? அதற்கு முன் இறைவனை எப்படிப் பார்ப்பது? பொதுவாக தன் நாட்டில் முனிவர்கள் காட்டில் தவம் செய்வதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான் அவன். அப்படியானால் காட்டிற்குப் போய் தவமிருந்தால் இறைவனை தரிசித்துவிட முடியுமா, அவரிடம் தன் கோரிக்கையை சமர்ப்பிக்க முடியுமா? சிந்தித்தபடி வனத்துக்குள் நுழைந்த அவனை எதிர்கொண்டார் நாரதர். அவனுடைய எண்ணத்தைத் தெரிந்துகொண்ட அவர், பின்னால் நிகழப்போகும் தெய்வானுக்ரகத்தையும் உணர்ந்துகொண்டு, அவனுக்கு மன் நாராயணனை நோக்கி தவமிருக்கும் உபாயத்தைச் சொல்லிக்கொடுத்தார். துருவனுக்குள் அப்போதே ஓர் ஒளி புகுந்துகொண்டது. நாரதரை நமஸ்கரித்த அவன், அவர் சொல்லிக்கொடுத்தபடியே தவத்தில் ஆழ்ந்தான். சிறு குழந்தை அந்த நெடிய தவத்தில் மெய்வருந்த ஈடுபட்டதைக் கண்டு நெகிழ்ந்துபோனார் நாராயணர். விரைந்துவந்து திவ்ய தரிசனம் அளித்தார். அந்த சௌந்தர்ய ரூபத்தைக் கண்டு அப்படியே திகைத்து, உடலெங்கும் பரவசம் பரவ, விரிந்த விழிகளும், வாயும் மூட மறக்க, அப்படியே உணர்வுப் பிழம்பாக நின்றிருந்தான் துருவன். ‘‘துருவா, உனக்கு என்ன வேண்டும்?’’ என்று வேய்ங்குழல் குரலில், அமிர்த சுவையாக பரமாத்மா கேட்டபோது திடுக்கிட்டான் துருவன். ‘எனக்கு என்ன வேண்டும்?

தெரியவில்லையே! இப்படி ஒரு பேரழகு தரிசனம் கிட்டியபிறகு வேறு என்னதான் வேண்டும்? இந்த பாக்கியத்தையும்விட வேறு பெரிதாக என்னதான் இருந்துவிட முடியும்? இந்த தெய்வீகப் பேறு கிடைத்தபின் அரச வசதிகள், தந்தைப் பாசம், சிற்றன்னை துரோகம் எதுவுமே என்னை பாதிக்குமா என்ன? உணர்வுகளை மேவிய மகத்தான பயன் கிடைத்த பிறகு, வேறு எதற்குதான் மதிப்பு உண்டு!’ என்று சிந்தித்தபடி, கண்களில் நீர் பெருக, எதுவும் கேட்கத் தோன்றாமல் அப்படியே நின்றிருந்தான். பிறகு தந்தை உத்தானபாதனும், சிற்றன்னை சுருசியும் உட்பட உலகோர் அனைவரும் புகழ்ந்து வணங்கும் துருவ நட்சத்திரமாகவே மாறினான். அதோடு, பெருமாளும் அவனுக்கு தரிசனம் தந்த அதே கோலத்தில் அர்ச்சாவதாரமாகக் கோயில் கொண்டார்.அந்தப் பேரழகுப் பெருமாளை நாகப்பட்டினம் திருத்தலத்தில் தரிசிக்கும் எல்லோருமே துருவ மனப்பக்குவம் பெற்றிட முடியும்; அதை அனுபவித்துதான் உணர முடியும். அத்தனை அழகு இந்தப் பெருமாள்! இவரது தீட்சண்யமான பார்வை நம் மேனிமீது பரவ, சரும நோய் ஏதேனும் இருந்தால் அதெல்லாம் விரைவில் காணாமல் போகும் அதிசயம் நிகழ்கிறது என்று அனுபவித்தவர்கள் கூறுவது மெய்தானோ என்றே தோன்றும். உடல் குறையையும் நீக்கவல்ல பெருமான் இவர் என்பதை இத்தல புராணம் எடுத்துரைக்கிறது:

காவிரிசூழ் நாட்டை ஆண்டுவந்த சோழ மன்னன், சாலிசுகன். சௌந்தரராஜப் பெருமாளை தரிசிப்பது இவனது தினசரிக் கடமை. அந்தக் கடமையில் எந்த இடையூறும் வந்துவிடக்கூடாதே என்று ஒரு சுரங்கப்பாதையை அமைத்து அதன் வழியே ரகசியமாக சென்று பெருமாளை தரிசித்தான். அப்படிச் சென்றபோது ஒருநாள், அங்கே ஒரு பெண்ணைக் கண்டு திடுக்கிட்டான். பேரழகியாகத் திகழ்ந்த அவள் நாகர் குலப் பெண் என்பதைத் தெரிந்துகொண்டான். ஆனால் அந்தப் பெண்ணுக்கு இயற்கைக்கு மாறாக மூன்று ஸ்தனங்கள் இருந்தன. ஆனால் சாலிசுகனை அவள் கண்ட அதே கணம் அவளது மூன்றாவது ஸ்தனம் மறைய, தன் மணாளன் இவனே என்று அவள் அடையாளம் கண்டுகொண்டாள். இந்தத் தன் மனவிருப்பத்தை அவள் தெரிவித்தபோது, அதற்கு முன்னாலேயே அவள் மீது மையல் கொண்டுவிட்ட மன்னன், உடனே திருமணத்துக்கு சம்மதித்தான். அதோடு அந்தத் திருமணம், தான் தினமும் வழிபடும் சௌந்தர்ராஜப் பெருமாள் முன்னிலையில்தான் நடைபெற வேண்டும் என்றும் கூறி அவ்வாறே அவரது அருளாசியுடன் அவள் கரம் பிடித்தான். (சாலிசுகன் அந்தப் பெண்ணின் மீது காதலோடு, இரக்கமும் கொண்டு, பெருமாள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டான் என்றும், பெருமாளின் அனுக்ரகத்தால் இயற்கைக்கு மாறுபட்ட அவளது ஊனம் நாளாவட்டத்தில் மறைந்தது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது). இப்படி தோற்றக் குறைவை நிவர்த்தி செய்யும் பேரருளாளன்தான் இந்தப் பெருமாள். ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், பலிபீடமும், துவஜஸ்தம்பமும் நம்மை வரவேற்கின்றன. இடது பக்கத்தில் சார புஷ்கரணி அமைந்திருக்கிறது. வெளிப் பிராகாரத்தை வலம் வந்தால், சௌந்தர்யவல்லித் தாயார் தனி சந்நதியில் அருளாட்சி புரிகிறாள்.

பெருமாளுக்கு இணையான பேரழகுத் திருவுருவம். அந்த மந்தஹாசப் புன்னகையும், கருணை விழிகளும் பார்க்கும் மாத்திரத்திலேயே நம் துயரங்களையெல்லாம் விரட்டிவிடுகின்றன. இந்தத் தாயாருக்கு முன்னாலும் பலிபீடமும், கொடிக் கம்பமும் நிற்பது வித்தியாசமாக இருக்கிறது. பிரம்மோற்சவம் போன்ற விசேஷ காலங்களில் பெருமாள் மற்றும் தாயார் சந்நதிகளுக்கு முன் நிற்கும் இந்த துவஜஸ்தம்பங்களில் கொடியேற்றுவார்கள் என்று தெரியவந்தது. சற்று தள்ளி மேற்கே நிவாசப் பெருமாள் சந்நதி கொண்டிருக்கிறார். அடுத்த ஆண்டாள் சந்நதி வாசலிலும் ஒரு கொடிமரம் நிற்கிறது. ராமனுக்கும், ஆழ்வார்களுக்கும் தனித்தனி சந்நதி அமைந்திருப்பதோடு, இன்னொரு கூண்டு போன்ற சந்நதியும் நம் கவனத்தைக் கவருகிறது. இதனுள் பெருமாள் பாதம் காணப்படுகிறது. கருவறை மண்டபத்தில் துருவன், ஆதிசேஷன், பூமாதேவி மற்றும் மார்க்கண்டேயருக்கு திருமால் காட்சியளித்த கோலம், கிருஷ்ண லீலைகள், சில திவ்யதேசப் பெருமாள்கள் ஆகியோரை ஓவியங்களாக தரிசிக்கலாம். அருகிலேயே ராமானுஜர், ஓர் ஆசானின் அருளோடு திருக்காட்சி நல்குகிறார். குறிப்பிடத்தகுந்த இன்னொரு சந்நதி, ஸ்ரீரங்கநாதருக்குரியது. அதாவது இங்கே மூன்று பெருமாள்கள். நின்ற கோலத்தில் சௌந்தரராஜப் பெருமாள், அமர்ந்த கோலத்தில் நிவாசப் பெருமாள், சயனக் கோலத்தில் ரங்கநாதர். இப்படி மூன்று பெருமாள்களையும் ஒருங்கே ஒரே வளாகத்துள் கோயில் கொள்ள வைத்தது ஆதிசேஷன்தான்.

நாகங்களின் அரசனான ஆதிசேஷன், இந்தத் தலத்துக்கு விரும்பி வந்தான். ஒவ்வொரு தலமாகப் பயணம் செய்தாலும் சிலருக்கு சில தலங்களில் விசேஷ ஈர்ப்பு உண்டாகும் என்பதுபோல ஆதிசேஷனுக்கும் இத்தலத்துடன் ஆழ்ந்த ஈடுபாடு உண்டாகியது. வைணவ ஆகமப்படி அஷ்டாங்க விதான முறையில் இங்குறையும் பெருமாளை அவன் வழிபட்டான். இதனாலேயே நாகன் தொழுதேத்திய இந்தத் தலம் நாகப்பட்டினம் என்று வழங்கப்பட்டது. தான் பெருமாளின் எல்லா நிலையிலும் உடனிருந்து சேவை ஆற்ற வேண்டும் என்று பேராவல் கொண்டிருந்தான் ஆதிசேஷன். பொதுவாகப் பெருமாள் எந்தெந்த நிலைகளில் சேவை சாதிப்பார்? நின்றபடியா, அமர்ந்தபடியா அல்லது படுத்த கோலத்திலா? எந்த கோலத்தில் இருந்தால்தான் என்ன, தான் அவருடன் கூடவே இருந்து அவருக்கு சேவையாற்றும் பேறு தனக்கு நிரந்தரமாக வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டான். அந்த பாக்கியத்தைத் தனக்குப் பெருமாள் அருளவேண்டி, இத்தலத்திலுள்ள ஸார புஷ்கரணியில் நீராடி, தவம் மேற்கொண்டான். அவனது சேவை மனப்பான்மையை நன்கறிந்த திருமாலும் அவனுக்குக் காட்சியளித்தார். அதுவும் எப்படி? அவன் விரும்பியதுபோலவே! ஆமாம், அமர்ந்த கோலத்தில் நிவாசப் பெருமாளாகவும், சயனக் கோலத்தில் அரங்கநாதனாகவும், நின்ற கோலத்தில் சௌந்தர்ராஜப் பெருமாளாகவும் அவன் பெரிதும் மகிழ்ந்து உய்யும் வண்ணம் தோன்றினார்.

ஆதிசேஷன் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. உடனே ஸ்ரீ நிவாசப் பெருமாளுக்கு சிம்மாசனமாகி, சிரம் மீது வெண்கொற்றக் குடையாகவும் ஆகி மகிழ்ந்தான்; மஞ்சமாகி சிரம் மீது குவிந்து அவரைப் பரவசத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான்; நின்றிருந்த அவருக்குக் குடையாகி நெகிழ்ந்து உருகினான். அதுமட்டுமல்ல, தான் கண்ட அந்த மூன்று காட்சிகளையும் அந்தத் தலத்துக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களும் கண்டு மகிழும் வண்ணம் விளங்குமாறு அவரைப் பணிந்து கேட்டுக்கொள்ளவும் செய்தான். அவனுடைய வேண்டுகோள், பெருமாளின் மூன்று கோலங்கள் ஒரே வளாகத்தில் நமக்காக அற்புதமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதில் குறிப்பிடத்தக்க அதிசயமும் உண்டு. அதாவது அரங்கநாதன், தேவி-பூதேவி மற்றும் பிரம்மனுடன் மட்டும் தன் சந்நதியில் சயனித்திருக்கவில்லை. கூடவே நரசிம்மரையும் அங்கே தரிசிக்கலாம். எட்டுக் கரங்கள் கொண்ட இந்த நரசிம்மர் வெண்கலத்தால் ஆனவர். தனது ஒரு கரத்தால் பிரகலாதனுக்கு ஆசி அளித்தும், ஒரு கரத்தை அபயஹஸ்தமாகவும், பிற ஆறு கரங்களால் இரண்யனை வதம் செய்த படியும் காட்சியளிக்கிறார். மிகவும் அபூர்வமான இச்சிற்பம், நரசிம்மரின் கோப-சாந்த – கருணை (அபய) உணர்வுகளை ஒருங்கே பிரதிபலிப்பது, நம் உள்ளத்தை உருக்கி பக்திக் கண்ணீரை வெளிப்படுத்துவதும் உண்மை. திருமங்கையாழ்வார் பத்துப் பாசுரங்களால் சௌந்தரராஜப் பெரு மாளை மங்களாசாசனம் செய்திருக்கிறார். பெருமாளின் பேரழகில் மயங்கி, தன்னை ஒரு பெண்ணாக உருவகித்துக்கொண்டு, சிருங்கார உணர்வுகளை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறார். ஒவ்வொரு பாடலையும் ‘அச்சோ ஒருவர் அழகியவா?’ என்று நிறைவு செய்து, பெருமாளின் கவினுறு தோற்றத்தில் தன்னை இழக்கிறார்.
“பொன்னவர் மேனி மரகதத் தின்
பொங்கிளஞ் சோதி யகலத்தாரம்
மின் இவர் வாயில் நல்வேத மோதும்
வேதியர் வானவ ராவர் தோழி
என்னையும் நோக்கியென் னல்குலும் நோக்கி
ஏந்திளங் கொங்கையும் நோக்குகின்றார்
அன்னையென் னோக்குமென் றஞ்சு கின்றேன்
அச்சோ ஒருவர் அழகியவா?’’
இது உதாரணத்துக்காக ஒரு பாசுரம்.
‘பொன்மேனி கொண்டு, பிரகாசிக்கும் மரகத ஆரத்தை இடையில் அணிந்துகொண்டு நல்ல வேதத்தை இசைபட கூறும் இவர், என்னைப் பார்க்கிறார். நான் வெட்கப்படும்படி என் அந்தரங்கப் பகுதிகளை உற்று நோக்குகிறார். இவர் இப்படி என்னைப் பார்ப்பதை என் தாய் அறிந்தால் என்னைப் பற்றி அவள் என்ன எண்ணுவாளோ என்று எனக்கு அச்சமாக இருக்கிறது!’ என்பது இப்பாடலுக்குப் பொதுப் பொருள்!கடற்கரை நகரம் என்பதால், இந்தக் கோயிலின் ராஜகோபுரத்தை, அதன் உச்சியில் விளக்கெரித்து, கடலில் வரும் கப்பல்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள்! இப்படி கோயிலை ஒரு பொது சேவை அமைப்பாகவே உருவாக்கியவர் ஜகுல் நாயக்கர் என்பவர். இவரும், இவரது மனைவியும் நமஸ்கரிக்கும் கோலத்தில் பெருமாள் கருவறைக்கு முன்னால் பதிக்குமாறு செய்திருக்கிறார்கள். அதாவது, பெருமாள் தொண்டர்களின் பாதங்கள் தங்கள் மீது பட்டுச் செல்லவேண்டும் என்பது இவர்களுடைய விருப்பம்! தொண்டரடிப்பொடி ஏற்கும் பக்தர்கள்!

தியான ஸ்லோகம்
“சௌந்தர் யார்ஜித கோடி மந்மத வபு ஸ்ரீஸார தீர்த்தாந்திகே
ஸ்ரீ மத் ஸுந்தரமூர்த்தி ரத்ரஸததம் சௌந்தர்ய வல்யா ச்ரியா
பச்யந் பூர்வதிசம் விமாநமபி வைதத் பத்ர கோட்யாஹ் வயம்
ப்ரத்யக்ஷஸ்ஸச நாகபத்த நதலே ப்ரஹ்மாதி பிஸ்ஸேவித’’
எப்படிப் போவது: நாகப்பட்டினம் ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது நாகை சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயில். பேருந்து, ஆட்டோ, வாடைக் கார் வசதிகள் உண்டு. கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 5 முதல் 12 மணிவரையிலும், மாலை 5 முதல் 8.30 மணிவரையிலும். முகவரி: அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம் அஞ்சல், நாகை வட்டம் – 611001.

 

You may also like

Leave a Comment

seven − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi