Monday, September 23, 2024
Home » தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

by MuthuKumar
Published: Last Updated on
சென்னை: ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பணிகள் பல்வேறு நிலையில் உள்ளன. அத்தகைய பணிகளில் உள்ள இடர்பாடுகளைக் களைந்து, பணிகளில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற நோக்கத்துடன், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (23.9.2024) சென்னை, தலைமைச் செயலக பழைய கூட்டரங்கில் (Old Conference Hall) ஆய்வுக் மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், வருவாய்                மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர்கள் நேரிடையாகவும், காணொளிக்காட்சி வாயிலாகவும் கலந்துக்கொண்டு, சாலைப் பணிகளில் நிலஎடுப்பில் ஏற்பட்ட காலதாமதங்களையும் ஆய்வு செய்தார்கள்.
ஆய்வுக் கூட்டத்திற்கு வந்திருந்த அனைத்து அலுவலர்களுக்கும் நன்றியைத் தெரிவித்ததுடன், ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்  நிதின் கட்காரி, 13.09.2024 அன்று திருச்சியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டப் பணிகளின் ஆய்விற்குப்பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை நிறைவேற்றுவதில், தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்று பெருமையாக கூறிய ஒன்றிய அமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்து ஆய்வினை தொடர்ந்தார்கள்.
சில திட்டப் பணிகளில் நிலஎடுப்பு, உயர் அழுத்த மின்கோபுரங்களை மாற்றி அமைப்பது மற்றும் வனத்துறையின் அனுமதி பெறுவது போன்ற இடர்பாடுகளினால் பணி முடிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.  இந்த காலதாமதத்தை தவிர்க்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை கேட்டுக் கொண்டார்கள். ஒன்றிய அரசின் 5 தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் இன்னும் நிறைவுப் பெறாமல் உள்ளன. இதற்கான காலதாமதத்தை கேட்டறிந்த அமைச்சர், ரூ.121 கோடி செலவில், 53 கி.மீ. நீளமுள்ள 3 தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்கும், வெள்ளக்கோயில்-சங்ககிரி சாலையில், உறுதிப்படுத்தும் பணி மற்றும் அவிநாசி-திருப்பூர் பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்புப் பணி ஆகியவற்றை ஒப்பந்தப்புள்ளி குழு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்  384 கிலோ மீட்டர் நீளமுடைய 13 பணிகள் நிலஎடுப்பு, கட்டுமானங்கள் அகற்றுதல், ஆக்கிரமிப்புகள் போன்றவற்றால் காலதாமதம் ஆவதை கேட்டறிந்து, நிலநிர்வாக ஆணையர் மற்றும் நிலஎடுப்பு அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி, இத்தகைய இடர்பாடுகளைக் களைய வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். 31 கி.மீ. நீளமுடைய சாலைப் பணிகள் வனத்துறையின் அனுமதி எதிர்நோக்கி நிலுவையில் உள்ளது. காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்கள் உடனடியாக நிலம் மதிப்பு நிர்ணயம் செய்து உயர் அழுத்த மின் கோபுரங்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்கிங்ஹாம் கால்வாயில் பாலம் கட்டுவதற்கான தடையின்மைச் சான்றிதழ் அளிப்பதில் உள்ள இடர்பாடுகளை களைந்து தடையின்மைச் சான்று பெற்று, 31 கி.மீ. நீளமுடைய சாலைப் பணியை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலையின் எல்லைக்குள் தற்காலிக கொட்டகைகள், வீடுகள், மற்ற கட்டுமானங்கள் ஆகியவற்றை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்றும், நிலஎடுப்பு அலுவலர்களை நியமனம் செய்வதில் காலதாமதத்தை தவிர்த்தால்தான், சாலைகளை குறித்த காலக்கெடுவிற்குள் அமைக்க முடியும் என்று தெரிவித்தார். சென்னை துறைமுகம் – மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலைப் பணியில், இந்திய இராணுவத்திடம் உள்ள 490 மீட்டர் நிலத்தை பெறுவதில் உள்ள காலதாமதம் தவிர்க்க உரிய நடவடிக்கை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். மல்லபுரம் முதல் முகையூர் வரை, 31 கி.மீ. நீளமுடைய சாலைப் பணி நீதிமன்ற வழக்குகளின் காரணமாக தாமதமாகிறது.  இந்த நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடித்து சாலைப் பணியை துவக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.
மேலும், முகையூர்-மரக்காணம் பிரிவு நான்கு வழித்தட சாலைப் பணி, நேரலூர் – கொரப்பள்ளி அக்ரஹாரம் பிரிவு நான்கு வழித்தட சாலைப் பணி, தொரப்பள்ளி அக்ரஹாரம் முதல் ஜித்தனஹள்ளி வரை நான்கு வழித்தட சாலைப் பணி, சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழித்தட சாலைப் பணி, பாலகொண்டப்பள்ளி தமிழக எல்லை வரை மேற்கில் STRR சாலை அமைக்கும் பணி, கமலாபுரம் முதல் ஒட்டன்சாத்திரம் வரை சாலை அமைக்கும் பணி ஆகிய பணிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற காலதாமதம், கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் மீதமுள்ள நிலத்தினை ஒப்படைக்கும் பணியில் காலதாமதம், நிலம் மற்றும் இதர சொத்துக்களுக்கான இழப்பீடு வழங்குவதில் காலதாமதம் ஆகியவற்றால் சாலை அமைக்கும் பணிகளில் காலதாமதம் ஏற்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை தலைமைப் பொறியாளர் சம்மந்தப்பட்ட நிலஎடுப்பு அலுவலர்களுடன் தொடர்புக் கொண்டு அவர்களுடைய பணிகளில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். கேரள மாநிலம், களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை, தமிழ்நாடு எல்லை வரை விடுபட்ட பணிகளை உடனே முடிக்க வேண்டும். நிலஎடுப்பிற்கு கூடுதலாக இழப்பீடு கோரியுள்ளவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.
வாடிப்பட்டி முதல் தாமரைப்பட்டி வரை, 30 கி.மீ. சாலைப் பணி, வடுகப்பட்டி முதல் திருமங்கலம் பிரிவு வரை 36 கி.மீ. நீள நான்கு வழித்தட சாலை அமைக்கும் பணி, வடுகப்பட்டி முதல் தெற்கு வேங்கை நல்லூர் பிரிவு வரை 35 கி.மீ. நான்கு வழித்தட சாலை அமைக்கும் பணி ஆகியவற்றில் கையகப்படுத்திய நிலத்தில் மீதமுள்ள நிலத்தினை ஒப்படைக்க காலதாமதம் ஏற்படுவதால் சாலை அமைக்கும் பணி காலதாமதமாகிறது. தொரப்பள்ளி அக்ரஹாரம் முதல் ஜித்தனஹள்ளி வரை 36 கி.மீ. நான்கு வழித்தட சாலை அமைக்கும் பணி வனத்துறையின் தடையின்மைச் சான்று வழங்குவதில் உள்ள இடர்பாடுகள் காரணமாக காலதாமதமாகிறது. இதைப் போலவே பெங்களூர்-சென்னை நான்கு வழித்தட சாலை அமைக்கும் பணி சுமார் 81 கி.மீ. நீளத்திற்கு மின்சார வாரிய உயர்மின் அழுத்த கோபுரங்கள் மாற்றியமைப்பதில் உள்ள காலதாமதம் காரணமாக சாலைப் பணி பாதிக்கப்பட்டுள்ளது.  இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
முகையூர் – மரக்காணம் பிரிவு நான்கு வழித்தட சாலை அமைக்கும் பணி, பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்க தடையின்மைச் சான்று பெறுவதில் காலதாமதம் காரணமாக இப்பணி தடைப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை-திருப்பதி பிரிவு நான்கு வழித்தட சாலை அமைக்கும் பணி, ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதில் உள்ள பொதுவான சிக்கல்களுக்கு தீர்வுகாரண துறைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் நிலஎடுப்பு அலுவலர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.
நிலஎடுப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள CALA பணியிடங்களை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கனிம வளங்களை எடுத்து பயன்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை தீர்வு காண சாலையின் முக்கியத்துவம், காலதாமதத்தால் ஏற்படும் நிதியிழப்பு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குந்தகம் ஏற்படுவதையும் சுட்டிக்காட்டி வழக்குகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையிட்டார்கள்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அரசுச் செயலாளர் மருத்துவர் இரா.செல்வராஜ், இ.ஆ.ப., தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லக்கானி இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலாளர்-முதல்வரின் முகவரி துறை சிறப்பு அதிகாரி டி.அமுதா இ.ஆ.ப., தமிழ்நாடு நிலநிர்வாக ஆணையர் முனைவர் கே.எஸ்.பழனிச்சாமி இ.ஆ.ப., கார்னல்-Q(Land) ரவிந்திரகுமார், தேசிய நெடுஞ்சாலை தலைமைப் பொறியாளர் மு.பன்னீர்செல்வம், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகத் தலைமைப் பொது மேலாளர் ப.பழனிவேல், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சென்னை மண்டல அலுவலர் வீரேந்திர சாம்பியால்,  மதுரை மண்டல அலுவலர் கே.கோவிந்தசாமி, Morth மண்டல அலுவலர் பி.மீனா, நெடுஞ்சாலைத்துறை தனி அலுவலர் (டெக்னிக்கல்) இரா.சந்திரசேகர் மற்றும் நீர்வளத்துறை, வருவாயத்துறை அலுவலர்கள், துறைச்சார்ந்த கண்காணிப்பு பொறியாளர்கள் பங்கு பெற்றனர்.

You may also like

Leave a Comment

15 − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi