Monday, September 23, 2024
Home » திருமலையின் திருமணி

திருமலையின் திருமணி

by Porselvi

திருமலையப்பனுக்கு மிகவும் பிடித்த மாதம் புரட்டாசி மாதம்தான். அப்பெருமாளை நாம் பிடிக்க திருமலையப்பனை நாம் வழிபடுவதும் புரட்டாசி மாதத்தில்தான், புரட்டாசி மாதத்தின் சிறப்பே “கோவிந்த” கோஷம்தானே? “கோவிந்தா.. கோவிந்தா..’’ என்ற திருநாமத்தை கொண்டு அழைத்தால் போதும் உங்கள் உள்ளத்தின் உள்ளே வந்து நான் தங்கிடுவேன் என்பார் அந்த ஆதிசேஷன் தாங்கி கொண்டிருக்கும் திருமலையில் வாசம் செய்யும் திருமலைவாசன். திருமலையப்பன் தன்னை நமக்கு காட்டிக் கொடுக்க திருஅவதாரம் செய்தது புரட்டாசி மாதத்தில்தான். திருமலையப்பனின் தயா குணத்தை, கருணைக் குணத்தை தம் “ஸ்ரீ தயா சதகம்” எனும் ஸ்தோத்திரத்தின் வழிகாட்டி கொடுத்த ஸ்வாமி ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகன் திருஅவதாரம் செய்ததும் புரட்டாசி மாதத்தில்தான்.

திருவோண நட்சத்திரம் செய்த பாக்கியம் திருமலையப்பனும் அவன் தன் திவ்ய திருமணியும் ஒரே நட்சத்திரத்தில் ஒரே மாதத்தில் அவதாரம் செய்தது. சாதாரணமாக எல்லா திருக்கோயில்களிலும் பெருமாளுக்கு திருவாராதனம் நடைபெறும்போது கைமணி என்பது ஒலிக்கப்படும். ஆனால் இன்றுவரை திருமலையில் மட்டும் அப்படி திருவாராதன பூஜை நடைபெறும் நேரத்தில் கைமணி என்பது ஒலிக்காது. அங்கே திருமலையப்பனின் சந்நதியில் அந்த மணியே கிடையாது. ஏன் மணி இல்லை என்பதற்கு ஒரு சுவாரஸ்ய கதை ஒன்று இருக்கிறது.

காஞ்சிபுரத்திற்குப் பக்கத்தில் தூப்புல் என்ற ஒரு சின்ன அக்ரஹாரம் இருக்கிறது. அந்த அக்ரஹாரத்தில் அனந்தசூரி, தோத்தாரம்மா என்ற ஒரு தம்பதி வாழ்ந்து வந்தனர். திருமாலின்மீது அதீத பக்தி கொண்ட அந்த தம்பதிக்கு வெகுகாலம் புத்திரப் பாக்கியம் இல்லாத ஒரு குறையை போக்க அந்த திருமலையப்பனே சங்கல்பம் செய்து கொண்டு வழிபட்டு வந்தார். ஒரு நாள், அனந்தசூரியின் கனவில் வேங்கடவன் தோன்றினார். “உன் மனைவியோடு திருமலைக்கு வந்து என்னைத் தரிசனம் செய்ய வா பக்தனே. உனக்கு நல்ல சத்புத்தியுடன் கூடிய ஒரு புத்திரன் சீக்கிரமே பிறப்பான்” என்று சொல்லிச் சென்றார். பெருமாளே வந்து கனவில் சொன்னதும், ஆனந்தம் மேலிட ஆனந்த நிலைய வாசனின் வாசஸ்தலத்தை நோக்கி பாத யாத்திரையாகவே காஞ்சிபுரத்திலிருந்து திருமலைக்கு சென்றனர் அந்த தம்பதி.

திருமலையில் திருவேங்கடவனை தங்கள் கண்கள் குளிர, மனமும் குளிர தரிசித்து கொண்டு திருவேங்கடவனின் திருக்கடாக்‌ஷத்தில் தங்கள் பொழுதை நற்பொழுதாகப் போக்கிக் கொண்டிருந்தனர் அந்த தம்பதியினர். புரட்டாசி மாதம் சிரவண நட்சத்திரம் கூடிய ஒரு நாள் இரவு, தோதாரம்மாவின் கனவில் வந்து அருள்புரிந்தான் திருவேங்கடவன். அந்த அம்மையாருக்கு வந்த கனவு இதுதான். தம்பதி சமேதராக அனந்தசூரியும் தோதாரம்மாவும் திருமலையில் பெருமாளைக் கண்குளிர தரிசித்துக் கொண்டிருந்தபோது, அங்கே பெருமாளின் சந்நதியில் இருந்த கைமணி தானாக எழும்பி வந்து தோதாரம்மாவின் கையில் அமர்வது போலவும், பின் அந்த மணியை தோதாரம்மா விழுங்கி விடுவதை போலவும் கனவு வந்தது. பெருமாளுக்கு பிரம்மோற்சவ விழாவின் தீர்த்தவாரி (சக்ரஸ்நானம்) நடைபெற்ற நாள் அது.

மறுநாள் காலையில், தான் கண்ட கனவைத் தன் கணவரிடம் தோதாரம்மா தெரிவிக்க, “ஓ.. அப்படியா சரி, பெருமாளே மணிரூபத்தில் வந்து அனுகிரஹம் செய்திருக்கிறார் போலும். திருமணியாய் கனவில் வந்து தோன்றிய பெருமாளைக் கண்டு தரிசித்துவிட்டு வருவோம்’’ என்று அந்த தம்பதியர் திருக்கோயிலுக்குச் சென்ற போது, எப்போதும் இல்லாமல் அன்று வெகு பரப்பரப்பாக இருந்தது திருக்கோயில்.

பெருமாள் சந்நதியில் இருந்த மணியைக் காணவில்லை என்ற சப்தம்தான் கோவிந்தா சப்தத்தோடு அன்று திருமலையில் ஒலித்தது. “கோவிந்தனின் சந்நதியில் இருக்கும் மணியை காணவில்லையாமே.. கோவிந்தா… உன் சந்நதியில் இருக்கும் மணியை காணோமாமே?’’ என்று திருமலையில் திரும்பிய பக்கம் எல்லாம் அங்கே அன்று மணியின் பற்றிய ஒலியே ஒலித்தது. தான் கண்ட கனவிற்கும் இங்கே மணி காணாமல் போனதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ என்னவோ என சிந்தித்தபடியே மெல்ல நடந்து வந்து கொண்டிருந்த தோதாரம்பாவை, திருப்பதி ஜீயர் ஸ்வாமிகள் பார்த்தார்.

பார்த்தவர், சட்டென்று அந்த தம்பதியரின் அருகில் வந்து, “நேற்று என் கனவில் ஸ்ரீனிவாசன் தோன்றினார். தோன்றியவர், உன் வயிற்றில் அவரின் திருமணி செல்வதை நான் பார்த்தேன். இனி ஸ்ரீநிவாசனுக்கு தனியாக அப்பெருமாளின் திருவாராதனையின்போது மணி தேவை இல்லை. காரணம், பெருமாளின் திருமணியே இந்த அம்மாளின் திருவயிற்றில் பிள்ளையாக பிறக்கப் போகிறான்” என்று திருவாய் மலர்ந்தருளினார் திருப்பதி ஜீயர் ஸ்வாமிகள்.

தன் வயிற்றில் திருமலையப்பனின் திருமணியை 12 மாதங்கள் கர்ப்பவாசத்தில் சுமந்த பேற்றினைப் பெற்றாள் தோதாரம்மா. அதற்கு அடுத்த ஆண்டு பிரம்மாண்ட நாயகனுக்கு, பிரம்மாண்டமாய் பிரம்மோற்சவம் நடந்து கொண்டிருக்க, தீர்த்தவாரி திருநாளான புரட்டாசி மாதம் ஸ்ரவண (திருவோண) நட்சத்திரம் கூடிய திருநாளில், ஸ்வாமி ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகன் திருஅவதாரம் செய்தார். தம்முடைய முதல் ஸ்லோகமான “ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்திரத்தில்”, “ஸ்ரீவைகுண்ட நாதனான பரவாசுதேவனே ஸ்ரீ ஹயக்ரீவ பெருமாளாக அவதரித்துள்ளார். அப்பெருமாளின் திருமேனியைத் தியானித்தால் “கிழக்கு விடிந்தால் இரவு கழிவது போல” மக்களுக்கு அஞ்ஞானம் அறவே ஒழிந்து போகும் என்று நமக்கு நல்வழி காட்டி, திருவேங்கடமுடையானது தயை குணம், கருணைக் குணத்தை மட்டுமே போற்றி 108 ஸ்லோகங்களை தம் “ ஸ்ரீ தயா சதகத்தின்” வழி கொடுத்தருளியவர் ஸ்வாமி தேசிகன்.

“ப்ரபத்யே தம் கிரிம் ப்ராய:’’ என்று கருணையே வடிவெடுத்து நிற்கும் திருமலையை முதலில் சரணடையச் சொல்லி பின் தாயாரையும் பெருமாளையும் சரணடையச் சொல்லி அருளி இருக்கிறார். பெருமாளின் அந்த தயை குணம் கங்கை ஆற்றைப் போல பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருப்பதாக சொல்லும் ஸ்வாமி தேசிகன், திருவேங்கடவனின் திருமார்பில் வீற்றிருக்கும் தயாதேவியிடம், “ தயாதேவியே.. நீயே அடியேனுக்குத் தாய். உன் குழந்தை நான்.

என்னைக் காப்பது இனி உன் பொறுப்பு” என்று “ஸ்ரீ தயா சதகத்தின் 12 வது ஸ்லோகத்தில் அருளி இருக்கிறார். நாம் அனைவருமே அந்த தயாதேவியின் குழந்தைகளே. தயாதேவியை தன்னுள் கொண்டிருக்கும் அந்த திருமலையப்பன் நம்மையும் தயை கொண்டு காப்பாற்றியே தீருவான். இந்த புரட்டாசி மாதத்தில் திருமலையையும், திருமலையப்பனையும், திருமலையப்பனின் திருமணியாம் ஸ்வாமி தேசிகனையும் மனதில் தியானிப்போம்.

நளினி சம்பத்குமார்

 

You may also like

Leave a Comment

fifteen − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi