Friday, September 20, 2024
Home » தேசிய ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

தேசிய ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

by Nithya

ராஷ்டிரிய இந்திய ராணுவக் கல்லூரி (Rashtriya Indian Military College (RIMC) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் செயல்படும் ஆண்களுக்கான ராணுவக் கல்லூரி ஆகும். இது பிரிட்டானிய இந்திய அரசால் நிறுவப்பட்டதாகும். பிரிட்டனின் ஐக்கிய ராஜ்ஜியத்தின் வேல்ஸ் இளவரசர் எட்டாம் எட்வர்டு, ராஷ்டிரிய இந்திய ராணுவக் கல்லூரியை 1922இல் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து இந்திய அரசு நடத்திவருகிறது. இக்கல்லூரியில் 8 முதல் 12ஆம் வகுப்புகள் வரை வழக்கமான அறிவியல் பாடங்களுடன், அடிப்படை ராணுவப் பயிற்சியையும் வழங்குகிறது. 138 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கல்லூரியில் சேர ஆண்டுதோறும் 2 முறை நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. தற்போது மாணவிகள் சேர்க்கையும் நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி ஜூலை 1, 2025ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குறிப்பாக இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் யாராவது ஒருவர் தமிழகத்தில் வசிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 2.7.2012க்கு முன்னதாகவும், 1.1.2014ம் தேதிக்குப் பிறகும் பிறந்திருக்கக் கூடாது. அதாவது விண்ணப்பதாரர்கள் பதினொன்றரை வயது முதல் பதின்மூன்று வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும்.

ராணுவக் கல்லூரியில் அனுமதிக்கும்போது அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 7ம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருக்க வேண்டும்.

டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்தியன் ராணுவக் கல்லூரியில், 2025ம் ஆண்டு ஜூலை பருவத்தில் மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள்) சேர்வதற்கான தகுதித்தேர்வு, வருகிற டிசம்பர் 1ம் தேதியன்று சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெறவுள்ளது. ராஷ்டிரிய இந்திய ராணுவக் கல்லூரியில் சேர தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாகத் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த தேர்விற்கான விண்ணப்பப் படிவம் பெறுவதற்கான வழிகள்: இதற்கான விண்ணப்பப் படிவம், தகவல் கையேடு (Prospectus) மற்றும் முந்தைய வினாத்தாள்களின் நகல்களை ஆன்லைன் (online) மூலம் பெறுவதற்கு www.rimc.gov.in என்ற வலைத்தளத்தில் பொதுப்பிரிவினர் ரூ.600/, அட்டவணை இனத்தவர் மற்றும் பழங்குடியினர் அதற்குண்டான சாதிச் சான்றிதழுடன் ரூ.555/- செலுத்தி பதிவிறக்கம் செய்யப்பட்ட பணம் செலுத்திய ரசீது (Receipt of payment) மற்றும் தங்கள் முகவரியைத் தெளிவாகக் குறிப்பிட்டு விரைவு அஞ்சல் மூலமாக கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். THE RASHTRIYA INDIAN MILITARY COLLEGE, GARHI CANTT, DEHRADUN, UTTARAKHAND-248003.

(அல்லது) விண்ணப்பப் படிவத்தை வரைவோலை (Demand Draft) மூலம் பெறுவதற்குத் தெளிவான அஞ்சல் எண் உள்ள தங்கள் விலாசம் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றுடன் கூடிய கோரிக்கை மனுவுடன், ‘‘THE COMMANDANT RIMC FUND”, DRAWEE BRANCH, HDFC BANK, BALLUPUR CHOWK, DEHRADUN, (BANK CODE- 1399), UTTARAKHAND கிளையில் மாற்றத்தக்க வகையில், பொதுப்பிரிவினர் ரூ.600/- அட்டவணை இனத்தவர் மற்றும் பழங்குடியினர் அதற்குண்டான சாதிச் சான்றிதழுடன் ரூ.555/- தொகைக்கு வரைவோலையாக (Demand Draft) THE RASHTRIYA INDIAN MILITARY COLLEGE, GARHI CANTT, DEHRADUN, UTTARAKHAND-248003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தேர்வு கட்டுப்பாடு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய சாலை, பூங்கா நகர், சென்னை 600 003 என்ற முகவரிக்கு, வருகிற செப்டம்பர் 30ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சென்றுசேர வேண்டும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு www. rimc. gov. in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்யும் முறை: 01.12.2024 (ஞாயிற்றுகிழமை) அன்று காலை 9.30 மணி முதல் 11.00 மணி வரை கணிதத் தேர்வும், பிற்பகல் 12:00 மணி முதல் 1:00 மணி வரை பொது அறிவுத் தேர்வு மற்றும் பிற்பகல் 2:30 மணி முதல் 4:30 மணி வரை ஆங்கிலத் தேர்வும் நடைபெறும், (மேற்கண்ட கணிதம் மற்றும் பொது அறிவுத் தேர்வுகளை ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் எழுதலாம்)

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகள், நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்விற்கான தேதி மற்றும் இடம், தேர்வு எழுதும் மாநிலத்தின் வாயிலாக மாணவ, மாணவிகளுக்குத் தெரிவிக்கப்படும். நேர்முகத் தேர்விற்குப்பின் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகள் ராணுவ மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும் மருத்துவப் பரிசோதனை சேர்க்கையின் ஓர் அங்கமே தவிர சேர்க்கையின் இறுதி அல்ல என்பதை அறியவும்.

புதுச்சேரி மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்!

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் அமைந்துள்ள இந்திய தேசிய ராணுவக் கல்லூரியில் ஜூலை 1, 2025ம் ஆண்டில் எட்டாம் வகுப்பில் சேர்வதற்கு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசு/அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்தேர்விற்கான தகுதிகள், விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தேர்வு நடைமுறைகள் அனைத்தும் ஒன்றுதான். தேர்வு மையமும், அஞ்சல் மூலம் விண்ணப்பப் படிவம் அனுப்பும் முகவரியும் மட்டுமே வேறுபடும்.

தேர்வு மையம்: புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவ, மாணவிகளுக்கு (01.12.2024) ஞாயிற்றுகிழமை அன்றுஎழுத்துத் தேர்வுகள் பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு கல்வித்துறை வளாகம், அண்ணாநகர், புதுச்சேரி-605005-இல் நடைபெறும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் கீழ்க்காணும் முகவரிக்கு ‘‘இணை இயக்குநர் அலுவலகம், இரண்டாம் தளம், அ அடுக்ககம், பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு கல்வி வளாகம், அண்ணா நகர், புதுச்சேரி -605005. 30.9.2024க்குள் வந்து சேர வேண்டும். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு www. rimc. gov. in என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

You may also like

Leave a Comment

10 + 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi