Friday, September 20, 2024
Home » புதிய கல்வி கொள்கையில் முரண்பாடுகள்!

புதிய கல்வி கொள்கையில் முரண்பாடுகள்!

by Nithya

தேசிய கல்விக்கொள்கை 2020 அறிக்கை வெளியானதிலிருந்து அது குறித்த விமர்சனங்கள் அனைத்து வகை ஊடகங்களிலும் வந்தவண்ணமிருந்தன. ஆனாலும் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் தேதி அறிமுகமாகி 2023-24ஆம் கல்வி ஆண்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகத் திகழும் இந்தியாவின் கல்விக்கொள்கையை வடிவமைப்பது மிகப்பெரிய சவாலான பணி. அப்பணியை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கும் கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழுவினரைப் பாராட்டத்தான் வேண்டும். ஆனாலும் இந்தியாவின் தனித்தன்மையே வேற்றுமையில் ஒற்றுமை என்பதேயாகும். பல்வேறு மொழி பேசும் மாநிலங்களை உள்ளடக்கிய வெவ்வேறு பண்பாட்டுச்சூழலில் வாழ்ந்துவரும் மக்களுக்குத் தேசிய அளவில் ஒரே கல்வி முறை என்பது நெருடலாக உள்ளது.

அறிக்கையில் பன்முகத்தன்மைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தாலும் செயல்வடிவம் கொடுக்கும்போது பல அம்சங்கள் ஒற்றைத் தன்மையுடையதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. மொழிக்கொள்கைகளை விளக்குமிடத்தில் சமஸ்கிருதத்தை இந்தியாவின் உயர்ந்த மொழியாகவும் இந்திய அரசைமப்பின் எட்டாம் இணைப்புப் பட்டியலில் ஒரு முக்கியத் தற்கால மொழியாகச் சொல்லப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டு சமஸ்கிருதப் பாடங்கள் உருவாக்கப்பட்டு மாணவர்களுக்கு கற்றுத்தரப்படும் என்கிறது. இந்தியாவில் எவ்வளவு பேர் சமஸ்கிருதம் பேசுகிறார்கள்? அதை ஏன் எல்லாருக்கும் கற்றுக்கொடுக்கத் துடிக்கிறார்கள்? போனால் போகிறது என்று மற்ற செம்மொழிகளுக்கும் இணைய வழியாகக் கற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுமாம்.

கல்வி, மாநிலப் பட்டியலுக்கு வரவேண்டும் என்பது மாநிலங்களின் நீண்டகால கோரிக்கை. ஆனால், இந்த வரைவறிக்கை ஒரே நாடு ஒரே கல்வி என்பதை வலியுறுத்தும் வண்ணம் அமைந்துள்ளது. ஒரு மாநில அரசு அங்கு வாழும் மக்களுக்கான கல்விமுறையை வடிவமைப்பதே முறையாகும். தமிழகத்திற்கான கல்வியை கன்னடர்கள் தீர்மானிக்க முடியாது. இந்த குழுவில் நாடுதழுவிய பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவரை இந்தியக் கல்விக்கொள்கையை வடிவமைக்க நியமித்தது ஏன்? இக்குழுவில் பள்ளி ஆசிரியர்களின் பிரதிநிதி ஒருவராவது இடம்பெற்றிருக்கவேண்டும்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் அவசரகதியில் கல்விக்கான கொள்கையை வடிவமைத்திருப்பதே சந்தேகத்திற்கு இடமளிக்கிறது. வணிகத்துறைகளில் நிலவும் உலகமயமாக்கல் போக்கு கல்வித்துறையிலும் கால் பதிக்க வழிவகுத்திருக்கிறது இக்கொள்கை அறிக்கை.

கல்வியில் காலத்திற்கேற்ற மாற்றம் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல மாற்றங்கள் மீண்டும் இந்தியர்களை பழங்காலத்திற்கே கொண்டுசேர்க்கும். 10+2+3 என்று தற்போது உள்ள கல்விமுறையில் 15 ஆண்டுகளில் ஒருவர் பட்டம் பெற்றுவிடலாம். ஆனால், தற்போது இம்முறை தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது. 5+3+3+4 என்னும் புதிய முறையில் ஒருவர் பள்ளிக்கல்வியை முடிப்பதற்கே 15 ஆண்டுகள் ஆகும்.

முதல் 5 ஆண்டுகள் என்பது அடிப்படை நிலை. இது மூன்றாண்டு மழலையர் வகுப்போடு 1 மற்றும் 2ஆம் வகுப்புகளை உள்ளடக்கியது. அடுத்த 3 ஆண்டுகள் ஆயத்த நிலை. இது 3,4,5 ஆகிய வகுப்புகளை உள்ளடக்கியது. அடுத்த 3 ஆண்டுகள் நடுநிலை. இது 6,7,8 ஆகிய வகுப்புகளை உள்ளடக்கியது. அடுத்த 4 ஆண்டுகள் உயர்நிலை. இது 9,10,11,12 ஆகிய வகுப்புகளை உள்ளடக்கியது.

3 வயதில் மழலைக் கல்வி என்பது குருவி தலையில் பனங்காயை வைப்பது போலாகும். இந்த முறையால் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் அதிகமாகுமே தவிர குறையாது. உலகின் மிகச்சிறந்த கல்வி முறையாகப் பின்லாந்து கல்விமுறை பலராலும் குறிப்பிடப்படுகிறது. அந்த நாட்டில் 7 வயதில்தான் குழந்தையை முதல் வகுப்பில் சேர்க்கின்றனர். அதனால்தான் அங்கு குழந்தைகள் மகிழ்வோடு கற்றுக்கொள்கின்றனர். மகிழ்ச்சியான கற்றலே முழுமையான கற்றலுக்கு அடிப்படையாக அமைகிறது. உலக அளவில் பின்லாந்து மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு இதுவும் ஒரு காரணம்.

யுனெஸ்கோ நிறுவனம் வலியுறுத்துகிறது என்பதற்காக அறிக்கையின் முதல் இயலிலேயே ஆரம்பகாலக் குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி (ecce) பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இது நம் நாட்டுச் சூழலுக்கு ஏற்புடையதன்று. கல்வியில் தனியார் மயம் ஒழிக்கப்படவேண்டும் என்பதே கல்வியாளர்களின் விருப்பம். கல்வியை அரசு மட்டுமே வழங்கினால்தான் இவர்கள் முழங்கும் இலவசக் கல்வி சாத்தியமாகும். கல்வியில் தனியார் முயற்சிகளை ஊக்கப்படுத்துவதாகவே கொள்கை அறிக்கை அமைந்துள்ளது. குருகுலக் கல்வி, திண்ணைப்பள்ளி போன்றவற்றை மீண்டும் ஏற்பது எதற்காக? மக்களைப் பின்னோக்கி இழுப்பது நியாயமா?

பை இல்லாத பத்து நாட்கள் என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது மாணவர் விரும்பும் கைத்தொழிலைக் கற்றுக்கொள்ள வழி வகை செய்கிறது. இது ராஜாஜி அறிமுகப்படுத்திய குலக்கல்வியைப் போலத்தான் உள்ளது. மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை ஒருங்கிணைத்து கல்வி வளாகம் ஏற்படுத்தப்படும். அந்த வளாகத்திற்கு மாணவர்கள் செல்வதற்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும் என்று குறிப்பிடுகிறது அறிக்கை.அது எப்படிப்பட்ட போக்குவரத்து என்பதுதான் நகைச்சுவை. பெரிய பெண்குழந்தைகள் அவர்களுக்கு வழங்கப்படும் மிதிவண்டியில் குழுவாக குழந்தைகளை அழைத்துச்செல்லவேண்டும். நடந்து செல்லும் பெண்குழந்தைகளுக்கு காவலர்கள் பாதுகாப்பாக வருவார்களாம். அல்லது சமூக ஒத்துழைப்புடன் ரிக்க்ஷா போன்ற வாகனங்களில் அழைத்துச் செல்லப்படுவார்களாம். கண்களை விற்று ஓவியம் வாங்குவதைப் போலல்லவா உள்ளது.

குடிமக்களுக்குக் கல்வி வழங்க வேண்டியது அரசின் கடமை. இதில் லாப நட்ட கணக்குகளைப் பார்க்கக் கூடாது. 10 மாணவர்கள் படித்தாலும் அவர்களுக்குப் பள்ளியை நடத்தவேண்டும். அருகமைப்பள்ளி முறை என்பதை நீண்ட காலமாக வலியுறுத்திவரும் சூழலில் மீண்டும் மாணவர்களை கல்விக்காக பயணிக்க வைப்பது ஏற்புடையதன்று.

பிரதமரைத் தலைவராகக்கொண்டு உருவாக்கப்படும் தேசிய கல்வி ஆணையம் நாட்டின் பன்முகத்தன்மைக்கு வேட்டு வைக்கும் முயற்சி. எனவே, நாடுதழுவிய மக்களின் கருத்துகளை ஏற்று நவீன காலத்திற்கு ஏற்ற புதிய கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட வேண்டும். பள்ளிக்கல்வி அவரவர் தாய்மொழியில்தான் கற்றுக்கொடுக்கப்படவேண்டும். கூடுதல் மொழிகளைக் கற்றுக்கொள்வது அவரவர் விருப்பம். எந்த மொழியையும் யாரையும் கற்றுக்கொள்ள வலியுறுத்தக்கூடாது. மருத்துவக் கல்விக்கு NEET தேர்வு போல பட்டப் படிப்புக்கும் நுழைவுத் தேர்வு வைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வி வாய்ப்பைப் பறித்துவிடாதீர்கள்.

கல்வி என்பது அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்பதை வெற்று முழக்கத்தால் மட்டுமே நிறைவேற்றிவிட முடியாது. அதற்கான செயல் வடிவத்திலும் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு இந்த கல்விக்கொள்கை உதவாது. புதிய கல்விக் கொள்கையின்படி பள்ளியைப் பராமரிக்கவும் பள்ளிக்கான வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கவும் பள்ளி மேலாண்மைக்குழுக்கள் பள்ளிகள்தோறும் ஏற்படுத்தப்பட்டு அவற்றுக்கான தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்களும் நடந்து வருகின்றன. நகர்ப்பகுதிகளில் போதிய விழிப்புணர்வோடு செயல்படும் இந்த குழுக்கள் கிராமப்பகுதிகளில் பெயரளவிலேயே உள்ளன.

You may also like

Leave a Comment

one × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi