Friday, September 20, 2024
Home » பணம் தரும் பருத்தி!

பணம் தரும் பருத்தி!

by Porselvi

மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று ஆடை. இதற்கு மூலப்பொருளாக இருப்பது பருத்தி. அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பருத்தியின் தேவை எப்போதும் அவசியமாக இருக்கிறது. நம் நாட்டில் தயாராகும் பருத்தி பல கண்டங்களுக்கு சென்று ஆடையாக மாறுகிறது. இதனால் இந்தியாவின் மிகப்பெரிய பணப்பயிராக பருத்தி விளங்குகிறது. இன்றைக்கு பருத்தி சாகுபடியில் பல நவீன மாற்றங்கள் நாள்தோறும் வந்துகொண்டே இருக்கிறது. இதன் எதிரொலியாக தமிழக விவசாயிகள் பலர் பருத்தி சாகுபடியில் ஆர்வமாக ஈடுபடுகிறார்கள். அந்த வரிசையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த சுகுமாரன் என்ற விவசாயி பருத்தி சாகுபடியில் ஈடுபட்டு கலக்கலான வருமானம் பார்த்து வருகிறார். ஒரு காலைப்பொழுதில் காற்றில் அசைந்து கொண்டிருந்த பருத்தி வயலில் சுகுமாரனை சந்தித்தோம்.

“தொழில், பொழுதுபோக்கு, வாழ்வாதாரம் என எல்லாமே எனக்கு விவசாயம்தான். எனக்கு சொந்தமான நிலத்தில் சோளம், நெல், பருத்தி, உளுந்து என சுழற்சி முறையில் சாகுபடி செய்வேன். தற்போது பருத்தி பயிரிட்டு இருக்கிறேன். பருத்தி பயிரிட்டுள்ள 3 ஏக்கர் நிலத்தில் முன்னதாக நெல் சாகுபடி செய்தேன். அறுவடை முடிந்த கையோடு ப்ரைம் ரக பருத்தியை சாகுபடி செய்வதற்கான வேலைகளில் இறங்கினேன். சாகுபடிக்குத் தேவையான விதைகளை அருகில் உள்ள விவசாயிகளிடம் இருந்து வாங்கினேன். ஒரு ஏக்கர் நிலத்திற்கு 1 கிலோ பருத்தி விதை தேவைப்பட்டது. எந்த வகை பயிராக இருந்தாலும் நிலம் தயாரித்தல்தான் அடிப்படையான செயல்பாடு. பருத்திக்கும் அப்படித்தான். பருத்தி விதைகளை ஊன்றுவதற்கு முன்பு நிலத்தை நன்றாக உழுது கொண்டேன். ரொட்டோவேட்டர் கொண்டு 3 முறை உழவு ஓட்டினேன். குறைந்த ஆழத்தில் மண் கெட்டியாக இருந்தால் நிலத்தை கத்திக் கலப்பையைக் கொண்டு ஒரு திசையில் உழவு ஓட்டினேன். பின்னர் அதற்கு எதிர் திசையில் இரண்டு முறை உழுதேன். அதன்பிறகு மண் நன்கு பொடியாகி விடும். உழவுக்குப் பிறகு நிலத்தில் வேப்பம் புண்ணாக்கு இடுவேன். இது நிலத்திற்கு உரமாக செயல்படுவதோடு, கூன்வண்டின் தாக்குதலைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது.

என்னுடைய நிலம் களிமண் என்பதால் ஒன்றரை அங்குல அளவிற்கு கூரான குச்சியால் துளையிட்டு ஒரு குழிக்கு 2 பருத்தி விதை போட்டோம். விதை போட்டுவிட்டு அதன் மீது அரை கைப்பிடி அளவு மணலைப் போட்டு மூடுவோம். இதிலிருந்து 7வது நாளில் முளைப்பு வரத் தொடங்கும். இந்த தருணத்தில் தழைச்சத்து, சாம்பல் சத்து, மணிச்சத்து கொண்ட உரத்தை அடியுரமாக இட்டோம். எஞ்சியுள்ள தழை மற்றும் சாம்பல் சத்தை 40-45ம் நாள் கொடுப்போம். இதுபோக இலைத் தெளிப்பாக டி.ஏ.பி, பொட்டாசியம் குளோரைடு அல்லது பாலிபீடு மற்றும் மல்டி பொட்டாசியம் கொடுப்போம். பருத்தியில் பெரிதாகக் களைகள் எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. மாதம் ஒருமுறை நிலத்தில் வளர்ந்து வரும் புற்களை வெட்டி அகற்றினாலே போதும். மழைக் காலங்களில் பருத்திக்கு தண்ணீர் விடமாட்டோம். மற்றபடி 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே பருத்திக்கு தண்ணீர் பாய்ச்சுவோம்.

இதுபோக பருத்திச் செடிகளுக்கு ஊட்டமேற்றிய தொழுவுரம் இடுவோம். ஊட்டமேற்றிய தொழுவுரம் என்பது நுண் உரக்கலவை மற்றும் தொழுவுரம் சேர்ந்த கலவைதான். பருத்திச் செடியில் இருந்து 45 லிருந்து 50வது நாளில் பூக்கள் வரத்தொடங்கிவிடும். பூக்கள் வந்த 5வது நாளில் பருத்திக் காய்கள் வரத் தொடங்கிவிடும். அப்போது இலைவழித் தெளிப்பாக மெக்னீசியம் சல்பேட் கொடுப்போம். காய் உருவாகும் பருவத்தில் யூரியா தெளிப்போம். காய்கள் 80வது நாளில் நன்கு காய்ந்து விடும். இதிலிருந்து 3 அல்லது 4 நாட்களில் காய்கள் வெடித்து பருத்தி வெளியே தெரியும்போது அறுவடை செய்வோம். நான் தை மாதக் கடைசியில் பருத்தியைச் சாகுபடி செய்தேன். ஏற்கனவே ஒரு அறுவடை முடிந்த நிலையில் தற்போது இரண்டாவது அறுவடைக்குக் காத்திருக்கிறேன். அதாவது 8 மாதத்தில் இரண்டு முறை பருத்தியை அறுவடை செய்யலாம்.

எனக்கு ஒரு ஏக்கர் நிலத்தில் 500 லிருந்து 700 கிலோ பருத்திப் பஞ்சு மகசூலாக கிடைக்கும். கடந்த அறுவடையில் ஒரு ஏக்கர் நிலத்தில் 670 கிலோ பருத்திப் பஞ்சு கிடைத்தது. மொத்தம் உள்ள மூன்று ஏக்கரில் இருந்து 2010 கிலோ பருத்திப் பஞ்சு மகசூலாக கிடைத்தது. பருத்திப் பஞ்சை அருகில் இருக்கும் விவசாயிகள் 5 பேருடன் சேர்ந்து வாடகை வண்டியில் ஏற்றி எருகூரில் உள்ள சொசைட்டியில் விற்பனை செய்துவிடுவோம். நாங்கள் வியாபாரிகளிடம் விற்பனை செய்தால் ரூ.60 மட்டுமே கிடைக்கும். சொசைட்டியில் விற்பதால் ஒரு கிலோ பருத்தி பஞ்சு ரூ.74 என்ற கணக்கில் வாங்கிக் கொள்கிறார்கள். இதன்மூலம், ஒரு அறுவடையில் எங்களுக்கு ரூ.1.48 லட்சம் வருமானமாக கிடைத்தது. இதில் செலவுகள் ரூ.30 ஆயிரம் போக ரூ.1.18 லட்சம் லாபமாக கிடைத்தது. அடுத்த அறுவடையை புரட்டாசியில் மேற்கொள்வேன். நிலத்தில் உள்ள எல்லா பருத்திச் செடிகளிலும் நிறைய காய்கள் காய்த்து, பஞ்சுகளும் அதிகளவில் வந்திருக்கிறது. கடந்த முறை கிடைத்த அதே லாபம் அடுத்த அறுவடையிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

பருத்தி மட்டுமல்லாமல் 20 ஏக்கர் நிலத்தில் ஜோதி ரக நெல் சாகுபடி செய்திருக்கிறேன். அடுத்த வாரத்தில் நெல் அறுவடைக்குத் தயாராகிவிடும். அறுவடை செய்யும் நெல்லை முழுமையாக கேரளாவிற்கு மட்டுமே அனுப்பி வைப்பேன். எனக்கு ஒரு ஏக்கர் நிலத்தில் 30 மூட்டை நெல் கிடைக்கும். 20 ஏக்கர் நிலத்தில் மொத்தம் 600 மூட்டை நெல் கிடைக்கும். ஒரு மூட்டை நெல் கடந்த முறை ரூ..1600க்கு விற்பனையானது. தற்போது ரூ.1100 என வியாபாரிகள் வாங்குகிறார்கள். அதன்படி 20 ஏக்கர் நிலத்தில் இருந்து ரூ.6.6 லட்சம் வருமானமாக கிடைக்கும். இதில் செலவுகள் ரூ.3.3 லட்சம் போக ரூ.3.3 லட்சம் லாபமாக கிடைக்கும்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
சுகுமாரன் – 98425 71396.

 பருத்திப் பஞ்சை வியாபாரிகளிடம் விற்றால் கிலோவுக்கு ரூ.60 தான் விலை கிடைக்கும். சொசைட்டியில் விற்பதால் கிலோவுக்கு ரூ.74 என்ற அளவில் விலை கிடைக்கிறது. ஏக்கருக்கு 670 கிலோ பருத்திப் பஞ்சு மகசூலாக கிடைப்பதன் மூலம் ரூ.49,580 வருமானமாக கிடைக்கிறது.

தயிர்ப்புள்ளி நோய்

பருத்தி இலையில் பெரும்பாலும் தயிர்ப்புள்ளி நோயின் தாக்கம் இருக்கும். பருத்தி இலையின் அடி மற்றும் மேற்புரத்தில் சாம்பல் நிற புள்ளிகள் காணப்பட்டால் அவை தயிர்ப்புள்ளி நோய்க்கான அறிகுறிதான். அதேபோல் நோய் தீவிரமடைந்த நிலையில் சாம்பல் நிற நுண்துகள்கள் இலையின் மேற்பரப்பிலும் காணப்படும். இதன்பிறகு பாதிக்கப்பட்ட இலைகள் நுனியில் இருந்து உள்நோக்கி காயத்தொடங்கும். பின் மஞ்சள் நிறமாகி, இளம் இலைகள் உதிர்ந்துவிடும். இதனால் மகசூல் குறையும். இதை சரி செய்ய தாவரக் குப்பைகளை அகற்றி தீயிட வேண்டும். தானாக வளர்கின்ற பருத்தி செடிகளையும் அகற்ற வேண்டும். அதேபோல் அதிகப்படியான நைட்ரஜன் உரங்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மண்ணின் நிலை மற்றும் தாவர வகைகளைப் பொருத்து வயலில் இடைவெளியை சரிசெய்ய வேண்டும்.

You may also like

Leave a Comment

13 + five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi