Friday, September 20, 2024
Home » ஓணத்திருநாள் உலகளந்த பெருமாள்

ஓணத்திருநாள் உலகளந்த பெருமாள்

by Lavanya

காலம்: பொ.ஆ.1063, ராணி உதயமதி தன் கணவர், சாளுக்கிய வம்ச மன்னர் முதலாம் பீமதேவன் நினைவாக கட்டியது.
இடம்: ராணி-கி-வாவ் படிக்கிணறு, பதான் மாவட்டம், குஜராத் மாநிலம்.‘மகாபலி’ எனும் பெயருக்கு ‘பெரும் தியாகம் செய்தவன்’ என்பது பொருள். இன்றைய கேரள மாநிலப்பகுதிகள் அடங்கிய பகுதியை, பண்டைக்காலத்தில் சீரிய முறையில் அரசாட்சி புரிந்த மகாபலி சக்கரவர்த்திக்கு மூவுலகையும் ஆளும் தேவேந்திர பதவியை அடைய வேண்டும் என்று பேராசை ஏற்பட்டது. மகாபலி, தேவேந்திர பதவியை அடையும் பொருட்டு அசுர குலகுரு சுக்ராச்சாரியார் தலைமையில் வேள்வி நடத்த திட்டமிட்டார்.அதனை அறிந்த தேவர்கள், விஷ்ணுவிடம் சென்று அதனை முறியடிக்குமாறு வேண்டுதல் விடுக்கவே, வாமனராக மூன்றடி உயர குள்ள உருவங்கொண்டு அவதரித்தார்.

வேள்வியை நிறைவு செய்யும் விதமாக, மகாபலி மக்களுக்கு தான, தர்மங்கள் செய்ய தொடங்கினார். வாமனர், யாக சாலைக்கு தான தர்மங்கள் செய்து முடிக்கும் தருணத்தில் வந்து சேர்ந்தார். மகாபலி வாமனரிடம், ‘‘தானம் கொடுப்பதை இப்போதுதான் நிறைவு செய்தேன், தாமதமாக வந்து விட்டீர்களே’’ என்று கூற, அதற்கு வாமனர், ‘‘நான் அதிகம் எதுவும் யோசிக்க மாட்டேன், என் உயரத்துக்கு தகுந்தாற்போல் மூன்றடி நிலம் மட்டும் கொடுத்தால் போதும்’’ என்றார். அதன் உள்நோக்கத்தை அறிந்த அசுர குரு சுக்ராச்சாரியார், ‘‘இவர் மகாவிஷ்ணுவின் அவதாரமாக தோன்றுகிறது… எனவே. அவருக்கு யோசித்து தானம் அளியுங்கள்’’ என்று மகாபலியிடம் அறிவுறுத்தினார்.

ஆனால் மகாபலி, ‘‘மகாவிஷ்ணுவே அவதாரம் எடுத்து என்னிடம் தானம் பெற வந்துள்ளார் என்றால் எந்தளவிற்கு, நான் சிறந்தவன். நான் தானம் கொடுத்தே தீருவேன்’’ என்று கர்வத்துடன் பதிலுரைத்தார். மகாபலியின் பதில் கேட்ட வாமனர், உலகளந்த பெருமாளாக (திருவிக்ரமர்) விஸ்வரூபம் எடுத்து ஒரு பாதத்தால் பூமியையும், மற்றொரு பாதத்தால் ஆகாயத்தையும் அளந்தார்.அடுத்த மூன்றாவது அடிக்கு நிலம் கேட்க, மகாபலியோ தனது தலையின் மீது பாதம் வைக்க வேண்டினார்.அவரை அழுத்தி பாதாள லோகத்திற்கு அனுப்பினார் மகா விஷ்ணு. அப்போது மகாபலி, ஓணத்திருநாள் அன்று மட்டும் பூமிக்கு வந்து மக்களை சந்திக்கும் வரம் கேட்டார்.மகாபலி விரும்பிக் கேட்ட வரத்தின் படி, ஓணத்திருநாள் அன்று, மன்னர் மக்களைக்காண வரும் நன்னாள் என்ற நம்பிக்கையின் படி, ஆண்டுதோறும் திருவோண பண்டிகையாக கேரள மக்களால் கொண்டாடப்படுகிறது.

“ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை
வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம்
மோளை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகம் கொண்டவாறே”

– நம்மாழ்வார், திருவாய்மொழி.
ஓணத்திருநாள் தொடர்புடைய இந்த நிகழ்வுகளை உள்ளடக்கிய திருவிக்ரமர் (உலகளந்த பெருமாள்), வாமனர் சிற்பங்கள் பழங்கால ஆலயங்களிலிருந்து:

1) அஷ்டபுஜ விஷ்ணு வடிவ திருவிக்ரமர்

வாமன அவதாரத்தின் இந்த நிகழ்வுகளை உள்ளடக்கி ‘திரிவிக்ரமர்’ புடைப்பு சிற்பமாக குகை எண்-3ல் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளது. திரிவிக்ரமர், ‘அஷ்டபுஜ விஷ்ணு’ வடிவில் தனது தெய்வீக ஆயுதங்களான பாஞ்ஜசன்யம்(சங்கு), சுதர்சனம்(சக்கரம்), சார்ங்கம்(வில்), அம்பு, நந்தகா(வாள்), கதாயுதம், கேடயம் ஆகியவற்றுடன் பிரமாண்ட கோலத்தில் காட்சியளிக்கிறார். வானத்தைத் தொடும் அவரது தலை அருகே சூரியன், சந்திரன் மற்றும் ராகு அவரை வணங்குகின்றனர்.
கீழே உள்ள வாமனர் சிற்பம் அரிக்கப்பட்டு குடை மட்டுமே எஞ்சியுள்ளது.
திரிவிக்ரமரின் தனது இடது காலை நன்கு உயரத்தூக்கி பெரிய அடி எடுத்து மகாபலியின் தலையில் மீது வைக்கிறார். திரிவிக்ரமரின் வலது காலுக்கு அருகில் உள்ள மனித உருவம் மகாபலியின் மகனாக இருக்கலாம் எனக்கருதப்படுகிறது. சுக்ராச்சாரியார் சுருண்ட கூந்தலுடன் கையில் கமண்டலத்துடன் காட்சியளிக்கிறார். மகாபலி அவருடைய ராணி விந்தியாவளி அருகிலிருக்க, சுக்ராச்சாரியாருக்குப் பின்னால் நின்று, குருவின் கையைத் தொட்டு நிற்கிறார்.
இடம்: குகை எண்-3, பாதாமி குகைகள், பாகல்கோட் மாவட்டம், கர்நாடக மாநிலம்.
காலம்: பொ.யு.578ல் சாளுக்கிய மன்னர் முதலாம் புலிகேசியால் துவக்கப்பட்டு, அவரது மகன் மங்களேஸனால் கட்டி முடிக்கப்பட்டது.

2) திருவிக்ரமர்

சற்றே காலத்தால் பிற்பட்ட குகை எண்-2 லும் மேற்கண்ட அதே அம்சங்களுடனும், உருவகங்களுடனும் ஆனால், அதிக உறுப்பினர்களுடன் கூடிய சிதைவடையாத மிகத்தெளிவான திரிவிக்ரமர் புடைப்பு சிற்பம் உள்ளது.
இடம்: குகை எண்-2, பாதாமி குகைகள், பாகல்கோட் மாவட்டம், கர்நாடக. மாநிலம்.

3) விஷ்ணுவின் திருவிக்ரமர் வடிவம்

ஆலயம்: கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம், தமிழ்நாடு
காலம்: ராஜசிம்ம பல்லவன் (பொ.ஆ. 690 – 725)

4) மகாபலியின் தலையின் மீது மூன்றாவது அடி
வைக்கும் பெருமாள்

ஆலயம்: வெங்கடரமண சுவாமி ஆலயம், தாடிபத்ரி, ஆந்திரப்பிரதேசம்.
காலம்: 1510-1525 ஆண்டு காலகட்டத்தில் விஜய
நகர பேரரசின் தளபதி திம்ம நாயுடுவால் கட்டப்
பட்டது.

5) உலகளந்த பெருமாள்

ஆலயம்: நின்ற நம்பி பெருமாள் ஆலயம், திருக்குறுங்குடி, திருநெல்வேலி மாவட்டம். தமிழ்நாடு.
காலம்: பொ.ஆ.15-16ஆம் நூற்றாண்டு, நாயக்கர்
திருப்பணி.

6) வாமனர்

இடம்: ராணி-கி-வாவ் படிக்கிணறு, பதான் மாவட்டம், குஜராத் மாநிலம்.
காலம்: பொ.ஆ.1063, ராணி உதயமதி தன் கணவர், சாளுக்கிய வம்ச மன்னர் முதலாம் பீமதேவன் நினைவாக கட்டியது.

You may also like

Leave a Comment

sixteen − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi